கிருபையின் போதனைகளின் முக்கிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நாம் கடந்த இதழில் பாவத்தினால் மனிதன் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையைக் குறித்துப் பார்த்தோம். இவ்விதழில் மூன்றாவது அம்சமாகிய கிறிஸ்துவின் பரிகாரப்பலியைக் குறித்து சிந்திப்போம்.
3. கிறிஸ்துவின் பரிகாரப்பலி
சுவிசேஷத்தின் அடித்தளம் என்று அழைக்கப்படக் கூடிய அம்சம் கிறிஸ்துவின் மரணத்தின் நோக்கமாகும். கிறிஸ்துவின் கல்வாரி மரணம் தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியல்ல. உலகத் தோற்றத்திற்கு முன்பாக கடவுளால் தீர்மானிக்கப்பட்டபடி இவ்வுலகில் பிறந்து, வாழ்ந்து, மரித்த கிறிஸ்து எந்தவித ஒரு நோக்கமோ குறிக்கோளோ இல்லாது மரித்தார் என்று எண்ணுவது தவறு. கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிக் கூறும் ஸ்பர்ஜன், இதைப் புரிந்து கொள்வதில் நாம் தவறிழைப்போமானால் அது நாம் விசுவாசிக்கும் கடவுளைப் பற்றிய கோட்பாடுகள் அனைத்தையும் பாதித்துவிடும் என்றார். கிறிஸ்து பாவிகளாகிய மனிதர்களை மீட்பதற்காக மரித்தார் என்று நம்புபவர்கள்கூட அவர் மரணத்தின் தாற்பரியம் என்ன? அவர் யாருக்காக மரித்தார்? என்பதைப் புரிந்து கொள்வதில்தான் தவறிழைத்து விடுகிறார்கள்.
எல்லா மனிதர்களுமே பாவிகளாக இருக்கும்போது, எல்லோரையும் இரட்சிக்கக்கூடிய மகத்துவத்தையும், வல்லமையையும் கொண்ட கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் ஏன் அனைவரையுமே இரட்சிப்பதை நோக்கமாகக் கொள்ளவில்லை என்று வேதம் நமக்குத் தெரிவிப்பதில்லை. ஆனால், எல்லா மனிதர்களும் இரட்சிப்பை அடைவதில்லை என்று வேதம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. வேதம் கிருபையின் மூலமாக மட்டுமே ஒருவர் இரட்சிப்பைப் பெற முடியும் என்று கூறுகிறது. தகுதியெதுவுமே இல்லாத மனிதர்களுக்குக் கடவுள் காட்டும் கருணையே கிருபையாகும். ஏதாவது, ஒரு தகுதியின் அடிப்படையில் மனிதன் இரட்சிப்பை அடைய முடியுமானால் அவர்களில் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியைப் பார்த்து, “எமக்குக் கிடைத்த கிருபையின் அழைப்பு உங்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆகவே நீங்கள் எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது” என்று கூற நேரிடும். ஆனால், இது உண்மையல்ல, ஏனெனில், எந்தவொரு மனிதனும் தன்னைப் பாராட்டிக் கொள்ள இயலாத வகையில், “தமது கிருபையின் மூலம் கடவுளே தங்களை இரட்சித்தார்” என்று இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் நித்திய காலமும் அவருக்கு விசுவாசமாக இருக்கும்படி கடவுள் இரட்சிப்பை ஏற்படுத்தியுள்ளார் (எபேசியர் 2:8-10).
கல்வினீய, சீர்திருத்தவாதிகள் மனிதனுடைய வீழ்ச்சியை சாதாரணமானதாக எண்ணுவதில்லை. மனித வீழ்ச்சியைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதால்தான் ஆர்மீனியவாதிகள், மனிதன் தனது சித்தப்படி, தனது வல்லமையைப் பயன்படுத்திக் கடவுளிடம் சேர்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சீர்திருத்தவாதிகள் மனித சித்தத்தின் வீழ்ச்சி என்பது மனிதனைப் பிடித்திருக்கும் சாதாரண குறைபாடல்ல அது அவனது ஆவிக்குரிய வாழ்வின் மரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றது என்று விசுவாசிக்கின்றார்கள். அத்தோடு கிறிஸ்துவின் பரிகாரப்பலியானது மனிதன் கடவுளை அடையும்படி அவர்களுக்கு வசதியானதாக ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல என்றும் நம்புகிறார்கள். சீர்திருத்தவாதிகளைப் பொறுத்தவரையில் எவருக்காக கிறிஸ்து மரித்தாரோ அவர்கள் கடவுளை அடையும்படியாக, அவர்களுக்கு எதிராக இருந்த அனைத்து சட்டரீதியான தடைகளையும் வரலாற்று நிகழ்ச்சியான கிறிஸ்துவின் மரணம் அகற்றியது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறாக கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் பெற்றெடுத்த இரட்சிப்பைப் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மக்களுக்கு அளிக்கிறார்.
கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்த மூன்றுவித கோட்பாடுகள் பொதுவாக வழங்கி வருகின்றன.
1. கிறிஸ்து எவ்வித வேறுபாடும் காட்டாமல் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக மரித்தார்.
2. குறிப்பிட்ட எவரையுமே இரட்சிப்பதற்காக கிறிஸ்து மரிக்கவில்லை.
3. குறிப்பிட்ட மக்களை இரட்சிப்பதற்காக மட்டும் கிறிஸ்து மரித்தார்.
முதலாவது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களை “யூனிவர்சலிஸ்ட்ஸ்” என்று அழைப்பர். இக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்து எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக மரித்தாரென்றும், ஆகவே மனித குலமனைத்தும் இரட்சிப்பை அடையுமென்றும் போதிக்கின்றது. இரண்டாவது கோட்பாடு, கிறிஸ்து எல்லா மனிதர்களும் இரட்சிப்பை அடையக்கூடியவகையில் அதனை ஏற்படுத்தினார் என்று போதிக்கின்றது. முதலாவதை விட இது எவ்வகையில் வேறுபடுகிறதெனில், எல்லா மனிதர்களும் இரட்சிப்பை அடையாவிட்டாலும், அதைப் பெற்றுக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் ஒவ்வொருவருக்குமிருப்பதாக இரு போதிக்கின்றது. இதுவே ஆர்மீனியக் கோட்பாடாகும். கிறிஸ்து எல்லோருடைய பாவத்துக்காகவும் தன்னைப் பலியாகக் கொடுத்ததாகவும், அவரது பரிகாரப் பலியின் பலனை ஒரு மனிதன் அவரை ஏற்றுக் கொள்வதாகத் ‘தீர்மானம்’ எடுத்துப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இது போதிக்கின்றது. கிறிஸ்துவின் பரிகாரப்பலி பற்றிய மூன்றாவது கோட்பாடு, கிறிஸ்து, எவரெவர்மீது பிதா தனது தெரிந்து கொள்ளும் அன்பைச் செலுத்தினாரோ அவர்களனைவரையும் இரட்சிக்கும்படியாக உறுதியாகவும், தீர்மானமாகவும் அவர்களுக்காக மட்டும் பரிகாரப்பலியாக தன்னை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார் என்று போதிக்கின்றது. இவ்வாறாக பிதாவால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கடனைச் செலுத்தி, அவர்களுக்காக பிதாவின் நீதியைச் சந்தித்து, இறுதியில் தனது நீதியை அவர்களுடைய கணக்கில் வைத்து அவர்கள் தன்னில் பூரணராகும்படிச் செய்தார் என்பது இதன் போதனை. இதுவே சீர்திருத்தவாதிகள் விசுவாசிக்கும் கல்வினீயப் போதனை.
ஆகவே, கிறிஸ்துவின் மரணம் இம்மூன்று காரணங்களில் ஒன்றிற்காக மட்டுமே நிறைவேறியிருக்க முடியும். ஒன்று, எல்லோரையும் இரட்சிப்பதற்காக; அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் இரட்சிப்பதற்காக அல்ல; அல்லது, குறிப்பிட்ட ஒரு தொகையினரை இரட்சிப்பதற்காக மட்டுமே. இவற்றில் மூன்றாவதே “வரையறுக்கப்பட்ட பிராயச்சித்தம்” அல்லது “குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு” என்று அழைக்கப்படும் கல்வினீயப் போதனை. கிறிஸ்து குறிப்பிட்ட மக்களை மீட்பதற்காக மரித்தார், அதாவது உலகத் தோற்றத்திற்கு முன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மீட்பதற்காக (எபேசியர் 1:4), தமது பிதாவால் உலகத்திலிருந்து தமக்குக் கொடுக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக (யோவான் 17:9) மரித்தார். தாமே கூறியபடி, யாருக்காக தமது இரத்தத்தைச் சிந்தினாரோ அவர்களுக்காக மரித்தார் (மத்தேயு 26:28).
