திருமறை போதிக்கும் தூய வாழ்க்கை

கடந்த பத்தாண்டுகளில் பாதை தவறி பரிசுத்தத்தை இழந்து பாழாய்ப்போன நற்செய்தியாளர்களின் பட்டியல் சிறிதல்ல. பிரதானமாக அமெரிக்காவில் ஜிம் பேக்கர், ஜிம்மி சுவகர்ட் போன்றோர் பணத்தாசையாலும், பெண்ணாசையாலும் அழிவை நாடிச்சென்றதை நாடறியும். அதே வகையில் தமிழ் பேசும் நாடுகளிலும் பலர் இவ்விதமாக சரீர இச்சைகளுக்கு இடம் கொடுத்து சர்வேசுவரனின் ஐக்கியத்தை இழந்து, தேவ ஊழியத்திற்கே இழுக்கைத் தேடித் தந்துள்ளனர். மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்களே வழி தவறி, நிலைகுலைந்து வழுக்கி வீழ்ந்துள்ளனர். ஆனால் சிலர் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறுகள் நேரிடத்தான் செய்யும்; தாவீது தன் வாழ்வில் தவறு செய்யவில்லையா? என்று இவற்றைக் கண்டும் காணாமலும் இருந்துவிட முயலுகின்றனர்.

இவை சாதாரண தவறுகள்தானா? கிறிஸ்தவ வாழ்க்கையில் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுபவர்கள் வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாதவையா? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காணத்தான் வேண்டும். அத்தோடு இவ்வாறு வாழ்க்கையில் வழுக்கிவிழுந்தவர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.

தூய வாழ்க்கை

தூய்மையான வாழ்க்கையைக் கிறிஸ்தவர்கள் வாழ வேண்டிய அவசியத்தை வேதம் பல இடங்களில் வற்புறுத்துகின்றது. ‘உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருப்பது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்’ (1 பேதுரு 1:15) என்று திருமறை கூறுகின்றது. பவுலும் ‘நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது’, ‘தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்துள்ளார்’ என்றும் (1 தெசலோ. 3:3, 7) கூறுவதைப் பார்க்கிறோம்.

அதே வேளை பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5:19-21 வரை மாம்சத்தின் கிரியைகளை வரிசைக்கிரமமாக அறிக்கையிட்டு இப்படிப்பட்டவைகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று கூறுகிறார். இதையே எபேசியருக்கு எழுதிய நிருபத்திலும் விளக்கும் பவுல், ‘பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும் கூடாது’ என்கிறார். அதாவது இவைகளின் சாயல்கூட உங்களில் படக்கூடாது என்று போதிக்கிறார். மேலும் ‘விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிராதானைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே’ என்று கூறுகிறார். ஆகவே பரிசுத்த வாழ்க்கை இருக்க வேண்டிய இடத்தில் அசுத்தமானதெதுவும் இருக்க முடியாது என்பது தெளிவு.

கிறிஸ்தவன் பாவம் செய்வானா?

அப்படியானால் கிறிஸ்தவன் வாழ்க்கையில் தவறே செய்யமாட்டானா? என்று நீங்கள் கேட்கலாம். சிறு குழந்தை நடக்கப் பழகும்போது விழுந்தெழும்புவது போல் கிறிஸ்தவனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது சில தவறுகளை செய்துவிடுவது வழமை. இதற்கான காரணத்தைத்தான் பவுல் ரோமர் 7 ஆம் அதிகாரத்தில் விளக்குகிறார். சிலர் இவ்வேதப் பகுதி கிறிஸ்தவன் அல்லாதவனுடைய அனுபவத்தைப் பற்றிப் பேசுவதாகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் பவுல் தனது சொந்த அனுபவத்தைப்பற்றியே இங்கு விளக்குகிறார்.

