இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்தொடர் அளிக்கிறது.
குடும்பம் ஒரு ஆலயம்
குடும்பம் ஒரு ஆலயம் என்று கூறி குடும்பத்தை ஆலயத்திற்கு ஒப்பிட்டு நமது பெரியோர்கள் பேசியுள்ளார்கள். தேவனை அறியாத மக்கள் மத்தியிலும் குடும்பத்தின் பெருமை உணரப்பட்டு அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும் குடும்பத்தின் பெருமையைப் பற்றி வாசிக்கலாம். வள்ளுவர்கூட தன் நூலில் அதற்குப் பல அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இருந்த போதும், வேதம் மட்டுமே குடும்பம் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்று அதிகாரத்துடன் கூறக்கூடிய உலகிலுள்ள ஒரே நூலாக இருக்கின்றது. தேவனை அறியாத மனிதர்களுக்கும் குடும்பத்தைப்பற்றிய அறிவைத் தந்துள்ள ஒரே நூல் வேதமே.
இன்று பல நாடுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் குடும்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பணமோகமும், வாழ்க்கையில் அந்தஸ்து மோகமும், கலாச்சார பாதிப்பால் ஏற்பட்டுள்ள சுதந்திர வேட்கையும் பல குடும்பங்களைப் பாதித்து அழித்து வருகின்றன. தொட்டியில் இருந்து வெளியில் விழுந்த மீன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உயிருக்கு மன்றாடுவது போன்ற நிலையிலேயே பல தமிழ்க் குடும்பங்கள் இன்று வாழ்கின்றன.
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரிவினை மட்டுமல்லாது, பிள்ளைகளும் கலாச்சாரத்தாலும், குடும்பத்தின் நிலைமையாலும் பாதிக்கப்பட்டு கொஞ்ச நஞ்சம் இருந்த ஆன்மீக உணர்வையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.
மேலை நாடுகளில்தான் இப்படியென்றால் தமிழர்கள் பெருமளவில் வாழும் அவர்களது சொந்த நாடுகளில் குடும்பத்தின் நிலமை என்ன? இன்று தமிழ்நாட்டில் டெலிவிஷனாலும், வீடியோக்களாலும் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை. நமது கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் சிதறடித்து அந்நிய மோகத்தையும், ஆடம்பரத்தில் ஆசையையும் ஏற்படுத்தி குடும்பங்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது டெலிவிஷன். ஹொலிவுட் படங்களைப்பற்றிப் பேசுவதிலும், மைக்கல் ஜெக்சனைப்போல் நடப்பதிலும் இன்பம் காண்கிறான் நமது இளந்தமிழ்ச்சிறுவன். கணவனையும், மனைவியையும் சேலை மாற்றுவதுபோல் மாற்றி இன்பம் காணும் மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் டெலிவிசன் சோப்புக்கள் நமது தமிழ்ப் பண்பாட்டை வேகமாகவே அரித்துக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எத்தனையோ குடும்பங்களும் சிந்தனைக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு குடும்பமாக இத்தகைய கீழ்த்தரமான டெலிவிஷன் காட்சிகளை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுக்காமல், வேலை, வேலை என்று அலைந்து ஒருவரையொருவர் பார்க்கவும் நேரமின்றி, குடும்ப ஜெபத்தையும் குப்பையில் எறிந்துவிட்டு கூண்டோடு அநேகர் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். வேலை நிமித்தம் கணவன் வெளிநாட்டிலும், மனைவி சொந்த ஊரிலுமாக பிரிந்து வாழ்ந்து குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் அநேகர்.
நிலைமை இப்படி இருக்கும்போது குடும்பம் புனிதமான ஒரு கோவிலாவதெப்படி? பிள்ளைகள் சரியாக வளர்வதெப்படி? தமிழினத்தைப் பிடித்துள்ள இச்சாபக்கேட்டிலிருந்து நமது குடும்பங்கள் விடுபடுவதெப்படி? குடும்பம் தேவனை ஆராதித்து அவர் வழிப்படி நடப்பதெப்படி? இதற்கான பதிலை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஆனால், அதற்கான பதிலை நாம் நவீன உளவியல் வல்லுனர்களின் (Psychologist) அணுகுமுறையைப் பயன்படுத்தியோ அல்லது மனிதநலவாதிகளின் (Humanist) அணுகுமுறையைப் பயன்படுத்தியோ கொடுக்கப் போவதில்லை.
