ஜோன் பனியன்

பாப்திஸ்து பெரியோர்களில் ஒருவரான பனியனைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருப்பது அரிது. இளைய தலைமுறையும் அவரைப்பற்றி அறிந்து கொள்ள இக்கட்டுரைச் சுருக்கம் உதவும்.

ஜோன் பனியன்

இவ்விதழின் அட்டையை அலங்கரிப்பவர் ஜோன் பனியன். வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் நாயகர்களில் பலரை அநேகருக்கு தெரியாமலிருந்தாலும் பனியனைப் பற்றி அறிந்திருக்கவே செய்கிறார்கள். இதற்கான காரணத்தையும் சுலபமாகக் கூறிவிடலாம். அதற்கு பனியனின் மோட்ச பயணம் நூலே முதன்மையானதாகக் கருதலாம்.

ரிச்சர்ட் பெக்ஸ்டர் கிடர்மின்ஸ்டரில் போதகராகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்த நாட்களில் கர்த்தர் பனியனின் உள்ளத்தைத்தொட்டு மனந்திரும்பும் அனுபவத்தை அவருக்கு அளித்தார். அவ்வனுபவம் அவரை தேவனிடத்தில் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கித்து பலரது உள்ளத்தையும் தொடும் ஊழியத்திற்கும் அழைத்து வந்தது. பனியனின் உள்ளத்தை உலுக்கும் பிரசங்கத்தைப் பற்றிப் பேசும்போது, பியூரிட்டன்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் ஜோன் ஓவன், அதைப் பெறுவதற்காக எனது எல்லா அறிவையும் நான் விருப்பத்தோடு இழக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார்.

பனியன் 1628 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் பெட்போர்டிற்கு அருகில் இருந்த எல்ஸ்டவ் என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் சொந்தமாக வீடு வைத்திருந்ததோடு, பனியனைப் பாடசாலைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கே எழுதப்படிக்கக் கற்றுக் கொண்ட பனியன் தனது இளமைக்காலம் முழுவதையும் வீணான பாவ வழிகளிலேயே செலவிட்டார். தான் எழுதிய Grace Abounding to the chief of Sinners என்ற நூலில் இதைக்குறித்து பனியன் விபரமாக எழுதியுள்ளார். கர்த்தர், பனியன் தனது பாவங்களின் கோரத்தைப் பார்க்கும் அனுபவத்திற்குள்ளாக அவரைக் கொண்டு சென்றார். நரகத்தின் அவலத்தை அனுபவபூர்வமாகத் தன் வாழ்வில் கண்டு கொண்ட பனியன் அதன் கோரத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் அதிக பலத்தைப் பெற்றார்.

இவ்வனுபவத்திற்குப் பிறகு உள்நாட்டுப்போரில் போர்ச்சேவகனாக கலந்து கொண்டார் பனியன். அதில் அற்புதமாக உயிர் தப்பி பின்பு தன் தந்தையோடு ஒட்டு வேளை செய்பவராக ஊர் ஊராகப் போய்வந்தார். அதன் பின் வெகு சீக்கிரத்திலேயே அவருக்கு மணமாயிற்று. அவரது முதலாவது மனைவியோடு வாழ்ந்த காலத்தில் பனியன் ஆலயத்திற்கு செல்ல ஆரம்பித்தார். தன் மனைவி வைத்திருந்த இரு ஆவிக்குரிய நூல்களை அவரோடு சேர்ந்து வாசித்து அதுபற்றி விவாதித்திருக்கிறார். இருந்தபோதும் அதில் அவ்வளவாக அப்போது அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், இவையெல்லாம் விரைவிலேயே மாற ஆரம்பித்தன.

