போல் யொங்கி சோ உலகிலேயே மிகப் பெரிய சபையான கொரியாவின் யொய்டா பூரண சுவிசேஷ சபையின் போதகர். டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ், யொங்கி சோவின் இறையியற் கோட்பாடுகள் வரலாற்று பூர்வமான கிறிஸ்தவத்தைவிட்டு விலகி நிற்பதாகக் கூறுகிறார். யொங்கி சோவின் போதனைகள் புத்த மதத்தையும், யோகப் போதனைகளையும் தழுவியவை. அந்நிய மதங்களைத் தழுவிய ஆபத்தான போதனைகளை யொங்கி சோ தொடர்ந்து போதித்து மக்களை ஏமாற்றி வருகிறார்.
போல் யொங்கி சோ நான்காம் பரிமாணம்
போல் யொங்கி சோவின் கோட்பாடுகளையும் ஊழிய முறைகளையும் விளக்கும் நூலான நான்காம் பரிமாணத்தில் விசுவாசத்தைக் குறித்த அவரது வேதத்திற்குப் புறம்பான விளக்கங்களைக் கடந்த இதழில் பார்த்தோம், தொடர்ந்து இந்நூலில் அவர் விளக்கும் வேறு சில போதனைகளையும் கவனிப்போம்.
யொங்கி சோ நான்காவது பரிமாணம்
நான்காவது பரிமாணம் என்பது யொங்கி சோவின் நூலுக்குப் பெயர். ஏனெனில், நமது வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கான இரகசியம் இந்நான்காம் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதில்தான் தங்கியுள்ளது என்று யொங்கி சோ அறிவிக்கிறார். இதில் வியப்பான ஒரு அம்சம் என்னவெனில் இந்த இரகசியம் தனிப்பட்ட முறையில் கர்த்தரால் யொங்கி சோவுக்கு மட்டுமே வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட பின்பே அவரது வாழ்க்கை, ஊழியம் அனைத்தும் வளம் பெறத் தொடங்கியது என்பது அவரது கூற்று.
யொங்கி சோ போதிக்கும் இந்நான்காம் பரிமாணம்தான் என்ன? இது வடிவியலின் (Geometry) அடிப்படையில் யொங்கி சோ உருவாக்கியுள்ள ஒரு போதனை. வடிவியலின்படி மூன்று பரிமாணங்கள் காணப்படுகின்றன. அம்மூன்று பரிமாணங்களுக்கும் மேலாக நான்காவது பரிமாணம் என்று ஒன்றிருப்பதாக யொங்கி சோ கூறுகிறார். இந்நான்காம் பரிமாணமே முதல் மூன்று பரிமாணங்களையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது இவரின் போதனை. அந்நான்காம் பரிமாணம்தான் பரிசுத்த ஆவி. எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் பரிசுத்த ஆவி. இதற்கு ஆதாரமாக அவர் காண்பிக்கும் வேதப்பகுதி ஆதியாகமம் 1:2. அங்கே, பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். இவ்வசனத்தை வைத்தே யொங்கி சோ தனது நான்காம் பரிமாணப் போதனையை உருவாக்கியுள்ளார். அதாவது பூமியை ஆவியானவர் அடைக்காத்துக் கொண்டிருக்கிறார் என்றும், அருவருப்பாக இருந்த பூமியை அழகுள்ளதாக ஆவியானவரே தனது அடைகாத்தலின் மூலமாக மாற்றியுள்ளார் என்றும் இவர் போதிக்கிறார். இதுவே சோவின் நான்காம் பரிமாணப் போதனைக்கு ஆதாரம். இதோ இதை அவரே விளக்குகிறார், “தேவன் என் இருதயத்தில் பேசினார். மகனே! எப்படி இரண்டாம் பரிமாணம் முதல் பரிமாணத்தை உள்ளடக்கித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறதோ, எப்படி மூன்றாம் பரிமாணம் இரண்டாம் பரிமாணத்தை உள்ளடக்கித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறதோ, அதேபோல் நான்காம் பரிமாணம் மூன்றாம் பரிமாணத்தை உள்ளடக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதோடு, ஒழுங்கும் அழகுமுள்ள ஒரு உருவாக்கும் வேலையையும் செய்கிறது. அவ்வேலையைச் செய்கிற ஆவியானவரே நான்காம் பரிமாணம். ஒவ்வொரு மனிதனும் சரீரப்பிரகாரமானவன் மட்டுமல்லாமல் ஆவிக்குரியவனாகவும் இருக்கிறான். அவர்களுடைய இருதயத்தில் மூன்றாம் பரிமாணம் மட்டுமல்ல நான்காம் பரிமாணமும் உள்ளது. ஆகவே மனிதர்கள் தங்களுடைய தரிசனத்தையும் கனவையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்தி அதை தங்களது சிந்தனையில் ஆழ்த்தி மூன்றாம் பரிமாணத்தின் மீது அடைகாத்து தங்களிலுள்ள நான்காம் பரிமாணமாகிய ஆவிக்குரிய பகுதியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டு மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடைகின்றனர். பரிசுத்த ஆவியானவர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.”
