இன்று தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் என்ற பெயரில் வேதத்தின் அதிகாரத்தை நிராகரித்து நடந்து வரும் கூத்துக்களைப் பலரும் வெறுக்கத்தான் செய்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்குத் தங்களுடைய வாழ்க்கையில் கொடுக்க வேண்டிய இடத்தை அநேகர் கொடுக்க மறுப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். பத்துக்கட்டளைகளுக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பது போல் வீட்டிலும், வெளியிலும், சபையிலும் அநேகர் நடந்துவரும் போக்கை நாம் பார்க்கிறோம். பத்துக் கட்டளைகளை நிராகரித்துவிட்டு பரிசுத்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்ற உண்மையே அநேகருக்கு உரைப்பதில்லை. இதற்கு சபைத்தலைவர்களும்கூட விதிவிலக்கல்ல.
இவ்விதழின் சிறப்புக்கட்டுரையான “உப்பு தன் சாரத்தை இழந்தால்” என்ற ஆக்கத்தின் மூலம் உப்புச்சப்பில்லாத இன்றைய கிறிஸ்தவத்தின் போக்கைப் படம்பிடித்துக் காட்டுவதுடன் அது திருந்துவதற்கான சத்தான ஆலோசனைகளையும் மொரிஸ் ரொபட்ஸ் வழங்குகிறார்.
விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரத்திற்கான விளக்கவுரை இவ்விதழுடன் நிறைவு பெறுகிறது. வேதத்தின் மெய்த்தன்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இவ்வதிகாரம் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த இதழில் இரண்டாம் அதிகாரத்திற்கான (திரித்துவம்) விளக்கவுரையைப் போதகர் அலன்டன் (Alan Dunn, Flemington, NJ) வழங்கவிருக்கிறார்.
கடைசியாக, அட்டைப் படத்தைப்பற்றிய ஒரு விளக்கம். பவுல் தனது அப்போஸ்தலப் பிரதிநிதியான தீமோத்தேயுவுக்கு வேதபோதனையளிக்கும் ஒரு காட்சியை அதில் பார்க்கலாம். நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு என்று பவுல் தீமோத்தேயுவுக்கு கூறுவது போலிருக்கிறதல்லவா? நாம் கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றி இவ்விதழில் வாசிக்கலாம். இதுவரை வந்த இதழ்களைப் போலவே இவ்விதழும் உங்களுக்குப் பயன்படும் என்று நம்புகிறோம்.