1650 ஆம் ஆண்டில் ஆலயத்தில் பனியன் கேட்ட தேவ செய்தி அவரது பாவத்தை அவருக்கு உணர்த்தியது. இக்காலங்களில் வேறு பலரோடு சேர்ந்து களியாட்டங்களில் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்த பனியனின் மனதைக் கேட்ட செய்தி உறுத்தியது. அதை மனதிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு கிராமப்புறத்திற்கு விளையாடச் சென்றார் பனியன். அப்போது தேவ செய்தி, சடுதியாக அவரது காதைத்துளைத்தது. “உன்னுடைய பாவங்களைத் துறந்துவிட்டு நீ பரலோகத்திற்குப் போகப் போகிறாயா அல்லது உன் பாவங்களோடு நரகத்தில் மாளப்போகிறாயா?” என்ற கேள்வி அவரை உலுக்கியது. ஆனால், எனக்குப் பாவ மன்னிப்பு கிடைக்காது என்று கூறி அக்கேள்வியை உதறித்தள்ளிவிட்டு மேலும் பாவ வாழ்க்கைக்குத் தன்னை பனியன் அர்ப்பணித்தார். கர்த்தரிடம் அவர் வந்த அனுபவத்தை சுருக்கமாகக் கூறுவதானால் பனியன் தன் வாழ்வில் சில வருடங்கள் பாவத்தின் கோரத்தை உணர்ந்து அதனால் துன்பப்பட நேரிட்டது. இறுதியில் வேதத்தை வாசித்து, ஆராய்ந்து அதில் மனஆறுதலையும் அடைந்த பனியன், கில்போர்ட் என்ற ஒரு போதகரின் பிரசங்கத்தின் மூலம் இறுதியாக இரட்சிப்பின் நிச்சயத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். அதற்குப் பின்பும் வாழ்க்கையில் இருளான அனுபவங்களை அடைந்த பனியன் அதிலிருந்தெல்லாம் விடுபட்டு திருச்சபையிலும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.

பனியனின் அனுபவங்களைப் பார்க்கும்போது, அவர் அடைந்த அனுபவங்களை எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ணிவிடக்கூடாது. இவ்விதத்தில் வாழ்க்கையில் தங்களுடைய பாவங்களை உணர்ந்து அதற்காக சிலர் சில காலம் வருந்தி, துன்பப்பட்டுப் பின்பு தேவனை அடைந்த வரலாறு உண்டு. ஆனால் எல்லோருமே ஒரேவிதமாகத் தேவனிடத்தில் வருவதுமில்லை; ஒரேவிதமாக இவ்வனுபங்களைப் பெற்றுக்கொள்வதுமில்லை. பாவத்தைப் பற்றிய எந்தவிதமான குற்றஉணர்வுமின்றி, வெறும் தீர்மானத்தை மட்டும் எடுத்துவிட்டு கர்த்தரை அறிந்து கொண்டேன் என்று பாட்டுப் பாடும் கூட்டம் மிகுந்த இந்நாட்களில் பனியனின் அனுபவங்கள் நம் எல்லோருக்குமே ஒரு பாடமாக இருப்பதோடு, அத்தகைய அனுபவத்தை அடைய நேரிட்டவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பதாகவும் உள்ளது.

கர்த்தர் பனியனுக்கு தன்னை அறிந்து கொள்ளும் அனுபவத்தை மட்டும் கொடுக்காமல், போதிக்கும் ஆற்றலையும் தந்து ஊழியத்தில் பயன்படுத்தினார். 1658 ஆம் ஆண்டு ஓலிவர் குரொம்வெல் இவ்வுலகைவிட்டு மறைந்த வருடத்தில், பனியனின் முதலாவது நூல் பற்றி அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்தது. 1660 இல் மறுபடியும் அரசாட்சி இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டபோது பிரசங்கம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. தடையை மீறி பிரசங்கித்த பனியன் சிறையில் தள்ளப்பட்டார். இக்காலத்தில் பனியனின் முதல் மனைவி மறைந்ததால், அவர் இரண்டாம் திருமணம் செய்திருந்தார். பனியனின் சிறைவாசம் குடும்பத்தைப் பாதித்தது. ஆனால், பனியன் போதகராக இருந்த பெட் போர்ட் சபை அவரது குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக் கொண்டது.

