போல் யொங்கி சோ நான்காம் பரிமாணம்

போல் யொங்கி சோ உலகிலேயே மிகப் பெரிய சபையான கொரியாவின் யொய்டா பூரண சுவிசேஷ சபையின் போதகர். 1958 இல் ஆரம்பமான இவ்வூழியம் மூன்று வருடங்களுக்குள் 1500 பேர் இருக்கக்கூடிய சபைக்கட்டிடத்தை சொந்தமாகப் பெற்றது. 1984 இல் சபையில் 500,000 அங்கத்தவர்கள் இருந்தனர். 1991 இல் இத்தொகை 700,000 ஆக உயர்ந்தது. 2000 ஆண்டுக்குள் இத்தொகையை ஒரு மில்லியனாக உயர்த்துவது சபையின் நோக்கம். டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ், யொங்கி சோவின் இறையியற் கோட்பாடுகள் வரலாற்று பூர்வமான கிறிஸ்தவத்தைவிட்டு விலகி நிற்பதாகக் கூறுகிறார். யொங்கி சோவின் போதனைகள் புத்த மதத்தையும், யோகப் போதனைகளையும் தழுவியவை. அந்நிய மதங்களைத் தழுவிய ஆபத்தான போதனைகளை யொங்கி சோ தொடர்ந்து போதித்து மக்களை ஏமாற்றி வருகிறார்.

போல் யொங்கி சோ நான்காம் பரிமாணம்

போல் யொங்கி சோ தென் கொரிய நாட்டின் பிரபலமான பரவசக்குழுவைச் சார்ந்த பிரசங்கி. தென் கொரியாவின் தலை நகரான சியோலில் ஏழரை இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பூரண சுவிசேஷ சபையின் தலைமைப் போதகராக யொங்கி சோ இருந்து வருகிறார். உலகின் மாபெரும் கிறிஸ்தவ சபையின் போதகர் என்று பரவசக் குழுவினரால் கருதப்பட்டு வரும் யொங்கி சோ உலகமெங்கும் பயணம் செய்து தனது கொள்கைகளைப் பரப்பி சபை வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் யொங்கி சோ நான் வாழும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் “அசெம்பிளி ஆப் கோட்” சபையில் தனது கூட்டங்களை நடத்திக் கொண்ருக்கிறார்.

இவ்வளவு தூரம் யொங்கி சோ பிரபல்யமடையக் காரணம் என்ன? அவரது வெற்றியின் இரகசியம் என்ன? பரவசக்குழுவினர் அவரது கோட்பாடுகளைப் பின்பற்றி அவரைப்போல வாழ்கையில் சாதனைகள் செய்ய முயலுமளவுக்கு அவர் சாதித்தது என்ன? இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் தமிழகத்து தினகரன் முதல் பல பரவசக்குழுவைச் சார்ந்த தலைவர்களும் அவரது காலில் விழுந்த நிகழ்ச்சி கடந்த வருடம் மெரினாவில் நடந்ததே! அதன் மர்மம் என்ன? யொங்கி சோ நமது ஆராய்ச்சியை இலகுவாக்கி தானே இதுபற்றி விபரமாக ஒரு நூலில் எழுதியுள்ளார். “நான்காம் பரிமாணம்” என்று அழைக்கப்படும் இந்நூல், தமிழில் அழகாக அச்சடிக்கப்பட்டு தமிழர்கள் மத்தியில் விற்பனையாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பிரதியை நான் பல வருடங்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். அதன் தமிழ்ப்பிரதியை கடந்த வருடம் நண்பர் ஒருவர் மூலமாகப் பெற்று வாசிக்க முடிந்தது. உண்மையில் கூறப்போனால் நான் இதுவரை இவ்வளவு மோசமானதொரு நூலை வாசித்ததில்லை என்றே கூற வேண்டும். வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி சிந்திக்க மறுப்பவர்கள் ஏமாந்து போவதற்கு எது காரணம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது.

