ஒருவர் சிந்திப்பதற்கு வாசிப்பு அவசியம். சிந்திக்கும் அனைவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருக்கவேண்டும். அதிலும் வேதத்தை அன்றாடம் எடுத்து விளக்கும் ஊழியத்தில் ஈடுபட்டுள்ள போதகர்களுக்கு வாசிக்கும் பயிற்சி அதிகமுக்கியம். வாசிப்பு போதனைகளை சிந்திக்க வைக்கிறது. வேதத்தை வாசிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவ்வேதத்தைப் புரிந்து கொள்ளத்துணை புரியும் நூல்களை வாசிப்பதும் அவசியம். போதக ஊழியத்தில் ஈடுபட்டுள்ள அநேகர் தமது வேலைப்பளுவினால் வாசிப்பதையே முற்றாகத் தவிர்த்துவிடுகிறார்கள். சிலர் வேதத்தை மட்டும் வாசித்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் கொண்டுள்ளார்கள். சிறையிலிருந்த பவுல் தீமோத்தேயுவிடம் நீ வரும்போது புத்தகங்ளைக் கொண்டுவா (1 தீதோ. 4:13) என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
பவுல் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்திருந்தான். நல்ல நூல்களை வாசிக்கும் பயிற்சியைக் கொண்டிராத போதகர்கள் வேத சத்தியங்களை, வருடாவருடம் கேட்பவர்களுடைய சிந்தனையைத் தூண்டும்விதத்திலும், அவர்களுடைய அன்றாட நடைமுறை வாழ்க்கைத் தேவைகளைச் சந்திக்கும்விதத்திலும் போதிக்க முடியாது. இதனால் அவர்களுடைய ஊழியம் புத்துணர்ச்சியற்று, நீர்பாய வழியில்லாத தேக்கமுள்ள ஒரு குட்டையைப்போல மாறிவிடும்.
தமிழில் ந்லல நூல்கள் அநேகம் இல்லாவிட்டாலும் சமீபகாலமாக பல நல்ல நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. ஒருகாலத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த அருமையான நூல்கள் இப்போது கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன (அத்தகைய நூல்களின் பட்டியலை இவ்விதழில் தந்துள்ளோம்). நாம் வாசித்த நூல்களின் தொகை அல்ல நமது அறிவை நிர்ணயிப்பது; எந்தளவுக்கு அக்கறையோடு அறிவுபூர்வமாக அந்நூல்களை வாசித்து அதைக்குறித்து சிந்திக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஞானியான சாலமோன் சொல்வதுபோல் ‘அநேக புத்தகங்களை உண்டு பண்ணுகிறதற்கு முடிவில்லை ; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு’ (பிரசங்கி 12:12). குறைந்தளவாயிருந்தபோதும் தேவையான நல்ல நூல்களை திறம்படப் பயன்படுத்துவதிலேயே நம் அறிவின் மேன்மை தங்கியுள்ளது. இவ்விதழில் தரப்பட்டுள்ள நூல்களைப் பெற்று கருத்தோடு வாசிக்கும் எவரும் நிச்சயம் தமது ஊழியத்தில் பயனடைவார்கள். போதகர்களே, உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காகவும், நீங்கள் போதிக்கும் மக்களின் பயன்கருதியும் நல்ல பயனுள்ள நூல்களை வாங்கி வாசியுங்கள்.