வரலாற்றுபூர்வமான கிறிஸ்தவம் போதிக்கும் மறுபிறப்பிற்கு முரணாகப் போர்க்கொடி தூக்கியுள்ள “தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு” என்ற போதனை பற்றிய விளக்கக்கட்டுரை இது.
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு – ஜேம்ஸ் அடம்ஸ்
அறிமுகம்
மறுபிறப்பு என்றால் என்ன?
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காண மாட்டான் (யோவான் 3:3). இயேசு கிறிஸ்து, மறுபிறப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பொருட்டு ஒருவருமே மறுபிறப்படையாமல் பரலோகத்தை அடைய முடியாது என்று கூறுகிறார். இப்போதனையை சரிவரப்புரிந்து கொள்ளாததால் ஏற்படும் தவறுகளால் கிறிஸ்தவ சபைக்கு பெரும் ஆபத்துக்கள் நேரிட்டுள்ளன. கர்த்தருடைய செயலினால் மட்டுமே ஒருவர் மறுபிறப்படைய முடியும். இது மனிதனால் ஆகக்கூடியதல்ல. மறுபிறப்பென்பது கர்த்தர் நம்மில் ஏற்படுத்தும் ஒரு மாற்றமேயல்லாது நமக்குள் நாமே செய்து கொள்ளும் ஒரு காரியமல்ல. அப்போஸ்தலனான யோவான் தனது நற்செய்தி நூலின் முதலாவது அதிகாரத்தில் இதனை மிக அழகாகப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார்.
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்றால் என்ன?
சபை வரலாறு மறுபிறப்புப் போதனை பற்றிய பல தவறான போதனைகளைச் சந்தித்துள்ளது. இப்போதனைகள் மனிதன் தனது சுய முயற்சியால் மறுபிறப்படைய முடியும் என்று போதிப்பதன் மூலம் வேதத்தின் போதனையைவிட்டு விலகி நிற்கின்றன. இத்தகைய போலித்தனமான போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் சபைகள் பல தவறான வழிகளை நாடித் தறி கெட்டுப் போயுள்ளன. திருமுழுக்கின் மூலம் மறுபிறப்பு என்ற போதனையை வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு விதங்களில் பின்பற்றி ரோமன் கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்கன் சபை, லூதரன் சபை மற்றும் வேறு பல சபைகளும் வீண்போயுள்ளன. இத்தகைய வேதத்திற்கு முரணான போதனைகளைப் பின்பற்றி இச்சபைகள் நடைமுறையில் பல தவறான வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கின.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருமுழுக்கின் மூலம் மறுபிறப்பு என்ற போதனையைப்போல பெரும் சர்ச்சையை எழுப்பிய வேறு போதனைகளில்லை. இந்நூற்றாண்டின் பெரும் பிரசங்கியாகவிருந்த சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (1834-1892), 1864ம் ஆண்டில் வெளியிட்ட பிரசங்கங்களில் இத்திருமுழுக்கின் மூலம் மறுபிறப்பு என்ற போதனையைச் சாடி வெளியிட்ட பிரசங்கங்களே அநேகம். இப்போதனை திருமுழுக்கைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் மறுபிறப்பை அடையலாம் என்று போதிக்கின்றது. இத்திருநியமம் மனிதனால் நிறைவேற்றப்படுவதால் மனிதனே ஒருவரில் மறுபிறப்பை ஏற்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறான் என்பது இப்போதனையின் பொருள்.
ஆனால், இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபை, தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற போதனையின் மூலம் இதைவிட ஆபத்தான ஒரு மறைமுகமான போலிப்போதனையை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற போதனை, மறுபிறப்பு தீர்மானம் எடுப்பவரின் செய்கையில் தங்கியுள்ளதாகப் போதிக்கின்றது; திருமுழுக்கின் மூலம் மறுபிறப்பு என்ற போதனை அது திருமுழுக்கு அளிப்பதில் தங்கியுள்ளதாகப் போதிக்கின்றது. ஆகவே, மறுபிறப்பு என்பது இந்த இருவேறு மனிதனின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என்பது இவற்றின் போதனை. மனிதன் சுயமாக நிறைவேற்றக் கூடிய ஒருசில நடவடிக்கைகளின் மூலம் மறுபிறப்பை ஒருவர் அடைய முடியும் என்பது தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற போதனையின் பொருள். இன்றைய சுவிசேஷ உலகைப் பிடித்தாட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெரு வியாதியாக இப்போதனை காணப்படுகின்றது.
நமது நோக்கம்.
எந்தவித கேடான எண்ணமும் இல்லாமல், தேவனை மகிமைப்படுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் அனைவரும் வேதபூர்வமான ஒரே கோட்பாட்டையும், நடைமுறை வழக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற போதனையைக் கடைப்பிடிப்பவர்களுடைய இறையியற் கோட்பாடுகளையும், பயற்சியையும் ஆராய்வதே எமது நோக்கம். கிறிஸ்தவர்களாகிய அனைவரையும் நாம் நேசிக்கும் அதே வேளை, சார்ள்ஸ் ஸ்பர்ஜனின் வரும் கூற்றையும் நாம் இதயபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்:
ஐக்கியத்தை வளர்க்கும் மேலான வழி சத்தியத்தை வளர்ப்பதே. நம்மொவ்வொருவரிடமும் காணப்படும் தவறுகளுக்கு நம்மை ஒப்புக் கொடுப்பதன் மூலம் நம்மத்தியில் வளரும் ஐக்கியத்தால் எந்தப்பயனுமில்லை. கிறிஸ்துவுக்குள் நாம் ஒருவரையொருவர் நேசித்தல் அவசியம்; அதேவேளை ஒவ்வொருவரிடத்திலும் காணப்படும் தவறுகளைப் பார்க்க முடியாதளவுக்கு நாம் ஐக்கியத்தில் இருத்தல் ஆகாது. தேவனுடைய வீட்டை சுத்தமாக்கினால் மட்டுமே ஆசீர்வாதங்களின் காலங்கள் உதயமாகும்.2
ஆகவே, ஏனைய கிறிஸ்தவர்களுடைய நேர்மையைச் சந்தேகிப்பதோ அல்லது அவர்களை நிந்திப்பதோ நமது நோக்கமல்ல. கிறிஸ்துவுக்குள் இருப்பதுபோல், எல்லாக் கிறிஸ்தவர்களையும் சத்தியத்தின் அடிப்படையில் ஐக்கியத்தில் கொண்டு வருவதே நமது நோக்கமாகும்.
கிறிஸ்துவின் சபையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டிருப்பதால் போலித்தனமான வழிகளில் இருந்து விலகி கர்த்தரின் சத்தியத்தை நாம் நாடுவோம். “தீர்மானம் எடுத்துவிட்டோம் அல்லது அடையாள அட்டையில் கையெழுத்திட்டுவிட்டோம், ஆகவே, தேவ கோபம் இப்போது நம்மேலில்லை, நாம் நிச்சயமாக பரலோகத்தை அடையப்போகிறோம்” என்ற மாயத்திலிருப்பவர்களை விடுவிக்க இத்தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற வழி முறையை சபைகள் அறிய அதன் உண்மைத் தோற்றத்தை நாம் வெளிப்படுத்தல் அவசியம். நற்செய்தியே இரட்சிப்பை அளிக்கும் தேவ வல்லமையைக் கொண்டிருப்பதோடு, கிறிஸ்தவ ஐக்கியத்திற்கும் மெய்யான அத்திவாரமாக இருப்பதால் அதன் பரிசுத்தத்தில் நாம் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டியதவசியம்.