விசுவாசத்திற்கு யொங்கி சோ கொடுக்கும் விளக்கம்

கிறிஸ்துவின் மேல் தான் வைத்திருக்கும் விசுவாசமே தனது வெற்றியின் இரகசியம் எனக்கூறும் யொங்கி சோ விசுவாசத்தைப் பற்றித் தனது நூலில் விளக்குகிறார். வேதமோ, விசுவாசம் என்பது நம்பப்படுபவைகளில் இருக்கும் உறுதி என்று போதிக்கின்றது. ஆனால் யொங்கி சோ விசுவாசமென்பது, நாம் விரும்பும் பொருட்களை கடவுளின் பெயரால் நிச்சயமாக அடைவதற்கான வழி என்று நம்புகிறார். ஆகவே, நாம் விரும்பும் பொருட்களை இவ் விசுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்வதெப்படி? என்று யொங்கி சோ கூறும் வழிமுறையைப் பார்ப்போம். (அ) நாம் விரும்பும் பொருட்களில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். அதாவது அப்பொருள், உதாரணத்திற்கு ஒரு வீடாக இருக்குமானால் அதற்குள் எத்தனை அறைகள் இருக்க வேண்டும், வீடு என்ன நிறத்தில் இருக்க வேண்டும், அது சிறிய வீடாக இருக்க வேண்டுமா? அல்லது பெரிய வீடாக இருக்க வேண்டுமா? என்பது போன்ற விபரங்கள் எல்லாம் நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் நமக்கே உறுதியும், தெளிவுமற்ற பொருட்களை, கடவுள் எப்படித் தரமுடியும் என்கிறார் யொங்கி சோ. தெளிவில்லாமல் நாம் எதையும் கேட்பதால்தான் அநேக தடவைகள் நமது ஜெபங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவதில்லை என்பது அவரது வாதம். ஆகவே நமக்கு எது தேவையோ அதைப் பற்றிய முழு விபரமும் நமக்குத் தெரிந்திருப்பதோடு, அதுதான் வேண்டும் என்ற பிடிவாதமான உறுதியும் நமக்கு இருக்க வேண்டும் என்கிறார் சோ. நமக்குத் தேவையான அந்தப் பொருளை நாம் மனத்தில் படம்பிடித்து வைத்திருப்பது அவசியம். ஏனெனில் அப்போதுதான் இதுதான் நமக்குத் தேவை என்று கடவுளாலும் புரிந்து கொள்ள முடியும். (ஆ) அடுத்ததாக, அதைக் குறித்த அனல் பற்றும் வாஞ்சை நமக்கு இருக்க வேண்டும். அதை எப்படியும் அடைய வேண்டும் என்ற வெறி அவசியம். (இ) அத்தோடு, அது நமக்குக் கிடைக்கும் என்ற நிச்சயம் நம்மில் ஏற்பட வேண்டும். அந்நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ள நாம் உறுதியோடு ஜெபிக்க வேண்டும். (ஈ) இறுதியாக நாம் விசுவாச வார்த்தைகளைப் பேச வேண்டும். அதாவது இது நடக்கும் என்று இயேசுவோ அல்லது அப்போஸ்தலர்களோ கட்டளையிட்டு பேசிய வார்த்தைகளை நாம் நம்பி அவற்றை நாமும் கட்டளையிட்டு பேச வேண்டும்.

