கிறிஸ்தவ இறையியல் – அறிமுகம் –

இறையியல் படித்தவர்களுக்கும், ஞானமுள்ளவர்களுக்கும் சொந்தமானது. பொழுதுபோவதற்கு ஒரு நல்ல சாதனம், ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறையுள்ளவர்கள் இறையியலின் வாசற்படியைக்கூட நாடக்கூடாது. அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற விதமான எண்ணங்களையெல்லாம் இன்று பலரும் கொண்டிருக்கிறார்கள். லிபரல் கோட்பாட்டாளர் நிச்சயமாக இவ்வெண்ணங்களுக்கு மூலகாரணமாக இருந்துள்ளார்கள். லிபரலிஸம் சமயக்குழுக்களில் பரவத்தொடங்கி வேதத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைத் தகர்க்கத் தொடங்கியதும் இறையியலிலேயே மக்களுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கி அதிகப்படிப்பு புத்திக்குதவாது என்ற எண்ணத்தில் பலரும் அதில் கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலைதூக்கிய சுவிசேஷ இயக்கத்தைப்போல் தோற்றமளித்த புதிய  சுவிசேஷ இயக்கமும், நவீன கெரிஸ்மெட்டிக் இயக்கம் இத்தகைய எண்ணங்களை இனிப்பூட்டி வளர்த்தன என்றால் மிகையாகாது. இவ்வியக்கங்களின் தாக்கத்தால் இன்று பிரசங்கம் போதனை என்ற பெயரில் இறையியலற்ற, உப்புச் சப்பில்லாத ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாத, காதுக்கு மட்டும் குளிர்ச்சி தரும் வெறும் பேச்சுக்களை சபை சபையாக இன்று கேட்க முடிகின்றது.

பிரின்ஸ்டன் செமினரியில் இருந்து விலகி பின்பு வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்களில் ஒருவரான கிரேஷம் மேகன் (Gresham Machen) இந்நிலைமையைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “கடவுளைப் பற்றிய கோட்பாடுகளையோ, ஞானத்தையோ இறையியல் அறிவையோ கொண்டிருக்கக் கூடாதென்று கூறுபவர்கள் இக்காலத்தில் நம்மத்தியில் அநேகம். இறையியல், ஆன்மீக வாழ்விற்கு அழிவைத்தேடித் தரக்கூடியது என்பது இவர்களது வாதம். இறையியல் அறிவல்ல நமக்குத் தேவை; இறையனுபவமே சகல காலத்துக்கும் தேவையானது என்பார் இவர். இவர்கள் கூறுவதுபோல், ஆன்மீக வாழ்க்கையென்பது இறைவனைப் பற்றி நமக்கேற்படும் வெறும் உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது எந்தவிதமான ஒழுக்க ரீதியான அதிகாரத்தையும் தன்னில் கொண்டிராததாகவே இருக்கும். கோட்பாடுகளற்ற வெறும் அனுபவம் என்று ஒன்றில்லை. அவ்வாறு ஒன்றிருந்தாலும், அது ஒழுக்கமானதாக நீதியுள்ளதாக இருக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு நண்பன் மீது நமக்கிருக்கும் அளவற்ற அன்பிற்குக் காரணமாக அமைவது அவனைப்பற்றி நாம் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயங்களே. ஆகவே நமது நண்பனைக் குறித்து நம்மில் ஏற்படும் இச்சாதாரண அனுபவமயமான உணர்வுகளுக்கு அடிப்படையே அவனைப் பற்றி நமக்குள்ள அறிவுதான். எனவே, மனிதருக்கிடையில் ஏற்படும் உறவுமுறை அனுபவங்களுக்கே அவர்களைப்பற்றி நாம் கொண்டுள்ள அறிவுபூர்வமான அபிப்பிராயங்கள் அவசியமாக இருக்கும்போது, அறிவின் அடிப்படையில் கடவுளோடு ஏற்படும் தொடர்பில் மட்டும் எந்தத் தவறிருக்க முடியும்? நமது கர்த்தரைப்பற்றி யாராவது இழிவாகப் பேசுவதை நம்மால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறபோது, நமது நண்பர்களைப்பற்றி யாராவது தவறாகப் பேசினால் நமக்கு ஆத்திரம் ஏற்படுவது மட்டும் எப்படி முறையாகும்? கர்த்தரைப்பற்றி நமக்குள்ள அறிவே கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதால் நாம் கர்த்தரைப் பற்றி எத்தகைய அறிவைப் பெற்றிருக்கிறோம் என்பது நம்மில் ஒரு பெரும் மாற்றத்தையே ஏற்படுத்துகிறது.” என்ற மேகனின் இவ்வார்த்தைகள்தான் எத்தனை பொருள் பொதிந்தவை.

