திருமறைத்தீபம் குழந்தைப் பருவத்தைக் கடந்து நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறாள். எப்படி வளர்வாளோ, இவளை வளர்த்தெடுக்க நம்மால் முடியுமோ என்றெல்லாம் ஐயம் கொண்டிருந்த எம்மை வியப்பில் ஆழ்த்தி நன்றாக வளர்ந்து வருகிறாள் தீபம்.
அவளுக்கு வண்ணச்சட்டை போட்டால் என்ன என்று கேட்டு பல வாசகர்கள் எழுதியிருந்தார்கள். அவர்களது உள்ளம் குளிர இவ்வருட முதல் பத்திரிகையின் அட்டையை வண்ணத்தில் வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
ஆசிரியரின் வெளிநாட்டுப் பிரயாணங்களின் காரணமாக பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கும் சில ஆக்கங்களை இவ்விதழில் வெளியிட முடியவில்லை. வரப்போகும் இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவரும்.
சத்தியத்தில் ஆர்வம் கொண்டு, வேதமே கர்த்தரின் இறுதிவாக்கு என்று நம்பி வளர்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ அன்பர்களுக்காக வெளிவரும் இப்பத்திரிகையின் இலட்சியத்தைப் பற்றி அடிக்கடி இப்பகுதியில் விளக்கியுள்ளோம். கிருபையின் போதனைகளைப் பலரும் அறியத்தந்து, சீர்திருத்தவாதிகளின் பாதையில் திருச்சபைகள் தோன்றவும் வளரவும் எம்மால் முடிந்ததைக் கர்த்தரின் வழிநடத்துதலின்படி செய்ய ஆர்வமுடன் உழைத்து வருகிறோம். இப்பெரும் இலட்சியத்தை அடைய நமக்குப் பேருதவி புரியும் ஒரே ஆயுதம் வேதம் மட்டுமே என்பது எமது உறுதியான நம்பிக்கை. அந்நம்பிக்கை நம்மெல்லோர் மத்தியிலும் வேரூன்றி வளர ஜெபிக்க வேண்டியது நமது கடமையாகின்றது. வேதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு கர்த்தரின் பெயரில் காரியமாற்ற முயலும் கடல் போன்ற கூட்டத்தின் பேரலைகளுக்கு மத்தியில் அயராது துடுப்புப் போட வேண்டியது நமது கடமை. கரையை அடையும்வரை, ஓயாத பெரும் அலைகளின் இரைச்சலும், உடைப்பேன் உன்னை என்று உரமோடு தாக்கும் அலைகளும் ஒருநாளும் ஓயப்போவதில்லை. அதுவரை நெஞ்சுரத்தோடும், நேர்மையோடும் கர்த்தரின் பணியில் தொடர்ந்து ஈடுபடுவதை நமது இலட்சியமாகக் கொள்வோம்.