விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினால் அவர்களது உள்ளான ஆவிக்குரிய வாழ்வு பெலவீனப்படும் என்று இவ்வத்தியாயத்தில் கற்றுக் கொள்கிறோம். அவர் என்ன சொல்லுகிறார் என்பதில் அக்கறை கொள்ளாததினாலும், மற்றும் தங்களது வாழ்க்கையில் அவரது கிரியைகளைப் புறக்கணிப்பதின் மூலமும் ஆவியானவரைத் துக்கப்படுத்த முடியும்.
கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மகிமைப்படுத்த வேண்டும். அவரையல்லாமல் மனந்திரும்புதலைக் குறித்தோ, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தோ, வேதத்தைப் புரிந்து கொள்வதைக் குறித்தோ, ஜெபிப்பதைக் குறித்தோ, கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதைக் குறித்தோ கிறிஸ்தவர்கள் ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது.
“பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவது” என்பதன் அர்த்தம் என்ன? கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்த முடியும் என்று கடவுள் சொல்லும் போது, தங்களது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருவர் அலட்சியம் செய்வதை அவர் அதிக விழிப்போடும் உணர்வோடும் கவனிக்கிறார் என்பதே பொருளாகும். ஆவியானவர் தாம் அலட்சியப்படுத்தப்படுவதை அறிந்ததும் தமது கிரியையையும், ஆசீர்வாதத்தையும் நிறுத்திக் கொள்கிறார். கீழ்க்கண்ட வழிகளில் விசுவாசிகள் அவரைத் துக்கப்படுத்த முடியும். அவர் விசுவாசிகளுக்குக் கொடுத்திருக்கிற புதிய ஆவிக்குரிய ஜீவன் அதன் வல்லமையை இழக்கும் போது ஆவியானவர் துக்கப்படுத்தப்படலாம். அப்போது நன்றாக ஓடின விசுவாசிகள் (கலா. 5:17) தங்களது ஆவிக்குரிய வாழ்வில் சோர்வடைந்து அக்கறையில்லாமல் காணப்படுவார்கள். கடவுளோடுள்ள உறவில் குளிருமின்றி அனலுமின்றிக் காணப்படுவார்கள் (வெளி. 3:16). பரிசுத்த ஆவியானவர் செய்த எல்லாக் காரியங்களுக்காகவும் நாம் நன்றியற்றவர்களாய் இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நமது சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அகற்றி விடுகிறார்.
முதலாவதாக, தங்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்திருக்கிறார் என்பதை மறுதலிக்கும்போது கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறார்கள். மகா பாவமுள்ளவர்கள் என்ற உணர்ச்சி அவர்களில் இருப்பதால் சில வேளைகளில் தாங்கள் விசுவாசிகளல்ல என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கலாம். ஆனால் அது மெய்யான தாழ்மையாக இருக்கலாம். அதற்காக, எங்களது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ததே கிடையாது என்று கூறி விசுவாசிகள் ஆவியானவரைத் துக்கப்படுத்தக் கூடாது. தாம் பாவிகள் என்றும், தங்களுடைய ஆவிக்குரிய வாழ்வு தற்சமயம் ஆரோக்கியமாக இல்லை என்றும் உணர்கிறவர்களில் பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாகவே கிரியை செய்திருப்பார். ஏனெனில் ஆவியானவரைக் கொண்டிராதவனுக்கு பாவத்தைப் பற்றிய மனவருத்தம் ஒருபோதுமே இருக்காது.
இரண்டாவதாக, இயேசு கிறிஸ்து தங்களுக்குச் செய்திருப்பதைவிட பரிசுத்த ஆவியானவர் அதிகமாகச் செய்திருக்கிறார் என்று விசுவாசிகள் எண்ணும்போது பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுத்தப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தைத் தமது மக்களுக்குக் காட்டுவார் என்று இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார் (யோவான் 15:26; 16:14). பரிசுத்த ஆவியானவரது பணி இயேசுவை மகிமைப்படுத்துவதாகும். ஏனெனில் இயேசுவின் இரட்சிப்பின் கிரியை மூலமாகவே விசுவாசிகள் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். இயேசுவானவரே பாவிகளுக்காக கடவுளின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிந்தார். கடவுளது நீதியின் கோரிக்கையான தண்டனையை நிறைவேற்றும்படியே இயேசு பாவிகளுக்காக மரித்தார். அவர்களது பாவத்தின் கிரயத்தைப் பரிசுத்த ஆவியானவர் செலுத்தவில்லை. இயேசு தாமே செலுத்தினார். இயேசுவானவர் என்ன செய்திருக்கிறார் என்று காட்டுவதும், அதைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர்களைக் கொண்டுவருவதுமே பரிசுத்த ஆவியானவரின் பணியாகும். அவர்களுக்காக பரிசுத்த ஆவியானவர் கடவுளோடு சமாதானம் பண்ணுகிறதில்லை. இயேசுவானவரே தமது மரணத்தின் மூலம் அவர்களுக்காக சமாதானம் பண்ணினார். இந்தச் சமாதானத்தை அனுபவிக்கும்படியாக அவர்களைக் கொண்டு நடத்துவதே பரிசுத்த ஆவியானவரின் பணியாகும்.
மூன்றாவதாக, விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அவரைத் துக்கப்படுத்தலாம். விசுவாசிகள் தொடர்ந்து பாவம் செய்யாது கடவுளுக்குக் கீழ்ப்படியும்படி, அவர்களை வழி நடத்துவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசம் செய்கிறார். அவர் சொல்லுகிறபடி அவர்கள் செய்யாவிட்டால் எவ்வளவாய் அவர்கள் அவரைத் துக்கப்படுத்துகிறார்கள்!
(‘கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை’ என்ற நூலின் இப்பகுதி, விளக்கத்திற்காக தமிழ் வழக்கில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது).