இந்து மதத்தில் கிறிஸ்தவம்?

கடந்த வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266 பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள், சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு நூலை நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும் வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு தமிழில் தருகிறோம்.

திரு. தெய்வநாயகம் தமிழகத்தின் திராவிட இயக்கங்களோடு தொடர்புடையவர். இவர் தமிழகத்தில் காணப்பட்ட ஆதித்திராவிட சமயம் இந்தியாவின் ஆதிக் கிறிஸ்தவமேயல்லாது அதற்கு இந்து சமயத்தோடு எந்தத் தொடர்பும் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்துள்ளார். இவ்வாதிக் கிறிஸ்தவம் தமிழகத்தில் தழைக்கத் துணை புரிந்தவர் தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலர் தோமஸ் என்பது இவரது வாதம். இவ்வாதிக் கிறிஸ்தவம் ஒரே தேவனை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய கிறிஸ்தவம் ஒரே தேவனை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய கிறிஸ்தவத்தை எந்தவிதத்திலும் பிரதிபலிக்காது இந்திய கலாச்சார சூழலுக்கு ஏற்ற தனித்தன்மையைக் கொண்டிருந்ததாக இந்நூலாசிரியர் வாதிக்கின்றார். அத்தோடு வடதேசத்து பிராமணர்களே இந்து சமயத்தில் தற்போது காணப்படும் பலவிதமான தகனப் பலிகள், புரோகிதர் முறை ஆகியவற்றை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி தமிழர்களை ஆண்டு வருகிறார்கள் என்றும் வாதிடுகிறார்.

இந்நூலின் முதலாவது பாகம் திரு. தெய்வநாயகத்தின் மேற்குறிப்பிட்ட ஆய்வை விபரிக்கின்றது. அதன் மூன்றாம், நான்காம் பாகங்கள் பிராமணர்கள் எவ்வாறு தமது சமயத்தை தமிழகத்தில் நுழைத்தார்கள் என்று விபரிப்பதோடு அதை ஒழிக்கத் தமிழர்கள் நடத்த வேண்டிய போராட்ட முறையையும் விபரிக்கின்றது.

திராவிட இயக்கங்களும், திரு. தெய்வநாயகமும்

இவரது வாதத்திற்கு நாம் பதில் கூறுமுன் இவருடைய பின்னணி என்ன என்று ஓரளவு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். திரு. தெய்வநாயகம் தமிழகத்தின் முன்னணி அரசியல் சமுதாய இயக்கங்களான திராவிட இயக்கங்களோடு பெருந் தொடர்பு கொண்டவர். அவ்வியக்கங்கள் பெற்றெடுத்த பலவாரிசுகளில் இவரும் ஒருவர் என்று கூறினாலும் தகும். இவ்வியக்கங்களைப் பற்றி சிறிது அறிந்து கொள்வது இந்நூலின் தோற்றத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும். தமிழகத்து திராவிட இயக்கங்களின் தந்தை ஈ. வே. ரா. பெரியார். தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் போராட எழுந்தது பெரியாரின் திராவிட இயக்கம். பெரியாருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையும், தற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியுமாவர். இவ்வியக்கம் பின்னால் கருத்து வேறுபாட்டால் பிரிவடைந்து அண்ணாத்துரையின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உருவாகியது. ஆரம்ப முதலே இவ்வியக்கங்கள் தமிழர் விடுதலைக்காகப் பாடுபடுவதாக பறைசாற்றிக் கொண்டன. தமிழர்கள் விடுதலை பெற்று தமிழகத்தை ஆளவேண்டுமானால் தமிழ் நாட்டில் பிராமணர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்று இவ்வியக்கங்கள் போராடி வந்தன. பிராமணர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் நாட்டில் குடியேறியவர்கள்; இவர்கள் தங்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் தமிழ் நாட்டில் பரப்பி தமிழர்களை தமக்குக் கீழாகக் கொண்டுவந்து அவர்களை ஆண்டு வருகிறார்கள் என்று இவ்வியக்கங்கள் பிரச்சாரம் செய்தன. தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் காவலர்களாகத் தம்மைக்காட்டி செந்தமிழில் பேசிக் கேட்போரை மயக்கி இறுதியில் பதவியையும் கைப்பற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வியக்கங்களின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு ஒரு காலத்தில் தமிழர்களுக்கு நிச்சயம் புதுவாழ்வு கிட்டத்தான் போகிறது என்று நம்பிய தமிழர்கள் பலர். இவ்வியக்கத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவரே இந்நூலாசிரியர்.