இறையியல் என்றால் என்ன?

இறையியல் என்பது இறைவனைப் பற்றிய கோட்பாடுகளாகும் (இறை + இயல்). கர்த்தர் தம்மைப்பற்றி வெளிப்படுத்தியுள்ளவைகளை வரையறுத்து ஒழுங்குபடுத்திப் படிப்பதையே இறையியல் என்கிறோம். எனவே அத்தகைய ஒழுங்கமைப்புடைய பாடம் எல்லோருக்குமே அவசியம் தேவை. நீதிமொழிகள் 9:10, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு” என்று வாசிக்கிறோம். பரிசுத்தரைப்பற்றிய அறிவே மெய்யான அறிவாகும்; அத்தகைய அறிவே கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான அனுபவபூர்வமான நடைமுறை ஞானத்தையும் தரும். இதையே நீதிமொழிகள் எங்கும் எடுத்துரைக்கிறது.

மெய்க் கிறிஸ்தவனுக்கு இறைவனைப் பற்றிய கோட்பாடுகள் ஒருபோதும் உப்புச்சப்பற்றதாக இருக்க முடியாது. வேதபூர்வமான இறையியலை நாம் வேதத்திலிருந்தே பெற்றுக் கொள்கிறோம். இறையியலற்ற கிறிஸ்தவ போதனை என்பது முரண்பாடுள்ள ஒரு வார்த்தைப் பிரயோகமாகும். ஏனெனில் அப்படி ஒன்று உண்மையில் இருக்க முடியாது. சிலர் கிறிஸ்துவை மட்டுமே போதிக்க வேண்டும். வேறு காரியங்கள் அவசியமில்லை என்று ஆணவத்துடன் கூறுவார்கள். ஆனால் கிறிஸ்து யார்? அவரைப்பற்றி வேதம் என்ன போதிக்கின்றது? என்ற கேள்விகளை நாம் கேட்கும்போது நாம் இறையியலுடன் தொடர்புடைய கேள்விகளையே கேட்கிறோம். இக்கேள்விகளுக்கு வேதம் அளிக்கும் பதில்களே கிறிஸ்துவைப் பற்றிய இறையியல் போதனைகளாக அமைகின்றன. எனவே இறையியலற்ற ஒரு கிறிஸ்து இருக்க முடியாது. அவ்வாறு வேதம் கிறிஸ்துவைப்பற்றிப் போதிக்கும் சத்தியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கிறிஸ்துவைப்பற்றி எவரும் போதிக்க முற்பட்டால் அது கிறிஸ்தவ போதனையாக இருக்க முடியாது. இவர்களைப்பற்றிக் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் அத்தகையவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் (கலாத்தியர் 1:6-9) என்று கூறுகிறார். ஏனெனில் வேதபூர்வமாக, வேதபோதனைகளின் அடிப்படையில் பிரசங்கிக்கப்படாத கிறிஸ்து வேதம் போதிக்கும் கிறிஸ்து அல்ல. அவ்வாறு போதிப்பவர்களும் மெய்ப்போதகர்களாக இருக்க முடியாது.

இறையியல் அறிவின் அவசியம்

இறையியல் அறிவென்பது போதக ஊழியத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே சொந்தமானது என்ற தவறான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். உண்மையில் அது சபை மக்கள் அனைவருக்கும் தேவையானதாகும். பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் இதையே விளக்குகிறார். “நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதுக்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.” (எபேசி. 4:14-15).

