பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி புதிய ஏற்பாடு பல இடங்களில் வலியுறுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் (2 தீமோத்தேயு 3:14-17) “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது . . . தேவனுடைய மனிதன் தேறினவனாக இருக்கும்படியாக அவை பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கின்றது”
என்று கூறும்போது பழைய ஏற்பாட்டினையே கருத்தில் கொண்டிருந்தார். இவ்வசனங்கள் முழு வேதத்தையும் குறித்தபோதும் தீமோத்தேயுவிடம் அன்றிருந்தது பழைய ஏற்பாடு மட்டுமே. தேவையான அனைத்தையும் அன்று பழைய ஏற்பாடு கொண்டிருந்தது. பழைய ஏற்பாட்டைத்தவிர அன்று தீமோத்தேயுவிற்கு வேறெதுவுமே தேவையாயிருக்கவில்லை. பழைய ஏற்பாட்டு வேதம் திருத்துவதற்கும், நீதிமானாவதற்கும் போதுமானது என்று பவுல் கூறுகின்றார்.
அத்தோடு பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவத்தைக் குறித்து இன்னுமொரு வேத பகுதியான முதலாம் கொரிந்தியரில் (1 கொரி. 10:1-12) பவுல் பழைய ஏற்பாட்டு பிதாக்களின் அனுபவங்கள் நமக்கு உதாரணங்களாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவற்றைப் படித்து அவர்கள் விட்ட தவறுகளை நாமும் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பவுலின் போதனை. இதேபோல் இயேசு கிறிஸ்துவும் நற்செய்திப் புத்தகங்களில் பழைய ஏற்பாட்டிலிருந்து அடிக்கடி வசனங்களை மேற்கோள் காட்டி பழைய ஏற்பாட்டின் நிரந்தரமான பயனைச் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வுலகம் உள்ளவரையும் அது அழியாது என்பது கிறிஸ்துவின் போதனை.
இவற்றை ஏன் கூறுகின்றேன் என்றால், பழைய ஏற்பாட்டை இன்று போதகர்களும், கிறிஸ்தவர்களும் பயன்படுத்தும் விதம் வேதபூர்வமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான். அநேக போதகர்கள் பழைய ஏற்பாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளை வெறும் கதையாகப் பாவித்து கேட்பவர்கள் மகிழும் விதத்தில் போதிப்பதையும், அல்லது அவற்றை உவமானங்களைப்போலப் பயன்படுத்தி தமக்குத் தெரிந்தவிதத்தில் பொருள் கொள்வதையும்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களே தவிர வேதபூர்வமாகப் போதிப்பதில்லை. யோனாவைப் பற்றியும், தானியேலைப்பற்றியும், தாவீதைப்பற்றியும் மட்டும் கேட்டு அலுத்துப்போன மக்கள் கூட்டம்தான் எத்தனை! இவர்களைக் கூட பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் மீட்பை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றில் அவர்களின் பங்கு என்ன என்றெல்லாம் ஆராயாது, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களுக்கு வெறும் பொருள்கூற முயலும் பிரசங்கங்களே இன்று அதிகம். இதேவிதமாகத்தான் சிம்சோன், தெபோராள், கிதியோன் போன்றோரின் வாழ்க்கைச் சம்பவங்களையும்பற்றிப் பிரசங்கிக்கப்படுகின்றது. சாலமோன் மிக மோசமானவன், கிறிஸ்தவனே அல்ல என்ற விதத்தில் அமைந்த பிரசங்கத்தையும் நான் கேட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் பழைய ஏற்பாட்டினைப்பற்றிய சரியான விளக்கம் அநேகருக்கு இல்லாததுதான்.
பழைய ஏற்பாடு கர்த்தர் தன்னை வரலாற்றில் வெளிப்படுத்தியதை எடுத்துரைக்கிறது. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் கட்டுக்கதையல்ல, அது வரலாற்று நிகழ்ச்சிகள். கர்த்தர் ஆறு நாட்களில் உலகைப் படைத்ததையும், நோவாவின் காலத்தில் வெள்ளத்தால் உலகம் அழிந்ததையும், மோசே செங்கடலைக் கடந்ததையும், யோனாவை மீன் விழுங்கியதையும் வெறும் உவமானங்களாகக் கருதும் இறையியல் கல்லூரிகள் மலிந்த தமிழ்கூறும் நல்லுலகில் பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்ச்சி என்பதை வலியுறுத்திப் போதித்தல் அவசியம். பழைய ஏற்பாடு உலகத் தோற்றத்தை விளக்குகிறது. இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் மூலமாகவே தேவன் தன்னை வெளிப்படுத்த சித்தம் கொண்டார். ஆதியில் நமது முதல் பெற்றோர் கர்த்தரின் கட்டளையை மீறிப் பாவம் செய்ததால் தண்டனையை அனுபவித்து உலகையும் பாவத்தில் ஆழ்த்தினர். இதனால் அவர்களையும் முழு மனித குலத்தையும் அழித்து விடாமல் கர்த்தர் தனக்கென ஒரு மக்களை உலகில் தெரிவு செய்து கொண்டு அவர்கள் மூலம் மனித குல விடுதலைக்கு வழிகோலினார். பழைய ஏற்பாடு கர்த்தர் தனது ஒரே குமாரனின் மூலமாக இம்மீட்புப் பணியை எவ்வாறு கைக்கொண்டார் என்று விளக்குகின்றது. பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு சம்பவமும் கிறிஸ்துவின் மீட்புப்பணியோடு தொடர்புடையதாக உள்ளது. அதனால்தான் பழைய ஏற்பாடு அடிக்கடி, வரப்போகும் மேசியாவைக் குறித்து எடுத்துச் சொல்கிறது. பழைய ஏற்பாடு மேசியாவின் வருகையை அறிவிக்க, புதிய ஏற்பாடு அவ்வாறு வந்த மேசியாவின் வாழ்க்கையையும், அவரது மீட்புப்பணியையும் எடுத்துரைக்கிறது.