இந்துமதமும், பிராமணர்களும்

பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு இந்துமதம் தடையாக இருந்ததை திராவிட இயக்கங்கள் உணர்ந்திருந்தன. தமிழர்கள் இந்துக்களாக இருக்கும்வரை பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவது என்பது நடவாத காரியம் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஏனெனில் அனைத்து இந்துமத மடங்களின் ஆதீனகர்த்தாக்களாக பிராமணர்களே இருந்ததுடன், எல்லாக் கோவில் பூசாரிகளாகவும் அவர்களே இருந்தனர். இவ்வாதிக்கத்தை பிராமணர்களிடம் இருந்து அகற்றாதவரை தமிழருக்கு நிரந்தர விடுதலை கிடைக்காதென்பதும் திராவிட இயக்கங்கள் அறிந்திருந்த உண்மை. ஆகவே, பிராமணரின் ஆதிக்கத்திலிருந்து தமிழரை விடுவிக்க வேண்டுமானால் இந்து மதத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை வேண்டும். இதனால்தான் பெரியார் முதல் அனைத்து திராவிடத் தலைவர்களும் இந்துக்கடவுளர்களைத் தாக்கிப் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர். இவர்களுடைய பிரச்சாரமே ஆதித்திராவிட சமயம் பிராமணீயத்தைக் கொண்டிராத ஒரே கடவுள் கோட்பாடு என்பது. இவர்களுடைய வாதப்படி பல கடவுள் வணக்கமும், மடங்களும், ஆதீனங்களும், பலிகளும், பிராமணீயமும் வடவர் தென்னகத்திற்குக் கொண்டுவந்த வழிமுறைகளாகும். ஆதியில் தமிழர் கொண்டிருந்த கடவுள் வணக்கம் இவைகளை அறியாமலிருந்தது என்பது இவர்களது பிரச்சாரமாக இருந்தது. இவ்வியக்கத்தின் வழிப்படி இவற்றைப் பத்திரிகை வைத்து எழுதி ஆதரித்து வந்தவர் திரு. தெய்வநாயகம்.

இந்து மதமும், சாதிப்பாகுபாடும்

இந்து மதம் மட்டுமல்லாமல் திராவிட இயக்கங்களின் இலட்சியங்களுக்குத் தடையாக இருந்த இன்னுமொரு ஆபத்து சாதிப்பாகுபாடாகும். திராவிட இயக்கங்கள் சாதிப்பாகுபாட்டை வெறுத்தன. இதற்குக் காரணம் அதைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தவர்கள் வட தேசத்துப் பிராமணர்கள் என்று அவர்கள் நம்பியதுதான். சாதிப்பாகுபாடு இருக்கும்வரை இந்து மதத்தை ஒழிக்க முடியாது என்பது திராவிட இயக்கங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. இந்து மதத்தின் அடித்தளமே ஒருவிதத்தில் சாதிப்பாகுபாட்டு முறைதான். இவை இரண்டும் ஒன்றாக் கலந்திருந்தன. ஒன்றிலிருந்து மற்றொன்றைப்பிரிப்பதென்பது இலகுவானதல்ல. இந்நிலைமையே திராவிட இயக்கங்களைப் பிராமணர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் தூண்டின.