இன்று கிறிஸ்தவர்களுக்கு இறையியல் போதனை அதிமுக்கியமாகத் தேவைப்படுகின்றது. வேத ஆதாரமற்ற உப்புச் சப்பற்ற பிரசங்கங்களும், போதனைகளும், மாயாஜால வித்தைகளும்,  அதிகாரத்துஷ்ப்பிரயோகமும் மலிந்த தமிழ்க்கிறிஸ்தவ உலகில் மெய்யான கிறிஸ்தவம் தழைத்தோங்கி வளர தமிழ் கிறிஸ்தவ அன்பர்கள் கிறிஸ்தவ இறையியல் அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது. தனிமனித வழிபாடு, ஏமாற்று வித்தைகள் மலிந்து கிறிஸ்தவத்தின் பெயரில் உலவி வரும் போலித்தனத்தின் அடிமைத்தனத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் விடுபட இன்று கிறிஸ்தவ இறையியல் அவசியமாகின்றது. கிறிஸ்துவைப்பற்றியும், அவரது போதனைகளைப்பற்றியும் முறையான வேதபூர்வமான அறிவைப் பெற்றுக் கொள்ளும்போது போலித்தனத்தின் அடிமைத்தளையிலிருந்து நாம் விடுதலை அடைகிறோம். ஆகவேதான் பேதுரு, தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகக் கடவது (2 பேதுரு 1:2) என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் கிறிஸ்து போதிக்கும், கிறிஸ்தவ வாழ்க்கையின் மேன்மை, கிறிஸ்து தலையாக இருந்து வளர்த்து வரும் திருச்சபை ஆகியவை பற்றியும் வேதபூர்வமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது, தேவ அதிகாரத்திற்கு கட்டுப்பட மறுத்து திருச்சபை குறித்த போதனைகளையெல்லாம் நிராகரித்து வேதம் அதைப்பற்றி ஒன்றுமே கூறாததுபோல் நடந்துவரும் கூட்டத்தின் கரத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் விடுபட்டு, கிறிஸ்து நேசிக்கும் சபை வாழ்க்கைக்கு வேதபூர்வமாகத் தங்களை ஒப்புக் கொடுக்க, கிறிஸ்தவ இறையியல் அறிவை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. மேலும், கிறிஸ்தவ இறையியல் அறிவு எல்லாவிதமான போலிப்போதனைகளிலும் இருந்து நம்மைக் காப்பது மட்டுமன்றி மெய்ச்சத்தியத்தில் நமக்கு மேலான ஆர்வத்தையும், உறுதியையும் ஏற்படுத்தும்.

முறைப்படுத்தப்பட்ட இறையியல் (Systematic Theology)

கிறிஸ்தவ இறையியலை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். அதனை விளக்கவுரை (Exegetical) இறையியல், முறைப்படுத்தப்பட்ட இறையியல், வரலாற்று இறையியல், போதக அல்லது நடைமுறை இறையியல் என்று வகுக்கலாம். இவற்றை மேலும் பல பகுதிகளாகவும் பிரிக்கலாம். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே இவை எல்லாவற்றிலும் ஓரளவிற்கு பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் அறிவின் அவசியத்தையே நாம் இங்கு விவரிக்கப் போவதோடு அதன் அடிப்படையிலான போதனைகளையே இப்பகுதிகளில் தொடர்ந்து தரவிருக்கிறோம்.

முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்றால் என்ன? வேதத்தில் காணப்படும் எல்லா முக்கிய போதனைகளையும் சீராகத் தொகுத்து, முறைப்படுத்தித் தருவதே முறைப்படுத்தப்பட்ட இறையியலாகும். பொதுவாக எல்லாப் போதனைகளும் வேதத்தில் முறைப்படுத்தப்பட்டுக் கொடுக்கப்படவில்லை. அவை அனைத்தும் வேதத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து காணப்படுகின்றன. இவற்றைத் தொகுத்தளிப்பதே முறைப்படுத்தப்பட்ட இறையியலின் சேவையாகும். உதாரணத்திற்கு படைப்பை எடுத்துக் கொண்டால் அது பற்றிய அனைத்துப் போதனைகளும் வேதத்தில் பரந்து காணப்படுகின்றன. வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படும் விதிகளைப் பயன்படுத்தி வேதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் படைப்பைப் பற்றிய போதனைகளை சரியாக விளக்கி, அவற்றைத் தொகுத்தளிப்பதே முறைப்படுத்தப்பட்ட இறையியலின் பங்காகும்.

அறிவீனத்தினால் இன்று சிலர் இத்தகைய இறையியலறிவை செயற்கையானதென்று விபரம் புரியாமல் நிராகரிப்பார்கள். ஆனால் வேதத்தில் பரந்து காணப்படும் போதனைகளை, வேதமே தனக்குள் கொண்டுள்ள, அதை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிகளைப்பயன்படுத்தி, முறையாக விளங்கி, அவற்றை ஒவ்வொரு தலைப்பின் கீழும் தொகுத்துப் படிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. இதனால் வேதம் போதிக்கும் சகல போதனைகளையும் நாம் முறையாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் ஞானம் இன்று பெரும் பாலானோருக்கு இல்லாததாலேயே போலிப்போதனைகளுக்கு அவர்களால் தங்களை இரையாக்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவே, முறைப்படுத்தப்பட்ட இறையியலின் பெரும் அவசியத்தை நாம் உணர வேண்டும்.

