போல் யொங்கி சோவின் நான்காவது பரிமாணம்

போல் யொங்கி சோ உலகிலேயே மிகப் பெரிய சபையான கொரியாவின் யொய்டோ பூரண சுவிசேஷ சபையின் போதகர். டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ், யொங்கி சோவின் இறையியற் கோட்பாடுகள் வரலாற்றுபூர்வமான கிறிஸ்தவத்தைவிட்டு விலகி நிற்பதாகக் கூறுகிறார். யொங்கி சோவின் போதனைகள் புத்த மதத்தையும், யோகப் போதனைகளையும் தழுவியவை. அந்நிய மதங்களைத் தழுவிய ஆபத்தான போதனைகளை யொங்கி சோ தொடர்ந்து போதித்து வருகிறார். இது அவரது போதனைகளை விளக்கும் இறுதிக் கட்டுரை.

போல் யொங்கி சோவின் நான்காவது பரிமாணம்

போல் யொங்கி சோவின் நான்காவது பரிமாணப் போதனைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் நான்காவது பரிமாணத்திற்குள் எவ்வாறு உள்ளிடுவது என்று யொங்கி சோ விளக்கும் அபத்தத்தைப் பார்த்தோம். வேதத்தில் காண முடியாத போதனைகளுக்கு வேத விளக்கம் கொடுத்து ஒன்றுமறியாத அநேக அப்பாவிகளைத் தொடர்ந்து அவர் ஏமாற்றி வரும் செயலையும் பார்த்தோம். இவ்விதழில் தொடர்ந்து அவரது முக்கியமான போதனைகளைப் பார்ப்போம்.

பேசப்படும் வார்த்தைகளின் வல்லமை

நாம் பேசும் வார்த்தைகளுக்கு அதிக வல்லமை இருப்பதாகக் கூறும் யொங்கி சோ, அதனைப் பயன்படுத்தி நாம் அநேக காரியங்களை சாதிக்க முடியும் என்று கூறுகிறார். இதைப்பற்றி மேலும் விளக்கும் யொங்கி சோ, கர்த்தர், நாம் வீணாக எதையும் அவரைக் கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட பேச்சின் வல்லமையால் காரியங்கள் சாதிப்பதையே விரும்புகிறார் என்று கூறுகிறார். பேச்சின் வல்லமையால் எவ்வாறு அநேக காரியங்களைச் சாதிப்பது என்ற உண்மையைக் கர்த்தர் தனக்கு வெளிப்படுத்தியதாகவும், அதனைப் பயன்படுத்தியே தன் வாழ்க்கையில் அநேக காரியங்களை சாதிக்க முடிந்ததாகவும், பலர் மத்தியில் அநேக அற்புதங்களைச் செய்யவும் இதுவே துணையாக இருந்ததென்றும் விளக்குகின்றார்.

லோகொஸ் (Logos), ரேமா (Rema) தத்துவம்

இத்தத்துவத்தை விளக்கும் யொங்கி சோ, வேதத்தில் இருவிதமான வார்த்தைகள் இருப்பதாகக் கூறுகிறார். அவை லோகொஸ், ரேமா எனும் வார்த்தைகள். லோகொஸ், கர்த்தரின் பொதுவான பேச்சைக் குறிக்க வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை என்று யொங்கி சோ விளக்குகிறார். அதாவது, வேதத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் லோகொஸ் என்று கூறலாம். அது கர்த்தரால் பேசப்பட்ட வார்த்தை. லோகொஸ் எல்லோருக்கும் பொதுவானது. அனைவராலும் வாசிக்க முடிந்த, கேட்க முடிந்த வார்த்தை. ஆனால் வேதத்தில் இன்னுமொரு கிரேக்க வார்த்தையையும் பார்க்கிறோம். அது ரேமா எனும் வார்த்தை. இவ்வார்த்தை வித்தியாசமானது. இது கர்த்தரால் பேசப்படும் வார்த்தை. ஒரு குறிப்பிட்ட மனிதனுக்காக, குறிப்பிட்ட சூழ்நிலையில் கொடுக்கப்படுகிற வார்த்தை. உதாரணமாக, ரோமர் 10:17; மத்தேயு 14:22, 31 ஆகிய வேதபகுதிகளில் வார்த்தை என்ற பதத்திற்கு ரேமா என்ற கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு வேதப்பகுதிகளிலும் ரேமா தேவனால் பேசப்படுகிற வார்த்தையைக் குறிப்பதாக யொங்கி சோ விளக்குகிறார். ஆனால், லோகொஸோ பொதுவான வார்த்தையை மட்டுமே குறிக்கிறது என்பது இவரது வாதம். மேலும் விளக்கமாகக் கூறினால், லோகொஸை அனைவரும் பெற்றுக்கொள்ளலாம், ஆனால் ரேமாவை எல்லோரும் அனுபவிப்பதில்லை. லோகொஸை மட்டும் நாடிப்போகிறவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவதில்லை. அவர்கள் கர்த்தரிடமிருந்து ரேமாவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாததால்தான் அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தை அடைவதில்லை என்று யொங்கி சோ போதிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ரேமாவைப் பெற்றுக் கொள்ளவதற்கு ஐந்து வழிமுறைகளையும் யொங்கி சோ காட்டுகிறார். இவ்வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ரேமாவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவரது போதனை. இவற்றைப் பயன்படுத்தியதாலேயே தனது வாழ்க்கையின் பெரு வெற்றிகள் ஏற்பட்டதாக யொங்கி சோ தெரிவிக்கிறார். யொங்கி சோ காட்டும் ஐந்து வழிமுறைகளும் வேத போதனைகளுக்கு முரண்பாடானவை.

