உப்பு தன் சாரத்தை இழந்தால்! – மொரிஸ் ரொபட்ஸ்

உப்பு தன் சாரத்தை இழந்தால்!

மொரிஸ் ரொபட்ஸ்

பலருக்கும் பரிச்சயமான புதிய ஏற்பாட்டின் மலைப்பிரசங்கத்தில், இயேசு கிறிஸ்து தனது மக்கள் இவ்வுலகத்தில் உப்பாயிருக்கிறார்கள் என்று கூறுகிறார் (மத்தேயு 5:13). கிறிஸ்தவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும், அவர்கள் தங்களுடைய குணாதிசயத்தால், இயற்கையாகவே அழுகிப்போகும் தன்மை கொண்ட சமுதாயத்தை அழுகாமல் காப்பாற்றுகிறார்கள் என்றும் இயேசு சொல்கிறார்.

கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட வேறுபாடானவர்கள். மற்றவர்கள் தங்களுடைய செயல்களால் சமுதாயம் மோசமடைந்து, மிகக்கீழான நிலைக்குப் போவதற்குக் காரணமாயிருக்கும்போது, கிறிஸ்தவர்கள் இதற்கு எதிர்மாறானதைச் செய்து சமுதாயத்தை உயர்த்துகிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் முன்னுதாரணமாக இருந்தும், தங்களுடைய சாட்சியின் மூலமும் சமுதாயத்தின் ஒழுக்க உயர்விற்கும் ஆன்மீக உயர்விற்கும் காரணமாக இருக்கிறார்கள். அவர்கள், பாவத்தினாலும், சுயநலத்தினாலும், அவிசுவாசிகள் சமுதாயத்திற்கு செய்யும் தீங்கைத் தடுக்க முனைபவர்களாகவும், கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தடுத்து நிறுத்தும் வண்டிச்சில்லாகவும் செயல்படுகிறார்கள்.

இருந்தபோதும், இயேசு கிறிஸ்து, சிலவேளைகளில் உப்பு தனது சாரத்தை இழந்து போகலாம் என்று கூறுகிறார். அதாவது, கிறிஸ்தவர்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்து மக்களைப் போல் வாழ்ந்து தங்களுடைய சுயமதிப்பை இழந்து போகலாம் என்பது இதற்குப் பொருள். கிறிஸ்தவர்கள், தொடர்ந்து தங்களுடைய விசுவாசத்திற்கு எதிர்மாறான முறையிலும், அதோடு தொடர்பற்ற விதத்திலும் வாழும்போது, தமது கிறிஸ்தவத் தன்மையை இழந்து போகிறார்கள். கிறிஸ்துவே மனிதர்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும் ஒரே தேவன் என்றும், அவரே மகிமையின் தேவன் என்றும் விசுவாசிப்பவனே கிறிஸ்தவன். ஆனால், கிறிஸ்து பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத்தரவே வந்தார் என்பதை சிலவேளைகளில் கிறிஸ்தவர்கள் மறந்து விடக் கூடிய ஒரு வாய்ப்பும் உண்டு. உண்மையான கிறிஸ்தவன் பாவத்தை வெறுத்து, ஒதுக்கும் மனப்பாங்கைக் கொண்டவன். ஆனால், தங்களுடைய வாழ்க்கையிலும், மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் பாவத்தை சகிக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் ஒரு சந்ததியில் தோன்றிவிடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம். அத்தகைய நிலைமையிலேயே உப்பு தன்னுடைய சாரத்தை இழந்து போகிறது.

