பிறவி அடிமைகள்
எழுதியவர்: மார்டின் லூதர்
தமிழாக்கம்: ஆர். ஜே. சி. பென்னட்
இந்நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி முன்னொருமுறை இப்பத்திரிகையில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். இதுபற்றி விளக்கமாக எழுத வேண்டிய அவசியத்தை இன்றைய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. கடவுளின் துணையோடும் மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அநேகர் இன்று ஊழியத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ளத் துணை புரியும் சாதனமாகவே Altar Call என்றழைக்கப்படும் ‘கரங்களைத் தூக்கி ஆண்டவரை ஏற்றுக் கொள்ளும்’ அல்லது கூட்டங்களில் நற்செய்தியாளரின் அழைப்பை ஏற்றுக் கடவுளிடம் தம்மை ஒப்புக் கொடுக்க முன்னால் வரும் முறைகள் இன்று பல நற்செய்தியாளர்களாலும், போதகர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் மனிதன் நிச்சயமாக ஆண்டவரை அறிந்து கொண்டுவிடலாம் என்று பலர் நம்பும் வேளையில், மனிதன் கடவுளை அறிந்து கொள்ள இவை மட்டுமே போதாது என்றாலும் இவையில்லாமல் ஒருவன் கடவுளை அறிந்து கொள்ள முடியாது என்று நம்புபவர்களும் அநேகம். இத்தகைய நம்பிக்கைகளுக்குக் காரணமென்ன? இவை வேதபூர்வமானவையா? எந்த அடிப்படையில் நற்செய்தியாளர்கள், போதகர்கள் இன்று இவ்வழி முறைகளைக் கூட்டங்களில் பயன்படுத்துகிறார்கள்? என்று நாம் ஆராயத்தான் வேண்டும்.
இம்மாதிரியான வழி முறைகள் ஏற்படுவதற்கு மூலகாரணம் மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ளும் ‘சுதந்திர சித்தத்தைக்’ (Free will) கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையே. மனிதன் பாவத்தால் பாதிப்புறாத தனது ‘சுதந்திர சித்தத்தைப்’ பயன்படுத்தி கர்த்தரின் கிருபையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நற்செய்தியாளர்கள் கூட்டங்களில் கர்த்தருக்காகத் தீர்மானம் எடுக்கும்படி மக்களை வற்புறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் கொண்டிருக்கும் வேத ஆதாரமற்ற தவறான நம்பிக்கையே காரணம். இதைப் பற்றியே மார்டின் லூதர் இந்நூலில் விளக்குகிறார்.
கிரியைகளினால் வரும் இரட்சிப்பைப் பற்றிய ரோமன் கத்தோலிக்க சபையின் போதனைகளைக் கடுமையாக எதிர்த்த லூதர், கிரியைகளினால் தேவ கிருபையை மனிதன் அடையத் தடையாக இருக்கும் பாவம் அவனில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்நூலில் வேத பூர்வமாக விளக்குகிறார். ‘மனித சித்தத்தின் அடிமைத்தனம்’ (The Bondage of the Will) என்ற தலைப்பில் லூதர் எழுதிய இந்நூல் தமிழில் முதன்முறையாக 1992 இல் வெளிவந்தது. மனித இன நலக்கோட்பாட்டாதரவாளரும் (Humanist), சிறந்த அறிவியல் மேதையுமான எராஸ்மஸ் என்பவர், கத்தோலிக்க சபையின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு எழுதிய நூலுக்கு எதிராக இந்நூலை லூதர் வெளியிட்டார். எராஸ்மஸீம், லூதரைப்போலவே கத்தோலிக்க சபைக்கு எதிராக அக்காலத்தில் போராடிய போதும் இவ்விஷயத்தில் லூதரோடு ஒத்துப்போகவில்லை. லூதர், எராஸ்மஸின் கருத்துக்கள் சுவிசேஷ விசுவாசத்திற்கு எதிரானவை என்பதை இந்நூலின் மூலம் விளக்கினார். இதை விளக்கும் லூதர், “விருப்பச் சுதந்திரத்திற்கு (Free will) ஆதரவாக வாதிடுபவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம்முடைய விருப்பச் சுதந்திரத்தால் கிறிஸ்துவைப் பெறக் கூடுமானால் கிறிஸ்து நமக்குத் தேவையில்லையே. கிறிஸ்து நமக்கு இருந்தால் நமக்கு விருப்பச் சுதந்திரம் தேவையில்லை. விருப்பச் சுதந்திர ஆதரவாளர்கள் தங்கள் செயலினால் கிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்” என்கிறார்.
மனிதனிடம் விருப்பச் சுதந்திரம் இருப்பதாக நம்பி நற்செய்தி கூறுபவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியின் வல்லமையிலும், பெலத்திலும் நம்பிக்கை வைக்காது மனித இரட்சிப்புக்கு அவனது வல்லமையையே ஆதாரமாகக் கருதி அதை நம்பியிருக்கிறார்கள். இதைத்தான் இன்றைய வழக்கில் ‘மனித இன நலக் கோட்பாடு’ (Humanism) என்று கூறுகிறோம். இக்கோட்பாடு கர்த்தரின் இறைமையை ஏற்றுக்கொள்வதில்லை. தவறான போதனைகள், நம்பிக்கைகளிலிருந்து விடுபட இன்றே இந்நூலைப் பெற்று, வாசித்து, ஆராய்ந்து, வேத சத்தியத்தில் வளம் பெற்று கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தில் உறுதியடையுங்கள்.