விசுவாசமும், ஜெபமும்

விசுவாசத்தைப்பற்றியும், ஜெபத்தைப் பற்றியும் யொங்கி சோ போதிக்கும் போதனைகள் மக்களைக் கவரக்கூடியவை. தேவனில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்திற்கும் (Faith in God), தேவனுடைய விசுவாசத்தை நாம் கொண்டிருப்பதற்கும் (Faith of God) பெரும் வித்தியாசம் இருப்பதாக இவர் கூறுகிறார். அதாவது, ஒருவர் தேவனில் விசுவாசம் வைத்திருந்தபோதும் தேவனுடைய விசுவாசத்தைக் கொண்டிராமல் இருக்க முடியும் என்பது இவரது போதனை. தேவனில் இருக்கும் விசுவாசத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஜெபிப்பதால்தான் அநேகருடைய ஜெபங்கள் ஆசீர்வதிக்கப்படுவதில்லை என்கிறார் இவர். ஆகவே, அவர்கள் தேவனுடைய விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் யொங்கி சோ. இதற்கு உதாரணமாக மாற்கு 11:22, 23 வசனங்களை எடுத்துக் காட்டுகின்றார். இங்கே இவ்வசனங்கள் தேவனுடைய விசுவாசத்தைக் கொண்ட எவரும் ஒரு மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து கடலில் போய் விழு என்று கூறினால் அதன்படி நடக்கும் என்று இயேசு கூறுவதாக யொங்கி சோ விளக்கம் தருகிறார். ரேமாவை நாம் தேவனிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்போதே இத்தேவனுடைய விசுவாசம் நமக்குரியதாகின்றது என்பது இவரது போதனை.

இனி இப்போதனைகள் வேத அடிப்படையில் அமைந்தவையா என்று பார்ப்போம். அதுவே நமது நோக்கம். சிலர், சோம்பேறித்தனத்தின் காரணமாக வேதத்தை ஆராய்ந்து பார்க்க முனைவதில்லை. வேறு சிலர், யொங்கி சோ பிரபலமானவர் என்பதால் அவர் சொல்வதே வேதவாக்கு என்று நம்பத் தயாராக இருக்கின்றனர். கண்ணால் காண்பதெல்லாம் காட்சி என்று அலையும் வேறு சிலர், யொங்கி சோவின் போதனை எப்படியிருந்தாலும் அவர் வெற்றி அடைந்து வருவதால் அது மட்டுமே முக்கியம் என்று கர்த்தரின் வார்த்தைக்கோ, அவரது வழிகளுக்கோ முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் வேதத்தைக் கர்த்தரின் அதிகாரபூர்வமான வார்த்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் மனித ஞானத்திற்கோ, பிரபல்யத்திற்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுக்கு வேதம் மட்டுமே முடிவானதும், கர்த்தரின் அதிகாரபூர்வமான கட்டளையாகவும் அமைந்துள்ளது. ஆகவே, அனைத்தையும் கர்த்தரின் முடிவான வார்த்தையான வேதத்தின் அடிப்படையில் ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். ஒரு மனிதன் எத்தனை பிரபல்யமானவராக இருந்தபோதும் கர்த்தரின் வேதத்திற்கு மாறாகப் போதிக்கும் அதிகாரம் கொண்டவரல்ல என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதன் அடிப்படையில் யொங்கி சோவின் போதனைகளின் நச்சுத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதில் அவர்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆகவே, கிறிஸ்தவ உலகம் வீண் போய்விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு யொங்கி சோவின், மேலே விபரிக்கப்பட்ட தத்துவம் வேத அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்.