மேல்வரும் போதனையைத்தான் மேலும் பல உதாரணங்களுடனும், விளக்கங்களுடனும் யொங்கி சோ தனது நூல் முழுவதும் தந்துள்ளார். முதலில் இதைக் சுருக்கமாகப் பார்ப்போம். யொங்கி சோவின் போதனையின்படி, ஆவியானவர் அவருக்கு அளித்த இப்போதனை மட்டுமே ஒரு கிறிஸ்தவனை வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவும். இந்நான்காவது பரிமாணத்திற்குள் நுழையாததால்தான் கிறிஸ்தவர்களில் பலர் கடவுளை மகிமைப்படுத்தும் வாழ்க்கையை வாழ முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்நான்காம் பரிமாணத்திற்குள் நுழைந்து ஆவியானவரைத் தங்களது சிந்தனையின் உள்ளுணர்வில் சந்திக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது? கனவுகள் மூலமும், தரிசனங்களாலும் மட்டுமே ஒருவர் இந்நான்காம் பரிமாணத்திற்குள் நுழைய முடியும். உதாரணமாக நமக்கு ஒரு வாகனம் தேவை என்று வைத்துக் கொள்வோம். அவ்வாகனத்தைக் கடவுளிடம் இருந்து நமது விசுவாசத்தால் அடைய வேண்டுமானால், நாம் முதலில் நமது சிந்தனையின் உள்ளுணர்வை அடைகாக்க வேண்டும். அதை எவ்வாறு செய்வது? அவ்வாகனத்தை நாம் கனவில் சந்திக்க வேண்டும். அழுத்தமாக, உறுதியாக கனவில், தரிசனத்தில் அவ்வாகனத்தைப் பார்க்கும்போது நாம் நமது சிந்தனையின் உள்ளுணர்வை அடைகாக்கிறோம் என்பது யொங்கி சோவின் போதனை. இவ்வாறாக நான்காம் பரிமாணத்திற்குள் நாம் உள்ளிடும்போது அவ்வாகனம் நமக்குக் கிடைப்பது உறுதியாகின்றது. இதுதான் யொங்கி சோவின் நான்காம் பரிமாணப் போதனை.
இப்போதனையில் ஏதும் உண்மையிருக்கிறதா? பல்லாயிரக்கணக்கானவர்களை இப்போதனை மயக்கி யொங்கி சோவைப் பின்பற்றச் செய்திருப்பதால் அதில் ஏதாவது உண்மையிருக்கத்தான் செய்யும் என்று எண்ணி அழிவதே தமிழ் சமுதாயத்தின் வழமையாகும். ஆனால் அவ்வாறு எண்ணி கிறிஸ்தவத்தைப் பாழடிக்க முனையும் இப்போதனையை நாம் ஆராயாது இருக்க முடியாது. ஆகவே கிறிஸ்தவத்தின் அடித்தளமாகவிருப்பதும், அதிகாரபூர்வமானதுமான வேதம் இதைப்பற்றி என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.