நாம் இங்கே கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்த இரு போதனைகளை எதிர் நோக்குகின்றோம். ஒன்று, கிறிஸ்துவின் மரணத்தை மிக உயர்ந்த பயனுள்ள பூரணமாக நிறைவேறிய பரிகாரப்பலியாகக் காண்கிறது. இதுவே சீர்திருத்தவாதத்தின் போதனையாகும். இரண்டாவது, கிறிஸ்துவின் மரணத்தை எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஆனால், பூரணமற்ற பரிகாரப்பலியாகக் காண்கிறது. இரண்டாவதில் உள்ள தவறென்னவெனில் அது கிறிஸ்துவின் பரிகாரப்பலியை அரைகுறையாக நிறைவேறியதொன்றாகக் காட்டுகிறது. ஆகவே, கிறிஸ்துவின் மரணம் எவரையும் இரட்சிக்கும் வல்லமையற்றது என்ற எண்ணத்தை இது தோற்றுவிக்கின்றது. ஆர்மீனியக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்துவின் மரணத்தின் பலனை, வேதப்போதனைகளுக்கு முரணாக, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க முன்வருவதன் மூலம் அவரது பரிகாரப்பலியை பிரயோசனமற்றதாக மாற்றிவிடுகிறார்கள்.
மேலாக, கடவுள் அனைத்து மனிதர்களின் பாவத்தையும் கிறிஸ்துவில் தண்டித்திருந்தால், அது இழந்துபோனவர்களின் பாவத்தை இருமுறை தண்டித்தது போலாகிவிடும். முதலில் கிறிஸ்துவிலும் பின்பு இன்னுமொருமுறை அவர்களிலும் தண்டித்தது போலாகிவிடும். இது நீதிக்குப் புறம்பானது. கிறிஸ்து அவர்களின் பாவக்கடனை அடைத்திருந்தால், அவர்கள் விடுதலை அடைந்து, பரிசுத்த ஆவியால் மனமாற்றத்தையும், விசுவாசத்தையும் பெறும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பார்கள். ஆகவே, அனைவருக்குமான பரிகாரப்பலி என்ற போதனை வேதத்தோடு பொருந்தாத அசட்டுவாதமாகும்.
கிறிஸ்து, ஆறு மணி நேர சிலுவை மரணத்தை தனது சரீரத்தில் மட்டுமல்லாது முழு மனிதனாக, ஆவியிலும், மனத்திலும் அனுபவித்தார். அவர், உண்மையில் நரகத்துன்பங்கள் அனைத்தையும் தன்னில் அனுபவித்தார். கடவுளிடம் இருந்து பிரிக்கப்பட்டு, விரும்பப்படும் நன்மையான அனைத்திலும் இருந்து பிரிக்கப்பட்டார். இதுவே நரகத்துன்பமாகும். நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட பெருந்துன்பம் இது. ஆனால், கிறிஸ்து தேவ மனிதனாக சிலுவைத் துன்பத்தை அனுபவித்ததால், அது, அவரது மக்கள் அனைவரும் நிலையாக நரகத்தில் பட்டிருக்க வேண்டிய துன்பங்கள் அனைத்தையும் நீதியுடன் நிவர்த்திக்கக்கூடியதாக இருந்தது. இதுமட்டுமல்லாது, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மனிதன், தான் ஆதாமின் பாவத்தால் இழந்ததைவிட மேலானதைக் கிறிஸ்துவின் மீட்புப் பணியின் மூலம் அடைகிறான். ஏனெனில், கிறிஸ்து மனித உருவெடுத்துப்பிறந்ததோடு, தனது மகிமை நிலையில் மனித சுபாவத்தை என்றும் கொண்டிருக்கப் போகிறார். இதனால்தான் பேதுரு தனது நிருபத்தில், நாம் இப்போது திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்படி வாக்குத்தத்தம் பெற்றிருக்கிறோம் (2 பேதுரு 1:4) என்று கூறுகிறார். ஆகவே, நாம் தேவ தூதர்களையும்விட மேன்மையுள்ள இடத்தைக் கிறிஸ்துவின் மீட்புப்பணியின் மூலம் அடைந்திருக்கிறோம்.