இவ்விதழுடன் திருமறைத்தீபம் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது. இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய சுவடே தெரியவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில்தான் எத்தனை நல்லிதயம் கொண்ட நண்பர்கள், அருமை வாசகர்களின் அன்பை திருமறைத்தீபம் சம்பாதித்துக் கொண்டுள்ளது. பத்திரிகையின் கருத்துக்கள், போதனைகளுக்கு என்ன வரவேற்பிருக்குமோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த போதும் அச்சந்தேகங்கள் அர்த்தமற்றவை என்பதை வாசகர்கள் உணர்த்திவிட்டார்கள். பத்துப் பேராவது பலனடைந்தால் போதும் என்று எண்ணிய எம்மைப் பெரிதும் தாழ்த்திவிட்டார் பரமன் இயேசு, கடிதங்கள் மூலம் தாம் அடைந்த ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொண்டு எம்மையும் ஊக்குவித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பலர் கடிதமெழுத வசதியில்லாத நிலையில் எமக்காக ஜெபித்து வருவதும் நாம் அறிந்ததே. முடிந்தவரை உங்களனைவரோடும் தொடர்பு கொள்ள எம்மை அனுமதித்த தேவனுக்கு நாம் நன்றி கூறுகிறோம்.
இவ்விதழின் ஆக்கங்கள் பல, பரிசுத்த வாழ்க்கையின் அவசியத்தைக் குறித்ததாக அமைந்துள்ளன. வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும் மட்டும் நமது வாழ்க்கையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திவிட முடியாது. கர்த்தரை மகிமைப்படுத்தும் வகையில் பரிசுத்தமாக நம் வாழ்க்கை அமையாவிட்டால் நமது வாழ்க்கையே வீண். இவ்வாக்கங்களின் மூலம் தேவன் தாமே நம்மோடு பேசுவாராக. அவர் பரிசுத்தமாக இருப்பதுபோல் நாமும் தொடர்ந்து பரிசுத்தமாக வாழ அவர் துணை புரிவாராக.
வரப்போகும் புதிய வருடத்தில் எமது ஐக்கியத்தையும், அன்பையும் பெலப்படுத்தி தேவ கிருபை நம்மில் பூரணமாக செயல்பட கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. தொல்லைகள், துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு சகோதரர்களுக்கு புதிய வருடம் புது வாழ்வு தரும் என எதிர்பார்ப்போம்.
அன்புடன்,
ஆசிரியர்