“புத்தகங்கள், ஆசிரியர்களால் முடியாதபோது, அவர்களுக்கு வசதியில்லாதபோது, அவர்கள் விரும்பாதபோது அதற்கும் மேலாக அவர்கள் இல்லாதபோது பிரசங்கிக்கும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன”
– தொமஸ் புரூக்ஸ்
நல்ல நண்பர்கள் நமக்குத் துணையாயிருப்பதுபோல் நல்ல நூல்கள் எப்போதும் நம் வாழ்வில் ஒளியேற்றும். முதலாம் சங்கீதம் துன்மார்க்கரினுடைய ஆலோசனை நமக்குப் பெருந்துன்பம்தருமென எடுத்துக் காட்டுகிறது. தீயமனிதர்களை நண்பர்களாகக் கொண்டால் எப்படி நாம் வழிதவறிப் போய்விடலாமோ அதேபோல் கண்களுக்கு மட்டும் குளிர்ச்சி தரும்வகையில் காணப்படும் நூல்களாலும் நமக்கு ஆபத்து ஏற்படும்.
நல்ல நண்பர்கள் எப்படி நமக்கு அவசியமோ அதேபோல் நல்ல நூல்கள் நமக்கு அவசியம். எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் ஒருவன் நமது நண்பனாக இருக்க சில அடிப்படை இலக்கணங்கள் அவனுடைய வாழ்வில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல் நாம் நூல்களைத் தெரிவு செய்யும்போது சில அடிப்படைத் தன்மைகளை அவை கொண்டிருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்தகைய அடிப்படைத் தன்மைகள் யாவை?
1. அது மிகப் ‘பிரபலமான’ ஒரு எழுத்தாளராலோ அல்லது பிரசங்கியாலோ எழுதப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கொரியாவின் யொங்கி சோ, தமிழ்நாட்டு சாம் ஜெபத்துரை போன்றோர் பிரபலமானவர்கள். ஆனால் அவர்கள் வேதத்திற்குப் புறம்பானவற்றை எழுத்தில் தொடர்ந்து வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்களாக இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், பிரபலமானவர்கள் வேதத்திற்குப் புறம்பானவற்றை உண்மையைப்போலத்தோன்றும்படி எழுவதில் கைதேர்ந்தவர்கள். எத்தனையோ பேர் இன்று விபரம் புரியாமல் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும், அற்புதங்களையும், பதிலீட்டுப் (Substitutionary) பாவநிவாரணப் பலியையும், மறுதலித்த மிகப் பிரபலமான வில்லியம் பார்க்ளேயின் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2. அது வேதத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். வேதத்தின் போதனைகளை நாம் சரியாக அறிந்திருத்தல் எத்தனை அவசியம் என்பதை உணர வேண்டும். வேதம் கடவுளைப்பற்றியும் அவரது செயல்களைப்பற்றியும் என்ன சொல்லுகிறது என்று அறியாவிட்டால் நாம் எதைக்கொண்டு நூல்களை, அவை நமக்கு நன்மையளிப்பவையா? இல்லையா? என்று ஆராய்வது. வேதத்தின் முறையான அறிவில்லாததால்தான் திராவிட சமயங்கள் திருமறையில் இருந்தே வளர்ந்தன என்று போதிப்பவர்களின் புரட்டை (பார்க்க, திருமறையா? திராவிட சமயமா?) இன்று பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இங்கே நமக்கு வேதத்தில் தேர்ந்த அறிவுள்ளவர்களுடைய உதவி தேவை. இவ்விதழில் வாசகர்களின் பயன்கருதி தமிழிலே உள்ள நல்ல நூல்களின் பட்டியலொன்றையும், அவற்றை எங்கே எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரத்தையும் தந்துள்ளோம்.
3. நூல்களின் தலைப்பின் கவர்ச்சியை மட்டும் வைத்து அவற்றின் தகுதியை நாம் தீர்மானிக்கக்கூடாது. நூலின் தலைப்பு கவர்ச்சிகரமாக இருக்கலாம், ஆனால் அதன் உள்ளடக்கங்கள் வேதபூர்வமாக அமையாவிட்டால் அதனால் நமக்கு எந்தப்பிரயோசனமும் இல்லை.
4. நூலாசிரியரைப்பற்றியும், வெளியீட்டாளரைப்பற்றியும் நாம் அறிந்திருத்தல் அவசியம். ஒரு நூலாசிரியர் பிரபலமானவர் என்பதல்ல நமக்கு முக்கியம். அவர் எதை விசுவாசிக்கிறார்? தான் விசுவாசிக்கும் உண்மைகளை ஒளிவு மறைவின்றித் தெளிவாக விளக்குகின்றாரா? என்பதே முக்கியம். அநேக நூலாசிரியர்கள் தாம் எதை விசுவாசிக்கிறோம் என்று வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்புவதில்லை. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல் எல்லா வாசகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் மட்டும் எழுதுபவர்கள் அநேகர். அத்தோடு நூலை யார் வெளியிட்டுள்ளார்கள் என்றும் கவனிக்க வேண்டும். இன்று ‘ஜெகோவாஸ் விட்னஸஸ்’, ‘மோர்மன்ஸ்’ போன்ற இயக்கத்தாருடையதும், ‘லிபரல்’ கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களும் வெளியிடும் அநேக நூல்கள் கிறிஸ்தவப் புத்தகக் கடைகளை அலங்கரிக்கின்றன. ஆகவே ஆசிரியர்களைப்பற்றியும், வெளியீட்டாளர்களைப்பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியம்.