இதுவரை கிருபையின் போதனைகளின் முக்கியமான அம்சங்களில் கீழ்வரும் அம்சங்களை விபரமாகப் பார்த்தோம்.
1. கடவுளின் இறைமை அல்லது சர்வ ஏகாதிபத்தியம்,
2. பாவத்தினால் பாதிக்கப்பட்ட மனிதனின் உபயோகமற்ற நிலை,
3. கிறிஸ்துவின் பரிகாரப்பலி.
இவ்விதழில் இவற்றில் இறுதி அம்சமான கடவுளின் முன்னறிவைக் குறித்துப் பார்ப்போம்.
கடவுளின் முன்னறிவு (Foreknowledge of God)
கிருபையின் போதனைகளை நிராகரிக்கும் ஆர்மீனியர்களில் சிலர் கடவுளுக்கு முன்னறிவு இருப்பதாகவும், ஆகவே, அவரால் எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை எடுத்துரைக்க முடிகின்றது என்றும் நம்புகிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு காரியத்தை கடவுள் அறிந்திருப்பாரானால், அக்காரியம் முன்கூட்டியே நியமிக்கப்பட்டதுபோல் உறுதியானதும், நிச்சயமானதுமாகும். ஏனெனில் முன்னறிவு நிச்சயத்துவத்தையும், நிச்சயத்துவம் முன்கூட்டியே நியமிக்கப்படுதலையும் குறிக்கின்றது. ஆர்மீனியர்களில் சிலர் இரட்சிப்பிற்கான தெரிந்தெடுத்தலை நிராகரிப்பதில்லை. ஏனெனில், வேதத்தில் இருபத்தைந்து தடவைகளுக்கு மேலாகக் காணப்படும் தெரிந்தெடுத்தல் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைகளை அவர்களால் புறக்கணிக்க முடியாது. ஆனால் தெரிந்தெடுத்தல் கடவுளின் முன்னறிவின் அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்று கூறுவதன் மூலம் இவ்வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் அவர்கள் அழித்துவிடப் பார்க்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில், கடவுள் எதிர்காலத்தை முன்னோக்கிப் பார்த்து தன்னை யார் யார் விசுவாசிப்பார்கள் என்று அறிந்து வைத்திருப்பதனால்தான் அவர்களை முன்கூட்டியே அவரால் தெரிவு செய்ய முடிகின்றது என்று கடவுளின் முன்னறிதலைக் குறித்து விளக்கமளிக்கின்றனர்.
ஆனால், கடவுளின் முன்னறிதலை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஆர்மீனியர்கள் ஒரு பெரும் தவறிழைத்து விடுகின்றனர். அதாவது, அவர்களுடைய போதனைகளுக்கே இது ஆபத்தாக அமைந்து விடுகின்றது. கடவுள் முன்நோக்கிப் பார்த்து தன்னை எவரெவர் விசுவாசிப்பார்கள் என்று அறிந்து அவர்களை மட்டும் தெரிந்து கொண்டிருந்தால், அதேவிதமாக தன்னை விசுவாசிக்க மறுப்பவர்களையும் அவர் முன்னோக்கியே அறிந்து வைத்திருந்திருக்க வேண்டும். அப்படியானால் தன்னை விசுவாசிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் கடவுள் ஏன் அவர்களைப் படைத்தார்? உண்மையில் அத்தகையோரைப் படைக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கில்லை. அவருக்குப் புறத்தே இருந்து எந்தவொரு சக்தியும் அவரை வற்புறுத்தவுமில்லை. ஆகவே, கடவுள் எல்லா மனிதர்களும் இரட்சிப்பை அடைய வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் தன்னை விசுவாசிக்க மறுப்பவர்களை அவர் படைக்காமலாவது இருந்திருக்கலாம்.
கடவுளின் முன்னறிவை ஏற்றுக் கொண்ட அதேவேளை ஆர்மீனியர்களால் தெரிந்து கொள்ளுதல் என்ற கோட்பாட்டையும் முன்குறித்தலையும் நிராகரிக்க முடியாது. ஆகவே, கடவுளின் முன்னறிவை நிராகரிப்பதைத்தவிர ஆர்மீனியர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் கடவுளின் முன்னறிவை ஏற்றுக் கொள்ளாத ஆர்மீனியர்களின் கடவுள் கோட்பாடு வேதபூர்வமான மெய்யான வல்லமையும் மகா ஞானமும் கொண்ட கடவுளைப் பிரதிபலிப்பதில்லை. கடவுளின் தெரிந்து கொள்ளுதல் அவரது முன்னறிவின் அடிப்படையில் அமைந்திருந்தால் அது முன்னறிவு பற்றிய மெய்யான வேதபோதனையைப் பெரிதும் பாதிக்கும்.
கடவுளின் முன்னறிவை ஆர்மீனியர்கள் வேதபூர்வமாக விளங்கிக் கொள்வதில்லை. வேதம் முன்னறிவைக் குறித்துப் பேசும்போது அது கடவுளின் பெரிதான ஞானத்தை எடுத்துக் காட்டுவதாக விளக்குகிறது. கடவுள் மகா ஞானமுள்ளவர். அவரது ஞானம் பரிசுத்தம் வாய்ந்ததும், பூரணமுமானது. ஆகவே, அவரால் எந்தத் தவறையும் செய்ய முடியாது. ஆகவே, அவரது முன்குறித்தலிலும் தெரிந்து கொள்ளலிலும் எந்தவிதக் குறைபாடோ, தவறோ இருக்க முடியாது. அத்தோடு அவரது முன்னறிவை, அவர் முன்கூட்டியே நடக்கப்போவதை பார்த்து அறிந்து அதன் வழிப்படி செயல்படப் பயன்படும் அறிவாக மட்டும் குறுகிய நோக்கத்தோடு புரிந்து கொள்ளக்கூடாது. நிச்சயமாக கடவுளுக்கு முன்கூட்டியே நடக்கப் போவதனைத்தும் தெரிந்திருந்தாலும் அதன் அடிப்படையில் அவர் தனது மக்களைத் தெரிவு செய்யவில்லை. வேதம் முன்கூட்டியே பார்த்தல் (to foresee) என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக, முன்னறிவு (foreknow) என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறது.
வேதத்தில் முன்னறிவு (to foreknow) என்பதற்கு கடவுள் தனது மக்களோடு முன்னதாகவே ஏற்படுத்திக் கொள்ளும் உறவு (to enter beforehand into a relationship with) என்று பொருள். ஆகவே, கடவுளின் முன்னறிவு, அவர் மிகுந்த அன்போடும் கிருபையோடும், தனக்காக முன்குறித்த மக்களோடு ஏற்படுத்திக்கொண்ட நிச்சயமான, அழிவற்ற உறவினைக் குறிக்கின்றது. ஆகவே அவர் மனிதர்களின் செயல்களை மட்டுமல்ல, மனுக்குலத்தின் ஒரு பகுதியினரையும் (ரோமர் 8:29). தனது மக்களில் காணப்படும் எந்தத் தகுதியின் அடிப்படையிலும் அமையாத அன்பை அவர்கள்மேல் அவர் செலுத்துவதை இவ்வார்த்தை குறிக்கின்றது.