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பும் ஆவிக்குரிய ஆலோசனையும்
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற இப்போதனை எதைப் பற்றியது என்று இன்னும்கூட சிலர் சரியாக விளங்கிக் கொள்ளாதிருக்கலாம். நம் நாட்டிலும், மேலை நாடுகளிலும் பல கிறிஸ்தவ ஸ்தாபனங்களால் நடத்தப்பட்டு வரும் ஆவிக்குரிய ஆலோசனை வழங்குவது எப்படி? என்று போதிக்கும் வகுப்புகளைப் பற்றியும், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் கிறிஸ்தவ கூட்டங்கள் பற்றியும் இவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இத்தகைய கூட்டங்களில், ஒவ்வொரு வெற்றிகரமான ஆவிக்குரிய ஆலோசனையும் அதன் இறுதியில், ஆலோசனை பெறுபவருக்கு இரட்சிப்பில் உறுதியான நிச்சயத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்றும் போதிக்கப்படுகின்றது. ஆலோசனை பெறும் ஆத்துமாக்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒத்துப் போகும் சரியான பதில்களைத் தந்திருப்பதாலும், “பாவியின் ஜெபத்தை” ஜெபித்திருப்பதாலும் அவர்கள் நிச்சயமாக இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள் என்று நம்ப வைக்க வேண்டும் என்று இக்கூட்டங்களில் ஆலோசனையாளர்களுக்கு அடிக்கடி போதிக்கப்படுகின்றது.
இத் தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு பற்றியும், கூட்டங்களில் ஆத்துமாக்களுக்கு அளிக்கப்படும் ஆலோசனை பற்றியுமான ஒரு உதாரணத்தை பிரபலமான ஒரு தற்கால பிரசங்கி விளக்குவதைப் பார்ப்போம்: ஆண்டவரை அறியாத “ஆத்துமாவை” நோக்கி சில கேள்விகளைக் கேட்குமாறு இவர், “திருவாளர் ஆத்துமாவை ஆதாயப்படுத்துபவரைத்” தூண்டுகிறார். “திருவாளர் ஆத்துமா” இக்கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில்களைக் கொடுத்தால் அவரைப் பாவியின் ஜெபத்தை ஜெபிக்கும்படி செய்து முடிவில் அவர் இரட்சிப்பை அடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.3 இத்தகைய ஆலோசனைகளின் பெரும் பகுதி ஆத்துமாக்கள் “தீர்மானம்” எடுப்பதன் மூலம் மறுபிறப்பு அடைகிறார்கள் என்று அறிவிப்பதிலேயே முடிவடைகின்றது. உலகின் பல பாகங்களிலும் நடத்தப்பட்டு வரும் பெரும் சுவிசேஷக் கூட்டங்களில் இத்தகைய ஆலோசனைகளே வழங்கப்படுகின்றன. இப்பெரும் சுவிசேஷக் கூட்டங்கள் பெரிய தொழிற்சாலைகளைப்போல ஒரு வாரத்தில் பத்தாயிரக்கணக்கானவர்களைத் “தீர்மானம்” எடுக்கும்படிச் செய்துவிடுகின்றன.
“பெனர் ஒப் டுருத்” தின் முன்னைய ஆசிரியரும், நூலாசிரியருமான இயன் மரே தனது “நினைவிலில்லாத ஸ்பர்ஜன்” என்ற நூலில்:
இத்தகைய ஆலோசனையே வாலிபர்கள் மத்தியில் நிகழும் ஊழியங்களிலும் கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்; உதாரணமாக, மாணவர்கள் மத்தியில் இக்காலத்தில் அதிகமாக விநியோகிக்கப்படும் ஒரு சிறுநூல், ஒருவர் கிறிஸ்தவராகுவதற்கான இலகுவான மூன்று படிமுறைகளைப் பற்றி விளக்குகிறது: முதலாவது ஒருவர் தனது பாவத்தை அறிக்கையிட வேண்டும். இரண்டாவது, கிறிஸ்துவின் பரிகாரப்பலியை தனிப்பட்ட முறையில் விசுவாசிக்க வேண்டும். இவ்விரண்டையும் ஆரம்பப்படிகளாக அறிவிக்கும் இந்நூல், மூன்றாவது நிலையை ஏற்றுக்கொள்பவர் நிலையாவது, “நான் கிறிஸ்துவிடம் வந்து அவர் எல்லோருக்குமாக செய்ததில் என்னுடைய பங்கைத் தருமாறு கேட்க வேண்டும். இத்தீர்மானமான இறுதி நிலை என்னிலேயே தங்கியுள்ளது; நான் கதவைத் திறக்கும்வரை கிறிஸ்து பொறுமையாகக் காத்திருக்கிறார். அதன் பின் அவர் உள்ளே வருகிறார் . . . இக்கடைசிப்படியைக் கடந்ததும் நான் கிறிஸ்தவன் என்று நம்ப வேண்டும். இந்த ஆலோசனை பின்வருமாறு முடிவடைகிறது: நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை இன்றே யாருக்காவது தெரிவியுங்கள்.”4
இவ்விதமான ஆலோசனைகளில் பலவிதங்கள் காணப்படுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் ஒரு பொதுவான தன்மையைத் தவறாது காணலாம். அதாவது, குறிக்கப்பட்ட ஒரு ஜெபத்தை செய்வதன் மூலமோ அல்லது ஒரு அட்டையில் கையெழுத்திடுவதன் மூலமோ ஒரு தனிநபர் இரட்சிப்பை அடையலாம் என்பதுதான். ஆகவே, மறுபிறப்பென்பது மனிதனால் செய்யக்கூடிய சில நடவடிக்கைகளில் தங்கியுள்ளது என்றளவுக்கு சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பாவிகளை அணுகியபோது இவ்விதமாக எதையுமே செய்யவில்லை. இரட்சிப்பை உடனடியாக அளிக்கும் எந்தவிதமான படிமுறைகளையும் அவர் கொண்டிருக்கவில்லை. பாவிகளிடத்தில் அவர் எப்போதும் மனிதனையும் தனிப்பட்டவிதத்தில் இயேசு அணுகினார். இரண்டு மனிதர்களை ஒரேவிதமாக இயேசு அணுகியதாக புதிய ஏற்பாட்டில் நாம் எங்கும் வாசிப்பதில்லை. யோவான் 3 ஆம் அதிகாரத்தில் நிக்கொதேமுவையும், யோவான் 4 ஆம் அதிகாரத்தில் சமாரியப் பெண்ணையும் அவர் எவ்வாறு வித்தியாசமான முறைகளில் அணுகினார் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இது தெளிவாகப் புலப்படும். ஆலோசனைகள் எப்போதுமே தனிப்பட்டவிதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
ஒரேவிதமான, இயந்திரரீதியான, உயிரற்ற அணுகுமுறையைக் கொண்ட ஆலோசனையில் மேலும் பல பிரச்சனைகள் உள்ளன. இதை இயன் மரே பின்வருமாறு விளக்குகிறார்:
