சுவிசேஷத்திலும் பழசு புதிதென்று இருக்கின்றதா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! நண்பர்களே பழைய சுவிசேஷம் என்று நாம் குறிப்பிடுவது கர்த்தர் தனது வார்த்தையின் மூலம் நமக்கருளின மெய்யான சுவிசேஷத்தைத்தான். ஆனால் புதிய சுவிசேஷம் திருமறையைத் திரிபுபடுத்தி இன்று நம்மத்தியில் உலவி வரும் போலிப் போதனையாகும். ஒன்று கர்த்தரை மகிமைப்படுத்துகிறது; மற்றது மனிதனைக் கர்த்தரின் இடத்திற்கு உயர்த்த முனைகிறது. ஒன்று இரட்சிப்பிற்கு கர்த்தரை நாடிவரும்படி அழைப்பு விடுக்கின்றது; மற்றது நாம் கடவுளின் துணையோடு நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
ஒன்று கிறிஸ்துவின் மீட்புப்பணியின் மகிமையை எடுத்துரைக்கின்றது; மற்றது அப்போதனையை அலட்சியப்படுத்துகின்றது. பழைய சுவிசேஷத்தைப் போலத் தோற்றமளிக்க முனையும் புதிய சுவிசேஷம் உண்மையில் போலியானது. இன்று உலகமெங்கும் ஆயிரக்கணக்கான சபை மேடைகளில் புதிய சுவிசேஷத்தின் ஆட்சியைக் காணலாம். மாயமானைப் போலப் போலிப்போதனை மக்களைக் கவரத் தவறுவதில்லை. மானை நம்பி மனைவியை இழந்த கதை நாயகனைப் போல போலியை நம்பி சத்தியத்திற்கு இன்று அநேகர் மதிப்புக் கொடுக்கத் தவறுகின்றனர். இவ்விதழின் இரு முக்கிய ஆக்கங்கள் இதையே எடுத்து விளக்குகின்றன. வில்லியம் பார்க்ளே சத்தியத்தை அடகு வைத்த மனிதன். அம்மனிதன் தனியொருவனாக கிறிஸ்தவ உலகில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இவ்விதழ் எடுத்துரைக்கிறது. சீர்திருத்தவாதியும், தூய்மைவாதியுமான ஜோன் ஓவனின் அழியாப் படைப்பான “மரணத்தினால் உண்டாகும் வாழ்வு” எனும் நூலுக்கு வழங்கப்பட்ட அருமையான முன்னுரையின் முதல் பகுதியையும் இவ்விதழில் காணலாம். பழைய புதிய சுவிசேஷங்களை அடையாளங் கண்டு திருமறைபூர்வமான பழைய சுவிசேஷத்தைத் தொடர்ந்து நம்பிப் பிரசங்கித்து கர்த்தருக்கு மகிமை தேடித் தரும் வாழ்க்கையை நீங்களும் நானும் வாழத் தேவன் நல்லருள் புரிவாராக. – ஆசிரியர்.