யொங்கி சோவின் போதனைகள் ஏன் தவறானவை?

1. லோகொஸ், ரேமா பற்றிய விளக்கம் வெறும் கட்டுக்கதை.

வேதத்தைப் படிக்கும்போது நாம் முக்கியமான இரண்டு காரியங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். முதலாவதாக, எப்போதுமே நாம் நமது சிந்தனைகளையும், கொள்கைகளையும் திணிப்பதற்காக வேதத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இரண்டாவதாக, வேதத்தில் காணப்படும் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டும் போதனைகளை உருவாக்க முனையக்கூடாது. வார்த்தைகளின் அர்த்தத்தை முழு வேதத்தின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். முழு வேதத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்படாத வார்த்தைகள் அர்த்தமற்றவை.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது யொங்கி சோவின் லோகொஸ், ரேமா ஆகிய வார்த்தைகள் பற்றிய விளக்கம் அர்த்தமற்றதே.

அ, யொங்கி சோவின் விளக்கப்படி, லோகொஸ், ரேமா ஆகிய இவ்விரு வார்த்தைகளும் ஒன்றோடொன்று தொடர்பற்ற வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டவை. ஆனால், வேதம் இவ்விதமாக இவ்விரு வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. வேதத்தில் இவ்விரு வார்த்தைகளும், ஒரே பொருளைக் குறிக்கும் இரு வார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டிற்குமே வார்த்தை என்பதே பொருள். ஒரே பொருளுள்ள இரு வார்த்தைகள் வேதத்தில் காணப்படுவதில் எந்தப் புதுமையுமில்லை. ஆனால், லோகொஸ், வார்த்தையைக் குறிக்கும் பொதுவான வார்த்தையாகவும், ரேமா தனிப்பட்டவருடைய பேச்சையோ அல்லது குறிப்பிட்ட ஒரு பேச்சின் பகுதியையோ (To indicate a conversation or part of a conversation) பொதுவாகக் குறிப்பிடும் வார்த்தையாகவும் பெரும்பாலும் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து பொருள் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இவை எச்சந்தர்ப்பத்திலும் யொங்கி சோ கூறுவது போன்ற பொருளில் வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. லோகொஸ் விசேடமாக கிறிஸ்துவின் இன்னுமொரு தெய்வீகப் பெயராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆ. யொங்கி சோவின் கூற்றுப்படி, பொதுவான வார்த்தையான லோகொஸைவிட ரேமாவே சிறப்பானதாகும். ரேமாவே தேவனால் பேசப்படுவதும், நாம் அற்புதங்களைச் செய்ய அவசியமானதுமாகும். ஆகவே, யொங்கி சோவைப் பொறுத்தவரையில் லோகொஸ் மட்டும் பயனற்றது. ஆனால் லோகொஸ் என்ற கிரேக்க வார்த்தை வேதத்தில் இயேசு கிறிஸ்துவையும், வேதத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதத்தைக் குறிக்கும் லோகொஸை பயனற்றதாகக் கூறுவது வேதத்திற்குப் புறம்பான போதனை. சக்தி வாய்ந்த ரேமாவை கர்த்தரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது கோட்பாட்டை விளக்க யொங்கி சோ ரோமர் 10:17 வேதப்பகுதியை உதாரணமாகக் காட்டுகிறார். “கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” இங்கே வசனம் என்பதற்கு ரேமா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் இவ்வார்த்தை வசனத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்படும் பிரசங்கத்தைக் குறிக்கின்றது. அதாவது இங்கே வசனம் என்ற வார்த்தை பொதுவாக முழு வேதத்தையும் குறிக்காமல் அவ்வேதத்தைப் பயன்படுத்திப் பிரசங்கிக்கப்படும் வார்த்தையைக் குறிக்கின்றது. இவ் வேதப்பகுதி முழுவதையும் அது அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் வாசித்துப் பார்த்தால் இவ்வாறு மட்டுமே பொருள் கொள்ள முடியும். அதை மறந்துவிட்டு வெறும் ரேமா என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு, அது கடவுளிடம் இருந்து பெறப்பட வேண்டிய விசேட வார்த்தை என்று வேதத்திற்குப் புறம்பாகப் பொருள் கூற முற்படுவது மடமை.