இந்நான்கு வழிகளும்தான் கடவுளிடமிருந்து நாம் எதையும் பெற்றுக் கொள்ள யொங்கி சோ காகாகானாகாட்டும் இலகுவான பாதை. இதை விபரிக்கும் சிரிப்புக்கிடமான கதைகளையும் அவர் தன் நூலில் தருகிறார் (பக்கங்கள் 9-28). தனது ஊழிய ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியபோது எவ்வாறு தான் விரும்பிய கட்டில், மேசை, நாற்காலி, சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டார் என்று விளக்குகிறார் சோ. “ஆறுமாதங்கள் இவற்றிற்காகப் பெரிதும் ஜெபித்து அவை கிடைக்காததால் நான் மனம் உடைந்து போயிருந்தேன். ஒருநாள் மிகக் கவலையோடு ஓரிடத்தில் அமர்ந்து நான் அழுது கொண்டிருந்தபோது திடீரென கடவுள் சமீபத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. கடவுள் மெதுவான குரலில், மகனே, உன்னுடைய ஜெபத்தை நான் எப்போதோ கேட்டுவிட்டேன் என்றார். நான் உடனே துள்ளிக்குதித்து அப்படியானால் நான் கேட்டதை நீங்கள் ஏன் தரவில்லை? என்றேன். அதற்குக் கடவுள், என்னுடைய பிள்ளைகளோடு எப்போதுமே தொல்லைதான்; அவர்கள் எதையும் விளக்கமாகக் கேட்பதில்லை; மேசை, சைக்கிள் கேட்டாயே, ஆனால். உலகத்தில் எத்தனைவிதமான மேசைகள், சைக்கிள்கள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? நீ சைக்கிள், மேசை வேண்டும் என்று மட்டும்தான் கேட்டாய் ஆனால், அவை எந்த நாட்டில் செய்யப்பட்டவை, என்ன நிறத்தில் வேண்டும் என்றெல்லாம்  கேட்கவில்லையே என்று கடவுள் கேட்டார். அன்றுதான் என் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.” அதற்குப்பின் எவ்வாறு தான் விளக்கமாக ஜெபிக்க ஆரம்பித்ததாகக் கூறும் சோ, நீண்ட சிந்தனைக்குப்பின், பிலிப்பீன்ஸ் நாட்டில் செய்யப்பட்ட மேசை, இரும்பாலான, காலில் சக்கரங்கள் கொண்ட நாற்காலி, அமெரிக்க நாட்டில் செய்யப்பட்ட சைக்கிள் ஆகியவை வேண்டும் என்று அன்று முதல் தான் ஜெபிக்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

போல் யொங்கி சோவின் போதனையின்படி விசுவாசமென்பது நாம் விரும்புவதை அடைவோம் என்ற நம்பிக்கையுடன், அவற்றைப்பற்றித் தொடர்ந்து கனாக்கண்டு கர்த்தரிடம் மன்றாடி எப்படியாவது ஒருவழியில் அவற்றை அடைவது என்று பொருள். யொங்கி சோ தன் நூலில், தாம் விரும்புவதை ஒருவர் மனத்தில் படமிட்டு (Visualize) அதை அடையும்வரை அதைப்பற்றிக் கனாக்காண வேண்டும் என்று அடிக்கடி போதிக்கிறார். இதற்கு இவர் பயன்படுத்தும் இன்னுமொரு வார்த்தை Incubate என்பதாகும். அதாவது, மனத்தில் தொடர்ந்து நாம் விரும்பும் பொருளைப் படம் பிடித்து வந்தால் அது இறுதியில் விசுவாசத்தால் உயிர்பெறும் என்பது இவரது போதனை.

