1. கிறிஸ்து தனது அனாதித்தீர்மானத்தின்படி முன்குறிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே மரித்தார் என்று சீர்திருத்தக் கோட்பாடு போதிக்கின்றது. முன்பெல்லாம் கர்த்தரை அறியாத ஒரு மனிதன் மரிக்கும்போது, நான் இவரை கர்த்தருக்காக ஆதாயப்படுத்தவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இப்போது சீர்திருத்தக் கோட்பாட்டை அறிந்து கொண்டபின் இந்த மனிதர் ஆண்டவரால் முன் குறிக்கப்படாததால்தான் அவரை அறியாமல் மரித்துவிட்டான். ஆகவே, நான் வருத்தப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இது சரியா?
பதில்: ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது நமக்குத் தெரியும். அதே போல் இரயில் ஓடுவதற்கு இரு தண்டவாளங்கள் அவசியம். கர்த்தருடைய வேதமும் இதேவகையில் இரு முக்கியமான சத்தியங்களைப் போதிக்கின்றது. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது எவ்வளவு அவசியமோ அதே போல் இவ்விரு சத்தியங்களையும் ஒன்றுக்கொன்று முரண்படாதவகையில் புரிந்து கொள்வது மிக அவசியம். கர்த்தர் தனது அநாதித் தீர்மானத்தின் மூலம் மனித குலத்தில் ஒரு பகுதியினரைத் தனது குழந்தைகளாகும்படித் தெரிந்து கொண்டுள்ளார் என்று வேதம் போதிக்கின்றது. அவ்வாறு அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே அவரை அறிந்து கொள்வார்கள் என்பதும் வேதம் போதிக்கும் உண்மை. ஆனால், வேதம் நாணயத்தில் இன்னுமொரு பக்கம் இருப்பது போல் வேறொரு உண்மையையும் போதிக்கின்றது. இவ்வுண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மனித குலம் முழுவதும் அறிந்து கொள்ளும்படியாக கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பிரசங்கிக்க வேண்டும் என்றும் வேதம் போதிக்கின்றது (மத்தேயு 28:18-20). கேள்வியின் மூலமே விசுவாசம் வருவதால் அனைவரும் கேட்கும்படியாக நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் (ரோமர் 10:27). அதுமட்டுமல்லாது, நற்செய்தியைக் கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியது அனைவரது கடமை என்றும் வேதம் போதிக்கின்றது. இவ்விரு சத்தியங்களும் நமது இரு கண்களைப் போல முக்கியமானவை.
ஆகவே, கர்த்தரின் அநாதித்தீர்மானத்தின் மூலம் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவரை அறிந்து கொள்ளுமுகமாக எந்தவித பாரபட்சமுமின்றி அனைவருக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். எல்லா மனிதர்களும் அதைக்கேட்டு மனந்திருந்த வேண்டிய கடமைப்பாட்டினைக் கொண்டுள்ளதால், மனந்திருந்தாதவர்கள் நியாயமாகவே கர்த்தரின் தண்டனைக்குள்ளாகிறார்கள். மனந்திருந்தாதவர்கள் தங்களது சுய பாவத்தின் காரணமாக இருதயம் கடினப்பட்டு நற்செய்தியை நிராகரித்து விடுகிறார்கள். ஆகவே, கர்த்தரை யாரும் குறைகூற முடியாது. ஆனால், நற்செய்தியை அனைவருக்கும் பிரசங்கிக்கும் காரியத்தை நாம் தவறவிட்டுவிடக்கூடாது. நற்செய்தியை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியத்தை வேதம் வற்புறுத்திக் கூறுகிறது. ஆகவே, யாராவது கர்த்தரை அறியாமல் இறந்துபோனால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டியது நியாயமே. ஏனெனில் கர்த்தர் தனது குமாரனாகிய கிறிஸ்துவையும், இரட்சிப்பையும் எந்தவித பாரபட்சமுமின்றி வழங்கியபோது அந்த ஆத்துமா தனது சுய பாவத்தினால் அவ்வாசீர்வாதங்களை நிராகரித்து நரகத்தை அடைவதால் அது நமக்கு நிச்சயம் வருத்தத்தைத் தருகின்றது.