திருச்சபை நல்ல நிலைமையிலிருந்தபோது நமது பிதாக்களும் முன்னோர்களும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியுற்று பரிசுத்தமாக இருந்ததுபோல் நாம் இன்று வாழவில்லை என்ற நிதர்சனமான உண்மையை நம்மால் மறைக்க முடியாது. ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைப்போல் பக்திவிருத்தி இன்று நம்மத்தியில் இல்லை என்று கூறுவது உண்மையை மிகைப்படுத்துவதாகாது. சமீபத்தில் டபிள்யு ரொபட்சன் நிக்கோல் என்பவர் எழுதிய திருச்சபையின் இளவரசர்கள் என்ற நூலை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது இதைப்பற்றி மறுபடியும் நான் சிந்தித்தேன். இந்நூலை 1900 ஆரம்ப காலப்பகுதியிலும், அதற்கு சிறிது முன்பும் வாழ்ந்த ஏறக்குறைய இருபத்தி ஐந்து பிரசங்கிமார்களின் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக விளக்குகின்றது. இந்நூல வாசிக்கும்போது என்மனதை உலுப்பிய காரியமென்னவென்றால், இக்காலப்பகுதியில், ஆன்மீக வாழ்க்கையில் வளம் பெற்ற அநேக பிரசங்கிமார்கள் சடுதியாக இவ்வுலகை விட்டு மறைய நேர்ந்ததுதான். இவர்களில் ஸ்பர்ஜன் (இங்கிலாந்து), ஜோன் கென்னடி, போனர் சகோதரர்கள், ஜேம்ஸ் பெக், அலேக்சான்டர் மெக்லாரன் (ஸ்கொட்லாந்து) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அற்புதமான மனிதர்களாக இருந்ததுடன், ஆன்மீக வளமுடைய பெரும் சபைகளில் பிரசங்கம் செய்து வந்தனர். நாம் வாழும் நாட்களைவிட இவர்களுடைய காலத்தில் ஆன்மீக உப்பின் சாரம் அதிக வலிமையுடையதாக இருந்தது. இவ்வாறு கூறுவதன் மூலம் இம்மனிதர்களுக்கு நான் துதிபாடவோ, அல்லது இன்றும் நம்மத்தியில் வாழும் சில நல்ல கிறிஸ்தவர்களை மதிப்புக்குறைவாக நடத்தவோ முயலவில்லை. ஆனால், நம் காலத்து ஆன்மீக வளம் இப்பெரியோரின் காலத்தைவிட குறைவானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்பெரியோர்களைக் கல்லறையில் இருந்து எழுப்பி, நம்காலத்து கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர்களை வியப்படையச் செய்வது என்ன? என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதைக் கேட்க ஆவலாய்த்தான் இருக்கிறது. அவர்கள், தங்கள் காலத்துக் கிறிஸ்தவத்தைவிட இன்றைய கிறிஸ்தவம் பல வேறுபாடான தன்மைகளைக் கொண்டிருக்கின்றது என்று நிச்சயமாகக் கூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவ்வேறுபாடுகளில் அவர்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப் போவதென்னவென்றால் அவர்களுடைய காலத்துக் கிறிஸ்தவர்கள் எவ்வளவு தூரம் பரிசுத்த வாழ்க்கைக்கு தங்களுடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதுதான். அதற்கே, அக்கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ரொபட் மரேமெக்சேயின், ரதபோர்ட், தொமஸ் பொஸ்டன் போன்றோரை “ஹீரோக்களாகக்” கருதினர். ஆன்மீகச் செய்திகளை வாசிப்பதையும் ஆன்மீகக் காரியங்களைப்பற்றிப் பேசுவதையுமே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இதற்கு மாறாக, நாம் கிறிஸ்தவ விசுவாசம் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்வதில் இன்று காலத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். அக்காலத்து கிறிஸ்தவர்கள் விசுவாசித்த காரியங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தின. கிறிஸ்தவம் இவ்வுலகில் தழைத்திருந்த காலங்களிலெல்லாம் இதனையே நாம் பார்க்கிறோம். ஆனால், இன்று நாமோ, நாம் விசுவாசிக்கும் காரியங்களால் எந்தவித மாறுதலையும் அடைவதில்லை. இதன் பலனாக, சிறப்பான கிறிஸ்தவர்கள் என்ற பெயர் பெற்றவர்களை இன்று நம்மத்தியில் காண்பது அரிதாக இருக்கின்றது.