இன்று குடும்ப வாழ்க்கையைப்பற்றி எழுதி வரும் சில கிறிஸ்துவர்கள் இத்தகைய அணுகுமுறையையே பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு ஜேம்ஸ் டொப்சனைக் (James Dobson) கூறலாம். இவரது நூல்களில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவற்றிற்காக அவரது தவறான அணுகுமுறைகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது (இவரது போதனைகள்பற்றி 21 ஆம் பக்கத்தில் வாசிக்கலாம்). நவீன உளவியல் ரீதியிலான வழிமுறைகளைப் பின்பற்றி குடும்பவாழ்க்கை நடத்த முயல்வதும், அதன் பிரச்சனைகளைத் தீர்க்கப் பார்ப்பதும் வேதத்திற்கு முரணான செயலாகும். ஆகவே, தேவனை விசுவாசிப்பவர்கள் அவர் தந்துள்ள வேதத்தைப் பயன்படுத்தியே மானுடபிரச்சனைகளை ஆராய வேண்டும்; அவற்றிற்கு வழிகாண முயல வேண்டும்.
உலகில் ஆணையும், பெண்ணையும் உருவாக்கி குடும்பத்தை ஏற்படுத்தியவர் தேவனே. மனிதனோ, குடும்பமோ தானாக ஒருபோதும் தோன்றிவிடவில்லை. ஆதாமும், ஏவாளும் குடும்பமாக தன்னை ஆராதித்து தன் வழியிலேயே வாழ வேண்டும் என்று விதித்தவரும் தேவனே. தேவனை அறியாத உலக மக்களனைவரும் அவருடைய விதிகளின்படியே வாழக் கடமைப்பட்டுள்ளார்கள் என்று வேதம் போதிக்கின்றது. குடும்பத்தை உலகில் உருவாக்கிய தேவன் அக்குடும்பங்கள் வழிதவறிப் போய்விடக்கூடாதென்பதற்காக, அவர்கள் கடைப்பிடித்துவாழ தனது கட்டளைகளையும் தந்துள்ளார். தேவனின் கட்டளைகளைப் பின்பற்றி வாழ்ந்து வாழ்க்கையில் நன்மைகளையே அனுபவித்திருக்க வேண்டிய குடும்பம் ஏன் தீய வழியை நாடியது?
படைப்பில் குடும்பம்
குடும்பத்தை தேவனே உருவாக்கினார் என்று கூறினேன். ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களிலும் குடும்பம் உலகில் தோன்றிய விதம் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. ஆதாமையும், ஏவாளையும் தேவன் உருவாக்கி தனக்குப் பணிந்து வாழும்படி கட்டளையிட்டுள்ளதை இவ்வதிகாரங்கள் விளக்குகின்றன. தேவனின் கட்டளைப்படி வாழ்ந்திருந்தால் ஆதாம் நல்ல குடும்பத் தலைவனாகவும், ஏவாள் பணிந்து நடக்கும் நல்ல மனைவியாகவும் இருந்து உலகில் நல்ல குடும்பங்களே தோன்ற வழி ஏற்பட்டிருக்கும். ஆனால், அதற்கு வழியில்லாதபடி ஆதாமும், ஏவாளும் தேவனின் கட்டளையை ஏற்று நடக்கத் தவறினர். முழு மனித குலத்தினதும் பெற்றோர்களாகிய இவர்கள் செய்த பாவத்தினால் உலகில் பாவம் தோன்றி குடும்பங்களனைத்தும் பாவத்தைச் சுமக்கத்தொடங்கின.