1. ஆதியாகமம் 1:2 ஐக் குறித்த யொங்கி சோவின் போதனை இரண்டு விதங்களில் தவறானது. முதலாவதாக, ஆவியானவர் பூமிக்கு மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் சரியானதல்ல. அதைக் கோழி முட்டையை அடைகாப்பது போல் கற்பனை செய்து பார்க்கிறார் இம்மனிதர். அங்கே சொல்லப்பட்டிருப்பது என்னவெனில் ஆவியானவர் பூமியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். அத்தோடு, பூமி ஒழுங்காக அமைந்திருக்கவில்லை என்றுதான் பார்க்கிறோமே தவிர யொங்கி சோ கூறும் வகையில் அருவருப்புத் தரும் விதத்தில் இருந்ததாக வேதம் போதிக்கவில்லை. இரண்டாவதாக, ஒருவசனத்தை மட்டும் வைத்து அதன் அடிப்படையில் எந்தவிதமான போதனைகளையும் உருவாக்கக்கூடாது என்பது வேதம் படிக்கும் போது மனத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான வேத விதி. அதை மீறி இவ்வசனத்தின் அடிப்படையில் ஒரு போதனையை வேதத்திற்கு முரணாக யொங்கி சோ உருவாக்கியுள்ளார்.
2. இந்நான்காம் பரிமாணப் போதனையை ஆவியானவர் தனக்கு விசேடமாக விளக்கியுள்ளதாக யொங்கி சோ கூறுகிறார். இது அடுத்த தவறு. தனிப்பட்ட முறையில் தனி நபருக்கு மட்டும், அவர் எவ்வளவு தூரம் கிறிஸ்தவ வாழ்க்கையில் மேம்பட்டவராக இருந்த போதும், வேதத்தைப் படித்த மற்றவர்களால் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சத்தியத்தை ஆவியானவர் விளக்குவார் என்று கிறிஸ்துவோ, வேதமோ போதிக்கவில்லை. அத்தோடு இத்தகைய போதனையை முழு வேதத்திலும் பார்க்க முடியாது. கெரிஸ்மெட்டிக் கூட்டத்தார் இங்கேயே மோசம் போய்க் கொண்டிருக்கிறார்கள். வேதத்திற்கு வெளியிலிருந்து சத்தியத்தைப் பெற்றுக் கொள்ள அவர்கள் தொடர்ந்து முயற்சி எடுப்பதால் இத்தகைய ஆபத்தை அவர்களால் தவிர்க்க முடியாமலிருக்கிறது. யொங்கி சோவுக்கு மட்டும் வேதத்தில் காணப்படாத, வேதத்திற்கு முரணான ஒரு போதனையை ஆவியானவர் அளித்துள்ளார் என்று நம்புவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், ஆவியானவரையும், வேதத்தையும் அவமதிப்பதாகும்.
3. பரிசுத்த ஆவியை நான்காம் பரிமாணமாக வேதம் எங்கும் வர்ணிக்கவில்லை. யொங்கி சோ பரிசுத்த ஆவியைப்பற்றிய பல தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளார். அவரது கூற்றுப்படி நாம் ஆவியைப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில்தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சி தங்கியுள்ளது. ஆனால் வேதம் ஆவியானவர் எல்லாக் கிறிஸ்தவர்களிலும் அவர்களுடைய அனுமதிக்குக் காத்திராது கிரியை செய்கிறார் என்று போதிக்கின்றது. இதனால் நாம் செய்ய வேண்டிய தொன்றும் இல்லை என்று நாம் எண்ணிவிடக் கூடாது. வேதம் ஆவிக்குரிய செயல்களை நாம் செய்ய வேண்டுமென்று போதிக்கின்றது. அதாவது பரிசுத்த ஆவி நம்மில் குடிபுகுந்திருப்பதால் அவரது இலட்சணங்களைக் கொண்ட மனிதர்களாக அவரது வழிப்படி வேதம் போதிக்கும் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். ஆனால், பரிசுத்த ஆவியின் கிரியைகள் நம்மில் காணப்படவும், அவரது ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக் கொள்ளவும் நமது சிந்தனையின் உள்ளுணர்வைக் கட்டுப்படுத்தி நமது முயற்சியால் ஆவியின் உலகில் புக வேண்டுமென்று போதிப்பது அந்நிய சமயங்கள் போதிக்கும் போதனை. இதற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யொங்கி சோ, உளவியல் மற்றும் புத்த மதக் கருத்துக்களுக்கு கிறிஸ்தவ வடிவம் கொடுப்பது தெளிவாகத் தெரிகின்றது.