இவ்வுலகத்தில் பாவம் இருக்கும் வரையும், பாவம் நமக்குள் இருக்கும் வரையும் பாவம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவது மட்டுமன்றி, அதை செய்யத் தூண்டும் இச்சைகளும் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் பவுல் கூறுவதுபோல், நமக்குள் வாசமாயிருக்கிற பாவமே நமது இச்சைகளைத் தூண்டுகிறது. யாக்கோபு கூறுவதுபோல், நாம் நமது சுய இச்சைகளினால் இழுக்கப்பட்டு சோதிக்கப்படுறோம், பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது (யாக்கோபு 1: 14-15).

அதேவேளை, கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்பை அடைந்த பின்பு நம்மீது பாவத்திற்கு இருந்த ஆதிக்கம் அழிக்கப்பட்டிருப்பதால் முன்போல் நாம் பாவத்தை தொடர்ந்து செய்யமாட்டோம். கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பு நாம் பாவத்தின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி வாழ்ந்திருந்தோம். இப்போதோ அக்கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையடைந்திருப்பதோடு ஆவியின் துணையோடு பாவத்தைத் தொடர்ந்து செய்யாமலிருக்கும் வல்லமையும் நமக்குக் கிடைத்திருக்கின்றது. ஆகையால்தான் யோவான் தனது முதலாம் நிருபத்தில் ‘அவரில் நிலைத்திருக்கிற எவனும் (தொடர்ந்து) பாவம் செய்வதில்லை’, ‘தேவனால் பிறந்த எவனும் (தொடர்ந்து) பாவம் செய்யான்’ (1 யோவான் 3:6, 9) என்று கூறுகின்றார். கிறிஸ்துவை நாம் நேசிப்பதால் பாவத்தை இப்போது வெறுக்கிறோம். அதோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதை நாம் தவிர்க்க விரும்புகிறோம். சில வேளைகளில் பாவத்தை செய்துவிட்டாலும் குற்றவுணர்வினாலும், நம்மை நேசிக்கும் கிறிஸ்துவை அலட்சியப்படுத்திவிட்ட வேதனையாலும், ஆவியைத் துக்கப்படுத்திவிட்டதாலும் கர்த்தரின் மன்னிப்பை நாடி ஓடி வருகிறோம்.

பரிசுத்த வாழ்க்கையைப்பற்றிய தவறான எண்ணங்கள்

பரவசக்குழுவைச் சேர்ந்தவர்களும், வேறுசில கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ வாழ்க்கையில் எல்லாம் சுலபமாக நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் போராட்டமே இருக்கக்கூடாது என்பது இவர்களது முடிவு. கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் சகல பாவங்களிலும் இருந்து நம்மை மன்னித்துவிட்டதால் இனிப் பாவமே நம் வாழ்க்கையில் தலை காட்டாது என்ற விதத்தில் பொருள் கொள்கின்றனர். வேறுசிலர் பாவத்தால் சோதிக்கப்படும் போது தம் இச்சைகளை அடக்கி ஒடுக்கி அவ்விடத்தைவிட்டு ஓட முனையாது வெறுமனே ஜெபத்தின் மூலம் மட்டும் தப்பிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். பரவசக்குழுவினரில் சிலர் பரிசுத்த ஆவியின் முழுக்கைப் பெற வேண்டும், அந்நிய பாஷையில் பேச வேண்டும், சிரிப்பாவியைப் பெற வேண்டும் என்றெல்லாம் வேதத்தைத் திரித்துப் போதித்து வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இவையே அடையாளங்கள் என்று காட்ட முனைகின்றனர்.