நல்ல குடும்பத்தலைவனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டிய ஆதாம், பாவத்தினால் இயற்கையாகவே அவ்வாறு இருக்கக்கூடிய நிலையை இழந்து ஏவாளை அன்போடு ஆளாமல் அதிகாரத்தோடு மட்டும் ஆளும் கணவனாக மாறினான். கணவனுக்குப் பணிந்து அவன் தலைமையை ஏற்று அன்போடு நடந்து கொள்ள வேண்டிய ஏவாள் அவனுக்குப் பணிய மறுத்து அவனை ஆண்டு கொள்ள முற்பட்டாள். பாவத்தினால் ஏற்பட்ட இந்நிலைமையே இன்று சமுதாயம் எங்கும், எல்லா நாடுகளிலும் எல்லாக் குடும்பங்களிலும் பார்க்கிறோம். இந்த உண்மையைத்தான் ஆதியாகமம் 3:16 வெளிப்படுத்துகிறது. “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்” என்ற வசனங்களுக்கு மூலத்தில் இதுதான் பொருள். பாவத்தின் காரணமாக பெண்களுக்கு இயற்கையாகவே கணவனுக்கு அடிபணிந்து நடக்கும் எண்ணம் வராது. அதே நேரம் மனைவியை அன்போடு நடத்தும் வழக்கமும் கணவனுக்கு இயற்கையாகவே வராது. கல்வின் இதைக் குறித்து விளக்கும்போது, “ஏவாள் பாவம் செய்வதற்கு முன்பு தன் கணவனுக்கு இணங்கி தாழ்மையுடன் அவனுக்கு அடிபணிந்தாள். ஆனால், இப்போதோ பாவம் அவளை அதிகாரம் செய்யும்படியாகத் தூண்டுகிறது” என்று கூறுகிறார். இதனால்தான் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களாகிய கணவனும், மனைவியும் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கும் பவுல், கணவன் மனைவி மீது அன்பு செலுத்த வேண்டும் என்றும், மனைவி கணவனுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று போதிக்கிறார் (எபேசியர் 5). இதற்குக் காரணம் என்ன? பாவத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை அறிந்து கொண்டுள்ள கணவனும், மனைவியும், பாவத்தினால் இயற்கையாகத் தாம் நடந்து கொள்ளும் முறைகளை விட்டுவிலகி தேவனுடைய கட்டளைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கணவன் பாவசுபாவத்தோடு மனைவியை ஆள முற்படக்கூடாது, ஆனால், அன்புடன் அவளை வழிநடத்த வேண்டும். அதேவேளை, மனைவி கணவனை ஆளமுற்படாமல் அன்புடன் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டும்.
பாவத்தில் குடும்பம்
பாவம் இன்று ஆணையும், பெண்ணையும் தேவன் ஆரம்பத்தில் படைத்த நிலையிலிருந்து மாற்றியிருப்பதால்தான் குடும்பங்கள் இயற்கையாகவே தேவனின் வழிப்படி நடக்க முடியாமல் தவிக்கின்றன. கணவன், மனைவி உறவு சரியில்லாமல் இருப்பதற்கும், பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் சிரத்தை காட்டாமல் இருப்பற்கும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கட்டுப்பட மறுப்பதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளோ அல்லது நாம் வளர்ந்த முறையோ அல்லது உளவியல் காரணங்களோ அடிப்படைக் காரணமல்ல. பாவமும் அது மனிதனில் தொடர்ந்து செய்துவரும் கிரியைகளுமே இதற்கான அடிப்படைக் காரணம். இதுவே கர்த்தரின் வேதம் போதிக்கும் உண்மை.
கிறிஸ்தவர்கள் அல்லாதோரின் குடும்பம்
இருந்தபோதும், பாவத்தால் பீடிக்கப்பட்டுள்ள மனிதன், தேவனின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், தனது பாவ நிலையிலும் குடும்பத்தை உருவாக்கி வாழவும், அதை சரியான முறையில் நடத்தவும் தேவனுக்கு முன் கடமைப்பட்டுள்ளான். நியாயப்பிரமாணம் அவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டிருப்பதாலும், பாவத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமுகமாக தேவன் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி எல்லா மனிதர்களுக்கும் அதனைக் கொடுத்திருப்பதாலும், மனிதன் தேவனுக்குக் கடமைப்பட்டவனாகக் காணப்படுகிறான். எனவே, வேதம் பாவியான மனிதர்களும் தங்களுடைய குடும்பத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. கீழ்வரும் வசனங்கள் இதையே போதிக்கின்றன. “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்கு பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக்கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:9-11). மேலும் எபிரேயர் நிருபத்தில், “நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” என்றும் வாசிக்கிறோம். இவ்வசனங்கள் உலகத்திலுள்ள தேவனை அறியாத மனிதர்களும் தங்களுடைய குடும்பத்தை நன்றாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. தேவனை அறியாத மக்களில் பலர் கிறிஸ்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு தங்களுடைய குடும்ப வாழ்க்கையை நல்ல முறையில் வைத்திருப்பதற்கு இதுவே காரணம்.
