“நவீன சுவிசேஷ ஊழியம் உருவாக்கியிருக்கின்ற அனைத்தும் இன்றைய கிறிஸ்தவத்தின் துக்ககரமான உதாரணங்களாகக் காணப்படுகின்றன. தீர்மானம் எடுப்பதன் மூலம் கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்படுகிறவர்கள் தொடர்ந்து உலகப்பிரகாரமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். “கிறிஸ்துவிற்காகத் தீர்மானம் எடுத்தல்” என்பதில் எந்தப் பொருளும் இல்லை.”
“இன்றைய சுவிசேஷம்” என்ற தனது நூலில் வோல்டர் சாள்ட்ரி இவ்வார்த்தைகளின் மூலம் நவீன சுவிசேஷப் பிரசங்கத்தால் உருவாகியிருக்கும் தீமையை எடுத்துக் காட்டுகின்றார். சுவிசேஷப் போதனை என்ற பெயரில் கூட்டங்களில் பாடல்களாலும், இசையாலும் கேட்பவர்களின் கவனத்தைத் திருப்பி, கூட்ட முடிவில் கிறிஸ்துவுக்காகத் தீர்மானம் எடுப்பதன் மூலம் இரட்சிப்பை உடனடியாக, அங்கேயே பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி, துள்ளியோடி வரவைக்கும் அழைப்பைக் கொடுத்து, இதன் பலனாக இயேசுவை ஏற்றுக் கொண்டதாகத் “தீர்மானம்” எடுப்பவர்களை கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்கும் பணி பல காலமாக சுவிசேஷ இயக்கத்தார் மத்தியில் நடந்து வரும் நிகழ்ச்சி. இவ்வாறு சுவிசேஷக் கூட்டங்களில் முன்னால் வந்து சரீரப் பிரகாரமாக ஒருவர் தம்மை ஒப்புக் கொடுக்கும் கைங்கரியத்தை ஏற்படுத்தி வைத்தவர் அமெரிக்க சுவிசேஷப் பிரசங்கியான சார்ள்ஸ் கிரென்டிசன் பினி. கிறிஸ்துவால் எழுப்பப்பட்டு, அப்போஸ்தலர்களால் வளர்க்கப்பட்டு, சீர்த்திருத்தவாதிகளாலும், பியூரிட்டன்களாலும் புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுரீதியான கிறிஸ்தவத்தோடு என்றுமே தொடர்பு கொண்டிராத இத் “தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு” என்ற போதனையை விளக்கும் ஜேம்ஸ் அடம்ஸின் கட்டுரை இவ்விதழை அலங்கரிக்கின்றது. இத்தகைய மனித முயற்சிகளின் மூலம் கர்த்தரிடம் மக்களைக் கொண்டு வரும் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தெளிவு பெற்று அம்மாயையிலிருந்து விடுபடவும், வேதபூர்வமாக நற்செய்தியை நாமனைவரும் தொடர்ந்து பிரசங்கிக்கவும் இவ்விதழ் துணை புரிய ஜெபிப்போம்.