சபையில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட சகோதரர்களின் சோதனைக்குத் தம்மை ஒப்புக் கொடுக்க மறுப்பவர்கள் பிரசங்க ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள் என்றே கூற வேண்டும்.
ஊழிய அழைப்பு!
கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் அவரது அழைப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பது திருமறையின் தெளிவான போதனை. பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி இவ்வாறாக கர்த்தரால் அவரது ஊழியத்திற்காக அழைக்கப்பட்ட பலருடைய உதாரணங்களைக் காணலாம்.
ஊழிய அழைப்பு என்பது என்ன?
ஊழியத்திற்கான அழைப்பைக் குறித்து பேசுபவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் வேதம் அதைக்குறித்து போதிக்கும் போதனைகளுக்கும் பெரும் வித்தியாசமுண்டு. வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வசனத்தால் உந்தப்பட்டு கர்த்தர் தம்மை ஊழியத்திற்கு அவ்வசனத்தின் மூலம் அழைக்கிறார் என்று உணர்ச்சிவசப்பட்டு ஊழியத்திற்குப் போனவர்கள் அநேகர். அறையில் தனிமையில் இருக்கும்போது கர்த்தர் தன்னோடு பேசி அழைத்ததாகவோ, அல்லது ஊழியப்பணிக்குத் தான் போகத்தான் வேண்டும் என்று கர்த்தர் அழைப்பது தனக்குப் புலப்பட்டதாகவும் கூறி ஊழியம் செய்யப் போனவர்களின் தொகை எண்ணிலடங்காது.
ஊழிய அழைப்பை ஒருவர் உணர முடியாது என்று நான் வாதிடவில்லை. ஆனால் ஊழிய அழைப்பு என்பது வெறும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அது கர்த்தருடைய வார்த்தையைப் போதிக்க வேண்டும் என்ற, கர்த்தரால் நமக்குள் ஏற்படுத்தப்படும் உள்ளார்ந்த நம்பிக்கை. ஆனால், இத்தகைய நம்பிக்கையை கடவுள் ஒருவருக்குள் எவ்வாறு ஏற்படுத்துகிறார்? ஒருவரது உள்ளத்தில் ஊழிய வாஞ்சையை ஆழமாக விதைப்பதன் மூலமும், ஏனைய சகோதரர்களின் உள்ளத்திலும் அதைப்பதிய வைப்பதன் மூலமும், வேதம் போதிக்கும் ஊழியத்திற்கான அடையாளங்களையெல்லாம் கொண்டிருக்கும் அவரை சபையாரின் சோதனையில் தேர்ச்சிபெற வைப்பதன் மூலமும், கடவுள் ஒருவரை ஊழியத்திற்கு அழைக்கிறார். இவற்றில் சபையாரின் அங்கீகாரத்தை ஒருவர் பெறுவது மிக அவசியம். ஏனெனில் சுயநலநோக்கத்தோடு, பொருளாசையுடன் ஊழியத்தில் ஈடுபட முனைபவர்களை இதன் மூலம் தடை செய்யலாம். அத்தோடு, ஆணவம், தன்னலமுள்ள சுயநம்பிக்கை, பிறரின் பாராட்டை நாடும் மனப்பாங்கு, பிரசங்க ஊழியம் பற்றிய தவறான, குழந்தைத்தனமான எண்ணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பவர்களையும் தவிர்க்கலாம். சபையில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட சகோதரர்களின் சோதனைக்குத் தம்மை ஒப்புக் கொடுக்க மறுப்பவர்கள் பிரசங்க ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள் என்றே கூற வேண்டும்.
பிரசங்க ஊழியத்திற்கான தகுதிகள்
புதிய ஏற்பாட்டின் இரண்டு முக்கிய வேதப்பகுதிகள் (1 தீமோத்தேயு 3:1-7 தீத்து 1:6-10) இவ்வூழியத்திற்கான அடையாளங்களை விபரிக்கின்றன. ஊழியத்தை நாடுபவர்கள் இவ்விரண்டு பகுதிகளையும் கவனத்தோடு படிக்க வேண்டும். ஊழியத்தை நாடுபவர் சபையாரோடு சேர்ந்து இவ்வடையாளங்கள் தன்னில் காணப்படுகின்றனவா என்று மனச்சுத்தத்துடன் ஆராய்ந்து பார்த்தல் அவசியம். இது இலகுவான காரியமல்ல. உதாரணமாக ஊழியத்திற்கு பெரு மதிப்புக் கொடுக்கும் ஒருவர் தகுதிகள் இருந்தும் அதற்குத் தன்னை ஒப்புக் கொடுக்கத் தயங்கலாம். ஊழியப் பணிக்குத் தான் தகுதியானவனல்ல என்று எண்ணிப் பின்வாங்கலாம். இச்சந்தர்ப்பத்தில் முதிர்ச்சியுள்ள சபையாரின் எண்ணங்களுக்கு மேலான மதிப்புக் கொடுத்து பின்வாங்குபவர்கள் ஊக்கப்படுத்தப்படல் அவசியம். கடவுள் நமக்குக் கொடுத்திராதவைகளைக் கொண்டிருப்பதாகப் பெருமை பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல், கர்த்தர் நமக்கு உண்மையில் கொடுத்துள்ள கிருபைகளையும் வரங்களையும் அங்கீகரிக்க மறுப்பதும் போலித் தாழ்மையாகும்.
கர்த்தருடைய சபை ஊழியங்கள் அனைத்திற்கும் அவசியமான இலக்கணங்களை வகுத்துக்கூறும் வேத பகுதிகள் 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய நிருபங்களில் அடங்கியுள்ளன. சிலர் அவை சபை கண்காணிகளுக்கும், உதவியாளர்களுக்கும் மட்டுமே உரித்தான இலக்கணங்களை எடுத்துக் கூறுவதாக எண்ணலாம். திருச்சபையில் இன்று காணப்படும் இரு நிரந்தரமான ஊழியங்கள் இவை இரண்டும் மட்டுமே. ஆனால் இவ்விலக்கணங்கள் அனைத்து ஊழியங்களுக்கும் உரித்தானவை. அந்நோக்கத்துடனேயே பவுல் இவற்றை இங்கு தந்துள்ளார்.
1 தீமோத்தேயு 3:1-7 உம் தீத்து 1:6-10 உம் அடங்கிய வேதப்பகுதிகள் ஊழியப்பணிக்கான இருபதுவகையான இலக்கணங்களை விபரிக்கின்றன. இவற்றில் பதினேழு இலக்கணங்கள் ஒருவரது நடத்தைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏனெனில் ஒருவருக்கு திறமையும் கிருபை வரங்களும் அவசியமானதாக இருந்தாலும் அவரது நன்நடத்தை மிக முக்கியமானதாகும்.
இவ்விரு வேத பகுதிகளும் ஊழியப்பணிக்கான இலக்கணங்களை விளக்க ஆரம்பிக்கும்போது முக்கியமான ஒரு விடயத்தைக்கூறி ஆரம்பிப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது,. 1 தீமோத், 3:2 இலும் தீத்து 1:7 இலும் இதைப்பார்க்கலாம். இவ்விருபகுதிகளும் ஊழியத்திற்கு வருபவர்கள் அனைவரும் இவ்விலக்கணங்களைத் ‘தவறாது’ கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றன. கிரேக்க மொழியில் ‘dei’ என்று அழைக்கப்படும் இவ்வார்த்தை ஆங்கிலத்தில் ‘must’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தை இவ்விலக்கணங்களின் தவிர்க்க முடியாத அவசியத்தை நமக்கு வலியுறுத்திக் காட்டுகின்றன. இவ்விலக்கணங்கள் ஒவ்வொன்றையும் விபரமாகப் பார்ப்போம்.
1. குற்றஞ்சாட்டப்படாதவனாக இருக்க வேண்டும். (1 தீமோ. 3:2; தீத்து 1:6, 7) – இது ஒரு ஊழியக்காரரின் வாழ்க்கையில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் குணாம்சம். அவரது வாழ்க்கை எக்குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அவலட்சணமான காரியங்களுக்கோ, அட்டூழியங்களுக்கோ இடமிருக்கக்கூடாது.
2. ஒரே பெண்ணை மனைவியாகக் கொண்டிருக்க வேண்டும். (1 தீமோ. 3:2; தீத்து 1:6) – இப்பகுதி ஒரு ஊழியக்காரர் திருமணம் செய்தவராகவோ அல்லது ஒரு முறை மட்டுமே திருமணம் செய்தவராகவோ இருக்க வேண்டும் என்பதைவிட அவர் தம் மணவாழ்வில் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. இன்று திருச்சபைப் பிரசங்கிகளையும், தலைவர்களையும் பெரிதாகப் பாதித்து வரும் தீங்கு முறையற்ற பெண் தொடர்பாகவே இருக்கின்றது. சபை சரித்திரத்தை ஆராய்ந்தால் போலிப் போதனைகளுக்கு அடுத்தபடியாக திருச்சபையின் சாட்சியையும், திருச்சபை மக்களையும் அதிகமாகப் பாதித்துள்ள கேடு சபைத்தலைவர்களுடைய முறையற்ற பெண் தொடர்பாகவே இருந்துள்ளது. போதகர்களும், சபைத் தலைவர்களும் தங்களுடைய மணவாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி தம் மனைவிமார்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அநேக போதகர்களும், ஊழியக்காரர்களும் ஊழியத்தைப் பெரிதாகக் கருதி தங்களுடைய குடும்பவாழ்க்கையில் இன்று அக்கறை செலுத்துவதில்லை. மணம் வீசும் மண வாழ்க்கையைக் கொண்டவர்கள் மற்ற பெண்களை நாட மாட்டார்கள்.
3. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனாயிருக்க வேண்டும். (1 தீமோ. 3:4-5; தீத்து 1:6) – அதாவது குடும்பத்தலைவனாகவிருந்து தன் மனைவி மக்களைக் கர்த்தரின் வார்த்தையின்படி வழி நடத்துகிறவனாயிருக்க வேண்டும். அவர்களது தேவைகளை அன்போடு கவனித்து, பராமரித்து வருபவராக இருக்க வேண்டும். ஊழியக்காரர்களின் பிள்ளைகள் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்பத் தலைவர்கள் நேரத்திற்கு மதிப்புக் கொடுத்து தங்கள் மனைவி, பிள்ளைகள் வீட்டிலும், சபையிலும் நேரப்படி காரியங்கள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். போதகர்கள், சபைத்தலைவர்கள் இதில் ஏனையோருக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கின்றது. குடும்பத்தில் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கொண்டுவர இயலாதவர்கள் சபை நடத்தவோ பிரசங்கிக்கவோ தகுதியற்றவர்கள்.
4. தன் இஷ்டப்படி நடக்காதவனாக இருக்க வேண்டும். (தீத்து 1:7) – ஊழியக்காரர்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டு கர்த்தரின் மக்களை ஆவிக்குரிய செயல்களில் வழிநடத்தி அவர்களுக்குப் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்கள். ஊழியக்காரர்கள் தம்மைத் தாமே தெரிவு செய்து கொள்ள கூடாது. தன் இஷ்டப்படி அதிகாரம் செலுத்தி தனது சுய இச்சைப்படியல்லாது கர்த்தருடைய வார்த்தையின்படி அவரது சித்தத்தை எப்போதும் செய்பவர்களாக இருக்க வேண்டும். ஊழியக்காரர்கள் கர்த்தரின் பிரதிநிதிகளாக இருந்து சேவை செய்ய வேண்டுமே தவிர சபையை ஆட்டிப்படைக்க முனையக்கூடாது.
5. முற்கோபமுடையவனாகவும், சண்டைக்காரனாகவும் இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:3; தீத்து 1:7) – வெகு சீக்கிரம் ஆத்திரமடைந்து, வம்புச் சண்டையிலிறங்குகிறவன் ஊழியத்திற்குத் தகுதியற்றவன். இது வாய்ச்சண்டையாக இருந்தாலும், கைச்சண்டையாக இருந்தாலும் போதக, பிரசங்க ஊழியத்திற்கு ஏற்றதல்ல. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாக இல்லாமல், எல்லாரிடத்திலும் சாந்தமுற்றவனும், போதக சமர்த்தனும் தீமையை சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கலாம்.
6. மதுபானப்பிரியனாக இருக்கக்கூடாது. (1 தீமோத்தேயு 3:3; தீத்து 1:7) – இவ்வசனத்தின் மூல வார்த்தை மதுபானத்தின் பக்கத்திலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவனைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மதுபானத்தைத் தனது நண்பனாகக் கொண்டு, அதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறவன் ஊழியக்காரனாக இருக்க முடியாது. மதுபானத்தில் சுகத்தையும், தமது ஊழியத்திற்கான பலத்தையும் அடைய முயற்சிக்கிறவர்கள் கிறிஸ்தவர்களை வழி நடத்தத் தகுதியற்றவர்கள். இன்று கிறிஸ்தவ சுதந்திரத்தின் பெயரில் சில ஊழியக்காரர்கள் மதுபானத்தில் சுகம் காண முயற்சிக்கிறார்கள். இவர்களால் திருச்சபைக்கு ஆபத்து!
