கிறிஸ்தவ குடும்பம் சம்பந்தமான சில ஆக்கங்களை இவ்விதழில் தந்துள்ளோம். தமிழ்க் கிறிஸ்தவ குடும்பங்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கும் இந்நாட்களில் இவ்வாக்கங்கள் பலருக்கும் துணைபுரியுமென்று நம்புகிறோம். குடும்பம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளை நுனிப்புல் மேய்வதுபோல் மேலெழுந்தவாரியாகப் பார்க்காது, அதனை ஆழமாக ஆராய்ந்து உண்மைக் காரணங்களை சரிவர உணர்ந்து, அவற்றிற்கு வேதபூர்வமான விமோசனம்காண வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்தினதும் கடமை. இதனையே இவ்வாக்கங்கள் கருத்தில்கொண்டு ஆராய்கின்றன. குடும்பம் ஒரு ஆலயம் இவ்விதழில் இருந்து, தொடராக மலர்ந்து கிறிஸ்தவ குடும்பத்தின் பல அம்சங்களையும் ஆராயவிருக்கிறது. குடும்ப ஆராதனை இல்லாத குடும்பங்கள் கிறிஸ்தவ குடும்பமாக அமைந்து தேவாசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. குடும்ப ஆராதனை இன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம். ஜே. சி. ரைலின் சிறந்த பிள்ளை வளர்ப்பு நூல் பற்றி எழுதியிருக்கிறோம். அது அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல். ஆகவே, மொத்தத்தில் இவ்விதழ் ஒரு குடும்பமலராக மலர்ந்திருக்கிறது.
சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் நாட்டமுள்ளவர்கள் குடும்ப வாழ்க்கையில் அக்கறையற்று இருக்க முடியாது. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பிதாக்களும் குடும்ப வாழ்க்கைபற்றிப் போதித்து எழுதி வந்தவர்களில் முதலிடம் பெறுகிறார்கள். சிறந்த கிறிஸ்தவத்தை உலகில் நிலை நாட்டவும், சிறப்பான சபைகள் நாடெங்கும் தோன்றவும், சீரான குடும்பங்களின் அவசியத்தைப்பற்றி அவர்களைப்போல் போதித்தவர்கள், எழுதியவர்கள் கிறிஸ்தவ உலகில் இல்லை. இதுபற்றிய அவர்களுடைய போதனைகள் சுத்தமாக வேதத்தை மட்டுமே தழுவி நிற்கின்றன. அதற்கு அவர்கள் வழிவந்த ரைலின் “சிறந்த பிள்ளை வளர்ப்பு” ஓர் எடுத்துக்காட்டு. இவ்விதழின் படைப்புக்களைப் பல நாடுகளிலும் உள்ள தமிழ் வாசகர்கள் வாசிப்பதால், குடும்ப வாழ்க்கைப்பற்றிய உங்களுடைய எண்ணங்களையும், நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் எம்மோடு பகிர்ந்து கொண்டால், இனிவரப்போகும் தொடர்களில் அவற்றையும் கருத்தில் கொண்டு ஆராய எமக்கு உதவி புரிந்ததாக அமையும்.