கிறிஸ்தவத்தை இந்து மதத்தோடு ஒப்பிடும் திராவிட இயக்கங்களின் ஆய்வுப்பணி

பதவிக்கு வந்த நாட்தொடக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும் சரி அதிலிருந்து விலகி பின்பு திரு. எம். ஜி. ஆரால் அமைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளை நடத்தி தமிழர் தோற்றம், வரலாறு பற்றி ஆராய ஆய்வாளருக்குப் பேரூக்கமளித்தனர். இக்காலத்தில் திராவிட இயக்கங்களின் ஊக்குவிப்பால் கிறிஸ்தவத்தையும் இந்துமதத்தையும் ஒருங்கிணைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். இதற்குக் காரணம் கிறிஸ்தவம் ஒரே தேவன் என்ற கொள்கையையும், சாதிகளற்ற சமுதாயம் என்ற கோட்பாட்டையும் கொண்டிருந்ததுதான். இது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற திராவிட இயக்கக் கொள்கைக்கு மிகவும் ஒத்துப் போவதாயிருந்தது. அதுமட்டுமல்லாது அப்போஸ்தலர் தோமஸ் தென் இந்தியாவுக்கு வந்திருந்தார் என்ற வாய்வழிவந்த கொள்கையும் இவர்களுக்குக் கைகொடுத்தது. இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் அப்பாத்துரை, ஞானசிகாமணி, தெய்வநாயகம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். அகஸ்தியர் ஞானம் போன்ற நூல்களும், ஆதிசித்தர்கள் அப்போஸ்தலர்களின் சீடர்கள் என்று சுட்டிக்காட்டும் நூல்களும் இக்காலத்தில் வெளிவந்தன. இவ்வாறாக தமிழாராய்ச்சி மகாநாடொன்றில் கொடுக்கப்பட்ட ஒரு ஆய்வேடே திரு. தெய்வநாயகத்தின் திருக்குறள். சைவசித்தாந்தம், விவிலியம் என்ற நூல். இதற்குப் பதிலளித்து 1995 இல் வெளிவந்த சிறுநூலே திருமறையா? திராவிட சமயமா? என்பது. இந்நூலில் திரு. தெய்வநாயகம் தகுந்த வேத அறிவின்றி எவ்வாறு இந்து சமயத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைக்க முயன்று வேதப் பகுதிகளை சரிவர ஆராயாது திரித்துப் பயன்படுத்தி பல தவறான முடிவுகளுக்கு வந்துள்ளார் என்று எடுத்து காட்டியுள்ளேன். இவரது முடிவுகளுக்கு எந்தவிதமான நிரூபிக்கக்கூடிய வேத ஆதாரங்களோ அல்லது முடிவான வரலாற்று ஆதாரங்களோ இல்லை என்பதையும் இந்நூல் விளக்குகின்றது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது திரு. தெய்வநாயகத்தின் அரசியல், சமுதாயப் பின்னணியை நம்மால் புரிந்து கொள்ள முடிவதோடு அவரது நூலுக்கான நோக்கங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இவரது இப்புதிய நூலை திராவிட இயக்க, சிறுபான்மை இனவிடுதலை இயக்கத் தலைவர்கள் வெளியிட்டு வைத்திருப்பதும் நமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. திரு. தெய்வநாயகமே சென்னையிலுள்ள திராவிட சமய எழுப்புதல் இயக்கத்தின் தலைவராகவும், பிற்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். ஆகவே, கிறிஸ்தவத்தின் அடிப்படையில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் நோக்கத்தில் அல்லாது இனப் பாதுகாப்பு, இனவளர்ச்சி என்ற ஒரே நோக்கத்தில் திராவிட இயக்கங்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் அரசியல், சமுதாயப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவே திரு. தெய்வநாயகம் இந்நூலை வரைந்துள்ளார். இதற்கு இந்நூலின் பிராமண எதிர்ப்புப் போராட்டத்தை வற்புறுத்தும் மூன்றாம், நான்காம் பாகங்களே தெளிவான சாட்சிகளாக இருக்கின்றன. தனது இனவிடுதலைப் போராட்டத்திற்கு பயன்படுமுகமாக கிறிஸ்தவத்தைப் பயன்படுத்திக் கொள்வதே இந்நூலாசிரியரது நோக்கம்.