இன்று நாம் ஏன் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதில் அக்கறையெடுப்பதில்லை? என்பதற்கு ஒரு காரணமிருக்கின்றது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயத்தின் நிலைமையையே இதற்குக் காரணமாக சுட்டிக் காட்டுகின்றோம். இன்று அநேகக் கிறிஸ்தவர்களில் அக்கிரமம் மிகுந்திருப்பதோடு, அவர்களில் அன்பும் தணிந்து போயிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் (மத்தேயு 24:12). அசுத்தமான எண்ணங்களும், இன்று எல்லாப் பக்கங்களிலும் இருந்து நம்மைச் சுற்றித் தாக்குகின்றன. பரிசுத்தமானவர்களின் வீடுகளிலெல்லாம், டெலிவிசன் இன்று சுதந்திரமாக நுழைந்து உலகப்பிரகாரமான வாழ்க்கைத்தரத்தைத் துணிகரமாக அறிமுகப்படுத்துகின்றது. இன்றைய நவீன சமுதாயத்தில் வீணான மாம்ச இச்சையும், நவீன உடையலங்காரமும், கீழ்த்தரமான இசையும், பலனற்ற விளையாட்டுகளும் அநேக கிறிஸ்தவர்களை இன்று பாதித்துள்ளன. “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா?” என்ற யாக்கோபுவின் (4:4) வார்த்தைகளை நாம் எவ்வளவு தூரம் மறந்திருக்கிறோம். நம் மத்தியில் இன்று காணப்படும் இத்தகைய தரம் குறைந்த நிலைமைக்கு நாம் எந்தவித சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.

உப்பு தன் சாரத்தை இழந்தது போல் கிறிஸ்தவம் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப்போல் இன்று மாறிவிட்டது. இந்நிலைமையில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய இச்சைகளைத் திருப்தி செய்து கொள்ள மேலும் மேலும் சுதந்திரம் கேட்டு அலைகிறார்கள். தாங்கள் வாழும் உலகப்பிரகாரமான வாழ்க்கையை நியாயப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். களியாட்டங்களுக்குப் போவதிலும், சாராயக்கடைகளுக்கு போவதிலும் எந்தத் தப்பும் இல்லை என்று மற்றவர்களை அவர்கள் ஊக்கப்படுத்திப் பேசுவதையும் பொதுவாகவே பார்க்கலாம். அவர்கள் உலகத்து மனிதர்களைப்போல் பேசி நடப்பதையும் பார்க்கலாம். உலக இச்சைகளுக்கு தம் வாழ்க்கையில் இடங்கொடுத்து வாழ்பவர்களை அவர்கள் நியாயப்படுத்துவார்கள். தங்களுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கையில் குறைகாணுபவர்களை அவர்கள் வெறுப்பார்கள். தம்மைவிட ஞானமுள்ளவர்களையும், ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சியுற்றிருப்பவர்களையும் பழித்துப் பேசுவார்கள். போதகர்களினதும், பெற்றோர்களினதும் அதிகாரத்திற்கு எதிராக நடந்து கொள்வார்கள். இச்செயல்களை அவர்கள், தாங்கள் ஒருபோதுமே மனந்திரும்பவில்லை என்று அறிந்து கொள்ளும்வரையும் அல்லது கர்த்தர் அவர்களைத் தண்டித்துத் திருத்த முயலும் வரையிலும் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம் என்று கூறுகின்றவர்கள் அனைவரும் உண்மையான கிறிஸ்தவத்தை ருசிபார்க்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால், நமது வாழ்க்கையில் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை நாம் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற உண்மையை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் நியாயப்பிரமாணம் தங்களுக்குத் தேவையில்லை என்று நினைப்பது பலரும் பொதுவாகவே விடுகின்ற ஒரு பெரும் தவறாகும். ரோமர் 6:14 போதிக்கும், “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால்” என்ற வசனத்தை சுட்டிக்காட்டி வாதாட முயல்வதும் பொருந்தாது. இப்போதனை உண்மையில் மிக அருமையான, முக்கியமான போதனைதான். ஆனால், இது கிறிஸ்தவர்கள் பத்துக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்ற போதனையை அளிக்கவில்லை. இப்போதனையைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாததால், நமது விசுவாச அறிக்கையும், வினாவிடைப் பயிற்சியும் வேத அடிப்படையில் போதிக்கின்றபடி, பத்துக்கட்டளைகளை ஒருவிசுவாசி தன் வாழ்க்கையில் ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

1. கர்த்தரில் காணப்படும் பரிசுத்தத்தை பத்துக்கட்டளைகள் வெளிப்படுத்துவதால் ஒரு விசுவாசி நிச்சயமாக தன் வாழ்க்கையில் அவ்விதிகளை கடைப்பிடிக்க வேண்டியவனாக இருக்கிறான்.