ஒரு மனிதன், தனது வல்லமையில் தான் வைத்திருக்கும் நம்பிக்கை தகர்க்கப்படாமலேயே தன்னை விசுவாசியாக அறிவித்துக் கொள்ளலாம். அவனது வல்லமையில் தங்கியிராத, அவனடைய வேண்டிய மாற்றத்தைப் பற்றி எதுவுமே அவனுக்குக் கூறப்படாததால், அத்தகைய மாற்றத்தை அவன் அடையாதபோது அதற்காக அவன் பயப்படுபவதில்லை. அத்தகைய மாற்றம் அத்தியாவசியம் என்பதை அவன் ஒருபோதுமே கேள்விப்பட்டிராததால் தான் உண்மையில் கிறிஸ்தவனா? இல்லையா? என்று அவன் சந்தேகிக்க வேண்டிய எந்தவிதக் காரணமுமில்லை. உண்மையில் அவன் இதுவரை அடைந்துள்ள போதனைகள் அத்தகைய சந்தேகங்கள் அவனுடைய உள்ளத்தில் ஏற்படக்கூடாதென்றே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. கிறிஸ்துவிற்காக தீர்மானம் எடுத்தும், தனது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்களைக் கொண்டிராத மனிதன் “மாம்சப்பிரகாரமான” கிறிஸ்தவன் என்று அடிக்கடி கூறிவருகிறார்கள். இத்தகைய “கிறிஸ்தவன்” பரிசுத்த வாழ்க்கையைக் குறித்த போதனையைப் பெற வேண்டும் என்றும், அவன் கிறிஸ்தவத்தில் தொடர்ந்து தனது ஆர்வத்தை இழந்து வருவானேயானால் அவன் சரியாக வழிநடத்தப்படாததும், அவனுக்காக பிறர் ஜெபிக்காததும். செய்ய வேண்டிய முறையான காரியங்களை சகை சரியாக செய்யாததுமே காரணங்களாக கூறப்படுகின்றன. அம்மனிதனுடைய வாழ்க்கையில் காணப்படும் இத்தகைய உலகப்பிரகாரமான இச்சைகளுக்கும், விசுவாசத்தைக் கைவிடுவதற்கான அடையாளங்களுக்கும், அவனுடைய வாழ்க்கையில் இரட்சிப்பின் அனுபவங்கள் ஆரம்பத்திலிருந்தே காணப்படாததே காரணம் என்று இவர்கள் எப்போதுமே எண்ணத்துணிவதில்லை. இவற்றைப்பற்றி இவர்கள் எண்ணத் துணிவார்களேயானால் நடைமுறையால் கொடுக்கப்படும் எல்லாவிதமான “அழைப்புகளும்”, தீர்மானம் எடுக்கும் மனித முயற்சிகளும், ஆலோசனைகளும் தவிடுபொடியாகிவிடும். ஏனெனில், மனிதனுடைய இயற்கைத் தன்மையை மாற்றக்கூடிய வல்லமை அவனுக்கில்லை என்ற உண்மை இதன்மூலம் தெளிவு பெற்று மேலோங்குவதோடு, இரட்சிப்பின் அனுபவத்தை ஒருவன் சரியாக அடைந்திருக்கின்றானா? என்பதை ஒருசில மணித்துளிகளோ அல்லது நாட்களோ தீர்மானித்துவிட முடியாது அதற்கு இதைவிட மேலும் சில காலங்கள் தேவை என்பதையும் இது தெளிவாக உணர்த்தும்.5
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பின் ஆலோசனைக்கூடங்கள் உருவாக்கும் எண்ணிக்கை விபரங்கள் எந்தக் கிறிஸ்தவனுக்கும் உற்சாகமளிக்கக் கூடியவை. ஆனால், அதனால் உருவாக்கப்படும் மனம் மாறியவர்களாகக் கருதப்படுபவர்களை ஆராய்ந்து பார்க்கும்போதே அதன் சுயரூபம் வெளிப்படும். இதயத்தைப் பிளக்கும் ஒரு அனுபவத்தைப் பற்றிக் கூறுவதானால், ஒரு கூட்டத்தில் மனம் மாறியவர்களென அறிவிக்கப்பட்ட நாற்பது பேரை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் ஒருவரே கிறிஸ்தவன் என்று அறிவிக்கக் கூடியவராக இருந்தார். ஒருவர் கிறிஸ்தவராக மாறியிருக்கலாம் ஆனால் மற்ற நாற்பது பேருடைய கதி என்னாவது? அவர்களில் சிலர் உண்மையில் எந்தவித மனமாற்றத்தையும் அடையாமல் தாங்கள் எடுத்த தீர்மானத்தின் மூலம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டிருப்பதாகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். வேறு சிலர், தமது தீர்மானத்தின் மூலம் கிறிஸ்தவம் அளிக்கக்கூடிய அனைத்தையுமே அடைந்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கலாம். இவர்கள், கிறிஸ்தவம் தம்மில் ஏற்படுத்தும் என்று நம்பியிருந்த மனமாற்றத்தை அடையாமலும், அதனைப் பார்க்க முடியாமலும் மனம் கலங்கி, கிறிஸ்தவம் போலியானது என்ற முடிவுக்கு வந்து, கிறிஸ்தவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் அல்லது மகா மோசமான பொய்யர்கள் என்று அவர்களைக் கருதலாம்.
தீர்மானம் எடுக்கும்படித் தூண்டப்பட்டு மனங்கலங்கிப் போனவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பல தெளிவான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரபல பிரசங்கியான ரொபட் டெப்னி. அவர் கூறுவதாவது:
கிறிஸ்தவ பிரசங்கிகளும், கிறிஸ்தவத்தின் நண்பர்களும் தங்களுடைய அனுபவமின்மையைப் பயன்படுத்தி மிகவும் மோசமாகத் தம்மை ஏமாற்றிவிட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள். தங்களுடைய குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தங்களால் புரிந்து கொள்ள முடியாததும், செயல்படுத்த முடியாததுமான காரியங்களைச் செய்யவைத்து, பரிசுத்தமான நிலையை உதறித்தள்ள வைத்துள்ளனர் என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவத்தையும் அதனைப் போதிப்பவர்களையும் இவர்கள் சந்தேகத்துடன் பார்த்து ஆத்திரமடைவதில் எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. ஆரம்பத்தில் இவர்கள் உண்மையிலேயே ஆன்மீகக் காரியங்களில் ஆர்வம் கொண்டிருந்த போதும் இவர்களடைந்துள்ள மோசமான அனுபவங்கள் மறுபிறப்பையும் அனுபவபூர்வமான கிறிஸ்தவத்தையும் ஒரு மாயை என இவர்களை எண்ண வைத்துள்ளது. ஆகவே, மற்றவர்களுடைய அனுபவங்களையும் இவர்கள் ஒரு மாயையாகக் கருதுவது இயற்கையே. இவர்கள் சொல்வதென்னவெனில்: “எமக்கும் இந்தக் கிறிஸ்தவர்களுக்குமுள்ள வேறுபாடு என்னவெனில் நாம் உணர்ந்ததைப்போல அவர்கள் தங்களுடைய மாயையை இன்னும் உணரவில்லை. நாங்கள் அந்நிலையில் இருந்தபோது கொண்டிருந்ததைவிட மேலான ஒரு நம்பிக்கையை அவர்கள் தங்களுடைய நிலையில் கொண்டிருக்கவில்லை. எங்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்பது எமக்குத் தெரியும், அதேபோல் அவர்களுடைய வாழ்க்கையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கருதவில்லை.” இவ்விதமான ஆபத்தான எண்ணங்களை அனுபவிக்கும் நிலையை ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்துள்ளனர். தங்களுடைய வாழ்க்கையில் போலித்தனமானதொரு ஆன்மீக அனுபவத்தை அடைந்துள்ள அவிசுவாசிகளினால் இன்று நாடு முழுவதுமே நிரம்பி வழிகிறது. கிறிஸ்தவம் என்ற பெயரில் இன்று போலித்தனமே எக்காளமெழுப்புவதால் சத்தியம் ஏற்படுத்தும் இரட்சிப்பின் அனுபவத்தை இழந்தவர்கள் இவர்கள் மட்டுமல்ல.6
இன்று திறமையாக வியாபாரத் தொனியில் நடத்தப்படும் பெரும் சுவிசேஷக் கூட்டங்கள் தேன்றுவதற்கு முன்பே, நூறு வருடங்களுக்கு முன்பு ரொபட் டெப்னி இவ்வார்த்தைகளை எழுதினார். நூறு வருடங்களுக்கு முன்பே உலகில் பல நாடுகளில் போலித்தனமான ஆன்மீக அனுபவத்தை அடைந்த அவிசுவாசிகள் நிரம்பி வழிந்துள்ளனர் என்றால் இன்றைய நிலைமை என்ன? ஒவ்வொரு கிறிஸ்தவனும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி இது. மனிதர்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்து, அவர்களைத் தவறான பாதையில் வழி நடத்துவதை ஒரு கிறிஸ்தவன் உண்மையுடன் செய்தாலும்கூட, அவன் மகாவல்லமையுள்ள கர்த்தருக்கு முன் தோன்றும்போது அவரது கடுங்கோபத்தைச் சந்திக்க நேரிடும்.