அன்ட்ரூ மரே, எப். பி. மேயர், வாட்ச்மன் நீ, போன்றோரின் போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நமக்குள் வாழும் கிறிஸ்து நமது பாவங்களைப் போக்கிவிடுவார்; நாம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று எண்ணுகின்றனர். இந்நம்பிக்கைக்கு இவர்கள் சான்றாகக் காட்டும் வேதப்பகுதி கலாத்தியர் 2:20 ஆகும். இவ்வேதப்பகுதியை இவர்கள் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. பவுல் இவ்வசனத்தில் ‘இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்’ என்று கூறும்போது நாம் கிறிஸ்தவ வாழ்வில் இனிச் செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை. அப்படியானால் பவுல் இதே நிருபத்தில் மாம்சத்தின் வழியில் நாம் தொடர்ந்து நடக்காதிருக்க வேண்டும் என்று போதிப்பதெப்படி? அத்தோடு பவுலின் ஏனைய நிருபங்கள் நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பாவத்திற்கெதிரான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று போதிப்பதால் பவுல் முரண்பாடாகப் போதிக்கவில்லை என்று உணர முடிகின்றது.

ஆதி முதல் இருந்து வரும் இன்னுமொரு துர்ப்போதனை, கிறிஸ்து நமக்கு விடுதலை தந்துள்ளதால் நாம் எந்தவிதக் கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டியதில்லை. அன்பு இருந்தால் மட்டும் போதும், நம் பாவங்கள் அன்பாலும் கடவுளின் கிருபையாலும் கரைந்துவிடும் என்பதாகும். இதனை ‘அன்டிநோமியன்’ (Antinomian) போதனை என்று அழைப்பார்கள். இப்போதனை பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எந்தவிதக் கட்டுப்பாடான வாழ்க்கையும் வாழவேண்டிய அவசியமில்லை என்று போதிக்கின்றது. கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடர்ந்து மனந்திரும்ப வேண்டிய அவசியத்தையும் நிராகரிக்கின்றது. ஆகவே ஒருவன் குடிப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும், களியாட்டங்களில் ஈடுபடுவதற்கும் அவனது பரிசுத்த வாழ்க்கைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது இப்போதனையின் முடிவு. ‘கிறிஸ்தவ சுதந்திரம்’ என்ற பெயரில் கிறிஸ்துவை அவமதிக்கும் இத்துர்ப் போதனையும் இன்று பரவலாக உள்ளது.

இத்தகைய தவறான கருத்துக்கள் உலவி வருவதற்குக் காரணம், கிறிஸ்து நம்மை இரட்சித்தபோது நமக்கு என்ன நடந்தது? பாவத்தைப் பற்றி வேதம் என்ன போதிக்கின்றது என்று சரிவரப்புரிந்து கொள்ளாததுதான். இந்நம்பிக்கைகள் கிறிஸ்தவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வற்குத் தடையாக அமைகின்றன.

பாவத்தைத் தவிர்ப்பது எப்படி?

பாவத்தைத் தவிர்ப்பதற்கான வழியைப் போதிக்கும் வேதம் முதலாவதாக நாம் அதைவிட்டு விலகி ஓட வேண்டும் என்று கூறுகிறது (1 கொரி. 6:18; 10:14; 1 தீமோ. 6:11; 2 தீமோ. 2:22) பாவத்தால் நமது இச்சைகள் தூண்டப்படுகிறபோது யோசேப்புவைப்போல அந்த இடத்தைவிட்டே நாம் ஓடப் பழக வேண்டும். ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதால் இது தானாகவே அவனில் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வேதம் நம்மைப் பொறுப்பாளியாகக் கருதுகிறது. ஆகவே பரிசுத்த வாழ்க்கை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் கர்த்தரின் துணையோடு எடுத்தாக வேண்டும்.

பாவம் நம்மை சோதிக்கிறபோது அவ்விடத்தைவிட்டு ஓடுவதென்பது இலகுவான காரியமல்ல. அவ்வாறு ஓடுவதற்கேற்ற விதத்தில் நமது சரீரமும் உள்ளமும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்றப்படாத உள்ளம் இச்சைகளுக்குத் தன்னை இலகுவாக ஒப்புக் கொடுத்துவிடும். யோசேப்பு பாவத்தைவிட்டு விலகி ஓடியதற்குக் காரணம், அவன் தன் உள்ளத்தையும் சரீரத்தையும் கடினப் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்ததுதான். அத்தகைய பயிற்சியில் ஈடுபடாமல் நமது கால்கள் தானாக பாவத்தை விட்டு விலகியோடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு எதிர் பார்ப்பது வேதம் போதிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகும்.