இந்நூலின் பல அம்சங்களுக்கும் நான் ஏற்கனவே பதில் கூறியுள்ளதால் நான்கு முக்கியமான அம்சங்களை மட்டும் மறுபடியும் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

1. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தின் ஒரு கிளையல்ல.

திரு. தெய்வநாயகத்திற்கு கிறிஸ்தவத்தில் சரியான தெளிவில்லை என்பதை அவர் கத்தோலிக்க மதத்தையும் கிறிஸ்தவத்தையும் ஒன்றாகக் கருதுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவ சமயக்கிளையாக இவர் கருதுகின்றார். இதனை இந்நூலின் 51 ஆவது பக்கத்தில் காணலாம். இதனால்தான் இவர் சிலை வணக்கத்தைக் கொண்டமைந்த ரோமன் கத்தோலிக்க மதத்தை ஒத்ததாகக் காணப்படும் சீரிய கிறிஸ்தவத்தை கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்படுத்தி மனதைக் குழப்பிக் கொள்கிறார்.

கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் அல்ல என்பது இன்று வரலாறு தெரியாத அநேகருக்குப் புரிவதில்லை. கத்தோலிக்க மதம் என்றுமே கிறிஸ்தவத்தோடு தொடர்புடையதாயிருக்கவில்லை. கத்தோலிக்க மதத்தின் போதனைகள் அனைத்தும் கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு முரணானவை. கத்தோலிக்கர்கள் வேதத்தோடு வேறு பல நூல்களை இணைத்துக் கொண்டுள்ளதோடு, சபையே வேதத்தைவிட அதிகாரமுள்ளது என்று விசுவாசிக்கிறார்கள். கத்தோலிக்க மதம் இரட்சிப்பு கிரியையினால் பெறப்படுகின்றது என்று போதிக்க, கிறிஸ்தவம் இரட்சிப்பு தேவ கிருபையினால் கிடைக்கின்றது என்று போதிக்கின்றது. கத்தோலிக்க மதம் அதன் தலைவரான போப்பையர் தெய்வீக அம்சமுள்ள கடவுளின் பிரதிநிதி என்று போதிக்க, வேதம் அத்தகைய ஆசாரியத்துவ முறையையே வன்மையாகக் கண்டிக்கின்றது. கத்தோலிக்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்குமிடையில் அடிப்படையிலேயே வேறுபாடிருக்க அது புரியாமல் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்படுத்தி திரு. தெய்வநாயகம் தனது இனவிடுலைப் போராட்டத்திற்கு கிறிஸ்தவத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

2. எது மெய் கிறிஸ்தவம்?

எது மெய் கிறிஸ்தவம்? என்பதில் நூலாசிரியருக்கு பெரும் மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்த்தரின் கிருபை மட்டுமே எவருக்கும் கிறிஸ்துவைப்பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் அறிவைத் தர முடியும். இயேசு கிறிஸ்து கர்த்தரால் இவ்வுலகிற்கு உலக மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக கல்வாரியில் தன்னைப் பலி கொடுக்க அனுப்பப்பட்டவர். கிறிஸ்து சாதாரண மனிதரல்ல, அவர் தேவ மனிதர். கிறிஸ்துவின் கல்வாரி மரணம் மட்டுமே பாவிகளின் மீது கடவுளுக்கிருந்த தேவ கோபத்தை நீக்கி அவர்கள் பாவநிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும் வழியை ஏற்படுத்தும். உலகின் சகல ஜாதிகளுக்கும், இனங்களுக்கும் மத்தியில் எந்தவித மாற்றமோ, கலப்போ இன்றி இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென்பது தேவ கட்டளை. இந்தக் கலப்பற்ற நற்செய்தியைக் கேட்பதாலும் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பதாலும் மட்டுமே எவரும் நித்திய ஜீவனையும், இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நற்செய்தி ஐரோப்பியருக்கு ஒருவிதமாகவும், இந்தியருக்கு இன்னொருவிதமாகவும், சீனருக்கொருவிதமாகவும் அந்தந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்றவிதத்தில் மாற்றிப் பிரசங்கிக்கப்படக் கூடாது. இதைத்தான் நூலாசிரியர் செய்ய முயற்சிக்கிறார். அவ்வாறு செய்வது தேவநிந்தனையைத்தவிர வேறில்லை.