இவ்வாறு கிறிஸ்துவின் மூலமாக தனது மக்களை விடுவிக்கும் பணியில் கர்த்தர் தன்னால் தெரிவு செய்யப்பட்ட மக்களோடு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். ஆகவேதான், அவர் உடன்படிக்கையின் தேவனாக உள்ளார். இவ்வுடன்படிக்கையின்படி கர்த்தர் தனது மக்களை வழிநடத்தினார். இதன் மத்தியில் தான் நியாயப்பிரமாணங்களும், நீதிச்சட்டங்களும் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டன. பாவத்தைக் கட்டுப்படுத்தி மக்களை நேர்வழியில் நடத்த நியாயப்பிரமாணமும், நீதிசட்டங்களும் அவசியமாயிருந்தன. அவற்றைக் கைக்கொண்டு நடந்தவரை அவர்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் கிட்டியது. அவற்றை மீறியபோது கர்த்தரின் விரோதத்தையே அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். பாவத்தினால் இஸ்ரவேலர் கர்த்தரை விட்டுப் பலமுறை விலகியோடியபோதும் கர்த்தரின் திட்டங்கள் எப்போதும் அழிவடையவில்லை. மாறாக மனிதர்களின் பாவத்தையும் தனது திட்டங்களுக்காகவும், தனது மக்களின் மீட்புக்காகவும் கர்த்தர் பயன்படுத்திக் கொண்டதையும் பழைய ஏற்பாடு விபரிக்கிறது. பாவத்தின் காரணமாக பழைய ஏற்பாட்டு மக்களுக்கு நியாயப்பிரமாணங்களையும், நீதிச்சட்டங்களையும் பூரணமாகக் கைக்கொள்ள முடியவில்லை. அப்பாவத்திலிருந்து விடுதலை அளித்து நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படிச் செய்ய தன்னையே பலியாகக்கொடுக்க வரப்போகும் கிறிஸ்துவையே பழைய ஏற்பாட்டு தகனப்பலிகள் நினைவுறுத்துகின்றன.
இம்மீட்புப்பணி குறித்த வரலாற்று சம்பவங்களின் மத்தியிலேயே பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் இறைமைத்துவத்தையும், திரித்துவ செயல்முறைகளையும் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். பழைய ஏற்பாட்டு வரலாறு நமக்கு இறையியலைப் போதிக்கின்றது. கர்த்தர் அவரது படைப்பின் மகிமை, மூல பாவம், தெரிந்தெடுப்பு, திரித்துவம், பரிசுத்த ஆவியின் செயற்பாடு, பரிசுத்தமாக்குதல், ஆராதனை முறைகள், கிறிஸ்துவின் வருகை, மீட்பின் இரகசியம், கிறிஸ்துவின் தீர்க்கதரிசி, ஆசாரியர், அரசர் ஆகிய பதவிகள் என்பவற்றைப்பற்றியும் பழைய ஏற்பாட்டிலேயே படித்துத் தெரிந்து கொள்கிறோம். ஆகவே பழைய ஏற்பாடு உலக வரலாற்றை மட்டும் எடுத்துக் கூறும் நூல் அல்ல; வரலாற்றின் மூலமாக செயற்படும் கர்த்தரைப்பற்றியும் அவரது செயல்களையும் எடுத்து விளக்கும் நூலாகும்.
பழைய ஏற்பாடில்லாமல் புதிய ஏற்பாடில்லை. புதிய ஏற்பாடில்லாமல் பழைய ஏற்பாடில்லை. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டை நோக்கி நம்மை வழிநடத்த, புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டினை நமக்கு விளக்கிக் காட்டுகின்றது. இரண்டுமே நமது இரு கண்களைப்போல. ஆகவே, பழைய ஏற்பாட்டினை வெறும் உவமானமாகப் பயன்படுத்தி கதை சொல்லும் வழக்கத்தை விடுத்து அதை வேதபூர்வமாக முறையாகப் போதிக்கும் வழக்கத்தை கைக்கொள்வோம்.
எந்தவிதத்திலும் கர்த்தரை சந்தேகிக்காது, எந்தவிதக் கேள்வியும் கேட்காது, அவர் சொல்லியிருக்கிறார் என்ற ஒரே மனத்திருப்தியுடன். அவருடைய வார்த்தையை ஏற்று விசுவாசிப்பவனே மிகவும் மகிழ்சியுடையவனும், மெய்யான கிறிஸ்தவனுமாவான்.
– ஸ்பர்ஜன்.