இதுவரை வாசகர்களுக்கு திருமறைத் தீபத்தை இரு பிரதிகளாக அனுப்பி வந்துள்ளோம். அநேகர் தங்கள் நண்பர்களுக்கு பத்திரிகையை அறிமுகப்படுத்தி வைக்க அது துணைபுரிந்ததே அதற்குக் காரணம். நேரடியாக எழுதிக் கேட்கும் புதிய வாசகர்களுக்கெல்லாம் பத்திரிகையைத் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். ஆனால் இவ்வருட முதல் தனிப்பட்ட முகவரிகள் அனைத்திற்கும் ஒரு பிரதி மட்டுமே அனுப்பி வைக்கப்படும். இதனைக் கடந்த இதழைப் பெற்றுக் கொண்டவர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். பத்திரிகை செலவு அதிகரித்துள்ளதும், வாசகர்கள் எண்ணிக்கை பெருகி வருவதுமே இதற்குக் காரணம். முடிந்தவரை பத்திரிகையைத் தரம் குறையாமல் வெளியிடுவதும், கேட்டு எழுதும் அனைவருக்கும் பத்திரிகையை அனுப்பி வைப்பதுமே எங்கள் நோக்கம். ஆகவே முடிந்தவர்கள் பத்திரிகையை விரும்பி வாசிக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வீர்களானால் எங்கள் ஊழியத்திற்குப் பெருந்துணையாக இருக்கும். ஒவ்வொரு பிரதியும் வீண் போகாதவாறு, நாடிவரும் அனைவருக்கும் கிடைக்கும்படியாக எம்மோடு சேர்ந்து பாடுபடும்படித் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
சமீபத்தில் (ஆகஸ்ட் 1997) ஆங்கிலத்தில் வெளியான திரு. தெய்வநாயகத்தின் “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை இவ்விதழில் விமர்சித்துள்ளோம். இவ்விமர்சனம் நமது ஆங்கில மூலத்தின் சுருக்கம். கிறிஸ்தவத்தை எதிர்நோக்கும் ஆபத்துக்கள், அவை எங்கிருந்து வந்தபோதும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனதும் கடமை. அநேக தமிழ் கிறிஸ்தவ அன்பர்கள் இப்பேராபத்தைப் புரிந்து கொள்ளாமல் இதற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். வேதத்தைப் புறக்கணித்து விட்டு ஒருவரும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளமுடியாது. அது கிறிஸ்துவுக்குப் பொறுக்காது. இனப்போராட்டத்தின் பெயரில் வேதபூர்வமான கிறிஸ்தவத்தை அழிக்க முனையும் இப்போதனைக்கு சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் இடம் கொடுத்தலாகாது. இதனை வாசிக்கும் அன்பர்கள் ஏனையோருடனும் பகிர்ந்து கொண்டு அவர்களைக் காக்க முற்படுங்கள். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் (மத்தேயு 7:15) என்ற கர்த்தரின் வார்த்தையை நாம் எல்லோரும் நினைவு கூறுவோம்.