பனியன் சிறையில் படிப்பிலும், எழுத்திலும் காலத்தை செலவிட்டார். அநேக நூல்களை அவரால் சிறையில் வாசிக்க முடிந்தது. 1660 க்கும் 1666 க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அநேக துண்டுப்பிரசுரங்களை எழுதி வெளியிட்டதோடு ஒன்பது நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவற்றில் ஒன்றே Grace Abounding என்ற நூலாகும். 1672ல் பனியன் இறுதியில் நீண்ட சிறை வாசத்தில் இருந்து விடுதலை அடைந்து போதக ஊழியத்தில் மறுபடியும் ஈடுபட்டார். 1675ல் அவர் மறுபடியும் ஒரு வருடத்தை சிறையில் செலவிட நேரிட்டது. இக்காலத்திலேயே மோட்ச பயணத்தின் முதலாவது பாகத்தை அவர் எழுதி வெளியிட்டார். 1684ல் அதன் இரண்டாம் பாகத்தை பனியன் வெளியிட்டார். முதலாவது பாகம் பத்து வருடத்தில் பதினொரு பதிப்புகளைச் சந்தித்து பலரின் பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஒல்லாந்து, ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிகளிலும் அது வெளியிடப்பட்டது.

இன்றைய கிறிஸ்தவ இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால் அதில் பனியனின் மோட்ச பயணம் நிச்சயமாக முதலிடத்தைப் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதில் பனியனின் இறையியலை முழுமையாகக் காணலாம். கிறிஸ்தவ வாழ்க்கையை சாதாரணமானதாக எண்ணி அலட்சியத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன? என்பதை பனியனின் மோட்ச பயணத்தை வாசித்து அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அத்தகைய அனுபவங்களையும் கிறிஸ்தியான் மற்றும் பல பாத்திரங்கள் மூலம் அழகாக பனியன் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இவையனைத்தையும் கனவில் நடப்பது போல் காட்டியிருக்கும் பனியன், பியூரிட்டன் போதனைகளனைத்தையும் சிறப்பாக எழுத்தில் வடித்துத் தந்திருக்கிறார்.

வேதத்திற்கு அடுத்தபடியாக மோட்ச பயணம் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் பலவற்றில் இது வெளிவந்திருப்பதோடு தமிழிலும் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகிறது. போதகர்களும், கிறிஸ்தவ பெற்றோர்களும், பிள்ளைகளும், இறைஞர்களும் தவறாது வாசித்துப்பயன் பெற வேண்டிய நூல் மோட்ச பயணம். எனது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வேதத்திற்கு அடுத்தபடியாக நான் முதன் முதலாக வாசித்த கிறிஸ்தவ இலக்கியம் மோட்ச பயணமே. தமிழில் அருமையான நூல்கள் இல்லை என்ற குறையை நிச்சயம் பனியனின் மோட்ச பயணம் தீர்த்துவைத்து ஆறுதல் அளிக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் உரம் பெற இதைத் தவறாது வாசிக்க வேண்டும்.

சிறைவாசத்திற்குப் பின்னர் 1672ல் பனியன் போதக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த சபை ஒரு மாட்டுக் கொட்டகையிலேயே கூடியது. இறக்கும் வரையிலும் இங்கேயே பனியன் பிரசங்கித்தார். தனது சபைக்கு மட்டுமல்லாது பிரட்போர்டிலும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளின் சபைகளுக்கும், பிரசங்கிகளுக்கும் பனியன் அநேக உதவிகளை செய்தார். இதனால் அவரை “பிசப் (Bishop) பனியன்” என்றும் அழைத்தார்கள். சாதாரண மனிதர்கள் முதல், படித்தவர்களும் அவரது பிரசங்கத்தால் ஆசீர்வாதமடைந்தார்கள். தனது இறுதி நாட்களில் பனியன் மேலும் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டதோடு வெளியிடப்படாத அநேக நூல்களையும் விட்டுச் சென்றார். 1688 ஆம் ஆண்டு பனியன் இறையடி சேர்ந்தார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s