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பும் அர்ப்பண அழைப்பும் (Altar Call)
சபை வரலாற்றில் ஆயிரக்கணக்கான பக்கங்களை வாசித்தாலும் கடந்த நூற்றாண்டிற்கு முன்பு பழம் பஞ்சாங்கமான அர்ப்பண அழைப்பு இருந்ததை நாம் பார்க்க முடியாது. சார்ள்ஸ் பினியின் (1792-1875) காலத்திற்கு முன்பு இத்தகைய அர்ப்பண அழைப்பு முறை நடைமுறையில் காணப்படவில்லை என்பதை வரலாற்றில் படித்தறியும்போது பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே சார்ள்ஸ் பினி கூட்ட முடிவில் ஆண்களையும், பெண்களையும் கூட்டத்திற்கு முன்னால் வந்து சரீரப்பிரகாரமாக தீர்மானம் எடுக்கும் முறையை ஆரம்பித்து வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியில் இறையியல் பேராசிரியராக இருந்த டாக்டர் அல்பர்ட் பி. டோட் பினியின் இப்புதுவிதமான அழைப்புவிடுக்கும் முறை சபை வரலாறு காணாததொன்று என்று எடுத்துக் காட்டியுள்ளார். பினியின் “எழுப்புதல் பற்றிய விரிவுரைகள்” என்ற நூலுக்கு எழுதிய விமர்சனத்தில் பேராசிரியர் டொட், “சபை வரலாற்றைத் தலைகீழாகப் படித்தாலும் 1820 ஆம் ஆண்டிற்கு முன்பு இத்தகைய அழைப்பு கொடுக்கும் முறை இருந்ததாக ஒருவருமே பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார். இதற்கு மாறாக, நற்செய்தி பிரசங்கிக்கப்பட்ட ஒவ்வொருமுறையும் மனிதர்கள் கிறிஸ்துவிடம் வருமாறு மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வரலாறு காட்டுகின்றதே தவிர கூட்டத்தின் முடிவில் உடனடியாக சரீரபூர்வமாக அவர்கள் தீர்மானம் எடுக்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்பட்டதாகப் போதிக்கவில்லை.
அப்போஸ்தலரான பவுல் தன் வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிராத இத்தகைய அர்ப்பண அழைப்பை சுவிசேஷ சபைகளின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இன்று பலர் கருதுகின்றனர். உண்மையில் இத்தகைய அழைப்பைக் கொடுக்காத சபைகள் சுவிசேஷ ஊழியத்தில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றன. பவுலோ, பேதுருவோ தங்களுடைய பிரசங்கத்தின் இறுதியில், கர்த்தரின் வழியில் நடக்கத் தீர்மானம் எடுத்தேயாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்தவில்லை. சபை வரலாற்றில் மட்டுமல்லாமல் வேத வரலாற்றிலும் காணமுடியாததொன்றாக இந்நவீன அழைப்புமுறை காணப்படுகின்றது.
“நற்செய்திப் பிரசங்கிகள் கடந்த ஆயிரத்தி எண்ணுறு வருடங்களாக இவ்வர்ப்பண அழைப்பு முறையில்லாமல் எவ்வாறு மக்களைக் கிறிஸ்துவிடம் வருமாறு அழைத்தார்கள்?” என்று ஒருவர் கேட்கக்கூடும். ஆரம்பகால சபையினரும், அப்போஸ்தலரும் எதைச் செய்தார்களோ அதேமுறையிலேயே அவர்கள் மக்களைக் கிறிஸ்துவிடம் வருமாறு அழைத்துள்ளனர். அவர்களுடைய பிரசங்கங்கள் அனைத்தும் எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலிருந்தும் கிறிஸ்துவிடம் வருமாறு அழைக்கும் அழைப்புகளால் நிரம்பி வழிந்துள்ளன.
கிறிஸ்தவ சபையினால் கொடுக்கப்பட்ட முதல் பிரசங்கம் அர்ப்பண அழைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பேதுரு பெந்தகொஸ்தே நாளில் இத்தகைய அழைப்பை விடுக்கவில்லை. அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் வாசிக்கும் செயல் எந்தவொரு உணர்ச்சிகளைத் தூண்டும் மனித முயற்சிகளாலோ அல்லது புத்திசாலித்தனமான “அழைப்பாலோ” ஏற்படாமல் பரிசுத்த ஆவியின் செயலால் ஏற்பட்டது. அந்நாளில் மூவாயிரம் பேர் மனந்திரும்பியதை அப்போஸ்தலர்கள் பார்த்தனர்.
மாபெரும் பிரசங்கியான ஸ்பர்ஜன் கிறிஸ்துவிடம் வருமாறு மனிதர்களுக்கு அழைப்புக் கொடுத்தாரே தவிர கூட்டங்களில் முன்னால் வந்து தீர்மானம் எடுக்கும்படி என்றுமே அழைத்ததில்லை. அவர் மக்களைக் கிறிஸ்துவிடம் வருமாறு விடுத்த அழைப்பைக் கேட்போம்:
இந்த இடத்தைவிட்டு நீங்கள் போகுமுன் கடவுளிடம் உருக்கமாக பின்வருமாறு ஜெபியுங்கள்: “கர்த்தாவே! பாவியான என்னிடம் கருணை காட்டும். ஆண்டவரே! நான் இரட்சிக்கப்பட வேண்டும். என்னை இரட்சியும். உமது நாமத்தை நோக்கி நான் கூப்பிடுகிறேன். ஆண்டவரே! நான் குற்றமுள்ளவன், என் மீதுள்ள உமது கோபம் நியாயமானது. ஆண்டவரே! என்னை என்னால் இரட்சித்துக் கொள்ள முடியாது. எனக்குள் ஒரு புதிய இருதயத்தையும், ஆவியையும் ஏற்படுத்திக் கொள்ள இயலாதவனாக இருக்கிறேன். உமது சித்தத்தை நான் கடைப்பிடிக்கும்படியாக நீர் எனக்குள் வந்து என்னை மாற்றும். என்னை மாற்றக்கூடிய வல்லமை உமக்கு மட்டுமே உண்டு. உம்மைவிட்டு விலகியோடினால் நான் எங்கே போவேன்?
ஆனால், நான் முழு இருதயத்தோடும் இப்போது உம்மை அழைக்கிறேன். ஆண்டவரே! நடுக்கத்தோடு, ஆனால் விசுவாசத்தோடு உமது கரத்தில் நான் என்னை ஒப்படைக்கிறேன். உம்முடைய அன்பான குமாரனின் நீதிமானாக்கும் பரிசுத்த இரத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, இந்த இரவிலேயே என்னை இரட்சியும்.” என்று ஜெபியுங்கள். அதன்பின் கிறிஸ்துவை விசுவாசித்து உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள். “இல்லை, நான் ஆலோசனை அறைக்குள் போக விரும்புகிறேன்” என்று கூறுவீர்களானால், அது உங்களுக்கு தேவையில்லை. இந்த அறைகளுக்குள் மனிதர்களுக்கு போலியான நம்பிக்கையே அளிக்கப்படுகிறது. அதற்குள் போன மிகச் சிலரே உண்மையான கிறிஸ்தவர்களாக திரும்பி வந்துள்ளனர். உங்களுடைய தேவனிடத்தில் போங்கள். இப்போதே இருக்குமிடத்திலேயே கிறிஸ்துவிடத்தில் உங்களை ஒப்புக் கொடுங்கள்.
இவ்வாறாகக் கூட்டத்திற்கு முன்பாக அல்லாமல் கிறிஸ்துவிடம் வருமாறு மக்களை அழைத்த ஸ்பர்ஜனின் சுவிசேஷ அழைப்பைப் போன்ற அழைப்புகள் இன்று அவசியம். இவ்வாறே ஜோர்ஜ் விட்பீல்டும் மக்களை கூட்டத்திற்கு முன்னால் அல்லாமல் கிறிஸ்துவிடம் மட்டுமே வருமாறு தனது பிரசங்கங்களின் மூலமாக அழைத்துள்ளார். வேதபூர்வமான முறைகளை மட்டுமே பயன்படுத்தி பிரசங்கத்தின் மூலம் மக்களைக் கிறிஸ்துவிடம் வருமாறு அழைத்து அனேக ஆத்துமாக்களைக் கர்த்தருக்காக ஆதாயப்படுத்திக் கொண்ட ஜொனத்தன் எட்வர்ட்ஸ், மற்றும் சீர்திருத்தவாதிகளும், ஏனையோரும் இம் முறையை மட்டுமே கையாண்டுள்ளனர்.