கிறிஸ்தவக் குடும்பம்
வேதம் மனித குலமனைத்தும் குடும்ப வாழ்க்கையில் அக்கறையெடுத்து தேவனுக்கு மகிமையளிக்கும் வகையில் வாழ வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், பாவத்தின் காரணமாக மனிதன் அதில் இறுதி வெற்றி காண முடியாத நிலையில் இருக்கிறான். இதனாலேயே, இன்று ஒழுக்கக்குறைவான நிகழ்வுகள் உலகில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. குடும்பங்கள் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவேதான், மனிதர்கள் இன்று கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. பாவத்திலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கே அவரது கட்டளைகள் புரியும்; அவரைத் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிமைப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியமும் தோன்றும். கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்வதால் ஆவியானவரின் அனுக்கிரகத்தால் கிறிஸ்துவின் கட்டளைகளைத் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்க முடிகின்றது. அன்பு என்பதை அறியாதிருந்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் புரிய ஆரம்பிக்கிறது. கணவனால் தனது பாவசுபாவத்தைக் கட்டுக்குள் அடக்கி மனைவியை நேசித்து, அவளுக்கு விசுவாசமாக இருக்க முடிகிறது. கணவனுக்கு மன அமைதியோடு மனைவியால் கட்டுப்பட்டு நடக்க முடிகின்றது. இவற்றைவிட மேலாக, உண்மையான தேவ அன்பை ஒருவர் மேல் ஒருவர் வைத்து குடும்பமாக தேவனை மகிமைப்படுத்த முடிகின்றது. பிறக்கப் போகும் பிள்ளைகளுக்காக ஜெபத்தில் இருந்தும், பிறந்தபின் அவர்களை கர்த்தருக்குள் வளர்ப்பதைப் பெருங்கடமையாகக் கொண்டும் வாழமுடிகின்றது.
இயேசு கிறிஸ்துவைத் தலைவராகக் கொண்டமையாத குடும்பங்களும் தேவனை மகிமைப்படுத்தும்படி வாழ வேண்டிய கடமைப்பாடு இருந்தபோதும், கிறிஸ்துவைத் தலைவராகக் கொண்டமைந்த குடும்பத்தால் மட்டுமே கிறிஸ்துவை மகிமைப்படுத்த முடியும். கிறிஸ்தவக் குடும்பத்தில் கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கப்படும். கிறிஸ்து அங்கே ஆராதிக்கப்படுகிறார். கிறிஸ்து அக்குடும்பத்தில் ஆட்சி செய்கிறார். கிறிஸ்துவின் வார்த்தைக்கு முரணானவைகளைச் செய்ய அக்குடும்பம் தயங்கும். பாவத்தை அக்குடும்பம் வெறுத்து ஒதுக்கும். உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கும், உலக ஞானத்திற்கும் அக்குடும்பத்தில் இடமிருக்காது. டெலிவிஷன் அக்குடும்பத்தை ஆட்சி செய்யாது. நவீன உடையலங்காரத்திற்கும், பகட்டிற்கும், பண மோகத்திற்கும் அக்குடும்பத்தில் இடமிருக்காது. நவீன பெண்ணியல் போதனைகள் அங்கு தலைகாட்ட முடியாது. மொத்தத்தில் கிறிஸ்தவக் குடும்பமே மேலான குடும்பம். இதுவரை நாம் குடும்பத்தைப்பற்றி வேதம் போதிக்கும் அடிப்படையான உண்மைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டோம். இவை அடிப்படை உண்மைகளே தவிர இவை மட்டுமே குடும்பத்தைப்பற்றிய வேதமளிக்கும் முழுப் போதனைகளையும் அளித்துவிடவில்லை. குடும்பத்தைப்பற்றி வேதம் போதிக்கும் முழு உண்மைகளையும் நாம் படித்துப் புரிந்து கொள்ளுமுன் நாம் இதுவரை பார்த்த குடும்பத்தைப் பற்றிய அடிப்படைப் போதனைகளில் இருந்து எழும் சில முக்கிய பாடங்களைக் கவனித்தல் அவசியம்.
1. கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
இங்கே நாம் முக்கியமாக கிறிஸ்தவக் குடும்பத்தையே கருத்தில் கொள்கிறோம். ஒரு குடும்பம் கிறிஸ்துவை மகிமைப்படுத்தி வாழ வேண்டுமானால் அக்குடும்பத்தின் பிரதான அங்கத்தவர்களான கணவனும் மனைவியும் கிறிஸ்தவர்களாக இருத்தல் வேண்டும். கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மணமுடித்தல் ஆகாது. இன்று தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளுக்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் பிரதான அங்கத்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டுமென்று நாம் கூறும்போது, அவர்களுடைய சபை அங்கத்துவத்தையோ அல்லது அவர்களுடைய பெற்றோர்களின் விசுவாசத்தையோ அல்லது எந்தச் சமயக் குழுவை அவர்கள் சேர்ந்தவர்கள் என்பது பற்றியெல்லாம் நாம் கவலை கொள்ளவில்லை. இவையும் அவசியமானவை என்றாலும் முதலில் அவர்கள் இருவரும் உண்மையில் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களாக இருக்கிறார்களா? என்பதே மிக முக்கியமானதாகும். இன்று கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அநேகர் வெறுமனே “மெயின் லைன்” சமயக் குழுக்கள் என்று அழைக்கப்படும் சில சமயக் குழுக்களில் சம்பிரதாயத்திற்கு அங்கத்தவர்களாக இருக்கின்றார்களே தவிர அவர்களுடைய வாழ்க்கையில் கிருபையின் செயலோ அல்லது கிறிஸ்துவோ காணப்படுவதில்லை. சபைப்பாரம்பரியமும், சபை அங்கத்துவமும் ஒருவரைக் கிறிஸ்தவராக மாற்றிவிட முடியாது. இத்தகையோரைப் “பெயர்க் கிறிஸ்தவர்கள்” என்று அழைப்பதும் வழக்கம். அதாவது, வெறும் பெயருக்காகத் தம்மை இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்களே தவிர, அவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள் அல்ல. இதற்கெல்லாம் காரணம் உண்மைக் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் தமிழர்கள் மத்தியில் சரிவரக் காணப்படாததுதான். பரவசக் குழுக்களும் மெய்யான மனந்திரும்புதலுக்கும், கிறிஸ்துவில் இருக்க வேண்டிய விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்காமல் வெறும் உணர்ச்சிகளுக்குத் தூபம் போடுவதால் அவர்கள் மத்தியில் மெய்க் கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் கடினமே. இப்பகுதியில் நாம் உண்மையான, வேதபூர்வமான கிறிஸ்தவக் குடும்ப வாழ்க்கையைக் குறித்துப் பார்க்கிறோமே தவிர வெறும் பெயருக்கு கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களுடைய குடும்ப வாழ்க்கையை பற்றியல்ல. இன்று முறையான, வேதபூர்வமான போதனைகளை அளிக்கும் சில சபைகள் தமிழர் வாழும் நாடுகளில் தோன்றி வருவது மகிழ்ச்சி தருகிறது.
முக்கியமாக, போதகஊழியத்தில் இருக்கும் சபைப் போதகர்கள் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்கள் அல்லாதோருக்கு மணமுடித்துவைக்க இடம் கொடுக்கக்கூடாது. திருமணம் முடிக்கவிருக்கும் இருசாராரையும் போதகர்கள் விசாரித்து அவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்கள்தாமா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பலர், சபையாருக்கும், பெற்றோருக்கும் பயந்தும், பிரச்சனைகளை சந்திக்கப் பயந்தும் இதைச்செய்ய முற்படுவதில்லை. இவ்வாறான நிலைமைகளை நானும் போதக ஊழியத்தில் சிலவேளைகளில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சிலரை திருமணம் முடித்துவைக்க மறுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலைமைகளில் போதகர்கள் தேவனுக்குப் பயந்து செயல்பட வேண்டுமே தவிர உலகப் பிரகாரமாக நடந்து கொள்ளக்கூடாது.
கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதோரைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? முதலில், வேதம் அவ்வாறே போதிக்கின்றது (2 கொரி. 6:14-17; ஆமோஸ் 3:3). ஒரே தேவனை வணங்காத இருவர் அவருடைய வழிகளின்படி வாழ்வது இயலாது. வேதபோதனைகளுக்கு விரோதமாக கிறிஸ்தவர்கள் அல்லாதோரைத் திருமணம் செய்து கொள்பவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியாது. இரண்டாவதாக, இருவரும் கிறிஸ்தவர்களாக இருந்தால்தான் கிறிஸ்துவிற்கு அடிபணிந்து, அவர்கள் கிறிஸ்தவக் குடும்பத்தை நடத்த முடியும். இருவரும் ஒரே தேவனை ஆராதிக்காவிட்டால், ஒரே சத்தியத்தை விசுவாசிக்காவிட்டால் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல் பிறக்கப் போகும் குழந்தைகளை ஒரு மனதோடு இருவரும் தேவனுடைய வழியில் நடத்துவதும் முடியாத காரியமாகும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் அந்நியர்களோடு கொண்டிருந்த உறவு தவறான திருமண உறவாக சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
2. கிறிஸ்தவத் திருமணத்தில் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு இடம் கொடுக்கலாகாது.