திருமறை நாம் நமது சரீரத்தை இத்தகைய கடினப்பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்தவ வாழ்க்கையை பந்தயச்சாலையில் ஓடுகிறவர்களுக்கும், போர்வீரர்களுக்கும் ஒப்பிடுகிறார் (1 கொரி. 9:24-27; 2 கொரி. 10:36). கிறிஸ்தவ வாழ்க்கை மல்யுத்தப் பயிற்சியுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் அத்தகைய பயிற்சியில் ஈடுபட்டாக வேண்டுமென்பதுதான்.

இத்தகைய பயிற்சிக்கும் போராட்டத்திற்கும் துணையாகவே கடவுள் நமக்கு சில ஆயுதங்களை வழங்கியுள்ளார். பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் 6 ஆம் அதிகாரத்தில் 13 முதல் 20 வரையும் இத்தகைய ஆயுதங்களின் பட்டியலை நமக்குத் தருகிறார். இவற்றை நாம் அன்றாடம் ஜெபத்தோடு பயன்படுத்த வேண்டும். போராயுதங்களை அணியாமலும், போருக்குத் தயாராகாமலும் எந்தப் போர்வீரனும் இருப்பதில்லை. அதேபோல் பிசாசின் தந்திரங்களுக்குத் தப்பி பாவம் செய்யாமலிருக்க நமது ஆயுதங்களைக் கவனத்தோடும், திறமையாகவும் பயன்படுத்த வேண்டும்.

ஆவியின் பாதையில் நடப்பது எப்படி?

திருமறை நாம் மாம்சத்தின் வழியில் நடக்காமல் ஆவியின் வழியில் நடக்க வேண்டும் என்று போதிக்கின்றது. இதையே பவுல் ரோமர் 8 ஆம் அதிகாரத்தில் விளக்குகிறார். ஆனால் ஆவியின் வழியில் நடப்பது என்பதற்குப் பொருள் என்ன? பலர் ஆவியின் வழியில் நடப்பது என்றால் ஆவியை விசேடமாக அடைவது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வேதமோ ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பை அடைகிறபோது ஆவியையும் அடைகிறான் என்று போதிக்கின்றது. ஆவியானவர் ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் குடியிருக்கிறார். அவர் நம்மில் குடியிருப்பதால்தான் நமக்கு கிறிஸ்துவின் மேல் அன்பு இருக்கின்றது. அவரை வழிபட வேண்டும், அவரது வார்த்தையின்படி நடக்க வேண்டும் என்ற வாஞ்சையும் இருக்கின்றது. ஆசியைப் பெறாதவன் இவ்வாறெல்லாம் எண்ண மாட்டான். ஏனெனில் அவனுள்ளத்தில் பாவம் மட்டுமே செயல்படுகின்றது அவன் பாவத்தின் வழிகளில் மட்டுமே நடப்பான்.

கிறிஸ்தவர்களாகிய நமக்குள் இருக்கும் ஆவி நாம் தேவனின் வழிகளில் செல்லத் துணைபுரிகிறார். அதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? கிறிஸ்தவன் தொடர்ந்து கர்த்தரின் வார்த்தையின்படி அவரை மகிமைப்படுத்தும் காரியங்களைத் தன் வாழ்வில் செய்கிறபோது அவனில் ஆவியின் செயலை நாம் பார்க்கிறோம். ஒருவன் மாம்சத்தின் வழியில் போகிறபோது அவனில் ஆவியின் செயற்பாடு இல்லாமலிருப்பதைப் பார்க்கிறோம். இதையே பவுல் ரோமரில், ‘மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவியின்படி சிந்திக்கிறார்கள். ‘தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்திற்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல’ (ரோமர் 8:5, 9) என்று கூறுகிறார். மேலும், ‘மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்’ என்றும் கூறுகிறார்.