3. வேதத்தைத் தவிர வேறெந்த நூல்களிலும் கிறிஸ்துவோ, கிறிஸ்தவமோ வெளிப்படுத்தப்படவில்லை.

உலகின் வேறெந்த மதங்களிலும் இயேசு கிறிஸ்துவைக் காணமுடியாது. கிறிஸ்துவின் வேதம் மட்டுமே அவரைப்பற்றி எடுத்துக் கூறும், கர்த்தரால் அருளப்பட்டுள்ள, பூரணமான தேவவார்த்தை. இந்து மத நூல்களில் கிறிஸ்தவத்தைக் காண முயற்சிப்பது கல்லில் நார் உரிக்க முயல்வது போலாகும். ஆதித்திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவ வேதத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கிறிஸ்து தன்னை வேதத்தின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்துகிறார். வேதத்தைத் தவிர வேறெந்த நூல்களிலும், மதங்களிலும் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள முடியும் என்று போதிப்பவர்கள் கிறிஸ்துவின் எதிரிகளும், போலித்தீர்க்கதரிசிகளும் ஆவர். ஆகவே, வீண் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மனதைக் குழப்பிக் கொள்வதைவிட வேதத்தைப் படித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவை அறிந்து, வரப்போகும் நியாயத்தீர்ப்பு நாளின் தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வது மேலானது.

4. கிறிஸ்தவம் இனச்சார்பற்றது.

இன்று எல்லா இனங்களுக்கும், சாதிகளுக்குமிடையில் ஒற்றுமையை உருவாக்கக் கூடியவர் கிறிஸ்து மட்டுமே. ஏனெனில் கிறிஸ்தவம் இனப்பாகுபாடற்றது. கர்த்தருக்கு முன் சகல இனங்களும் ஒன்றுதான். அவர் எந்த ஒரு இனத்தையும் மேலானதாகக் கருதுவதில்லை. கிறிஸ்து, தமிழருக்கும், பிராமணருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் சொந்தமானவர். அதனால்தான் கிறிஸ்தவர்கள் இன, சாதிப்பாகுபாட்டை வெறுக்கிறார்கள். தமிழினத்திற்கென்று ஒரு கிறிஸ்தவ இறையியலை உருவாக்க முனைவது கிறிஸ்தவத்தை அழிக்க முனையும் “லிபரல்” கொள்கையாகும். ஓரினத்தை மேம்படுத்தி (அது தமிழினமாக இருந்தாலும் சரி) இன்னோரினத்தைத் தாக்குபவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. மெய் கிறிஸ்தவர்கள் எல்லா இனங்களையும் சமமாகவே பாவிப்பார்கள். ஒரு கொடியில் பூத்த மலர்கள் போல் கிறிஸ்தவர்கள் மற்ற இனங்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வர். அதற்குக் காரணம் கிறிஸ்து அவர்களது வாழ்க்கையில் செய்யும் அற்புதம்தான். எல்லா இனங்களையும் பாவத்தில் இருந்து விடுவிக்கக் கூடியவர் கிறிஸ்து ஒருவர் மட்டுமே. ஆகவே, கிறிஸ்தவத்தைப் பயன்படுத்தி பிராமணர்களைத் தாக்குவது வேதத்திற்குப் புறம்பான செயல். இதனையே நூலாசிரியர் செய்துள்ளார். இம்மாயமானின் வலையிலிருந்து கிறிஸ்தவர்கள் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவம் தத்துவமோ அல்லது ஒழுக்கத்தைப்பற்றிய ஒரு வெறும் போதனையோ அல்ல. அது உறுதியான மாபெரும் வரலாற்று சம்பவங்களினதும், சத்தியங்களினதும் அடிப்படையில் அமைந்த விசுவாசமாகும். நமது ஆன்மீக அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்திராவிட்டால் அது கிறிஸ்தவமே அல்ல.
– மார்டின் லொயிட் ஜோன்ஸ் –

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s