7. அடிக்கிறவனாக இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:3; தீத்து 1:7) – சுலபமாக கைநீட்டுவதை வழக்கமாகக் கொண்டவன் கர்த்தரின் சபையை ஆட்டிவைக்க முனையும் சண்டைக்காரன். ஆனால், கர்த்தரின் ஊழியக்காரன் பொறுமையுள்ளவனாய் எச்சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இழக்காது எக்காரியத்தையும் முறையாய்த் தீர்த்து வைக்க முனைவான்.
8. பண ஆசை உள்ளவனாய், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனாய் இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:3; தீத்து 1:7) – இன்று கிறிஸ்தவ ஊழியத்தைப் பலரும் நையாண்டி செய்யும் நிலைக்கு கொண்டுவந்து, வீழ்ந்திருக்கும் பல ஊழியக்காரர்களின் நிலைக்கு அவர்களுடைய பண ஆசையே காரணம். மேலைத்தேச வாழ்க்கைத்தரத்தால் பாதிக்கப்பட்டு தன் நிலைமையை மீறி, தான் ஊழியம் செய்யும் மக்களின் நிலைமையையும் மீறி வாழ்ந்து அநேகர் ஊழியத்தில் தவறிழைத்திருக்கிறார்கள். ஊழியத்தின் மூலம் எவ்வாறு பணம் சேர்க்கலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் ஊழியத்தை நாடக்கூடாது. ஒருவன் பணத்திற்காக எதையும் செய்பவனாகத் தென்படுகிறானா? எந்நேரமும் பணத்திலேயே குறியாக இருக்கிறானா? தன் நிலைமையையும், தான் ஊழியம் செய்யும் மக்களின் நிலைமையையும் மீறி வாழ முயற்சிக்கிறானா? அடிக்கடி பணத்தைப் பற்றியே பேசுகிறானா? என்று ஊழியத்தை நாடுபவர்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பணத்தை கடவுளாகக் கருதும் ஒருவன் கர்த்தரைத் துதிக்கும் மக்களை வழி நடத்த முடியாது.
9. ஒருவன் புதிய விசுவாசியாக இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:6) – அதாவது ஒரு புதிதாக விதைக்கப்பட்ட விதையாக இருக்கக்கூடாது. புதிதாக விதைக்கப்பட்ட விதை சரியாக நிலத்தில் பதிந்து துளிர்விட காலமெடுக்கும். அதேவேளை பலவிதமான ஆபத்துகளையும் தாங்கக்கூடிய வல்லமையும் அதற்கு இல்லை. அதேபோல், ஒரு புதிய கிறிஸ்தவன் வளருமுன் அவனுக்குப் பெரும் பொறுப்புக்களைக் கொடுப்பதால் அவனுக்குத் தன்னைப்பற்றிய மேலான எண்ணம் ஏற்பட்டு ஆணவமுள்ளவனாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பொறுப்புக்களைக் காலம் வருமுன் ஒருவருக்குக் கொடுப்பதால் அவரை அழித்துவிடக்கூடிய ஆபத்து உண்டு. முறையான ஊழியத்திற்கு தாழ்மை பெரிதும் அவசியம். திருமறையின்படி, இதுவே கிறிஸ்தவ ஊழியத்தின் மிக விசேடமான அம்சமாகக் கருதப்படுகிறது (மாற்கு 10:35-45). இத்தகைய தாழ்மை வளர புதிய கிறிஸ்தவனுக்கு காலமும், கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சியும் மட்டுமே துணை புரிய முடியும். அதற்குமுன் பெரும் பொறுப்புக்களை அவன் மேல் திணிப்பது அவனுக்கோ அல்லது ஊழியத்திற்கோ நண்மை பயக்காது.
இதுவரை நாம் பார்த்த இலக்கணங்கள் எதிர் மறையானவை. அதாவது ஒருவன் எதைச் செய்யக் கூடாது? எப்படி இருக்கக்கூடாது என்று இவை எடுத்துக் கூறுகின்றன. ஊழியத்தை நாடுபவர்கள் சுத்த மனச்சாட்சியுடன் மனந்திறந்து இவ்விலக்கணங்கள் தனக்குப் பொருந்தி வருகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அ. கர்த்தருடைய சித்தத்தின்படி வாழ்வதை மட்டுமே நான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றேனா?
ஆ. எனக்கு சுலபமாக கோபம் வருகிறதா?
இ. மதுபானத்தில் எனக்கு ஆசை உண்டா?
ஈ. மற்றவர்கள் என்னை நாடிவரப் பயப்படுகிறார்களா?
உ. எனக்குப் பண ஆசை உண்டா?
ஊ. மற்றவர்க்ளை வழி நடத்துமளவுக்கு எனக்கு முதிர்ச்சி உண்டா?
(மிகுதி அடுத்த இதழில்)