ஆகவே ஆவியின் வழியில் நடப்பது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்குள் இருக்கும் ஆவியை மீண்டும் பெற முயல்வதோ அல்லது நாம் பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆவியை நோக்கிக் காத்திருப்பதோ அல்ல. இதை சுருக்கமாக விளக்கும் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில், ‘ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கிறபோது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ என்று கூறுகிறார். இதன் மூலம் பவுல் விளக்குவதென்னவெனில், எவன் ஒருவன் அதிக பிரயாசையோடும், பயத்தோடும் தனது கிறிஸ்தவ வாழ்க்கையை கர்த்தருடைய மகிமைக்காக நடத்துகிறானோ அவனில் மட்டுமே கடவுளுடைய செய்கையையும், அவரது ஆவியின் செயற்பாட்டையும் காண முடியும் என்பதுதான். ஆவியின் வழியில் நடக்க இதைத்தவிர வேறு வழிகளை வேதம் போதிப்பதில்லை.

ஆவியால் நிரப்பப்படுவது எப்படி?

வேதம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவியால் நிரப்பப்பட வேண்டும் என்று போதிக்கின்றது. பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறவன் தொடர்ந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான். இதைக் குறித்தும் எத்தனையோ தவறான போதனைகள் உலவி வருகின்றன. ஆவியால் நிரப்பப்படுவது என்றால் என்ன? எபேசியர் 5:18 இல் பவுல் நாம் ‘மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்திருக்க’ வேண்டுமென போதிக்கிறார். பவுல் கூறுவதை விளங்கிக் கொள்ள நாம் முழு வசனப் பகுதியையும் வாசித்தல் அவசியம். பதினைந்தாவது வசனத்தில் ஞானமற்றவர்களைப் போல் நடவாது, ஞானமுள்ளவர்களைப் போல் எவ்வாறு நடப்பது என்று இப்பகுதியில் போதிக்கும் பவுல் அப்போதனையின் ஒரு பகுதியாகத்தான் ‘ஆவியால் நிரம்பியிருக்க’ வேண்டுமென்று கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது ஒருவன் ஞானமுள்ளவனாக, காலத்தைப் பிரயோஜனப்படுத்தி, மதுவெறியற்று, கர்த்தருடைய சித்தம் இன்னதென அறிந்து கொள்கிறபோது அவன் ஆவியின் நிரம்புதலுக்குட்பட்டிருகிறான் என்பது பவுலின் போதனை. மேற்கூறப்பட்ட இலக்கணங்களைக் கொண்டிராதவன் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. இதைவிட்டு இன்று பலர் ஆவியினால் நிரப்பப்படுவதென்பது கிறிஸ்தவ வாழ்வில் அற்புதமாக நிகழும் ஒரு நிகழ்ச்சியெனவும், ஒருவனின் விசுவாசத்தோடும், பரிசுத்த வாழ்க்கையோடும் தொடர்பற்றதொன்றாகவும் கருதி வருகின்றனர். இது பவுலின் போதனைக்கு முரணானது. ஒருமுறை நமக்குள் வந்து குடியிருக்கும் ஆவி நம்மை விட்டு அகலுவதுமில்லை; வந்து போய்க்கொண்டிருப்பதுமில்லை. கிறிஸ்தவனின் பரிசுத்த வாழ்க்கையின் ஒரு அங்கமே அவன் ஆவியால் தொடர்ந்து நிரப்பப்பட்டிருப்பது. இது எல்லாக் கிறிஸ்தவர்களும் தம் வாழ்வில் தொடர்ந்து அனுபவிக்கும் ஒரு அனுபவம். ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட அற்புத அனுபவமல்ல.

