இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசிகளைக் குறிப்பதற்காக கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தையைத் தவிர வேறு பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை குறித்து நமக்கு கவலை ஏற்பட்டாலும், அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை சபை வரலாற்றில் தோன்றிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளன. இன்றைய சூழலில் இது மிகவும் உண்மையானதாகும். ஏனெனில், இன்று கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் பலர், கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்காமலும், அவரது மந்தையைச் சேர்ந்தவர்களாகத் தம்மை நிருபித்துக்காட்ட முடியாமலும் இருப்பது (யோவான் 10) கிறிஸ்தவர்களைக் குறிக்க வேறு பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.
இருண்டகாலமென அழைக்கப்படும் இடைக்காலப்பகுதியில், ஐரோப்பாவில், திருமுழுக்குப் பெற்று உலகப்பிரகாரமான சபையோடு தம்மை இணைத்துக் கொண்டவர்களையெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கும்முறை தோன்றியபோதே கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தைக்கு முதன் முதலாகக் களங்கம் ஏற்பட்டது. உண்மையான விசுவாசத்தையே அறியாத இந்தக்கூட்டம் வாழ்ந்த 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் உண்மையான கிறிஸ்தவ விசுவாசிகள் லோலார்ட்ஸ் (விக்ளிப்பின் சீடர்கள்) என்றும், ஹஸ்சைட்ஸ் (ஹஸ்ஸின் சீடர்கள்) என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டனர். சீர்திருத்தவாதம் தோன்றிய பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் சிலுவைப் பரிகாரப்பலியின் மூலம் மட்டுமே நீதிமானாக்கப்படலாம் என்ற, மார்டின் லூதரின் சுவிசேஷத்தைப் பின்பற்றியவர்கள், லூதரன் என்று அழைக்கப்பட்டனர். (இன்றைய லூதரன் சபையைச் சேர்ந்த பெரும்பாலானோர் இவற்றை நம்புவதில்லை). சீர்திருத்தவாதம் வளர்ந்து, தழைத்து, திருச்சபை வேத அறிவில் துளிர்விட்டு வளரத்தொடங்கியபோது மூன்று விதமான உண்மைகள் வலியுறுத்திப் போதிக்கப்பட்டன.
1. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களும், பரிசுத்த ஆவியின் திட்ப உறுதியான செயலின் மூலம் ஏற்படும் மறுபிறப்பும், தெய்வீகக் கிருபையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்போதனை, இரட்சிக்கப்பட்டவர்களுக்கும், இரட்சிக்கப்படாதவர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளிக்கான அடிப்படைக் காரணம் மனித சித்தமே என்ற போதனையை முற்றாக நிராகரிக்கின்றது.
2. திருச்சபையை வேதம் மட்டுமே ஆள வேண்டும். திருச்சபையின் அனைத்துக் காரியங்களும் வேத போதனைகளின்படியே நடக்க வேண்டும். வேதம் அனுமதிக்காத காரியங்கள் திருச்சபையில் ஒருபோதும் நுழையக்கூடாது. “வேதம் மட்டுமே” என்ற இந்த சீர்திருத்தவாதப் போதனை நம்மை மனித சடங்குகள், பாரம்பரியங்கள் ஆகியவற்றின் தளைகளிலிருந்து விடுவிக்கின்றது.
3. படைப்பு, மீட்பு மற்றும் எல்லாக் காரியங்களினதும் இறுதி நோக்கம் தேவனை மகிமைப்படுத்துவதே. “தேவனுக்கு மட்டுமே மகிமை” என்பதே மூன்றாவது சீர்திருத்தவாதப் போதனை.
பியூரிட்டன்களின் காலத்தில் இம்மூன்று விதிகளையும் ஏற்றுக்கொண்ட சபைகளே சீர்திருத்தவாத சபைகள் என்று அழைக்கப்பட்ட சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஒல்லாந்து, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் காணப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் இந்நாடுகளில் தோன்றிய விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் இவ்விதிகளையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்ததோடு, இச்சபைகளையும் ஒன்றுபடுத்தி “சீர்திருத்த விசுவாசம்” என்ற பெயர் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தன. நியூ இங்கிலாந்தில் (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நிறுவப்பட்ட முதல் சபையில் இருந்து இந்தியா, ஆபிரிக்கா, சீனா மற்றும் தென்சீனக்கடல் பகுதிகளுக்குச் சென்ற முதல் புரட்டஸ்தாந்து மிஷனரிகள்வரை அனைவரும் இவ்விசுவாசத்தையே கொண்டிருந்தனர். சீர்திருத்தவாத காலத்திற்குப்பின்பு ஏற்பட்ட எழுப்புதல் காலப்பகுதிகளில் தோன்றிய சபைகளும் இவ்விசுவாசத்தையே கொண்டிருந்தன. இக்காலப் பகுதிகளின் முன்னோடிகளான ஜோர்ஜ் விட்பீல்ட், ஸ்பர்ஜன் ஆகியோரும் இதனையே விசுவாசித்தனர். வேதத்தின் அதிகாரத்திற்கு முழுமையாகக் கட்டுப்படுவதுடன், நாம் எல்லாவற்றிற்குமாகத் தங்கியிருக்கும் கிறிஸ்துவுக்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கும் விசுவாசமாகவே சீர்திருத்தவாத விசுவாசம் வரலாற்றில் பெயர் பெற்றுள்ளது. கிறிஸ்தவத்திற்காகப் போராடிய இருபதாம் நூற்றாண்டுகளின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவரான கிரேக்க மேகன் தனது நண்பர் ஒருவரைப்பார்த்து, “சாம், சீர்திருத்தவாதம் எத்தனைப்பெரியது!” என்று கூறியபோது இவ்வுண்மையையே சுட்டிக் காட்டினார்.