“பினியின் மாறுபாடான கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையல்ல”
– ஸி. எச். ஸ்பர்ஜன் –
சார்ள்ஸ் பினி
திருச்சபை வரலாற்றில் சார்ள்ஸ் பினி ஒரு முக்கியமான மனிதர். அவரால் வசீகரிக்கப்பட்டவர்களில் சிலர் அவரை அமெரிக்காவின் மிகப்பெரிய எழுப்புதல் விற்பனராகக் கருதுகின்றனர். பினியின் பெலேஜியனிச இறையியற் கோட்பாடுகளையும், சுவிசேஷ அழைப்பு முறைகளையும் ஆராய்ந்துணர்ந்தவர்கள் அவரை சுவிசேஷ உலகை சந்ததி சந்ததியாகப் பாதித்துவரும் மனிதனாகக் கருதுகின்றனர்.
பிரஸ்பிடீரியன் சமயக்குழுவினால் பினி பிரசங்கியாக நியமிக்கப்பட்டபோதும் அச்சமயக்குழு விசுவாசித்த வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையை பினி எப்போதுமே ஏற்றுக் கொள்ளவில்லை. 1838 நியூயோர்க் மாகாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் மூலமே பினி பெரும் புகழடையத் தொடங்கினார். எல்லா சபைகளினதும் ஆதரவையும் அன்று முதல் பெற்ற பினி தனது சுவிசேஷக் கூட்டங்களில் மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர “சலனமுற்றவர்களின் இருக்கை” (Anxious Bench) என்ற முறையைக் கையாளத் தொடங்கினார். ஒபர்லின் புதுக் கல்லூரியில் பின்பு பேராசிரியராக பதவியேற்ற பினி அந்நகரிலேயே ஒரு சபைப் போதகராகவும் பொறுப்பேற்றார். பினி அநேக சுவிசேஷக் கூட்டங்களை அமெரிக்காவில் நடத்தியதோடு இரண்டு முறை இங்கிலாந்துக்கும் விஜயம் செய்துள்ளார்.
பினியின் காலத்தில் பிரசங்கியாகவிருந்த அசேல் நெட்டில்டன் பினியின் சுவிசேஷ அழைப்பு முறைகளைப் பெரிதும் கண்டித்துள்ளார். வரலாற்று கிறிஸ்தவத்திற்கு எதிரான முறையில் சுவிசேஷக்கூட்டங்களில் அழைப்புக் கொடுத்து கிறிஸ்தவத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்ட பினி உண்மையில் விசுவாசித்தது என்ன என்பதை ஆராய்ந்தால் அவரது போக்கின் காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
1. பினி சீர்திருத்தக் கோட்பாடுகளை முற்றிலும் வெறுத்தார். வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையை அவர் துளியும் வாசிக்காததோடு அதை முற்றாக நிராகரித்தார்.
2. பினி மனிதனின் மூல பாவத்தை அடியோடு நம்பவில்லை.
3. கிறிஸ்துவின் நீதி, அவரை விசுவாசிப்பவர்களின் கணக்கில் வைக்கப்படுவதையும் பினி நம்பவில்லை.
4. சரியான முறைகளை மட்டும் பயன்படுத்தி ஒருவரில் மனமாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்த முடியும் என்று பினி விசுவாசித்தார்.
5. மனிதன் இயற்கையாகவே மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளான் என்று பினி விசுவாசித்தார்.
6. ஒருவர் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க பரிசுத்த ஆவியின் எந்தவித உந்துதலோ, செல்வாக்கோ அவசியம் இல்லை என்பது பினியின் போதனை.
7. கார்டினர் ஸ்பிரிங் என்ற கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்கப் பிரசங்கி பினியின் விசுவாச ஜெபத்தை வேதத்திற்குப் புறம்பானதெனக் கூறியுள்ளார். கடவுள் தனது வார்த்தைக்குக் கட்டுப்பட்டவராக இருப்பதால் நாம் விசுவாசித்துக் கேட்பதை அவர் கொடுத்தேயாக வேண்டும் என்று பினி கருதினார். இத்தகைய குருட்டு விசுவாசம் கடவுளின் நோக்கங்களையும் செயல் திட்டங்களையும் நினைவில் கொள்ள மறுக்கிறது. (இத்தகைய விசுவாச ஜெபத்தையே யொங்கி சோவும் இன்று போதிக்கிறார் என்பதை மறுக்க முடியாது).
8. புதிய விசுவாசிகளை உடனடியாக அவர்கள் தீர்மானம் எடுத்த உடனேயே அறிந்து கொள்ள முடியும் என்று பினி போதித்தார். இது வேதத்திற்கு முரணான போதனை. வெறும் உணர்ச்சி வசப்பட்டு கூட்டங்களில் தீர்மானம் எடுத்தவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று பினி கருதினார்.
பினியின் தவறான, தீங்குவிளைவிக்கும் இறையியற் கோட்பாடுகளே அவரது வேத ஆதாரமற்ற செயல்களுக்குக் காரணம்.