வேதம் போதிக்கும் விசுவாசம்

ஆனால் இவற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா? என்று பார்ப்பதே நமது நோக்கம். முதலில் விசுவாசத்தைப் பற்றி வேதம் என்ன போதிக்கின்றது என்று பார்ப்போம். எபிரேயர் 11;1 இல் “விசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்று வாசிக்கிறோம். இதன் பொருளென்ன? விசுவாசமென்பது, நித்திய ஜீவன், கிறிஸ்துவில் நமது ஆவிக்குரிய வளர்ச்சி, கடவுளோடு நமது ஐக்கியம் ஆகியவற்றில் நமக்குள்ள நம்பிக்கையைக் குறிப்பதாகும். ஏனெனில் இவற்றிற்கெல்லாம் விசுவாசமே ஆதாரமும் தூணுமாயிருக்கிறது. இவையனைத்தும் நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானாலும், விசுவாசம் இவற்றில் நமக்குப் பெரும் நம்பிக்கையை உண்டாக்குகின்றது (ரோமர் 4:17-25; அப்போஸ். 27:21-25). அது மட்டுமல்லாது விசுவாசம், நாம் கண்ணால் காண முடியாத, ஆனால் உறுதியாக நம்புகின்ற கர்த்தரின் நித்திய திட்டங்கள், அவற்றைக் கொண்டு நடத்தும் அவரது பராமரிப்பு, நமது உயிர்த்தெழுதல், எதிர்கால நித்திய தண்டனை, நித்திய மகிமை ஆகியவற்றைக் குறித்து நமக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கின்றது. விசுவாசமென்பது, வெறும் உணர்ச்சி மயமான அசட்டுத்தனமான ஒரு நம்பிக்கையல்ல; அது, வேதத்தில் கடவுளைப் பற்றித் தெளிவாக விளக்கப்பட்டுள்ள காரியங்களில் நமக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். வேதத்தைப் பொறுத்த வரையில் இதுதான் விசுவாசம்.

ஆனால், யொங்கி சோ விசுவாசத்திற்கு வேத வசனங்களைப் பயன்படுத்தி, வேதத்தின் அடிப்படையில் அல்லாத, வேதத்திற்குப் புறம்பான ஒரு விளக்கத்தைத் தருகிறார். அவரைப் பொறுத்தவரையில் விசுவாசம் என்பது நாம் அடைய விரும்பும் எப்பொருளையும் நிச்சயமாக நாம் அடையலாம் என்று நம்புவதாகும். அது வேத ஆதாரமற்ற, குருட்டுத்தனமான ஒரு நம்பிக்கையே (Optimism) தவிர, அதற்கும் கர்த்தரின் வார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

யொங்கி சோ கடவுளைப்பற்றி சரியான வேத அறிவைக் கொண்டிருக்கவில்லை. கடவுளுக்கு நமக்கு எது தேவை என்று சரியாகத் தெரியாது என்று அவர் கூறுகிறார். ஆனால், வேதமோ நமது தலையிலுள்ள மயிர்களின் எண்ணிக்கையும் கடவுளுக்குத் தெளிவாகத் தெரியும் என்று போதிக்கின்றது. எல்லா உயிர்களின் தேவைகளையும் அறிந்து வைத்திருப்பவர் கடவுள் மட்டுமே, ஆகவே நமது தேவைகள் அனைத்தையும் கடவுள் சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார். அத்தோடு, ஒரு மனிதன் விரும்பும் பொருட்களுக்கு எல்லையே இல்லை. அவ்வாறு அவன் விரும்பும் பொருள்களை எல்லாம் நிச்சயமாக கடவுள் தருவார், தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நமக்குத் தேவையானவற்றை கடவுள் சரியானவேளையில் தருவார் என்று தான் வேதம் போதிக்கின்றது. ஆகவே நமது தேவைகளை நாம் கடவுளிடத்தில் ஜெபத்தில் ஏறெடுத்து பொறுமையாக அவற்றை அவர் நிறைவேற்றித் தரும்வரை காத்திருக்கப் பழக வேண்டும். சில வேளைகளில் நாம் கேட்பது கிடைக்காமல் போகலாம். அதற்காக நாம் கடவுளைக் குறை கூறவோ, அல்லது நமது விசுவாசத்தில் நம்பிக்கை இழக்கவோ கூடாது. ஏனெனில் அவை கிடைக்காமல் போவதற்கு நமது நம்பிக்கை குறைவோ அல்லது கடவுளின் இயலாமையோ காரணமல்ல. எல்லாம் அறிந்த கர்த்தர் நம் நன்மைக்காகவே நாம் கேட்டதைத் தரவில்லை என்று நம்பி தெடர்ந்து அவரை விசுவாசிப்பவனே மெய்க்கிறிஸ்தவன்.