ஊழியக்காரர்களின் வீழ்ச்சிக்குக் காரணம்

ஆரம்பத்தில் நாம் கூறியது போல பரிசுத்த வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஊழியக்காரர்களில் பலர் இன்று வழுக்கி விழுவதற்குக் காரணமென்ன? பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு இவர்களால் முடியாவிட்டால் நாம் எப்படி வாழ்வது என்று பலரையும் எண்ணத் தூண்டும் செயல்களுக்குக் காரணம் என்ன?

ஊழியம் செய்பவர்கள் வழுக்கி விழுகின்றபோது நாம் எப்போதுமே கேட்க வேண்டிய முக்கிய கேள்வி அம்மனிதன் உண்மையாகவே தேவனை அறிந்திருக்கிறானா? என்பது தான். ஏனெனில் திருமறையில் மேலான அறிவைக் கொண்டிருந்தும், பல ஆவிக்குரிய வரங்களைப் பெற்றிருந்தும் ஒருவன் தேவனை அறியாமல் இருக்கலாம் (மத்தேயு 7:21-23). வேதத்தில் இதற்குப் பல சாட்சிகள் உண்டு. ஒரு மனிதன் கர்த்தரை அறியாமல் ஊழியத்தை ஒரு தொழிலாக மட்டும் கருதி மற்றவர்களை ஏமாற்றி வரலாம். சபையையும், ஊழியத்தையும் குடும்பச் சொத்தாகக் கருதி வருபவர்கள் மத்தியில் இது சாதாரணமாகவே நிகழும் காரியம். ஆகவே தான் ஊழியம் திருமறைபூர்வமாக அமையும்படிப் பார்த்துக் கொள்வது அவசியம்.

அதுமட்டுமல்லாது பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்திலும், எபேசியருக்கு எழுதிய நிருபத்திலும் பட்டியலிட்டுத் தரும் செயல்கள் (கலா. 19:21; எபேசி. 5:3-5) சாதாரண பாவங்களல்ல. எல்லாப் பாவங்களுமே பாவங்களாக இருந்தாலும் சில பாவங்கள் பாரதூரமானவை. அவற்றால் ஒருவன் வாழ்வில் பல பாதிப்புகள் ஏற்படும். அத்தகைய பாவங்களை ஒரு கிறிஸ்தவன் சாதாரணமாக செய்ய முற்பட மாட்டான். அவ்வாறான பாவங்களைத் தன்னைக் கிறிஸ்தவன் என அழைத்துக் கொள்ளும் ஒருவன் செய்திருப்பானெனில், அவற்றை அவன் பல வருடங்கள் ஒருவருக்கும் தெரியாமல் மறைமுகமாக செய்து வந்திருந்தாலன்றி திடீரென செய்ய முடியாது. ஆகவேதான் அவனது கிறிஸ்தவ வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது அவசியம். அவன் உண்மையிலேயே கிறிஸ்தவனாக இருந்து அப்பாவத்தைச் செய்திருந்தால் அதை நிச்சயமாக அவன் பலருக்கும் தெரியாமல் செய்து வந்திருக்க வேண்டும். எனவே அம்மனிதன் அக்கொடிய பாவத்தின் சகல கறைகளிலும், கட்டுக்களிலும் இருந்து அகலும் விதத்தில் அவனுக்குத் துணை புரிய வேண்டும்.

அத்தகைய மனிதன் ஒரு ஊழியக்காரனாக இருந்தால் அவ்வூழியத்தின் சகல பொறுப்புக்களில் இருந்தும் அவன் முதலில் நீக்கப்பட வேண்டியது அவசியம். இன்று சிலர் வேசித்தனத்தில் ஈடுபட்டுவிட்டு கடவுள் என்னை மன்னித்துவிட்டார் அது போதாதா என்று கூறி வேதத்தைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் மேடை ஏறி விடுகின்றனர். காய்ச்சலுக்கும் கான்சருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது. பாவத்தில் மோசமானதைச் செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் வெறும் காய்ச்சல்தான் என்று உதறிவிட முடியாது.

