பிரசங்கிகளுக்கான அறிவுரை – ஸ்பர்ஜன்

வேதவசனங்கள் சாதாரணமாக என்ன பொருளைக் கொண்டுள்ளனவோ அதன்படியே விளக்கப்பட வேண்டுமே தவிர அவற்றை உருவகப்படுத்தக் (Allegory) கூடாது.

1. வலுக்கட்டாயமாக நியாயமற்ற வகையில் வசனத்தை உருவகப்படுத்தலாகாது. இது பொது அறிவுக்கே முரணான பாவமாகும். சில போதகர்கள் இவ்விதத்தில் வேத வசனங்களை மோசமாக திருமறைக்கு முரணான விதத்தில் பயன்படுத்தி அவை கூறாத பொருளைக் கூறி விளக்கி வருகின்றனர். ஞானிகளுக்கு மத்தியில் முட்டாளாகவும், முட்டாள்களுக்கு மத்தியில் ஞானியாகவும் நம்மை மாற்றக்கூடிய இத்தகைய சிறுபிள்ளைத்தனமான மோசமான உருவகப்படுத்தலைக் கைவிட வேண்டும்.

2. கடினமான வேதப்பகுதிகளை எப்போதுமே உருவகப்படுத்தலாகாது. உதாரணமாக உன்னதப் பாடல்கள், எரேமியா, எசேக்கியல் போன்ற நூல்களை விளக்கும்போது இளம் போதகர்கள் பொருப்போடும் கவனத்தோடும் விளக்க வேண்டும்.

3. கேட்பவர்கள் நம்மை காணற்கரிய அறிவாளியென்று பாராட்ட வேண்டுமேன்பதற்காக உருவகப்படுத்தலில் ஈடுபடக்கூடாது.

4. தேவவசனத்தோடு எதையும் சேர்ப்பதால் விளையும் பாவத்தை சுமக்காதிருக்க, வசனத்தை மாற்றி அது சொல்லாத விஷயத்தைச் சொல்லி உருவகப்படுத்தலாகாது. வில்லியம் ஹன்டிங்டன் என்பவர் பத்தாவது கட்டளையான ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயாக’ என்பதை மாற்றி ‘முன்குறிக்கப்படாதவனின் மனைவி மேல் இச்சை வையாதே’ என்று கூறுவதாக விளக்கமளித்தார். இதை விட மோசமான வியாக்கியானம் வேறெதுவும் இருக்க முடியாது.

5. வேதத்தில் இருந்து நீங்கள் விளக்கப்படுத்தும் கதைப்பகுதிகள் உண்மைச் சம்பவங்கள் என்பதைக் கேட்பவர்கள் எப்போதும் மறக்காதிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை நான் கேட்ட பிரசங்கத்தை என்னால் விளக்காமலிருக்க முடியாது. படிப்பறிவில்லாத ஒரு நல்லமனிதர் ஒருமுறை பிரசங்கித்தபோது பேச எடுத்துக் கொண்ட தலைப்பு “இராச்சுற்றிப் பறவை, ஆந்தை, குயில்” என்பதாகும். இம்மூன்றைப் பற்றியும் விவரித்த பிரசங்கியார், இம்மூன்று பறவைகளும் நியாயப்பிரமாணத்தின் கீழ் அசுத்தமான பறவைகள் என்றும் அவை பாவிகளான மனிதர்களைக் குறிப்பதாகவும் பொருள் கூறினார். இவற்றை மேலும் விளக்கிய பிரசங்கி, இராச் சுற்றிப் பறவைகள் தமது சொத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்தி, பிறரையும் ஏமாற்றி எவரும் சந்தேகிக்காதவிதத்தில் வாழ்க்கை நடத்தும் ஏமாற்றுக்காரர்கள் போன்றவை என்று சித்தரித்தார். ஆந்தைகளோ, இரவில் கூத்தாடிப் பகலில் போகுமிடம் தெரியாமல் முன்னால் இருப்பவற்றின் மீது முட்டி மோதிக்கொள்ளும் குடிகாரர்களைப் போன்றவை என்றார். பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களைப்போலத் தென்படும் சிலரும் ஆந்தைகளைப் போன்றவர்களே; ஏனெனில் ஆந்தை உண்மையிலேயே மிகச்சிறிய பறவை; அதன் சிறகுகள் அதிகமாக இருப்பதாலேயே அது பார்வைக்குப் பெரிதாகத்தென்படுகின்றது. இதைப் போன்றவர்களே பெயர்க் கிறிஸ்தவர்களும். இறுதியாக சில போதகர்கள் குயில்களைப் போன்றவர்கள். அவர்கள் எப்போதும் குயில்களைப் போல சபைகளில் ஒரே பாட்டைத்தான் பாடிக் கொண்டிருப்பார்கள், அது மட்டுமல்ல; பிற பறவைகளின் முட்டைகளைத் தின்று வாழும் குயில்களைப்போல சபைக் காணிக்கைகளிலும், பணத்திலும் வாழ்க்கை நடத்துவதே அவர்கள் வழக்கம் என்று கூறி முடித்தார். கேட்பவர்கள் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக வேதத்திற்கு முரணான விதத்தில் இப்பிரசங்கியைப்போல உருவகப்படுத்தலாகாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s