அதேபோல், அவர் குறிப்பிடும் இன்னுமொரு வேதப்பகுதியான மத்தேயு 14:29 இல் இயேசு கிறிஸ்து பேதுருவை நோக்கி தண்ணீரில் நடந்து வரும்படியாக வா என்று அழைத்ததாகவும் ரேமா என்ற கிரேக்க வார்த்தையே அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வார்த்தையின் வல்லமையால்தான் பேதுருவால் நடக்க முடிந்ததாகவும் யொங்கி சோ கூறியிருப்பது தவறானது. இப்பகுதியை வாசித்துப் பார்த்தால் யொங்கி சோ கூறுவது போல் கிறிஸ்து பேதுருவை நோக்கி “வா” என்று அழைத்தபோதும் ரேமா என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. வேறொரு வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இவ்வேதப் பகுதியையும் யொங்கி சோ தவறாகத் தனது சுய நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆகவே, யொங்கி சோ விளக்குவது போல் லோகொஸைவிட ரேமா சிறப்பானதாக வேதத்தில் விளக்கப்படவில்லை.

இ. யொங்கி சோ, ரேமாவை நாம் தேவனிடம் இருந்து காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிக்கின்றார். ரேமாவின் மூலமாக நாம் அநேக காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பதும் அவரது வாதம். ஒருவர் அற்புதங்கள் செய்ய விரும்பினால் அவர் ரேமாவைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் யொங்கி சோ. இவ்வாறாக பயனற்ற லோகொஸில் நேரம் செலவழிப்பதைவிட சக்தியுள்ள ரேமாவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அல்லது அதன் மூலம் மட்டுமே அற்புதங்கள் செய்ய முடியும் என்பதும் வெறும் கட்டுக்கதை.

ஆகவே, யொங்கி சோவின் லோகொஸ், ரேமா பற்றிய போதனை வேத அடிப்படையில் அமைந்ததல்ல. இது அவரது சொந்த வார்த்தை அலங்காரம் மட்டுமே. வேத வார்த்தைகளை அரைகுறையான கிரேக்க மொழி ஞானத்துடனும், இறையியல் அறிவுக்குறைபாட்டோடும் பயன்படுத்தியதன் விளைவே இப்போதனை. தனது சுய எண்ணங்களுக்கு வேத வார்த்தைகளைப் பயன்படுத்தி இறையியல் விளக்கம் கொடுக்க முனைகிறார் யொங்கி சோ. கர்த்தர் தனக்கு மட்டுமே வெளிப்படுத்திய சத்தியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் முயற்சி இது. வேதத்தில் ஏற்கனவே தெளிவாகப் போதிக்கப்படாத எந்தவொரு சத்தியத்தையும் கர்த்தர் இன்று வெளிப்படுத்துவதில்லை.

அத்தோடு, ஏற்கனவே தான் தெளிவாக விளக்கத்துடன் கொடுத்துள்ள வேதத்திற்கு வேறுவிதமான பொருளை புது வெளிப்படுத்துதலின் மூலம் கர்த்தர் எவருக்கும் கொடுப்பதில்லை. அவ்வாறு கர்த்தர் செய்தார் என்று கூறுவது அவர் அடிக்கடி தனது மனதை மாற்றிக் கொள்கிறார் என்று கூறுவது போலாகும். கர்த்தர் என்றும் மாறாதவர், வாக்குத்தத்தத்தின் தேவன் என்று வேதம் தெரிவிக்கின்றது.

2. வேதம், தேவனில் நாம் வைத்திருக்கும் விசுவாசம், தேவனுடைய விசுவாசம் என்று யொங்கி சோ கூறுவதுபோல் விசுவாசத்தை இரு பிரிவாகப் பிரித்துக் காட்டுவதில்லை.