இன்று சுவிசேஷ கூட்டங்களில் அர்ப்பண அழைப்பே அதி முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதோடு கூட்டத்தின் உச்சகட்ட நிகழ்ச்சியாகவும் உள்ளது. இசைப்பிரவாகத்தின் தாலாட்டோடு பாடப்படும் பலவிதமான பாடல்களின் மத்தியில் மக்களைக் கூட்டத்தின் முன்னால் வரும்படி அழைப்புகளைக் கொடுத்து, அவ்வாறு முன்னால் வரும்படிக் காலடி எடுத்து வைக்கும் செயலிலேயே அவர்களுடைய நித்திய வாழ்விற்கான அனைத்தும் தங்கியிருக்கின்றது என்ற எண்ணத்தையும் அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்கின்றனர். இன்று அனேக சுவிசேஷ கூட்டங்களில் அர்ப்பண அழைப்பைக் கொடுக்கும்போது பாடப்படும், சார்ளட் எலியட்டினால் 1836 இல் எழுதப்பட்ட அருமையான பாடலான கீழ்கண்ட பாடல் பாடப்படுகிறது:
நான் பாவிதான், ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தஞ் சிந்தினீர்;
வா என்று என்னைக் கூப்பிட்டீர்
என் மீட்பரே! வந்தேன்.
இந்த பாடலின் இறுதி வரியான என் மீட்பரே வந்தேன் என்ற வரி மக்களை சுவிசேஷக் கூட்டத்தின் முன்னால் வரும்படி அழைப்பதற்காக இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாடலாசிரியரான சார்ளட் எலியட் அதை எழுதியபோது முக்கியமாக ஊனமுற்றவர்களை மனதில் கொண்டே எழுதினார். இப்பாடல் ஊனமுற்றவர்களுக்காக எழுதப்பட்ட பாடல் புத்தகத்திலேயே முதன் முதலில் இடம் பெற்றது.9 ஆகவே செல்வி சார்ளட் எலியட்டைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவிடம் வருவதென்பது சுவிசேஷக் கூட்டத்தின் முன்னால் தீர்மானம் எடுப்பதற்காக நடந்து வருவதல்ல.
அர்ப்பண அழைப்பு விடுக்கும் அநேகர் தீர்மானம் எடுப்பதற்காக கூட்டத்தின் முன்னால் ஒருவர் நடந்து வருவதையும், அதே மனிதர் கிஸ்துவிடம் வருவதையும் ஒன்றாகக் கருதுவதில்லை. அதேவேளை, சுவிசேஷக் கூட்டத்தில் கொடுக்கப்படும் அர்ப்பண அழைப்பையேற்று கூட்டத்தின் முன்னால் நடந்து வருவதே பாவிகள் கிறிஸ்துவிடம் வருவதற்கான முதல்படி என்ற எண்ணத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்த அவர்கள் தவறுவதில்லை. இதை எந்தவிதத்திலும் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாதென்பதில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். அத்தோடு, எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே எல்லா சுவிசேஷக் கூட்டங்களிலும் இப்பலிபீட அழைப்பு முறை பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால் இதனைக் கையாளுபவர்களின் நேர்மையான நோக்கத்தையும் நான் புரிந்து வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இவ்வர்ப்பண அழைப்பைக் கொடுக்காத சுவிசேஷக் கிறிஸ்தவம் எப்போதும் இருந்துள்ளது என்ற உண்மை தெரியாமலேயே நான் ஒரு கிறிஸ்தவக் கூட்டத்தின் மத்தியில் வளர்ந்து வந்துள்ளேன். இக்காலங்களில் நான் பங்கு பெற்ற சுவிசேஷக் கூட்டங்களில் என் மனம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும், அவரது கல்வாரித் துன்பங்களிலும் பதிந்திருந்த வேளைகளில் அவற்றையெல்லாம் முற்றாகத் துடைத்தெறிவதுபோல் கூட்ட நடவடிக்கைகள் கிறிஸ்துவின் மரணதுன்பத்தையும், மகிமையையும் எடுத்துக் காட்டுவதை விடுத்து அர்ப்பண அழைப்பிற்கே முக்கியத்துவம் கொடுத்தன. மேலும் பலர் இதே அனுபவங்களை இக்கூட்டங்களில் அடைந்துள்ளனர். அர்ப்பண அழைப்பு, கூட்ட முடிவில் கொடுக்கப்படும் பலவிதமான அழைப்புகள் கூட்டத்தின் முகப்பை நோக்கி நடப்பதா? இல்லையா? என்ற தடுமாற்றம், எத்தனை பேர் இவ்வாறு முன்னால் போகப்போகிறார்கள் என்ற ஆதங்கம் ஆகியவை, கிறிஸ்துவை நாடிக் கர்த்தரை உண்மையோடும், ஆவியோடும் துதிப்பதிலிருந்து பலரை விரட்டி அடித்திருக்கின்றன.
கடுமையான போதனைகளைக் கிறிஸ்து போதிக்கத் தொடங்கும்வரை எங்கும் அவரைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்த கூட்டத்தாரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதன் பின் அந்தக்கூட்டம் அவரைப் பின்பற்றுவதை முற்றாக நிறுத்தியது (யோவான் 6.66). ஏன்? அவர்கள் தங்கள் காலடிகளை எடுத்துவைத்து அவரைப் பின்பற்றவில்லையா? நிச்சயமாக. ஆனால், இத்தகைய பின்பற்றுதல் அல்ல, அவர்களுக்கு இரட்சிப்பைத் தேடித் தருவது. கிறிஸ்து சொன்னார், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37). அவர் தொடர்ந்து சொன்னார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் அவனை நான் எழுப்புவேன்” (யோவான் 6:44). இந்த இரண்டு வேதப்பகுதிகளிலும் இயேசு ஒருவர் சரீரப்பிரகாரமாக தன்னிடம் நடந்து வருவதைக் குறித்துப் பேசவில்லை.
கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதற்காக முன்னால் நடந்து வருவதல்ல, வாழ்வுக்கும், மரணத்திற்குமாக அவரிடம் நம்மை முழுதாக ஒப்புக் கொடுப்பதே கிறிஸ்துவிடம் வருவதென்ற உண்மையை இன்று எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு சபைகள் வேதபூர்வமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க கர்த்தர் அவர்களை வழிநடத்துவாராக. பாவிகளைக் கூட்டத்தின் முன்னால் தீர்மானம் எடுப்பதற்கல்ல, ஆண்டவராகிய கிறிஸ்துவிடம் வருமாறு நாம் உறுதியாக அழைக்க வேண்டும்.
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பும் பிரசங்கமும்
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு எனும் இப்போலிப்போதனை பிரசங்கத்தின் வடிவத்தையும் இன்று பெரிதும் மோசமாகப் பாதித்துள்ளது. இன்று பலராலும் அமெரிக்காவில் பாராட்டப்படும் ஜெக் ஹைல்ஸ் எனும் பிரசங்கி தனது சக பிரசங்கிகளுக்கு பின்வரும் ஆலோசனையை வழங்குகிறார்.
நம்மில் பலர் நமது பிரசங்கத்தின் முடிவில், இறுதியாக அல்லது முடிவாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என்று கூறுவது வழக்கம். ஆனால் இத்தகைய வாக்கியங்கள் மிகவும் ஆபத்தானவை. நமது பிரசங்கம் இன்னும் ஐந்து நிமிடத்தில் முடிந்து விடப் போகிறது என்று தெரிந்த ஆத்துமா நாம் கொடுக்கப்போகும் அழைப்பை ஏற்றுக் கொள்ளாதிருக்க தன்னைத் தயார்படுத்திக்கெள்கிறது. நாம் அறைகுறையாக நமது பிரசங்கத்தை முடித்தால், நாம் பிரசங்கத்தை முடிக்கப் போகிறோம் என்பதை சந்தேகிக்கவியலாத ஆத்துமா அழைப்பிற்காகத் தன்னைத் தயார் செய்து கொள்ள நேரம் இல்லாமல் போகிறது. ஆகவே இவ்வழைப்பு மூலம் பலரையும் தேவனிடத்தில் கொண்டு வரலாம்.11
ஜெக் ஹைல்ஸின் இவ்வார்த்தைகளை முதன் முறையாக வாசிக்கும்போது நாம்தான் அதன் பொருளை சரிவரப்புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது என்று ஒருவர் எண்ணிவிடலாம். ஆனால் இரண்டு மூன்று தடவைகள் அதை வாசித்துப் பார்க்கும்போதுதான் ஜெக் ஹைல்ஸ் உண்மையில், ஒரு பிரசங்கி தனது புத்திசாலித்தனத்தால், பிரசங்க இறுதியில் செய்யும் சில காரியங்களால் ஆத்துமாக்களைக் கர்த்தரிடத்தில் கொண்டு வந்துவிடலாம் என்று போதிப்பதை அறிந்து கொள்ளலாம். அத்தோடு, ஒருவரது நித்திய வாழ்வை ஒருகணப் பொழுதில், கூட்ட முடிவில் தீர்மானித்துவிடலாம் என்றும் அவர் போதிப்பதையும் புரிந்து கொள்ளலாம். ஆத்துமாக்களை, சடுதியாகக் கூட்ட முடிவில் தீர்மானம் எடுக்க வைப்பதற்காக அலையும் இத்தகைய பிரசங்கங்கள் அவர்களுக்கு ஒரு போலிச்சமயத்தை அறிமுகப்படுத்தமுடியுமே தவிர கிறிஸ்துவை அறியத்தரமுடியாது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் அல்லாது வேறு எதனிடமோ ஆத்துமாக்களை அழைத்துச் செல்ல முயலும் பிரசங்கத்தை விட மோசமானதொன்றிருக்க முடியுமா?
