கிருபையின் மாட்சி
எழுதியவர்: ஆபிரகாம் பூத்
தமிழாக்கம்: வேதவள்ளி மெசாயாடொஸ்
இந்நூலை இவ்விதழில் அறிமுகப்படுத்துவது ஒருவிதத்தில் மிகப் பொருத்தமானது. ஏனெனில் இவ்விதழில் தேவ கிருபையின் மகிமையைப் பற்றிய மேலும் பல நல்ஆக்கங்களை வாசகர்கள் பார்க்கலாம். ஆபிரகாம் பூத் கூறுவதுபோல், சீர்திருத்த சபைகளுக்கும் ரோமன் கத்தோலிக்க சபைகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கிருபையின் போதனைகளைப் பற்றியதே. சீர்திருத்த சபைகள் கிருபையின் மூலம் மட்டுமே ஒருவன் இரட்சிப்பை அடையலாம் என்று போதிக்க கத்தோலிக்க சபை கிரியைகளின் மூலம் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றது. இது இன்று கத்தோலிக்க சபைகள் மட்டும் வாதிடும் வாதமாக இல்லாமல் சுவிசேஷக் கோட்பாட்டாளர் மத்தியிலும் வேறு விதங்களில் காட்சியளிப்பதை வாசகர்கள் அறிவார்கள். ஆர்மீனியனிசக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களும் இதே போக்கையே பின்பற்றுகின்றனர். சுவிசேஷத்தைக் கேட்பவர்களைக் கரம் தூக்க வைத்து கடவுளிடம் கொண்டுவர முயலும் அனைவரும் தேவ கிருபையின் மாட்சியைப் புரிந்து கொள்ளாதவர்களே. தேவ கிருபைக்கு மதிப்பளிப்பவர்கள் மனித சக்தியை நம்பிக் காரியமாற்ற முயல மாட்டார்கள்.
கிருபையின் மாட்சியைக் குறித்த சத்தியமே பாவ உணர்வு பெற்ற மக்களுக்கு ஆறுதலையும் பரிசுத்தத்தையும் அருள வல்லதாயிருக்கிறது என்று உறுதியாய் நம்பும் நூலாசிரியர், பதின்மூன்று அதிகாரங்களில் கிருபையின் மாட்சியைத் திருமறையின் அடிப்படையில், தெளிவாகவும், அழகாகவும் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இன்று நூல்கள் எழுதும் அநேகர் சத்தியத்தை நம்பி அவற்றை எழுதுவதில்லை. சத்தியத்தை மட்டுமே எழுத வேண்டும் என்ற கொள்கையையும் கடைப்பிடிப்பதில்லை. இதற்கு மாறாக ஆபிரகாம் பூத் சத்தியத்தில் தனக்கிருக்கும் நம்பிக்கையும் உறுதியுமே இந்நூலை எழுதத் தூண்டியதாகக் கூறுகிறார். அவ்வுறுதி தனக்கில்லாதிருந்தால் இவற்றைக்குறித்துப் பேசவோ எழுதவோ துணிந்திருக்க மாட்டேன் என்று அறிவிக்கிறார்.
கிருபையின் சத்தியத்தைப் புரிந்து கொள்ள மறுப்பவர்களும், அதனை நிர்த்தாட்சண்யமாக எதிர்ப்பவர்களும் கடவுளின் தனிப்பெரும் ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்பதை உணர்வதில்லை. தேவகிருபை கடவுளின் தனிப்பெரும் ஆட்சியின் மகிமையை எடுத்துரைக்கிறது. மனிதனின் துணையில்லாமல், தனிப்பெரும் சித்தம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தில் அநேகரைத் தனது கிருபையின் மூலம் தெரிந்து கொண்டு, தனது ஒரே குமாரனான கிறிஸ்து இயேசுவின் மூலம் அவர்களுக்கு இரட்சிப்பையும் அளிக்கிறார் சர்வ வல்லவரான தேவன். இச்சத்தியத்தில் நம்பிக்கை வைக்க மறுப்பவர்கள் இரட்சிப்பிற்கு தங்களது பலவீனமான சுய வல்லமையையும், குறைந்தளவான ஞானத்தையும் மட்டுமே நம்பி நிற்க வேண்டும். அது ஒருபோதும் அவர்களைத் தேவனிடத்தில் கொண்டு வராது என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது. நீதியற்றவர்களான மனிதர்களை தேவனே நீதிமான்களாக்குகிறவர் என்று பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் கூறுகிறார் (ரோமர் 8:33).
வல்லமையற்றதாக, கிறிஸ்தவம் எனத்தன்னைக் காட்டிக் கொண்டு, பாவிகளான மனிதர்களுக்கு இரட்சிப்பின் பெயரில் போலித்தனமான உறுதியை வழங்கிவரும் ஒரு சுவிசேஷப் போதனை தமிழர்கள் மத்தியில் காவிரி போல் பெருகி ஓடும் இக்கடைசி நாட்களில், சத்தியத்தில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக வாங்கிப் படித்து சிந்தித்துப் பயனடைய வேண்டிய சிறு நூல் ‘கிருபையின் மாட்சி’. ஆபிரகாம் பூத் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும் அவரறிந்து ஆனந்தமடைந்த தேவகிருபை இந்நூலின் மூலம் நம்மோடு பேசட்டும்.