விசுவாசத்தின் மூலம் எவ்வாறு அற்புதங்கள் செய்வது, எவ்வாறு வெற்றிகரமான வாழ்க்கை நடத்துவது என்பதற்கு யொங்கி சோ வகுத்துத் தந்துள்ள விசுவாசத்தைப் பற்றிய போதனை வியப்புக்குரியது. விசுவாசத்தை அவர் இரண்டுவிதமாகப் பிரித்துக் காட்டுகிறார். ஆனால் வேதத்தைப் பொறுத்த வரையில் பலவிதமான விசுவாசங்களை அது போதிப்பதில்லை. விசுவாசத்தில் அற்ப விசுவாசம், போலி விசுவாசம் என்பவை பற்றி வேதம் பேசுவதைக் காணலாம். ஆனால், இவர் கூறுவதைப் போல் தேவனில் நாம் வைத்திருக்கும் விசுவாசம், தேவனுடைய விசுவாசம் என்று இருவகை இல்லை. தேவன் நமக்கு ஈவாகத் தந்திருக்கும் விசுவாசம் ஒன்றே. அவ்விசுவாசத்தால்தான் நாம் தேவனில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். சிலவேளைகளில் கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் ஊக்கம் செலுத்தாதிருந்தால் அவ்விசுவாசம் உறுதி குறைந்து காணப்படலாம். நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர்வடையும்போது அவ்விசுவாசம் உறுதி பெற்றுக் காணப்படும். ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் வளம்பெற உயர்வான வேறொரு விசுவாசத்தை, அதாவது தேவனுடைய விசுவாசமென்றதொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வேதம் எங்கும் போதிக்கவில்லை. ஆனால், யொங்கி சோவைப் போன்றவர்கள் எப்போதும் கர்த்தர் இப்போதனையைத் தங்களுக்கு மட்டும் விசேடமாக வெளிப்படுத்தியதாகக்கூறி கிறிஸ்தவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேதத்தில் ஏற்கனவே வெளிப்படுத்தப்படாத ஒரு போதனையைக் கர்த்தர் வேறுவிதத்தில் வெளிப்படுத்துகிறார் என்று கூறுவது வேதத்திற்கு முரணான போதனை. அவ்வாறு கர்த்தர் இதுவரை தனது வார்த்தையை மீறி எதையும் வெளிப்படுத்தியதில்லை. இவ்வாறு போதிப்பவர்களை கிறிஸ்தவர்கள் நம்பக்கூடாது.

3. வேதத்தைத் தவறாகப்பயன்படுத்துகிறார் யொங்கி சோ.

வேதத்தைப் படிக்கும்போது கைக்கொள்ள வேண்டிய இரு முக்கிய இலக்கணங்களைப்பற்றி ஆரம்பத்தில் பார்த்தோம். யொங்கி சோவைப் பொறுத்தவரையில் இவற்றிற்கு அவரது ஏட்டில் இடமில்லை. கர்த்தரின் பெயரைச் சொல்லி தேவ பயமே இல்லாது வேதத்தைக் கண்மூடித்தனமான விதத்தில் தவறாக வியாக்கியானம் செய்து இக்கோட்பாடுகளை அவர் உருவாக்கியுள்ளார். கெரிஸ்மெடிக் கூட்டத்தார் மத்தியில் இது சகஜமாக நடக்கும் ஒரு காரியம். பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்கள் வேதத்தைத் தொடர்ந்து அலட்சியம் செய்து வேதம் அனுமதிக்காத காரியங்களையெல்லாம் கர்த்தரின் பெயரில் செய்து வருகிறார்கள். கர்த்தர் தனது வார்த்தையில் கூறியிராதவற்றை நம்பக்கூடாது. ஆனால் அதற்கு முரணாக நடந்து, வழியில் வந்த ஒரு போலி மனிதனின் வார்த்தையைக் கேட்டு அழிந்தான் தேவ மனிதன் என்று 1 இராஜாக்கள் 13 இல் வாசிக்கிறோம். தேவ மனிதன் செய்த தவறு கர்த்தர் தெளிவாகக் கூறியிருந்த சத்தியத்தை விட்டு விலகி, கர்த்தர் வெளிப்படுத்தினார் என்று கூறி ஏமாற்ற முனைந்த மனிதனை நம்பியதே. இதே போல் கர்த்தரின் பெயரில் உலவிவரும் யொங்கி சோவை நம்பி அழியாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை.

4. யொங்கி சோவின் விசுவாசம் கர்த்தரைவிட மனித சக்தியிலேயே அதிகமாகத் தங்கியுள்ளது.