பிரசங்கம் என்பது மனிதன் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திக் கண்டு பிடித்த ஒரு சாதனமல்ல. ஆனால் அது ஆவியின் வல்லமையால் பிரசங்கிக்கப்படும் சத்தியமாகும். ஜொனத்தான் எட்வர்ட்ஸின் சபையில் ஜொர்ஜ் விட்பீல்ட் பிரசங்கித்ததை வர்ணித்து, பிரசங்கம் என்றால் என்ன? என்பதற்கு மார்டின் லொயிட் ஜொன்ஸ் கொடுத்த விளக்கத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது.
ஜொனத்தன் எட்வர்ட்ஸிடம் இருந்ததைப் போலத் திறமைகள் பலவற்றைக் கொண்டிராத ஜொர்ஜ் விட்பீல்டினுடைய பிரசங்கத்தை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது அவரது முகம் பிரகாசித்ததாக விட்பீல்ட் கூறுகின்றார். அத்தோடு பிரகாசித்த அவரது முகத்திலிருந்து கண்ணீர் பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடியது. ஏனெனில் எட்வர்ட்ஸ் விட்பீல்டின் பிரசங்கத்திலிருந்த உறுதியையும், அதிகாரத்தையும் புரிந்து கொண்டார். விட்பீல்ட் ஆவியில் இருந்தார். அதேவேளை எட்வர்ட்ஸீம் ஆவியில் இருந்தார். அந்த இருவருமே ஆவியில் இணைந்திருந்தனர். அந்த சபை முழுவதும் பிரசங்கி உட்பட கர்த்தரின் கரத்தில் இருந்தனர். இதுவே பிரசங்கம். இத்தகைய பிரசங்கத்தை அனுபவத்தில் பெறவும், இவ்வாறு பிரசங்கிக்கவும் கர்த்தர் நமக்குத் துணை புரிவாராக.12
மார்டின் லொயிட் ஜொன்ஸீம், புதிய ஏற்பாடும் நமக்குக் காட்டித் தரும் இத்தகைய பிரசங்கங்களில் பயன்படுத்தப்படும் சூழ்ச்சிகளிலிருந்து மாறுபட்டது வேத பூர்வமான பிரசங்கம். ஆத்துமாக்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறக்கிறார்கள் என்று அறிவிக்கின்றது (யோவான் 1:13).
திருமுழுக்கின் மூலம் மறுபிறப்பு என்ற போதனை எவ்வாறு ஒருவரைக் கிறிஸ்துவிடத்தில் கொண்டு வர முடியாதோ அதேபோல் தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பும் ஒருவரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர முடியாது. இத்தகைய பிரசங்கத்தைக் கேட்டுச் சிலர் கர்த்தரை அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் இத்தகைய போலித்தனமான பிரசங்கத்தால் அல்லாமல் அவற்றையும் மீறிச் செயல்பட்ட தேவ ஆவியின் மூலமே கர்த்தரிடத்தில் வந்துள்ளார்கள். ஆவியின் மூலமாக மட்டுமே எந்தவொரு ஆத்துமாவும் மறுபிறப்படைய முடியும் என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது. மறுபிறப்படையும்போதே ஆத்துமாக்கள் மனந்திரும்புதலையும், இரட்சிக்கும் விசுவாசத்தையும் அடைகிறார்களே தவிர அவற்றின் மூலமாக அவர்கள் மறுபிறப்படைவதில்லை. மனந்திரும்புதலும், விசுவாசமும் மறுபிறப்படைந்த மனிதனின் செயல்களே தவிர பாவத்தில் மரித்துள்ள ஆத்துமாக்களின் செயல்களல்ல (எபேசியர் 2:1, 5). இருப்பினும், கடவுள் நமக்காக விசுவாசிப்பதில்லை. நிச்சயமாக அவர் நமக்காக மனந்திரும்பவும் முடியாது. ஏனெனில் அவர் மனந்திரும்பும்படியாக அவரில் எந்தப் பாவமும் காணப்படவில்லை. நாமே, தனிப்பட்ட முறையில், அறிவுபூர்வமாக, முழுமனத்தோடு நமது இரட்சிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி ஆத்துமாக்களை வற்புறுத்தக் கூடாதென்றும் நாம் கூறவில்லை. வெறுமனே சுவிசேஷத்தின் உண்மைகளை மட்டும் விளக்கிக் கூறிவிட்டு, பாவிகளை மன்னிக்கும் கிருபையுள்ள கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டும் என்று ஆத்துமாக்களுக்கு அழைப்பு விடுக்காத பிரசங்கம் வேதபூர்வமான பிரசங்கமாக இருக்க முடியாது.
பைத்தியமாக உலகத்திற்குத் தோன்றுகிற பிரசங்கத்தின் மூலம் தன்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கடவுள் இரட்சிக்கிறார் என்று அப்போஸ்தலர்கள் போதித்தனர். மனிதன் கண்டுபிடிக்கும் நவீன முறைகள் அனைத்தும் பாவிகளைக் கரை சேர்க்க தேவனால் நியமிக்கப்பட்டுள்ள வழி முறைகளை விட வல்லமையுள்ளவையாக இருக்க முடியாது. கர்த்தரைப் பலருக்கும் அறியத்தருவதற்கு தானெடுக்கும் எல்லா முயற்சிகளும் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறவேண்டுமானால் திருச்சபைகள் உலகப்பிரகாரமான வழிகளைக் கைவிட்டு மறுபடியும் வேதபூர்வமான வழிமுறைகளைக் கையாள வேண்டும். வேதபூர்வமான நற்செய்திப் பிரசங்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பவுல் இவ்வாறாக விளக்குகிறார்: “நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவ பலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார்” (1 கொரி. 1:23-24).
தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பும் இறையியலும்
வெளிப்படையாகத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நற்செய்திக் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் அழைப்பு முறைகளுக்கு சில இறையியல் காரணிகள் உண்டு. வரலாற்று ரீதியான கிறிஸ்தவத்தை விட்டு விலகி இத்தகைய நவீன முறைகளைத் திருச்சபைகள் கையாளக் காரணமாகவிருந்த போதனைகள் யாவை?
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தவரையில் மறுபிறப்பு என்பது ஆவியானவரின் இறைமையுள்ள கிரியையால் மனிதனுடைய இருதயத்தில் ஏற்படும் மாற்றமாகும் (யோவான் 3:8). ஆனால் கிறிஸ்துவின் இப்போதனைக்கு எதிராக புதிய நற்செய்தி முறைகளுக்கு முன்னோடியாகவிருந்தவர்களில் ஒருவர் “இறைவாழ்வு எப்போதுமே மனிதனுடைய கிரியை” என்று கூறியுள்ளார். இது ஒரு அதிர்ச்சி தரும் போதனையாகும். அதையும்விட இப்போதனை சார்ள்ஸ் பினியின் அதிக செல்வாக்குள்ள நூலான “இறைவாழ்வு பற்றிய எழுப்புதல்களின் விரிவுரைகள்” என்ற நூலின் முதல் பக்கத்தில் காணப்படுகின்றது.13 மெய்யான இறைவாழ்வு மனிதனிலா அல்லது கடவுளிலா தங்கியுள்ளது என்ற கேள்விக்கான பதிலிலேயே நவீன நற்செய்தி ஊழியத்திற்கும் வேதபூர்வமான நற்செய்தி ஊழியத்திற்கும் இடையிலான பெரும் இறையியல் வித்தியாசம் காணப்படுகின்றது. தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற போதனை, மறுபிறப்பின் ஒருபாதிக்குக் காரணமாக மனிதனும், மறுபாதிக்குக் காரணமாகக் கடவுளும் இருப்பதாகப் போதிக்கின்றது.
