கிறிஸ்தவ விசுவாசம் என்பது மனத்தால் சிந்தித்துப் புரிந்து கொள்ளக்கூடியது. அதை நாம் நமது மொழியில் விளக்கிக்கூற முடியும். அதே நேரம், அது அனுபவபூர்வமானது. விசுவாசத்தைப் பற்றி வேதத்தில் இவ்வாறுதான் வாசிக்கிறோம். விளக்கிக்கூற முடியாததும், சிந்தித்துப்புரிந்து கொள்ள முடியாததும், வாழ்க்கையில் அனுபவிக்க முடியாததும், விசுவாசமாக இருக்க முடியாது. இன்று அநேகர் விசுவாசம் என்ற பெயரில் போலிக் கொள்கைகளைப் போதித்துக் கொண்டிருக்கின்றனர். இது ஏதோ மனத்தால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயாஜால வித்தைபோல் பலருக்குப்படுகிறது. இப்படிப் பேசுகிற பலரை நான் அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.
நமது விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டுமானால் வேத ஞானம் நமக்கு அவசியம். நமது சபை மக்கள் விசுவாச வாழ்க்கையில் வளர வேண்டுமானால் அவர்கள் வேத அறிவில் வளர வேண்டும். நாம் வேதத்தை முறையாகப் போதிக்க வேண்டும். வேதப்போதனைகளை அனைவரும் வாழ்க்கையில் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். இவையில்லாமல் விசுவாச வாழ்க்கையில் வளர்ச்சி இருக்க முடியாது. விசுவாசம் கண்மூடித்தனமானதொன்றல்ல. அது சிந்தனைபூர்வமானது. வேதஞானமில்லாத இடத்திலும், வேதப்போதனைகளைக் கடைப்பிடிக்காதவர்களிடத்திலும் உண்மையான விசுவாசம் இருக்க முடியாது. எங்கு உண்மையான விசுவாசம் இருக்கிறதோ அங்கே வேதத்திற்கு அதிக மதிப்பிருக்கும்.
இதனால்தான் பவுல் தீமோத்தேயுவைப் பார்த்து நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு என்று கூறுவதைப் பார்க்கிறோம். இதை இன்னுமொருவிதத்தில் கூறப்போனால் விசுவாசத்தில் நீ நிலைத்திரு, என்று பொருளாகும். வேதத்தில் நிலைத்திருப்பதே விசுவாசத்தில் நிலைத்திருப்பதாகும். வேதத்திற்கு சமாதி கட்டிவிட்டு விசுவாச வாழ்க்கை வாழ முனையும் கூட்டத்தார் இதை இன்று நினைத்துப்பார்ப்பது நல்லது.
தீமோத்தேயு ஒரு உண்மையான விசுவாசியாகவும் போதகனாகவும் இருக்க அவன் வேதத்தில் கற்று நிச்சயித்துக்கொண்ட காரியங்களே அவனுக்குத் துணை புரியும். அவற்றை அவன் தன் தாயாரிடத்திலும், பாட்டியிடத்திலும், பவுலிடத்திலும் முறையாகக் கற்றிருந்தான். அவற்றை அவன் மறந்துவிடக்கூடாது என்றும், அவற்றில் நிலைத்திருந்து தொடர்ந்து போதித்து வரவேண்டுமென்றும் பவுல் போதிக்கிறார். தீமோத்தேயு மட்டுமல்ல, அவனது மக்களும் விசுவாசத்தில் வளர இது மட்டுமே உதவும்.
தீமோத்தேயு ஒரு போதகன். அவனுக்கே இவ்வேத போதனைகள் இத்தனை அவசியமாக இருக்கும் போது இன்றைய போதகர்கள் எவ்வளவு தூரம் இவ்வேதப் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நமது ஊழியம் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப்பெற்று வளர வேண்டுமானால் வேதபோனைகளை நாம் ஆழமாகக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். நேரத்தை அதற்காகக் கொடுக்க வேண்டும். ஜெபத்தோடு வேதத்தை ஊன்றிப்படிக்க வேண்டும். அப்படிப்புக்குத் துணைபுரியும் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு, நாம் வேதத்தை முறையாகக் கற்று அதில் நிலைத்திருக்கிறோமா?