கிறிஸ்தவத்திருமணம் நடைபெறத் திருமணம் செய்து கொள்ளப்போகிற இருவரும் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால், இப்படி இரு கிறிஸ்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும் பெருந்தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன. இவற்றிற்கு நமது கலாச்சாரப் பாரம்பரியப் பின்னணியே காரணமாக அமைந்து விடுகின்றது. பாவத்திலிருந்து மனம்மாறி தேவனை அறிந்து கொண்டபோதும் பலர் தங்களுடைய பழைய சுபாவங்களையும், உலகப்பிரகாரமான எண்ணங்களையும் கைவிட்டுவிடத் தவறிவிடுகின்றனர். இத்தகைய நிலைமையால் பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் திருமணத்தின்போது கிறிஸ்துவின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது உலக காரியங்களுக்கே முதலிடம் அளித்து தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுடைய நிம்மதிக்கும் தடையாக இருந்துவிடுகின்றனர். உதாரணத்திற்கு சாதி, குலத் தொடர்புகளை ஆராய்ந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், வேலைத் தகுதிகளை மட்டுமே ஆராய்ந்து பார்ப்பதும், திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்களின் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதிருப்பதும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளிலும் நம்மத்தியில் நடந்து கொண்டிருப்பதை வாசகர்கள் அறிவர். கிறிஸ்தவப்பெற்றோர்களும், போதகர்களும் இவற்றைக் கனவிலும் எண்ணிப் பார்ப்பது பெருந்தவறு. கிறிஸ்தவப் பெற்றோர்கள் கிறிஸ்துவுக்கும் வேதத்திற்கும் மதிப்புக் கொடுத்து தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கையின்மூலம் கிறிஸ்து மகிமை பெறும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவப் பெற்றோர்கள் வேதத்திற்கு முரணாக நடந்து தங்கள் பிள்ளைகளின் திருமணவாழ்க்கைக்குத் தடையாக இருக்கும்போது சபைப்போதகர்கள் இவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகூறி திருத்த வேண்டும். அத்தோடு சபையின் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் தகுந்த போதனையளித்து அவர்களுடைய எதிர்காலத் திருமண வாழ்க்கைக்குத் துணையாக இருத்தல் அவசியம். இதுவரை கிறிஸ்தவப் பெற்றோர்கள் எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்துவிடலாம் என்று பார்த்தோம். இனி கிறிஸ்துவை அறியாத பெற்றோர்களைக் கொண்டிருக்கிற கிறிஸ்தவ வாலிபர்களுடைய பிரச்சனைகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இவர்கள் சமுதாயத்தில் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். தாங்கள் விரும்பும் கிறிஸ்தவ ஆண்களையும், கிறிஸ்தவப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் அவதிப்படும் அநேகரை நாம் அடிக்கடி சமுதாயத்தில் சந்திக்கிறோம். கலாச்சாரப்பாதிப்பால் இவர்கள்படும் தொல்லைகள் அநேகம். பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட சமுதாயத்தில் ஒரு கிறிஸ்தவ வாலிபனையோ அல்லது பெண்ணையோ விரும்பிய ஒரே காரணத்திற்காக பெற்றோராலும், போதகர்களாலும், சபையாலும் வெறுக்கப்பட்ட வாலிபர்களும், பெண்களும் அநேகர். இந்நிலைக்கு முதலாவது காரணம், இந்நூற்றாண்டிலும் நமது சமுதாயத்தில் ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணிலும், ஒரு பெண் ஆணிலும் அன்பு வைப்பது ஏதோ ஒரு தகாத காரியம்போல் எண்ணப்படுவதால்தான். கிறிஸ்தவர்கள் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருப்பது தகாது. இவ்வாறாக ஒரு ஆண் ஒரு பெண்ணில் கொள்ளும் அன்பை கேடான இச்சையாகக் கருதுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிலும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிலும் இருக்க வேண்டிய உண்மையான அன்பிற்கும், கேடான இச்சைக்கும் வித்தியாசம் தெரியாத சமுதாயத்தை என்னவென்று கூறுவது? இதைக் கிறிஸ்தவப் போதகர்கள் கண்டித்து சபைகளில் போதித்து தமது மக்கள் வேதபூர்வமான எண்ணங்களில் வளர உதவ வேண்டும்.
