திருச்சபைக் கோட்பாடுகள்
திருச்சபை இவ்வுலகிற்கு அளித்துள்ள சிறப்பான சான்றார்களில் ஒருவர் ஜோன் கல்வின். பதினான்காம் வயதில் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்துப் பின்பு வக்கீல் படிப்பிற்காக பிரான்ஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்வினை வழியில் நிறுத்தி பெரல் மூலமாகக் கிறிஸ்தவ ஊழியத்திற்கு கர்த்தர் அழைத்தார். அன்று முதல் தேவ சேவையையே தன் வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டு கல்வின் ஜெனீவாவில் ஊழியத்தைத் தொடங்கினார். மகாத் திறமையுடன் அறிவியலும், கல்வியிலும் சிறந்து விளங்கினார். பிரான்ஸ் நாட்டில் சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றியதற்காகப் பல துன்பங்களை அனுபவித்த தன் சக சகோதரர்களின் நிலையைக் கண்டு வருந்தி, பிரான்ஸ் மன்னனுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய விளக்கத்தை அளித்து கர்த்தரை வெளிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் ‘கிறிஸ்தவக் கோட்பாடுகள்’ என்ற நூலைக் கல்வின் எழுதினார். இதன் முதல் பதிப்பு 1536 ஆம் ஆண்டில் ஆறு அதிகாரங்களுடன் 520 பக்கங்களுடன் வெளிவந்தது. பின்பு மேலும் அதிக பக்கங்களுடன் பல பதிப்புகளாக வெளிவந்து இறுதியாக என்பது அதிகாரங்களைக் கொண்ட நூலாக வெளிவந்தது.
ஜே, ஐ. பெக்கர் என்ற வேதவல்லுனர் இந்நூலைப் பற்றிக் கூறும்போது. “என் மேசையில் இருக்கும் இந்நூலை நாற்பது வருடங்களாக நான் தொடர்ந்து படிக்கிறேன். இன்னும் இதன் கரைகாண முடியாமலிருக்கிறேன்” என்றார். இந்நூலின் மகிமையை இது எடுத்துக் காட்டுகிறது. திருமறை போதிக்கும் கிறிஸ்தவத்தின் எல்லா அம்சங்களையும் ஒன்று விடாமல் தெள்ளத்தெளிவாக, வேத அடிப்படையிலும் அதேநேரம் அனுபவ பூர்வமாக கிறிஸ்துவை அறிந்து கொள்ளத் தூண்டும் பக்தி ரசத்தோடும் கல்வின் இந்நூலை வடித்துத் தந்துள்ளார். இதன் சுருக்கமே தமிழில் ‘திருச்சபைக் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் கிறிஸ்தவர்கள் பயன்படும்படியாக வெளிவந்துள்ளது.
பிறவி அடிமைகள்
இந்நூல் சீர்திருத்தவாதியான மார்டின் லூதரால் எழுதப்பட்டு 1525 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதத்தை தொடக்கிவைத்த வேதவல்லுனர் லூதர். இந்நூலில் இராஸ்மஸ் என்பவர் மனிதனின் சுயசித்தத்தைத்குறித்து எழுதிய நூலுக்குப் பதில் அளிக்கிறார். மனிதன் தனது சுயசித்தத்தின் வல்லமையால் எவருடைய துணையுமின்றிக் கடவுளை அறிந்து கொள்ள முடியுமென்பது இராஸ்மஸின் வாதம். இது ‘போப்’ ஹென்றி VIIIஇன் இதயத்தைக் குளிர வைத்தது. சீர்திருத்தவாதியான லூதர்உறுதியாக வேதத்தின் மூலம் இராஸ்மஸின் வாதங்களை இந்நூலில் தவிடு பொடியாக்குகின்றார். மனிதன் பாவத்திற்கு அடிமையாகவே பிறந்திருக்கிறான், அவன் சுதந்திரமாக செயற்பட இயலாத நிலையிலிருக்கிறான் என்று லூதர் எடுத்துக் காட்டுகிறார். கிளிபோட்டு பாண்டு என்பவரால் லூதரின் மூலத்தைச்சுருக்கி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட நூலின் தமிழாக்கம் ‘பிறவி அடிமைகள்’.