அம்மனிதன் அப்பாவத்தைச் செய்வதற்குக் காரணமாக இருந்த வழிகளையெல்லாம் ஆராய்ந்து அவன் அதைத் தொடராதிருக்கும் விதத்தில் அவனுக்குத் துணை செய்ய வேண்டும். இது மூன்று வாரத்திலோ அல்லது மூன்று மாதத்திலோ நடந்து முடிந்துவிடக்கூடிய காரியமல்ல. இதற்குப் பலகாலமெடுக்கலாம். அதுவரை அவன் ஊழியத்தில் ஈடுபடக்கூடாது. அத்தகைய பாவத்தைச் செய்துவிட்டு ஊழியத்தில் ஈடுபட ஒருவன் முனைந்தால் அதுவே அவன் உண்மையில் மனந்திரும்பவில்லை என்பதற்குச் சான்றாகும். ஊழியத்திற்கான இலக்கணங்கள் இச்செயல்களைக் கொண்டிருக்கின்றன.

இன்று பலர் இவ்வாறு பாவம் செய்துவிட்டு ஊழியத்தைத் தொடர்வதற்குக் காரணம் அவர்களுக்கு சபைக்கட்டுப்பாடு இல்லாததுதான். தனி நிறுவனங்களை நடத்தி யாருடைய கட்டுப்பாடுமில்லாமல் நடந்ததால்தான் அவர்கள் பாவகரமான காரியங்களில் ஈடுபட நேரிடுகிறது. இத்தகைய செயல்களைச் செய்துள்ள பலர் கிறிஸ்தவ நிறுவனங்களின் தலைவர்களாக இருந்திருப்பதில் வியப்பில்லை.

இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் சபைக் கட்டுப்பாட்டிற்குத் தம்மை ஒப்புக்கொடுத்து போதகர்களின் துணையோடு தங்களது செயல்களின் முழுப் பாதிப்பையும் உணர்ந்து அவற்றில் இருந்து முழுமையாக விடுபடும் வழிகளைப் பார்க்க வேண்டும். அவனுடைய பாவம் அவனை மட்டுமல்லாமல் அவனது குடும்பம், நிறுவனம் இன்னும் எத்தனையோ பேரையும் பாதித்திருக்கலாம். இவர்கள் எல்லோருமே இவற்றின் பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டியது அவசியம். தாவீதின் உதாரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தாண்டவம் ஆட முயலுவதைப்போலக் கொடுமை வேறில்லை. தாவீது தான் செய்த பாவத்திற்காக வருந்தியது மட்டுமல்லாமல், அதற்கான தேவசிட்சையை ஏற்று, சுயவெறுப்பைக் கடைப்பிடித்து பலகாலம் வாழ்ந்ததை மறக்கக்கூடாது.

பரிசுத்த வாழ்க்கையைக் கிறிஸ்தவர்கள் ஆவியின் துணையோடு அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேறும்படியாக பிரயாசையுடன் வாழ வேண்டும். பாவ இச்சைகளை அன்றாடம் அடக்கி, ஆவியின் கனிகளைத் தம்மில் வளர்த்துவர வேண்டும். கட்டுப்பாடுகளை வெறுக்காது, சுய வெறுப்பைக் கடைப்பிடித்து வளர வேண்டும். கிருபையின் சாதனங்களைத் தவறாது பயன்படுத்தி தேவ அன்பில் திளைக்க வேண்டும். கர்த்தருக்கு முன் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்புதலை அன்றாடகக் கடமையாகக் கொள்ள வேண்டும். இவற்றின் மூலமே கிறிஸ்து நமக்குத் தந்துள்ள சுதந்திரத்தையும், அவரது அன்பையும் நாம் ருசி பார்க்க முடியும். கட்டுப்பாடற்ற, பாவத்தைப் பற்றிய அக்கறையற்ற வாழ்க்கைக்கும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் எந்தவிதமான தொடர்புமிருக்க முடியாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s