4. கனவு மற்றும் தரிசனங்கள் காண்பதன் மூலம் தனக்குத் தேவையானவற்றை ஒருவர் கடவுளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முயல வேண்டும் என்று போதிப்பது புறமதப் போதனை. இதற்கு யொங்கி சோ கொடுக்கும் வேத உதாரணங்கள் சிரிப்புக்கிடமானவை. வேதப் பகுதிகளை அவர் திரிபுபடுத்தி தனது கருத்துக்களை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார். உதாரணத்திற்கு, ஆபிரகாமின் முன் கர்த்தர் தோன்றி வானத்து நட்சத்திரங்களைக்காட்டி, அந்தளவுக்கு உனது வம்சத்தைக் கட்டியெழுப்புவேன் என்று கூறியதை இவர் திரிபுபடுத்தி, ஆபிரகாம் அந்நட்சத்திரங்களை அடிக்கடி உற்றுப்பார்த்து தன் மனதிலும், கற்பனையிலும் அவற்றைத் தனது பிள்ளைகளாகப் படம்பிடித்து, தனது சிந்தனையின் உள்ளுணர்வைக் கட்டுப்படுத்தியதால் அக்கனவு நான்காம் பரிமாணமாகி அவனது சரீரத்தில் கிரியை செய்யத் தொடங்கியதாகவும், அதனால் அவர் தனது சரீரத்தில் வாலிபத்தன்மையைப் பெற்றதாகவும் போதிக்கிறார். இவ்வேதப் பகுதிக்கு இவ்வாறு விளக்கம் கொடுப்பது வேதவிதிகளை மீறுவதாகும். இதிலிருந்து யொங்கி சோ வேதப் பகுதிகளுக்கு தவறான பொருள் கொடுப்பதைப் பார்க்கலாம்.
5. யொங்கி சோவின் போதனைகளினால் கர்த்தர் மகிமைப்படுத்தப்படுவதில்லை. மனிதன் மகிமைப்படுத்தப்படுகிறான். மனிதன் தனது வல்லமையைப் பயன்படுத்தி அநேக காரியங்களை வாழ்க்கையில் சாதித்துக் கொள்ளலாம் என்பதே இவரது போதனை. நோர்மன் வின்ஸன்ட் பீல் என்ற மனிதர், “சாதகமான எண்ணங்களை எண்ணுவதன் வல்லமை” என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றார். இம் மனிதர் இராஸ்தலைப் போன்ற ஒரு மனித நலவாதி (Humanist). இப்போதனையைப் பின்பற்றும் இன்னுமொரு அமெரிக்கப் பிரசங்கி “கண்ணாடி மாளிகையின்” ரொபட் சூளர். இதே போதனைக்கு யொங்கி சோ வேதத்தைப் பயன்படுத்தி விளக்கம் கொடுக்க முயல்வது கண்கூடு. கர்த்தர் இறைமையுள்ளவர், அவர் தனது திட்டங்களை மனிதன் மூலம் நிறைவேற்றத் தன் சித்தப்படி செயல்படுகின்றார் என்ற போதனைக்கு யொங்கி சோவின் ஏட்டில் இடமில்லை.
6. இறுதியாக, யொங்கி சோவின் நான்காம் பரிமாணப் போதனைக்கு வேதத்தில் இடமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேதத்தை, வேதம் போதிக்கும் முறையில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சத்தியத்தை இம்மனிதர் முற்றாக நிராகரித்து, வேதத்தைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு போதனை எத்தனை கவர்ச்சியுள்ளதாக இருந்தாலும், அது எவ்வளவு கவர்ச்சிகரமான, புத்திசாலித்தனமுள்ள மனிதரால் போதிக்கப்பட்டாலும் அது வேதத்திற்குப் புறம்பானதெனில் அதை நாம் என்றுமே புறக்கணிக்கத் தயங்கக்கூடாது. ஒருவர் பெரிய மனிதராக இருக்கலாம். கர்த்தரின் பெயரில் பெரும் காரியங்களைச் செய்பவர் போல் தென்படலாம். ஆனால் அம்மனிதர் வேதத்தை அடியோடு மாற்றிப் போதிக்கும்போது அவரைப் பின்பற்றுவது அழிவிற்கே வழிவகுக்கும். மீகா செய்ததற்கும் யொங்கி சோவின் செயலுக்கும் ஒருவித்தியாசமுமில்லை. கர்த்தரின் பெயரைச் சொல்லி அவரது வார்த்தைக்கு எதிராகக் கோவில் கட்டிளான் மீகா. இதையே யொங்கி சோவும் செய்துவருகிறார்.
(வளரும்)