வாசிப்பது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வாசிப்பதற்கு துணை புரியும் சில அறிவுரைகளைப் பார்ப்போம்.
1. நமது விசுவாசத்திற்கு துணைபுரியும் நல்ல நூல்களையே வாசிக்க வேண்டும். இரண்டாந்தரமான நூல்களை நாம் கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. இன்று புத்தகக்கடைகளில் காணப்படும் தொண்ணுற்றி ஐந்து வீதமான நூல்கள் நமது விசுவாச வளர்ச்சிக்குத் துணை செய்யா. போல் யொங்கி சோ, சாம் ஜெபத்துரை, ஓரல் ரொபட்ஸ், சாது செல்லப்பா போன்றோருடைய நூல்களால் எந்தப்பயனும் அடைய முடியாது. தம்மை வளர்த்துக் கொள்ளவும், ‘விபரல்’ கொள்கைகளைப் பரப்பவுமே நூல்கள் எழுதும் இத்தகையோரால் நமது விசுவாச வாழ்க்கைக்குத் தீங்கு ஏற்படும்.
2. அநேக நூல்களை வாசிக்க வேண்டிய அவசியமில்லை. தெரிவு செய்த சில நல்ல நூல்களில் திறனடைவதே முக்கியம் (பிரசங்கி 12:12). சிலர் தாம் நிறைய வாசித்திருப்பதாகப் பெருமை பாராட்டலாம். ஆனால் சிந்திக்காமல், வாசித்ததை ஆராய்ந்து பிரித்துணரும் திறனற்று இருப்பவர்கள் அறிவு மங்கியவர்களே. ஆகவே ஒருசில நல்ல நூல்களில் கரை காண்பதே காலத்திற்கும் சிறந்தது.
3. ஒரு நூலை எவ்வளவு சீக்கிரம் வாசிக்கிறோம் என்பதல்ல முக்கியம், அதை எவ்வளவு தூரம் பொறுமையோடு வாசித்து, வசித்ததைக் கிரகித்து, அதைக்குறித்து சிந்தித்து வாழ்வில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு நாளும், நூலின் சில பக்கங்களைத் தொடர்ச்சியாக விடாமல் வாசிப்பது, வேகமாக வாசித்து ஒன்றும் புரியாமல் இருப்பதைவிட மேலானது.
4. வாசிப்பு ஒரு கலை, அதாவது பயிற்சி. அது தானாகவே வந்துவிடாது. அதற்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நம்மையும் நம் மனத்தையும் தயார் செய்து கொண்டு எந்தத்தடங்கலும் இல்லாத நேரத்தில் வாசிக்கப் பழக வேண்டும்.
5. நாம் வாசிக்கும் அனைத்தையும் வேதத்தோடு ஒப்பிட்டு ஆராய்தல் அவசியம். வேதமே எல்லாவற்றிலும் மேலானது. வேதத்தை விளங்கிக் கொள்வதற்காகவும், அதில் மேலும் அறிவு பெறுவதற்காகவுமே நாம் நூல்களை வாசிப்பதால், வாசிப்பவற்றை சிந்தித்து ஆராய்வது அவசியம். சிந்திக்க சோம்பேறித்தனப்படுபவர்கள் வாசிப்பினால் எந்தப்பயனையும் அடைய முடியாது.
6. வாசிக்க நாம் தெரிவு செய்யும் நூல்கள் வேதத்தின் எல்லா சத்தியங்களையும் போதிப்பதாக இருக்க வேண்டும். அதாவது ஒரே விடயத்தில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது. முக்கிய வேதக்கோட்பாடுகளை நாம் படிக்க முயல வேண்டும். வேதக்கோட்பாடுகளில் கவனம் செலுத்தாததனால்தான் இன்று பலர் போலிப்போதனைகளினால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கல்வினின் ‘திருமறைக்கோட்பாடுகள்’ மீண்டும், மீண்டும் படிக்க வேண்டிய ஒரு நூல். அத்தோடு திருச்சபை சரித்திரத்தையும், சான்றோர் சரிதங்களையும் வாசிக்கத் தவறக்கூடாது.
“கிறிஸ்தவர்கள் ஆராய்ந்தறியும் திறனற்று, கோப்பையிலிருந்து மாசுள்ள நீரைப்பருகும் பார்வையற்ற குருடனைப்போல் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை”
(19ஆம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் கென்னடி என்ற போதகர் கூறியது)