கிறிஸ்தவ ஊழியத்திற்கான இலக்கணங்கள்
– சார்ள்ஸ் பிரிட்ஜஸ் –
ஊழியம் ஆவிக்குரிய ஊழியமாக அமைய வேண்டுமானால் ஊழியத்தில் ஈடுபடுகிறவர்களில் ஆவிக்குரிய குணாதிசயங்கள் நிறைந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் ஆரம்பத்திலேயே கூறிவிட வேண்டும். எவ்வளவுதான் உலக ஞானமும். இலக்கிய வளமும் நிரம்பியவராக ஒருவர் இருந்த போதும் ஆவிக்குரிய குணாதிசயங்கள் அவரில் நிறைந்திருக்காவிட்டால் அவரது கல்வியால் ஊழியத்திற்கு எந்தவித பயனுமில்லை. வேதம், ஊழியக்காரன் பரிசுத்தமானவனாக இருக்க வேண்டும் என்று சரியாகவே வலியுறுத்திக் கூறுகின்றது. ‘இன்றயை இளைஞர்கள் வேறு காரியங்களில் நேரத்தைச் செலவிடுவதைவிட எபேசிய சபைக் கண்காணிகளுக்கு பவுல் தந்த அறிவுரைகளைப் படிப்பதில் பன்னிரண்டு மாதங்களைச் செலவிடுவது மேலான செயல்’, என்று கூறும் ரிச்சட் பெக்ஸ்டர் தொடர்ந்து, ‘ஓ! சகோதரர்களே, பவுலின் வார்த்தைகளை உங்கள் படிப்பறைக் கதவுகளில் எழுதி வையுங்கள், உங்கள் கண்களில் எப்போதும் படும்படியாக பெரிய எழுத்துக்களில் எழுதி வையுங்கள் அவற்றில் இரண்டு மூன்று வரிகளைத் தெளிவாக அறிந்திருந்தாலே எத்தனை உண்மையுள்ள பிரசங்கிகளாக நாம் மாறலாம்!
அவையனைத்தையும் உங்கள் இருதயங்களிலே பதியும்படியாக எழுதி வையுங்கள், ஏனெனில் இவை, இருபது வருடங்களில் நீங்கள் கற்றிருக்கும் காரியங்களைவிட உங்களுக்கும், உங்கள் சபைக்கும் மேலானதைச் செய்ய முடியும். நீங்கள் கற்றிருக்கும் கல்வி மற்றவர்களின் கைத்தட்டல்களை உங்களுக்குப் பெற்றுத்தந்தாலும் இவற்றோடு ஒப்பிடும்போது அவை உங்களை வெறும் ஓசையெழுப்பும் மணிகளாக மட்டுமே மாற்ற முடியும்’ என்று கூறுகின்றார். ஆகவே, இக்கிறிஸ்தவ ஊழியம், ஊழியக்காரனுக்கு கிறிஸ்துவில் ஆழமான பற்றும் அனுபவமும் இருப்பதோடு, அவை அன்றாடம் அவனது சுயவெறுப்புப் பயிற்சியில் வெளிப்பட்டு, கிறிஸ்துவிலும், கடவுளை அறியாதவர்களிடமும் அவன் காட்டும் அன்பிலும் தென்பட வேண்டும். அத்தோடு அவை அவனது தொடர்ச்சியான குற்றமற்ற நடத்தையிலும் தோற்றமளிக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறது.
இது சார்ள்ஸ் பிரிட்ஜஸ் (1794 – 1869) எழுதிய ‘கிறிஸ்தவ ஊழியம்’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. கிறிஸ்தவ ஊழியத்தைக் குறித்த நூல்களில் இதற்கு சமமானதொன்றில்லை.