உண்மையான அன்பில்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஒரு ஆணையோ எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் அது எப்படி உண்மையான திருமணமாக இருக்க முடியும். ஒருவரில் ஒருவர் அன்பில்லாமல் இருவர் திருமணம் செய்து கொள்வது எப்படித் தகும்? இங்கே, நாம் அன்பு என்று எதைக் கூறுகிறோம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒரு கிறிஸ்தவ ஆண்மகனுக்கு தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணைப் பிடித்திருக்க வேண்டும். பிடிக்காத ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது. இதேபோல் பெண்ணுக்கும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற ஆணைப் பிடித்திருக்க வேண்டும். இருவருக்கும் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் மனிதப் பிறவிகளேயன்றி உயிரற்ற ஜடங்களல்ல. பிறருடைய மனதிருப்திக்காக ஒரு கிறிஸ்தவன் திருமணம் செய்து கொள்ள முடியாது. இத்தகைய அநாகரீகமான செயல்களைத் “தியாகம்” என்ற பெயரில் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் சினிமாவிலும்தான் பார்க்கலாம். ஆனால், இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிறிஸ்தவ திருமணங்கள் கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும். அவை கிறிஸ்தவ வேதத்தின் போதனைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆகவே, சமுதாயத்தின் வரம்புக்குட்பட்டு, வேதபூர்வமாக நடந்து கொள்ளும் பண்புள்ள கிறிஸ்தவர்கள் தாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு ஆணிலோ, பெண்ணிலோ தூய்மையான அன்பு வைப்பதில் எந்தவிதமான தவறுமில்லை; அது மட்டுமல்ல, அத்தகைய தூய்மையான அன்பு இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ திருமணம் செய்து கொள்வதை எண்ணிப் பார்க்கக் கூடாது. இதைக் கூடாத காரியமாக எண்ணுபவர்கள் தங்களுடைய போக்கை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
சபையில் அப்படி ஒரு கிறிஸ்தவ வாலிபன் கிறிஸ்தவ வாலிபப் பெண்ணை விரும்பினால் அதை கேலி செய்து, அவர்கள் ஏதோ பெரும் தவறு செய்துவிட்டதுபோல் நடத்திப் புண்படுத்தாது, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இப்படி ஒருவர் மேல் ஒருவர் அன்பு வைத்த ஒரே காரணத்துக்காக, அவர்களுக்குத் துணையிருந்து வழிநடத்த வேண்டிய போதகர்களே அவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுகிறார்கள். இதனால், போதகர் என்ன நினைப்பாரோ அல்லது பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து எல்லாவற்றையும் மனத்துள் புதைத்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் அநேகர். என்னடா, இவர் இப்படிக் கிறிஸ்தவ இளைஞர்களுக்காக வக்காலத்து வாங்குகிறாரே என்று நினைக்கிறீர்களா? இன்று இப்படி நம்மத்தியில் நடக்கவில்லை என்று எவராவது கூற முடியுமா? நான் சொல்வதெல்லாம், கிறிஸ்தவர்கள் வேத போதனைகளுக்கு மதிப்புக் கொடுத்து நமது இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான். வழிகாட்டி நடத்த வேண்டிய பெற்றோர்களும், போதகர்களும், வழிப்பறிக் கொள்ளையர்கள் போல் நடந்து நமது இளைய சமுதாயத்தைக் கெடுத்துவிடக் கூடாதென்பதுதான். கலாச்சாரம் என்ற பெயரில் வேத போதனைகளை நாம் தூக்கி எறிந்து விடக்கூடாது என்றுதான் நான் கூறவருகிறேன்.
ஆகவே, இன்று கிறிஸ்தவ இளைஞர்களுக்குப் பெருந்துணையாக இருந்து வழிகாட்ட வேண்டிய போதகர்கள் அவர்களுடைய அன்பைப்பெற்று அவர்களை முறையாக வழிநடத்தி, அவர்களுடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்க வேண்டியது அவசியம். நாம் இதுவரை பார்த்த உண்மைகளைப் போதித்து சபையாரையும் திருத்த வேண்டியது அவர்களது கடமை.
(வளரும்)
Super khathirrai
LikeLike