ஜோன் ஓவன்
“பியூரிட்டன்களின் இளவரசர்”
ஜோன் ஓவன் “பியூரிட்டன்களின் இளவரசர்” என்று வரலாறு அழைக்கிறது. அதற்குக் காரணம் ஓவனின் ஆற்றலும், வேத ஞானமும், பரிசுத்த வாழ்க்கையும்தான். பன்னிரெண்டு வயதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது இளமைக்காலக் கல்வியை ஆரம்பித்து, பின்பு அங்கேயே உதவித் தலைவராகவும், பல்கலைக்கழகத்தின் நடத்துனராகவும் பதவியேற்று, குரோம்வெல்லுக்கும் (Cromwell) ஆலோசகராகப் பணிபுரியுமளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்து சபை வரலாற்றில் முக்கிய இடத்தை ஓவன் பெற்றுக் கொண்டார். பியூரிட்டன்களில் தலைசிறந்த இறையியல் அறிஞராகவிருந்த ஓவன் சவோய் விசுவாச அறிக்கையைத் தயாரிப்பதற்கு துணைநின்றவர்களில் ஒருவர். ஓவன் திறமைவாய்ந்த போதகராகவும் இருந்தார். அவரது நூல்கள் இன்றும் அநேக ஆத்துமாக்களுக்கும், சபைகளுக்கும் பேருதவியாக உள்ளன. ஓவனின் எழுத்துக்கள் பதினேழு வால்யூம்களாக இன்றும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. போதகர்கள் போதக சமர்த்தர்களாகவும், இறையியல் அறிஞர்களாகவும், பரிசுத்தத்தில் தேர்ந்தவர்களாகவும் இருக்க, இருபது இறையியல் கல்லூரிகள்கூட ஓவனின் நூல்கள் செய்யக்கூடிய உதவியைச் செய்ய முடியாது. கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு, கிறிஸ்துவின் மகிமை, சுவிசேஷ சபையின் மெய்த்தன்மை, இறைவனோடு ஐக்கியம் போன்ற நூல்கள் ஓவனின் இறையியல் ஞானத்தையும், இறை பக்தியையும் வெளிப்படுத்துவதில் சிறந்தவை. ஓவனின் நூல்களில் ஒரு சிலவே இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு இவற்றில் ஒன்று. ஓவன் திருச்சபைக்கு விட்டுச் சென்றுள்ள சொத்து அவரது அழியா எழுத்துக்களே.