கர்த்தரின் திட்டங்களின் இறுதி வெற்றி மனிதனிலேயே தங்கியுள்ளது என்று நம்புபவர் யொங்கி சோ. இதையும் வேத அடிப்படையில் அவர் நிரூபிக்க முயன்றாலும் வேதம் அதற்கு எதிரான போதனையையே அளிக்கிறது. மனித சக்தியில் நம்பிக்கை வைக்கும் முதல் மனிதர் யொங்கி சோ அல்ல. இதை அநேகர் ஏற்கனவே செய்துள்ளனர். நவீன கெரிஸ்மெடிக் இயக்கத்தின் பலவீனமும் இதிலேயே தங்கியுள்ளது. மனித சக்தியில் நம்பிக்கை வைத்து கோட்பாடுகளை உருவாக்கியவர்களில் சார்ள்ஸ் பினி முதலிடம் பெறுகிறார். பெலேஜியனிசக் கோட்பாட்டைப் பின்பற்றிய பினியின் போதனைகளின் பல அடையாளங்களை யொங்கி சோவிலும் காணமுடிகின்றது.

5. யொங்கி சோவின் போதனைகளில் இரட்சிப்பு பற்றியோ மனந்திரும்புதல் பற்றியோ தீர்க்கமான எந்தவித விளக்கத்தையும் காணமுடியவில்லை.

அற்புதங்களும், அடையாளங்களும் செய்வதற்காகவே மனிதன் பிறவி எடுத்திருப்பது போலவும், ஒருவருடைய வாழ்க்கையின் இலட்சியமாக இவையே இருக்க வேண்டும் என்பது போலவும் அவரது போதனைகள் காணப்படுகின்றன. அவற்றில் கிறிஸ்துவின் மரணத்தின் மேன்மையைப் பற்றியோ, பாவத்திலிருந்து மனிதனை விடுதலை செய்ய கர்த்தர், கிறிஸ்துவின் மூலம் ஏற்படுத்தித் தந்திருக்கும் பரிகாரப்பலியின் அற்புதத்தைப் பற்றியோ பார்க்க முடிவதில்லை. கிறிஸ்துவின் பெயரை அவர் அடிக்கடி பயன்படுத்தினாலும் தனது போதனைகள் கடவுளுடையவை என்று நிரூபிப்பதற்காகவே அதை அவர் செய்துள்ளார். மனந்திரும்புதலைப் பற்றியோ, அதன் தவிர்க்க முடியாத அவசியத்தைப்பற்றியோ அவரது போதனைகளில் காணமுடிவதில்லை. இரட்சிப்பே வேறு எதைவிடவும் மேலானது. அதற்கே நாமனைவரும் முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்துவை நாடி வரவேண்டும் என்றெல்லாம் அவர் போதிப்பதில்லை.

6. யொங்கி சோவின் கிறிஸ்தவம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல.

கிறிஸ்தவம் என்ற பெயரில் யொங்கி சோ போதிக்கும் அனைத்தும் வேதத்தோடு பொருந்தி வருவதாயில்லை. வேதத்திற்கு வெளியில் இருந்து கர்த்தரின் வெளிப்படுத்தலை நாடி அலையும் எந்த இயக்கமும், தனி நபர்களும் வேதத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களல்ல. வேதத்திற்குக் கட்டுப்படாமல், கிறிஸ்துவின் பெயரில் வேதத்திற்கு முரணான போதனைகளை உருவாக்கிப் போதிப்பவர்கள், அவர்கள் எத்தனை பிரபல்யமானவர்களாக இருந்தபோதும் கிறிஸ்துவை உண்மையில் நேசிப்பவர்களல்ல. அவர்களது போதனைகளும் வரலாற்றுரீதியான கிறிஸ்தவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்க முடியாது.

இறுதியாக, யொங்கி சோவின் நான்காம் பரிமாணக் கோட்பாடு கர்த்தரின் கோட்பாடல்ல. அது புற மாத அடிப்படையில் அமைந்த போலிக்கோட்பாடு. இது போன்ற போதனைகளும், அவற்றை உருவாக்குபவர்களும் தொடர்ந்து இவ்வுலகில் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறு வருகை சமீபிக்கும் இந்நாட்களில் இத்தகைய போலிப் போதனைகள் உலவி வருவது ஒரு விதத்தில் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனெனில், கிறிஸ்துவே இவ்வாபத்துக்களைக் குறித்து ஏற்கனவே வேதத்தில் எச்சரிக்கை செய்துள்ளார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s