டொரான்டோ விமான நிலைய சபையில் ஏற்பட்டதாகக் கூறிப் பரவத்தொடங்கிய சிரிப்பலை மாயத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அமெரிக்காவில், புளோரிடா என்ற பிரதேசத்தில் உள்ள பென்ஸகோலா நகரின் பிரவுன்ஸ்வில் அசெம்பிளி என்ற சபையில் இது பரவியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுவரை ஒரு மில்லியனுக்கு மேலானோர் இதைப் பார்ப்பதற்காக இந்நகருக்கு விஜயம் செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பிரவுன்ஸ்வில் சபையில் இது ஏற்படக் காரணமானோர் இச்சபைப் போதகரான கில் பெட்ரிக்கும், தென் ஆப்பிரிக்க பென்டிகோஸ்டல் சுவிசேஷகரான ஸ்டீவன் ஹில்லுமே.
இவ்வெழுப்புதல், டொரான்டோ விமான நிலைய சபை எழுப்புதலையும் மீறிவிட்டதாகவும், சொல்லப்போனால் அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படும் எழுப்புதல்களையெல்லாம்விடப் பெரியதும், மேலானதுமானது என்று கில் பெட்ரிக் அறிவித்துள்ளார். இவ்வெழுப்புதல் இன்னும் ஆழமாகப் பரவி வானத்து முகில்களைக் கிழித்துக் கொண்டு இயேசு தோன்றப் போகிறார் என்று கில் பெட்ரிக் தனது சபையில் போதித்துள்ளார். இப்புதிய எழுப்புதலைப் பற்றி, கொரியாவின் போல் யொங்கி சோ 1991 தீர்க்கதரிசனம் கொடுத்ததாகவும் அதன் விளைவே இவ்வெழுப்புதல் என்றும் கூறப்படுகிறது.
பென்ஸகோலா எழுப்புதலின் இரு முக்கிய அம்சங்கள்
1. ஆவியால் தள்ளப்படுதல். இது பரிசுத்த ஆவியினால் ஏற்படும் ஒரு அனுபவமல்ல. இவ்வனுபவத்தால் மனிதர்கள், உடல் நடுக்கம் கண்டு, தம்மை மறந்து நிலத்தில் விழுந்து உருண்டு புரளும் நிலையை அடைகிறார்கள். ஸ்டீபன் ஹில் மேடையில் ஏறியதுமே மக்கள் பெருங்கூக்குரலிட்டுக் கதறி நிலத்தில் விழுந்து புரளுகிறார்கள். இவ்வாறு விழுபவர்களை எப்படிப் பிடிப்பது என்பதற்கான விளக்கங்களும் பிரவுன்ஸ்வில்லில் கொடுக்கப்படுகின்றது. பென்ஸகோலா ஒரு விதத்தில் டொரான்டோவையும் தாண்டிவிட்டது. ஹில், இத்தகைய மின்சார அனுபவம் தன்னை நிலத்தில் இருந்து நாலடி உயரத்திற்குத் தூக்கி நிறுத்தியதாகக் கூறுகிறார். அத்தோடு, இவ்வனுபவம் ஒருவரை நூறு அடி தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு சுவரில் தூக்கி எறிந்து, பின்பு அவரை தலையில் வெறும் வீக்கத்தோடு மட்டும் எழுந்து நடக்கச் செய்யும் என்று கூறுகிறார். இத்தகைய அனுபவங்கள், வேத அனுபவத்தை நாடும் மனித முயற்சியின் விளைவே. இது ஒரு ஹிஸ்டீரியா அனுபவமே தவிர தூய ஆவியின் செயற்பாடல்ல. கடவுளை அறியாத புற மதங்களிலும், மதங்களோடு தொடர்பற்ற மனிதர்கள் மத்தியிலும் இத்தகைய செயல்கள் பொதுவாகவே நடைபெற்று வருகின்றது. இவற்றோடு கிறிஸ்துவை சம்பந்தப்படுத்த முயலும் ஒரு முயற்சியே பென்ஸகோலா எழுப்புதல்.
2. இக்கூட்டங்களில் எந்தவித வேதப்பிரசங்கமோ, நற்செய்திப் போதனையோ கொடுக்கப்படாமல் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முன்வருமாறு மக்களுக்கு அழைப்புக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு வந்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறார்கள். இது வேதத்திற்குப் புறம்பான ஒரு முயற்சி. பேசப்படும் கர்த்தருடைய வார்த்தையே பரிசுத்த ஆவியினால் பயன்படுத்தப்பட்டு, ஒருவரது வாழ்க்கையில் கிருபையின் மூலமாகக் கிரியை செய்யும் என்று வேதம் போதிக்க, ஒரு பெருங்கூட்டமே இன்று தொடர்ந்து மனித முயற்சியால் மக்களைக் கர்த்தரிடம் கொண்டு வரும் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதையே பென்ஸகோலாவிலும் பார்க்க முடிகின்றது. இவ்வாறு சபைக்குள் கொண்டு வரப்பட்டவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியாமல் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போன கதைகள் ஏராளம். அப்படி சபைக்குள் கொண்டு வரப்பட்டவர்களை ஓடிவிடாமல் தொடர்ந்து வைத்திருக்கவே இன்று அநேக சபைகளில் ஆட்டம், கூத்துக்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
பென்ஸகோலா எழுப்புதல் இன்று பல நாடுகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் பரவசக்குழுவின் நாடகங்களில் ஒன்றே. யொங்கி சோ, ரொட்னி பிரவுன், கில் பெட்ரிக், ஹில் போன்ற போலிச் சாமிகள் இருக்கும் வரை அவர்களை நம்பி ஏமாந்து போகும் கூட்டமும் இருக்கவே செய்யும். பத்தோடு பதினொன்றாக நாமும் இதில் சேர்ந்துவிடாமல் இருந்தால் சரி.