ஒரு ஆத்துமா கர்த்தரை அறியாமல் இறக்கும்போது, அந்த ஆத்துமா கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படவில்லை, அதனால்தான் அவரை அறியாமல் இறந்து விட்டது என்று நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளும்படி வேதம் எங்குமே போதிக்கவில்லை. இவ்வாறு நினைப்பவர்களை ஹைப்பர் கல்வினீயவாதிகள் என்று அழைப்பார். இவர்களுக்கும் சீர்திருத்தக் கோட்பாட்டாளருக்கும் எந்தத் தொடர்புமில்லை. இதற்கு மாறாக நம்மால் முடிந்தவரை நற்செய்தியை எல்லா மனிதர்களும் கேட்கும்படிச் செய்ய வேண்டும் என்றே வேதம் எதிர்பார்க்கிறது. அத்தோடு நமக்கு மிகவும் அறிமுகமான ஒருவருக்கு நாம் நற்செய்தியை எடுத்துச் சொல்லாமலிருந்து அந்த மனிதர் கர்த்தரை அறியாமல் இறந்திருந்தால் அதற்காகவும் நாம் வருத்தப்படத்தான் வேண்டும். ஏனெனில் நாம் நமது கடமையிலிருந்து தவறியிருக்கிறோம். ஆகவேதான் நற்செய்தியை எடுத்துச் சொல்லும் காரியத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தல் அவசியம்.
2. தேவனே, என்னோடு பேசும்; உம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தும் என்று ஜெபித்துவிட்டு வேதத்தைத் திறந்து பார்ப்பது சரியா? தேவனுடைய அழைப்பை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது?
பதில்: தேவன் வேதத்தின் மூலம் மட்டுமே இன்று பேசுகிறார் என்பது வேதம் போதிக்கும் உண்மை. ஆகவே தேவனுடைய சித்தம் வேதத்திலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கெரிஸ்மெட்டிக் கூட்டத்தார் இன்று கர்த்தர் வேதத்தில் வெளிப்படுத்தியுள்ள வழிகளைக் கண்டறியாது அவர் தங்களுடன் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். தேவன் வேதத்தில் வெளிப்படுத்தியுள்ள வழிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள ஜெபிக்க வேண்டியது அவசியம். ஆவியானவர் நமக்கு சரியான அறிவைத்தர நாம் ஜெபிக்க வேண்டும். ஆனால் வெறும் ஜெபத்தை மட்டும் செய்துவிட்டு கர்த்தரின் வேதத்தை முறையாகப் படித்து அவர் காட்டும் வழிகளை அறிய மறுப்பது அறிவீனம். ஆகவே வேதம் மட்டுமே கர்த்தரது வழிகளையும், சித்தத்தையும் விளக்கிக் காட்டும் கர்த்தரின் வெளிப்பாடு. நமது வழிகள் அனைத்தையும் வேதத்தை ஆராய்ந்து பார்த்தே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வேதத்திற்கு முரணாக நமது வழிகள் அமைந்திருந்தால் அவை கர்த்தரின் சித்தமல்ல என்ற முடிவுக்கு உடனடியாக வர நாம் தயங்கக் கூடாது. இதுவே மெய்கிறிஸ்தவம் காட்டும் வழியாகும்.
3. ஒரு பாவி மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அதற்கு முன் அவன் செய்த எல்லா பாவங்களையும் அறிக்கையிட வேண்டியது அவசியமா?
பதில்: வேதம் மனிதர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்று போதிக்கின்றது. அதாவது, தான் கர்த்தருக்கு முன் பாவி என்று உணர்ந்து அதற்காக வருந்த வேண்டும். மூலபாவம் தன்னை ஆள்வதையும், அதனாலேயே தான் பாவங்களைச் செய்து பாவகரமான வாழ்க்கை வாழ்வதையும் உணர வேண்டும். இவற்றிற்காக ஒட்டு மொத்தமாக வருந்தி அவற்றிலிருந்து விடுபடக் கர்த்தரை நாடி ஓடி அவரளிக்கும் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தனது பாவங்களுக்காக ஒருவன் கர்த்தரிடம் மனம்வருந்தும்போது அவன் உண்மையுள்ளவனாக இருந்தால் எல்லாப் பாவங்களுக்காகவுமே மனம் வருந்துவான். இதற்காக ஒரு பட்டியல் போட்டு ஒவ்வொன்றையும் கர்த்தருக்கு முன் வைக்க வேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. இது ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கும் போதனை. ஆனால், மனந்திரும்பும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவுக்கு இடமிருக்காது என்று வேதம் போதிக்கின்றது. ஒருவன் தன் பாவங்களுக்காக மனந்திரும்பும்போது ஒட்டு மொத்தமாக எல்லாப் பாவங்களுக்காகவுமே மனந்திரும்ப வேண்டும்.