வேதத்தில் காணப்படும் கர்த்தரின் வாக்குறுதிகள்

வேதத்தில் 8000 திற்கும் மேலான வாக்குறுதிகள் இருப்பதாகக்கூறும் யொங்கி சோ அவற்றை நாம் கட்டளையிட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிக்கின்றார். இதை எவ்வாறு செய்வதெனில், அவை நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு அவற்றை நாம் கட்டளையிட வேண்டும். உதாரணமாக, பேதுருவைத் தண்ணீரில் நடக்கும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். ஆகவே அது நம்மாலும் ஆகக்கூடிய ஒரு செயல். எனவே அது நடக்கும் என்று நம்பி அதைக் கர்த்தரின் பெயரால் நாம் கட்டளையிட வேண்டும் என்பது யொங்கி சோவின் போதனை. பலரது வாழ்க்கையில் இவை நடக்காமல் போவதற்குக் காரணம் அவர்கள் இவற்றில் தெளிவான நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்கிறார் யொங்கி சோ. அத்தெளிவான நம்பிக்கையை அடையத்தான் நிகழ வேண்டிய அக்காரியத்தை நாம் மனத்தில் அழுத்தமாகப் படம் பிடித்து அதைக் கர்த்தருக்குப் புலப்படும்படியாகச் செய்ய வேண்டும். ஏனெனில் தமக்குப் புலப்படாததொன்றை கர்த்தரால் நமக்கு எப்படித் தரமுடியும்? எத்தனை பேருடைய தேவைகளை நினைவுகூர்ந்து அவற்றை அவர் நிறைவேற்ற வேண்டியுள்ளது? என்று யொங்கி சோ வாதிக்கின்றார். என்ன, தலை சுற்றுகிறதா? இதற்கே தலை சுற்றினால் யொங்கி சோவின் ஏனைய போதனைகளை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? வேதத்தின் போதனைகளைத் திரிபுபடுத்தி விளக்கமளித்து வருகிறார் யொங்கி சோ.

2 thoughts on “போல் யொங்கி சோ நான்காம் பரிமாணம்

  1. போல் யொங்கி சோ போதனை உலகத்தை நேசிப்பவர்களுக்கு கிடைக்கும் சந்தோசத்தை விட சாத்தானுக்கு அதிக சந்தோசம் .இவர்களின் போலித்தனம் எப்போது தோலுரிக்கபடும் தேவனே இப்படிப்பட்ட கொடுமைகளை எப்படித்தான் நீங்கள் தாங்கிக்கொள்கிறீர்!என்னால் தாங்கமுடியலப்பா!

    Like

  2. \\. உதாரணமாக, பேதுருவைத் தண்ணீரில் நடக்கும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். ஆகவே அது நம்மாலும் ஆகக்கூடிய ஒரு செயல். எனவே அது நடக்கும் என்று நம்பி அதைக் கர்த்தரின் பெயரால் நாம் கட்டளையிட வேண்டும் என்பது யொங்கி சோவின் போதனை. \\

    அவரையை செய்து காட்ட சொல்லாம். சில ஆண்டுகளுக்கு முன் இவரின் தளத்தில் விண்ணப்பித்து ஒரு நூலொன்றை பெற்றுக் கொண்டேன். ஒரு சில பக்கங்கள்தான் வாசித்திருப்பேன். சத்தியம் இருப்பதாக எந்த எழுத்தில் எனக்கு புலப்படவில்லை. எனவே அந்த நூலினை எனது இருப்பினுள் எடுக்காது விட்டுவிட்டேன். இப்படியான கட்டுரைகள் நிச்சியம் தேவை.

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s