கர்த்தர் பரிசுத்தமானவராக இருப்பதாலும், நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதாலும் நாமும் பரிசுத்தராக இருக்க வேண்டும். கர்த்தரின் பத்துக்கட்டளைகள் மனித சிந்தனையின் மூலம் உருவான சில கட்டளைவிதிகள் அல்ல. அவை மனிதனின் எல்லா நடத்தைகளுக்கும் வழிகாட்டியாக அமையும்படி, முறையாகத் தொகுக்கப்பட்ட தேவ கட்டளைகள். அவை மனிதனின் அனைத்து நடத்தைகளையும், உறவுமுறைகளையும் உள்ளடக்கி அவற்றிற்கான விதிகளைப் போதிக்கின்றன.

பத்துக்கட்டளைகளின் முதல் நான்கு கட்டளைகளும் நாம் மெய்யான தேவனை மட்டுமே வழிபட வேண்டும் என்று போதிக்கின்றன. அவரை வழிபடும்போது, எந்தவிதமான அடையாளங்களைப் பயன்படுத்தியோ, அல்லது உருவங்களைப் பயன்படுத்தியோ அவரை வழிபடக் கூடாது. அத்தோடு, தேவபயத்துடன் அவரை அணுகி, ஓய்வு நாளான சபத்து நாளையும் நாம் கவனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று இம்முதல் நான்கு கட்டளைகளும் போதிக்கின்றன. ஏனைய ஆறு கட்டளைகளும் சமுதாயத்தின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நாம் மதிப்புக் கொடுத்து அவற்றிற்கு அடங்கி நடக்க வேண்டும் என்று போதிக்கின்றன. அதோடு மற்றவர்களின் வாழ்க்கைக்கு எந்தவித ஊறுவிளைவிக்காமலும், அவர்களுடைய பொருட்களில் இச்சை வைக்காமலும், அவர்களுடைய பெயருக்கு எந்தவித களங்கம் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்றும் இவை போதிக்கின்றன. இவற்றிற்கு மேலாக பத்துக் கட்டளைகள் நமது எண்ணங்களும், சிந்தனைகளும்கூட பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதுவே தேவன் ஏற்படுத்தியுள்ள விதியாக இருக்கின்றது. இவையனைத்தும் தேவனுடைய விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல் அவருடைய மெய்த்தன்மையையும் அடித்தளமாகக் கொண்டமைந்துள்ளன. இக்கட்டளைகள் தேவன் யார் என்பதை நமக்கு வெளிப்படுத்தி, நாம் பின்பற்ற வேண்டிய அவருடைய சித்தத்தின் மொத்த உருவமாக அமைந்து காணப்படுகின்றன.

2. பத்துக்கட்டளைகளை விசுவாசிகள் நிரந்தரமாக தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று சபைப் போதகர்கள் போதிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் தெளிவாகப் போதித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து இதை மிக அழுத்தமாகவும், தெளிவாகவும் மலைப் பிரசங்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்: “நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும், அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

பாவத்தில் வீழ்ந்துள்ள மனித இருதயத்தில் நியாயப்பிரமாணத்தை தொலைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும் என்பது இயேசு கிறிஸ்துவுக்கு தெரியும். ஆகவேதான், நியாயப்பிரமாணத்தின் நிரந்தரமான தன்மையை எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அவர் இங்கே தெரியப்படுத்துகிறார். அத்தோடு, பிரசங்கிமார்களும், சபையாரும், கிறிஸ்துவை அறிந்து கொண்ட பின்பு நியாயப்பிரமாணத்தைத் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கிறார். இதைப்பற்றிக் கூறும்போது இயேசு, “ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்யத்தில் எல்லாரிலும் சிpwயவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ பரலோக ராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” என்கிறார் (மத்தேயு 5:19).

நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறோம் என்று இயேசு போதிக்கவில்லை. அடுத்த வசனத்தில் இதை அவர் சந்தேகமறத் தெரிவிக்கிறார். “வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார் இயேசு (மத்தேயு 5:20). பரிசேயர்கள் கடுமையான விதிகளை, தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் பெயரில் ஏற்படுத்தி, அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் இரட்சிப்பை அடைய முயற்சித்தார்கள். ஆனால் உண்மையான கிறிஸ்தவனுடைய நீதி அவர்களுடைய நீதியைவிட மேலானதாகவும் அதிகமானதாகவும் உள்ளது. ஏனெனில் இந்நீதி தங்களுடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் எல்லோருடைய கணக்கிலும் வைக்கப்பட்டுள்ள, கிறிஸ்துவின் நீதியாக இருக்கின்றது.

ஆனால் நாம் இரட்சிக்கப்பட்டு, விசுவாசிகளாக மாறியபின், இம்மகிமையுள்ள பத்துக்கட்டளைகளை நாம் எமது வாழ்க்கையிலும் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளாகப் பின்பற்ற வேண்டும். சுருக்கமாகக் கூறப்போனால், நாம் பத்துக் கட்டளைகளின் மூலமாக இரட்சிக்கப்படுவதில்லை; ஆனால், அக்கட்டளைகளைப் பின்பற்றுவதற்காகவே இரட்சிக்கப்படுகிறோம். ஆகவே பூரணமான அக்கட்டளைகளின் மாண்பையும், ஆன்மீகத்தன்மையையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து அதைப்பற்றி நமக்கு விளக்குகிறார். மத்தேயுவின் 5வது அதிகாரத்தின் 21-48 வசனங்களில் இதைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறார். இப்பகுதி பத்துக்கட்டளைகள் பற்றிய போதனைகளின் சுருக்கத்தைத் தருகிறது. அங்கே இயேசு சொல்கிறார், ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் (மத்தேயு 5:48). பரலோகத்திலிருக்கும் நமது பிதா பரிபூரணமானவர். அதேபோல், கிறிஸ்தவர்களான நாமும் இருக்க வேண்டும். இத்தகைய பூரணத்துவத்தை அடைவதற்கு நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்தவிதமான அற்புத அனுபவங்களையும் எதிர்பார்க்காமல், கவனத்தோடு பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.

தேவனுடைய கட்டளைகள், ஆசிரியரைப் போல இருந்து கிறிஸ்துவுக்குள்ளான இரட்சிக்கும் விசுவாசத்தை நோக்கி நம்மை வழிநடத்துகிறது (கலா. 3:24). நாம் இரட்சிப்பைப்பெற்றுக் கொண்டபின் கிறிஸ்து நாம் பத்துக்கட்டளைகளின்படி அவருக்காக வாழும் வாழ்க்கையை நோக்கி அழைத்துப் போகிறார்.

3. பவுல் அப்போஸ்தலனும் பத்துக் கட்டளைகள் விசுவாசியினுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிரந்தரமான விதிகள் என்று போதித்துள்ளார்.