வரலாறு கண்டுள்ள இரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகள்

வரலாற்றில் இருவிதமான முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனையை திருச்சபை பெற்றுக் கொண்டுள்ளது. வினாவிடைப்பயிற்சியும் (Catechism), விசுவாச அறிக்கையுமே அத்தகைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகளாகும். முக்கியமாக சீர்திருத்த பாப்திஸ்துகள் உலகமெங்கும் பயன்படுத்தும் வினாவிடைப்பயிற்சியையே திருமறைத்தீபத்தில், கிறிஸ்தவக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் கேள்வி-பதில்களாக விளக்கக் குறிப்புகளோடு தொடர்ந்து திருச்சபைகளின் பயன் கருதி அளித்து வருகிறோம். இது பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் காலப்பகுதியில் திருச்சபைத் தலைவர்களால் எதிர்கால சந்ததியின் பயன் கருதி தொகுத்தளிக்கப்பட்டது. பாப்திஸ்துகளில் தலைசிறந்த போதகராக இருந்த ஸ்பர்ஜனும் தன்காலத்தில் இதன் அவசியத்தை உணர்ந்து தனது சபை வளர்ச்சிக்குப் பயன்படுமுகமாக இதேபோல் ஒரு வினாவிடைப் போதனை முறையை வெளியிட்டார். இதனைப் பயன்படுத்துவதால் அடையக்கூடிய பயன்களையும், ஆசீர்வாதங்களையும் உலகெங்கும் அநேக திருச்சபைகளில் பார்க்க முடிகின்றது.

இதே முறையில் வரலாற்றுக் கிறிஸ்தவம் நமக்கு விசுவாச அறிக்கைகளையும் அளித்துள்ளது. இவற்றில் முக்கியமான 1689 இல் வெளியிடப்பட்ட பாப்திஸ்து விசுவாச அறிக்கையின் முக்கியத்துவத்தைப்பற்றி ஏற்கனவே இவ்விதழ்களில் எழுதியுள்ளோம். நமது பாப்திஸ்து பிதாக்கள் பதினேழாம் நூற்றாண்டில் திருச்சபையின் வளர்ச்சி கருதியும், அது இரத்ததானமளித்துப் பெற்றுக் கொண்டுள்ள சீர்திருத்தத்தை இழந்துவிடாமலும் இருக்க அவ்விசுவாச அறிக்கையை தயாரித்தனர். நூறு வருடங்களுக்கு மேலாக இதுவே அக்காலத்து சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் விசுவாச அறிக்கையாக அமைந்து சபை மக்கள் சத்தியத்தில் உறுதியுடன் இருக்க துணை புரிந்துள்ளது. சத்தியத்திற்கு ஆபத்து நேரிட்ட வேளையில், தன்காலத்தில் ஸ்பர்ஜனும் இதனை மறுபடியும் புதுப்பித்து, தனது மக்களுக்குத் தொடர்ந்து போதித்து வேதத்தை விசுவாசிக்கும் சபைகள் இதனைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். சத்தியத்தின் பேரில் வியாபாரம் நடத்தும் போலிகள் மலிந்து திருச்சபை மக்கள் வழி தெரியாது, திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும் இந்நாட்களில் இதன் அவசியத்தை யார் மறுக்க முடியும்.

விசுவாச அறிக்கை, வேதபோதனைகளை முக்கியமான தலைப்புகளின் அடிப்படையில் விளக்கும் அருமையான சாதனமாகும். கடந்த சில வருடங்களாக பத்திரிகை ஆசிரியர் தனது சபையில் இதனைத் தொடர்ச்சியாகப் போதிப்பதனால் சபை பல ஆசீர்வாதங்களைப் பெற்று வருவதை அனுபவபூர்வமாக அறிந்துள்ளார். உலகெங்கும் பல சபைகளில் போதகர்கள் இதனைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் முறையான கிறிஸ்தவ இறையியல் போதனையைப் பெற்றுக்கொள்ள வழி செய்கிறார்கள். இத்தகைய இறையியல் போதனையினால் சத்தியத்தில் முறையான அறிவைப் பெற்று வளருவது மட்டுமல்லாமல், சத்தியத்திற்கு விரோதமான போக்குகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் சபை மக்களால் முடிகின்றது.

இனிவரப்போகும் இதழ்களில், நமது பிதாக்கள் நமக்களித்துள்ள, கிறிஸ்தவ இறையியல் அறிவை, முறைப்படுத்தப்பட்ட இறையியல் வடிவில் அளிக்கும் 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையினை விளக்கமாகப் படிக்கப் போகிறோம். இதன் மூலம் நாம் கர்த்தரைப்பற்றியும் அவரது செயல்களைப்பற்றியுமான மேலான அறிவைப் பெற்றுக் கொள்ளமுடியும். கிறிஸ்தவ இறையியலை, முப்பத்திரெண்டு அதிகாரங்களில் முறைப்படுத்தி தெளிவாக வழங்கும் இவ்விசுவாச அறிக்கையின் ஒவ்வொரு அதிகாரத்தையும் முறையாக விளக்கி இறையியல் போதனை வழங்குவதே எமது நோக்கம். இது சபைப் போதகர்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் அனைவருமே வேதத்தில் தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ள துணை புரியும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s