இங்கிலாந்தின் சீர்திருத்த வரலாறு என்ற தனது நூலில் ஜெ. எச். மெரில் ஓபின் (1794-1872) பின்வருமாறு எழுதியுள்ளார்:
மனிதனின் வல்லமையாலேயே மறுபிறப்பு ஏற்படுகின்றது என்று போதிப்பதே ரோமன் கத்தோலிக்க மதத்தின் மிகப் பெரிய போலிப்போதனையாகும். இப்போலிப்போதனையின் மூலமே திருச்சபைக்கு அழிவும் வந்தது. கர்த்தரின் கிருபையாலேயே ஒருவர் மனந்திரும்ப முடியும். இதனை மனிதனுக்கும் கடவுளுக்குமிடையில் பங்கிடுவது பெலேஜியனிசத்தைவிடவும் மோசமானதாகும்.13
அமெரிக்காவின் மாபெரும் இறையியல் வல்லுனர்களில் ஒருவரான சார்ள்ஸ் ஹொட்ஜ் (1797-1878) இப்போதனையால் ஏற்படும் ஆபத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்:
பாவிகள் தங்கள் பாவத்திலிருந்து தங்களைத் தாமே விடுவித்து மறுபிறப்பை அனுபவிக்க முடியும் என்றும், தமக்கு வசதியான வேளையில் மனந்திரும்பி விசுவாசிக்க முடியும் என்றும் போதிக்கும் போதனையைவிட மனித இருதயத்தைப் பாதிக்கும் மோசமான போதனை வேறெதுவும் இருக்க முடியாது. ஆவியால் புதுப்பிக்கப்படாத மனிதன் இரட்சிப்பை அடைவதற்கு சுயமாக எதையுமே செய்ய முடியாது என்பதை வேதமும், அனுபவமும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஆகவே அம்மனிதன் சத்தியத்தை அனுபவபூர்வமாக அறிந்து உணர வேண்டியது மிக மிக அவசியம். அவ்வாறு அநுபவத்தில் சத்தியத்தை அறிந்து கொண்டபின்பே அம்மனிதன் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே சாதனத்தை நாடிச் செல்வான். அதற்கு முன் அவனால் எதுவுமே செய்ய முடியாது.14
மேல் வரும் கூற்றுக்கள் இரண்டும் மனிதன் தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் வல்லமையற்றவனாக இருக்கிறான் என்றும், அம்மாற்றத்தை அவனில் கடவுளே ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்துகின்றன. இவ்விரண்டு காரியங்களைப் பொறுத்தவரையில்தான் “தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு” என்ற போதனை வேதம் போதிக்கும் மறுபிறப்பு பற்றிய போதனையிலிருந்து மாறுபட்டு நிற்கின்றது. ஆகவே, நாம் “தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு” என்ற போதனையின் அடிப்படை அம்சத்தைக் குறித்து ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். அதாவது மனிதனின் ஆவிக்குரிய நிலை யாது? என்ற வினாவிற்கு நாம் விடையளிக்க வேண்டும்.
கேட்கப்படும் ஒருசில கேள்விகளுக்கு “ஆம்” என்று பதிலளிப்பதன் மூலம் ஒருவர் மறுபிறப்படைய முடியுமா? ஒரு கட்டிடத்தின் உள்ளே அல்லது ஒரு கூட்டத்தில் முகப்பை நோக்கி நடந்து செல்வதன் மூலம் ஒருவர் மறுபிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியுமா? ஒரு மனிதன் அவனறியாத சூழ்நிலையில் திடீரெனக் கொடுக்கப்படும் அர்ப்பண அழைப்பிற்கு உடன்படுவதன் மூலம் கிறிஸ்தவனாக மாறிவிட முடியுமா? மனிதனுடைய ஆவிக்குரிய நிலைகுறித்து நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களே இக்கேள்விகளுக்கான பதில்களைத் தீர்மானிக்க முடியும். மனிதனுடைய ஆவிக்குரிய நிலைதான் என்ன?
நமது மூதாதையர்களில் ஒருவரான ஸ்கொட்லாந்து தேசத்தைச் சேர்ந்த இறையியல் வல்லுனரான தொமஸ் பொஸ்டன் (1676-1732) மனிதனது ஆவிக்குரிய நிலையை விளக்கும்போது அதை பாவியான ஒரு மனிதனை, ஒரு குழிக்குள் அகப்பட்டிருக்கும் மனிதனோடு ஒப்பிட்டு விளக்குகிறார். குழிக்குள் அகப்பட்டிருக்கும் மனிதன் இரண்டு வழிகளில் ஒன்றின் மூலமே வெளியே வர முடியும். அவன் மிகவும் துன்பப்பட்டு குழியின் பக்கங்களைப் பிடித்து ஏறி மேலே வரலாம்; ஆனால் அது அவனது சுய முயற்சியாக அமையும். அல்லது கிறிஸ்து தனது கிருபையின் மூலமாக குழிக்குள் ஒரு கயிற்றை எறிந்து அவனை மேலே கொண்டு வந்து அவனது துயரங்களிலிருந்து அவனுக்கு விடுதலையளிக்கலாம். ஆம்! அவன், எறியப்படும் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்துவிடலாம்தான், ஆனால் பாவியாகிய மனிதன் குழிக்குள் மரித்திருப்பதால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இவ்விரு வழிகளையுமே பயன்படுத்த முடியாதவனாயிருக்கிறான்.15
மனிதன் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவனாயிருந்து கடவுளைப் பிரியப்படுத்த முடியாதவனாக இருக்கிறான் (எபேசியர் 2:1; ரோமர் 8:8). நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் மனிதனது நிலையை மிகவும் மோசமான உதவியற்ற நிலையாக வர்ணித்துள்ளார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் . . . ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்” (யோவான் 6:44; 65).
கூட்டங்களின் முகப்பை நோக்கி நடந்து செல்வதன் மூலமோ அல்லது தீர்மானம் எடுப்பதன் மூலமோ பாவத்தில் மரித்து அதற்குக் கட்டுப்பட்டிருக்கும் நிலையிலிருந்து ஒருவரும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஒரு மனிதன் தன்னை கிறிஸ்தவனாக மாற்றிக் கொள்ள முடியாது. ஆவியானவரால் மட்டுமே ஒரு மனிதனை கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்க முடியும். கடவுள் தனது கிருபையால் ஆத்துமாக்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுக்கிறார். அதன் பிறகே அவர்கள் மனம் திரும்பி கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்க முடியும் (எசேக்கியல் 36:26, 27; யோவான் 5:21).
மனிதனுடைய பாவ நிலையின் பின்னணியிலேயே நாம் பாவத்திலிருந்து மனிதனை இரட்சிக்கும் கடவுளின் வல்லமையின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும். மறுபிறப்பு பற்றிய போதனைதான் எத்தனை மகிமையுள்ளது. கடவுளின் மகிமைக்காக மட்டுமே நற்செய்தி ஊழியத்தில் ஈடுபடும்படியாக திருச்சபை இன்று மறுபடியும் இந்த வேதபூர்வமான போதனையைப்பின்பற்ற வேண்டும்.
நான் என்ன செய்ய வேண்டும்?