நியாயப்பிரமாணத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பவுல் எழுதியுள்ள பல வேதப்பகுதிகளில் முக்கியமானதொன்றை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். 1 கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல். “யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளுகிறவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும் பொருட்டு நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்” என்று கூறுகிறார். (1 கொரி. 9:20-21). இங்கே, சுவிசேஷ ஊழியத்தின் மூலம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்வதெப்படி? என்பதையே பவுல் விளக்குகிறார். சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடும்போது ஆண்டவரை அறியாதவர்களுடைய மனதைப் புண்படுத்தாமலிருக்க, கிறிஸ்துவுக்கு விரோதமில்லாதவகையில், அவர்களுடைய பழக்க வழக்கங்களை நாம் அனுசரித்து நடக்க வண்டும். பலவித கலாச்சார, பாரம்பரியங்களைக் கொண்டவர்களுடைய மனம் புண்படக்கூடாதென்பதற்காக நாம் அநேக விதங்களில் அவர்களை அனுசரித்து நடக்கிறோம். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும், சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடுகின்றபோதும் நாம் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குட்பட்டவர்களாகவே நடந்து கொள்ள வேண்டும் (21ம் வசனம்). அதாவது, எச்சந்தர்ப்பத்திலும் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு முரண்படும் வகையில் நாம் நடந்து கொள்ளக்கூடாது.

இங்கே பவுல், தான் பத்துக்கட்டளைகளை கிறிஸ்துவின் நியாயப்பிரமாணமாகவே கருதுவதாகவும், அவற்றிற்குத் தான் கட்டுப்பட்டு நடப்பதாகவும் கூறுகிறார். இவ்விதமாகவே ஒவ்வொரு விசுவாசியும் விசுவாசிக்க வேண்டும். நாமெல்லோரும், பவுலைப்போலவே, கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் (5:21). கடைசியாக இவ்வேதப்பகுதியைக் குறித்து ஒருவிஷயத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் செய்யும் அனைத்து சுவிசேஷ ஊழியங்களிலும் பத்துக்கட்டளைகளுக்கு நாம் மிக முக்கியமான இடத்தை அளிக்க வேண்டும். அவையே நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்தும் கட்டளைகளாக உள்ளன. இவ்வுலக மக்களை அனுசரித்து நடப்பதற்காகவும், அவர்களுடைய மனதைப் புண்படுத்தக்கூடாதென்பதற்காகவும், நாம் என்ன பேச வேண்டும், எதை அணிய வேண்டும் என்பது போன்ற காரியங்களில் நாம் ஓரளவுக்கே அவர்களோடு ஒத்துப்போக முடியும். இவ்வாறு அவர்களோடு ஒத்துப்போகும் போதெல்லாம், நாம் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு எந்தவிதத்திலும் முரண்படாதவகையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இதையே கிறிஸ்துவும், தனது அப்போஸ்தலர்களுக்கும், திருச்சபைக்கும் சுவிசேஷ ஊழியத்தைக் குறித்துக் கொடுத்த கட்டளை மூலம் நினைவுபடுத்துகிறார். “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்றார். நாம் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்துவிடக்கூடாது என்பதற்காக, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார். நாம் சுவிசேஷத்தை சொல்லுவதன் மூலம் பாவிகள் மனம்மாற வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்காமல், அவர்கள் மனம்மாறி கிறிஸ்துவின் ஒவ்வொரு கட்டளையையும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும். ஆகவே, மனம்மாறிய பாவிகள் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கவனத்தோடு கடைப்பிடிக்க வேண்டும் என்ற போதனையை நிச்சயமாகப் பெற்று அதன்படி நடப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு நடக்க வேண்டுமென்றால் முதலில், நாம் அவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை சிறப்பான முறையில் கடைப்பிடிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுதல் அவசியம். இம்முறையிலேயே இவ்வாழ்க்கையில் நாம் தேவனை மகிமைப்படுத்தவும், அனுபவிக்கவும் முடியும். இவ்வழியிலேயே இவ்வுலக இச்சைகளின் ஆபத்திலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும். இதன்மூலமே நாம் சுவிசேஷத்திற்கு பெருமை சேர்க்கவும், தேவபக்தியின் வேஷத்தைக் கொண்டிருக்காமல், அதன் மெய்யான பெலனை வெளிப்படுத்தவும் முடியும் (2 தீமோ. 3:5).