இது அமைதியாக இருக்க வேண்டிய நேரமல்ல; நாம் விசுவாசிக்கும் சத்தியத்தை வெளிப்படையாக எடுத்துக்கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எத்தனையோ போலித் தீர்மானங்களுக்கு மத்தியிலும் சிலர் கர்த்தரிடம் வந்திருக்கிறார்களே, ஆகவே இப்போதனையை எதிர்ப்பதால் நற்செய்தி ஊழியத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் இவ்வளவு நாட்களாக நாம் அமைதியாக இருந்துவிட்டோம். ஆனால், பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு வாரமும் தவறான வழியை நோக்கி வழிநடத்தப்படுகிறார்கள். கிறிஸ்துவிடம் வாருங்கள்! என்று வழிகாட்டப்பட வேண்டிய ஆத்துமாக்கள் கூட்டங்களில் தீர்மானம் எடுக்க முன்னால் வரும்படி அல்லவா அழைக்கப்படுகிறார்கள். மிக உயர்ந்த சாதனமாகிய பிரசங்க ஊழியம் இன்று வெறும் மாயங்களையும், சூழ்ச்சிகளையும் செய்யும் சாதனமாகவல்லவா மாறிவிட்டது. வேத போதனைகளை திரிபுபடுத்தும் சாதனமாக இப்போலித்தனமான செயல்கள் அமைந்துள்ளன. இந்த இருளடைந்த சூழ்நிலையில் கர்த்தர் திருச்சபையில் ஒரு எழுப்புதலை ஏற்படுத்த நாம் ஜெபிக்க வேண்டும். அத்தகைய எழுப்புதல் கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே வர முடியும். கர்த்தருடைய ஆலோசனைகளையும், வழிகளையும் நாம் மறுபடியும் நாடி வர வேண்டும். அவர் பாவிகளுக்கு இலவசமாகக் கொடுக்கும் அழைப்பையும், வேதபூர்வமான நற்செய்திப் போதனையையும் நாம் நாடி வர வேண்டும். அவ்வேளையில்தான் நமது ஊழியங்கள் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவர முடியும். அப்போதுதான் அநேக ஆத்துமாக்கள் மனந்திரும்பிக் கர்த்தரிடம் வருவார்கள்.
Notes on the text
1 Theword “again” is better renderd “from above.” It points to the ultimate source of the new birth, the Triune God.
2 C. H. Spurgeon, The New Park Street Pulpit (London), 1964), Vol. 6.p. 171.
3 Jack Hyles, How to Boost your Church Attendance (Grand Rapids, 1958), pp. 32-35.
4 Iain H. Murray, The Forgotten Spurgeon (London, 1966), p. 111.
5 Ibid., p. 111.
6 Robert L. Dabney, Discussions: Evangelical and Theological (London, 1967), Vol. 2, p. 13.
7 Albert B. Dod, “The Origin of the Call for Decisions,” The Banner of Truth Magazine (London, Dec., 1963), Vol. 32, p. 9.
8 Murray, op. cit., 107-109.
9 John Julian, A Dictionary of Hymnology (London, 1907) p. 609.
10 Hyles, op. cit., pp. 43-44.
11 Recorded in shorthand from a sermon. “The Responsibility of Evangelism,” preached at Grace Baptist Church, Carlisle, Pa., in June, 1969.
12 For a clearest statement of Finney’s theory of regeneration read his sermon, “Sinners bound to change their own hearts, “Sermons on various subjects (New York, 1835). For a detailed examination of Finney’s theology see “Review of Lectures on Systematic Theology”, also Benjamin Warfield, “The Theology of Charles G. Finney,” Perfectionism (Philadelphia, 1967), pp. 166-215.
13 J. H. Merle d’ Aubigne, The Reformation in England (London, 1962), Vol. 1 p. 98.
14 Charles Hodge, Systematic Theology (Grand Rapids, 1970), Vol. 2, p. 277.
15 Thomas Boston, Human Nature in Its Fourfold State (London, 1964), p. 183.
கட்டுரை ஆசிரியர்:
ஜெம்ஸ் இ. அடம்ஸ் மீசா, அரிசோனாவில் 1980 இல் இருந்து கோர்னர்ஸ்டோன் வேதாகம ஐக்கிய சபையின் போதகராகப் பணியாற்றி வருகிறார். இது ஒரு சீர்திருத்த பாப்திஸ்து சபை, ஏற்கனவே ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும் இரு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். ஸ்பானிய மொழியில் கிறிஸ்தவ இலக்கியங்களை வெளியிடுவதோடு அம்மொழியில் தொடர்ந்து பிரசங்கங்களும் செய்து வருகிறார். 1974-1980 வரை இலத்தீன் அமெரிக்க நாட்டிலும் இவர் ஊழியம் செய்துள்ளார்.
“எந்தவித சுய கிரியைகளும் இல்லாமல், விசுவாசத்தால் மட்டும் நீதிமானாக்கப்பட வேண்டும் என்று போதிக்காவிட்டால், நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியும் என்று நான் நம்பவில்லை.”
– ஸி. எச். ஸ்பர்ஜன்
“கிருபை அந்நியர்களை கடவுளின் அன்புக்குரிய குழந்தைகளாக மாற்றக்கூடியது.”
– ஸி. எச். ஸ்பர்ஜன்
“18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப் பிரசித்தி பெற்ற பிரசங்கியாக விளங்கியவர். நொதாம்டனில் போதகராகவும், நியூஜேர்ஸி இறையியல் கல்லூரியின் தலைவராகவும், அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் மிஷனரியாகவும் பணி புரிந்தவர். எட்வர்ட்ஸ் பதினெட்டாம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளராக வரலாற்றால் அங்கீகரிக்கப்பட்டவர்.”
– ஜொனத்தன் எட்வர்ட்ஸ்
நற்செய்தியால் குணமாக்கப்பட முடியாத வியாதிகளே இல்லை. ஒரு பாவி கிறிஸ்துவிடம் வருவானானால் அவனது வியாதி குணப்படும்.
-ஜே. ஸி. ரைல்
“ஐக்கிய நாடுகளின் வேல்ஸ் தேசத்திலே பிறந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ், இந்நூற்றாண்டின் தலை சிறந்த பிரசங்கிகளில் ஒருவராக விளங்கியவர். இருபத்தியெட்டு வருடங்களாக இலண்டனில் வெல்டர்ன்ஸ்டர் ஆலயத்தில் போதகராக பணி புரிந்தவர். இவரது பிரசங்கங்கள் இன்று நூல்களாகவும். ஒலிநாடாக்களிலும் தொடர்ந்து விற்பனையாகின்றன.”
மார்டின் லாயிட் ஜோன்ஸ்
” ‘தீர்மானம் எடுத்தல்’ என்ற வார்த்தை எப்போதுமே எனக்கு சரியானதாகப் படவில்லை. இவ்வார்த்தையை அடிக்கடி மற்றவர்கள் பயன்படுத்தும்போது அது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. அவர்கள் இதனை அறிவீனத்தாலும், நல்ல நோக்கங்களுடனுமே பயன்படுத்தியுள்ளனர். ஒரு பாவி எப்போதுமே கிறிஸ்துவுக்காகத் “தீர்மானம்” எடுக்க முடியாது; ஆனால் அவன் ஆதரவற்றவனாக, உதவியற்றவனாக, கிறிஸ்துவிடம் அவரது கிருபையை நாடிப் பயத்தோடு இருக்க வேண்டும். இதைவிட வேறெதுவுமே திருப்திகரமானதில்லை.”
– மார்டின் லாயிட் ஜொன்ஸ்
(பிரசங்கிகளும், பிரசங்கமும் என்ற நூலில் இருந்து)
“நற்செய்தியின் துல்லியமான செய்தியை அவிசுவாசிகளின் குருட்டுத்தனத்தால் மறைத்துவிட முடியாது; குருடர்களால் பார்த்து அறிய முடியாதென்பதால் சூரிய ஒளி மங்கலானது என்று அர்த்தமல்ல.”
– ஜோன் கல்வின்
“தனது பிரசங்கங்களின் மூலம் பினியின் சுவிசேஷ அழைப்பு முறைகளாலும், போதனைகளாலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வெளிப்படுத்திய தேவ ஊழியர். பினி வாழ்ந்த காலத்தில் அற்புதமாகக் கர்த்தரால் ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டவர்.”
அசேல் நெட்டில்டன் 1783-1843
ஜீவனுள்ள தேவனுக்கெதிராக உயர்த்தப்படும் முஷ்டி மனித இதயத்தின் இயற்கையான தன்மையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
– அல்பர்ட் என். மார்டின்
கிருபையை நாம் நமது குடும்பத்தில் இருந்து பெறுவதில்லை. நம்மைத் தேவ குழந்தைகளாக்குவதற்கு நல்ல போதனைகளைவும், நல்ல உதாரணங்களையும் விட மேலானதொன்று தேவை.
– ஜே. ஸி. ரைல்