இவ்வேத சிந்தனைகளை நாம் ஆரம்பித்தபோது கிறிஸ்து தனது மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்திய வார்த்தையான, இவ்வுலகத்தின் உப்பு என்ற பதத்தைச் சுட்டிக் காட்டினோம். இப்பதத்தோடேயே இவ்வேத சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம். பத்துக் கட்டளைகளையும், அவற்றின் அதிகாரத்தையும் பற்றிய போதனைகள் சோர்வளிப்பதாக வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதை இக்காலத்தில் பலர் அலங்காரமாகக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய எண்ணங்களின் பிரதிபலிப்பை இன்று சமுதாயத்தில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கைகளிலும், பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்களிடும் கூச்சல்களிலும், கூத்துக்களிலும் நம்மால் பார்க்க முடிகின்றது. ஆகவே, இன்றைய கிறிஸ்தவன் பத்துக்கட்டளைகளுக்கு அதிக மதிப்பளித்து, மிகக்கவனத்தோடு அவற்றைத் தன் வாழ்க்கையிலும், ஏனையோருடைய வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும். தேவனின் கட்டளைகள் நன்மையானவையாக இருப்பதால், அவற்றைக்கடைப்பிடிப்வர்களுக்கு அவை நன்மையைத் தவிர வேறொன்றையும் செய்யா. அதேவேளை அவற்றை உதாசீனம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளையும், போராட்டங்களையும், துன்பங்களையுமே அறுவடை செய்ய நேரிடும். நமது நாட்டில் கருத்தடையின் மூலம் கொலை செய்யப்படும் அத்தனைக் குழந்தைகளும் வாயிருந்து பேசுமானால் இதனையே சொல்லும். சட்டத்திற்கு மதிப்பளிக்காத நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும், பாவிகளின் வழிகள் கடினமானவை என்றே அறிக்கையிடுகின்றன. மாம்சப்பிரகாரமாக நாம் வாழ முற்பட்டால் நிச்சயமாக நாம் இறப்போம். பரிசுத்தமான தேவனைக் கொண்டிருப்பவர்கள் அடாவடித்தனமான வாழ்க்கையை வாழ்வதில்லை.

கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது நன்மையானதும், மிக மிக அவசியமானதுமாகும். ஆனால், பரிசுத்தமான வாழ்க்கையைக் கொண்டிராமல் வெறும் பேச்சை மட்டும் கொண்டிருந்தால் அது நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு எந்தப்பயனையும் அளிக்காது. நமது சமுதாயத்து மக்கள் சந்தோஷத்தை அறியாதவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, பிரசங்கமும், சுவிசேஷ ஊழியமும் இன்று மிக அவசியமானவையாக உள்ளன. ஆனால், தேவனின் பத்துக்கட்டளைகளிலும், பரிசுத்த வாழ்க்கையிலும் உண்மையான அன்பைக் கொண்டு இவற்றை செய்யாவிட்டால் இவற்றால் எந்தப்பயனுமில்லை. தேவகட்டளைகளுக்கு முரணான கிறிஸ்தவம் கர்த்தருக்கு முன்னால் மெய்யான கிறிஸ்தவமல்ல. இன்று நமக்குத் தேவை அதிக பிரசங்கிகளும், சுவிசேஷ ஊழியர்களும் மட்டுமல்ல, பரிசத்தமானவர்களும்தான். நமது சபைகளில் இன்று இவர்களை அதிகமாகக் கொண்டிருந்தால் நிச்சயமாக ஆசீர்வாதமும், வளர்ச்சியும் தானாகவே வரும். ஆனால், உப்பு தனது சாரத்தை இழக்குமானால் – எது மிஞ்சும்?

மொரிஸ் ரொபட்ஸ்

இவ்விதழில் “உப்பு தன் சாரத்தை இழந்தால்” என்ற தலைப்பில் தேவ செய்தியை அளித்துள்ள மொரிஸ் ரொபட்ஸ் ஸ்கொட்லாந்தில், இன்வர்நஸ் என்னுமிடத்தில் திருச்சபைப் போதகராகப் பணிபுரிவதுடன் ஆங்கிலத்தில் வெளிவரும் பெனர் ஒப் டுருத் கிறிஸ்தவ இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். அச்சஞ்சிகையில் வெளிவந்த, இவரது தலைப்புக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “தேவனைப்பற்றிய எண்ணம்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s