“பிரசங்கத்திற்கான செய்தி எப்பொழுதும் நேரடியாக வேதத்திலிருந்தே தோன்ற வேண்டும். நாம் ஒரு செய்தியை மனதில் வைத்துக் கொண்டு அதை நிருபிப்பதற்கான வசனங்களை வேதத்தில் தேடிப் பார்க்கக் கூடாது.”
-மார்டின் லொயிட் ஜொன்ஸ்-
வியாக்கியானப் பிரசங்கம்
Expository Preaching
போதகர்கள் எவ்வாறு பிரசங்கம் செய்ய வேண்டுமேன்று போதிக்கும் அநேக நூல்கள் ஒரு சிறு நூலகத்தை நிரப்புமளவுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை ஏராளம்.
எல்லா கிறிஸ்தவ அனுபவங்களுக்கும் கோட்பாடுகளே அடிப்படையாக உள்ளது. கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு அமையாத கிறிஸ்தவ அனுபவம் நிலத்தில் புதைக்கப்படும் வெட்டப்பட்ட ஒரு மலரைப் போன்றதாகும். அது வெகு சீக்கிரத்தில் அழிந்து விடும். கோட்பாடுபூர்வமான வியாக்கியானப் பிரசங்கம் வேதபூர்வமான அனைத்து பிரசங்கங்களுக்கும் அடித்தளமாக இருப்பது மட்டுமன்றி, அவற்றின் சரீரமாகவும் உள்ளது. கிறிஸ்தவ கோட்பாடுகள் கிறிஸ்தவத்தைப் பற்றிய சத்தியத்தைத் தவிர வேறில்லை. வேதம், எல்லா வேதவாக்கியங்களும் போதிப்பதற்கு நன்மையாயுள்ளன என்று கூறுகின்றது.
நமது கிறிஸ்தவ அனுபவங்கள், நோக்கங்கள் அனைத்துமே கிறிஸ்தவ கோட்பாடுகளாலேயே ஊக்குவிக்கப்படுகின்றன. மற்றப் பகுதிகளோடு ஒப்பிட்டு முறையாகப் போதிக்கப்படும் வேதத்தின் எந்தவொரு பகுதியும் நமக்கு கிறிஸ்தவ அனுபவத்தில் ஊக்கமளிக்காமலிருக்க முடியாது. ஆகவேதான், கிறிஸ்தவ கோட்பாடு எந்தவித சந்தேகமுமில்லாமல் வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்தின் அடிப்படை அம்சமாக உள்ளது என்று கூறமுடியும். எனவே கிறிஸ்தவ கோட்பாடுகளே விசுவாசத்திற்கும், பரிசுத்த வாழ்க்கைக்கும் எல்லாவித முறையான நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருப்பதால் அவற்றை எல்லோரும் தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ளும்படிச் செய்யவேண்டியது பிரசங்கிகளின் பெருங்கடமையாக இருக்கின்றது.
கோட்பாடுகள் அடங்கிய பிரசங்கங்களை நமக்கு எவ்வித பயனுமளிக்க முடியாத செத்த பிரசங்கங்களாக சிலர் கருதுகிறார்கள். இவ்வாறு செய்வது, பாலையும், மாம்ச உணவையும் நாடி நிற்கும் உள்ளங்களுக்கு வெறும் எலும்பைக் கொடுப்பது போன்றதாகும் என்று இவர்கள் கருதுகிறார்கள். போதனைகளின் அடிப்படையில் அமைந்த சில பிரசங்கங்களைப் கேட்கும்போது இவ்வாறு கூறத்தோன்றும். இதற்குக் காரணம் கிறிஸ்தவப் போதனைகள் அல்ல; அப்போதனைகளை சரியான முறையில் விளக்கிப் போதிக்கத் தெரியாத பிரசங்கிகளே ஆகும். கோட்பாடுபூர்வமான பிரசங்கங்கள் உயிரற்ற இறையியல் விரிவுரைகளாகவும், விவாத அடிப்படையில் அமைந்த ஆராய்சிக்கட்டுரையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. கோட்பாடுகள் அனைத்தும் எப்போதுமே அனுபவபூர்வமாகவும், நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடியதாகவும் விளக்கப்பட வேண்டும். ஆகவே, நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கை, கிறிஸ்தவ போதனைகள், கிறிஸ்தவ கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். சத்துள்ள போதனைகளின் அடிப்படையில் சபையை வளர்க்க முற்படாத ஒரு போதகன் நல்ல அடித்தளமிடாமல் வீடு கட்ட முயலும் கொத்தனுக்கு ஒப்பானவன்.
நல்ல போதனைகள் எப்போதுமே நடைமுறைக்கேற்றதாகவும், அனுபவபூர்வமானதாகவும், கேட்பவர்களுடைய நிலமைகேற்றவிதத்தில் அவர்களுடைய தேவைகளை சந்திப்பதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு வேதபோதனைகள் நடைமுறையில் அனுபவபூர்வமாகவும், கேட்பவர்களுடைய தேவைகளை சந்திக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமானால், அப்போதனைகளை எடுத்து விளக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகிய பிரசங்கம் அதைச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
பிரசங்கங்களில் பல வகையுண்டு. ஒரு வசனத்தை மட்டும் பயன்படுத்தி வேத பூர்வமாகப் பிரசங்கிப்பதில் ஸ்பர்ஜன் வல்லவராக இருந்தார். இம்முறையை ஆங்கிலத்தில் Textual Preaching என்று அழைப்பார்கள். ஸ்பர்ஜன் அதிக வேத ஞானமுள்ளவராக இருந்ததால் ஒரு வசனத்தை முறையாக அது அமைந்துள்ள பகுதிக்கேற்ப விளக்கிப் போதிப்பதில் வல்லவராக இருந்தார். ஆனால் இம்முறை அத்தகைய ஞானமில்லாதவர்களுக்குப் பயன்படாது. பரிசுத்தவான்களும் இம்முறையைப் பயன்படுத்திப் பிரசங்கித்துள்ளனர். ஒரு தலைப்பை அடிப்படையாக வைத்து செய்யும் பிரசங்கத்தை Topical Preaching என்று அழைப்பார்கள். இதன் மூலம் வேதத்தின் ஒரு குறிப்பிட்ட போதனையை முழு வேதத்தையும் பயன்படுத்திப் போதிக்கலாம். ஆனால் மேற்கூறப்பட்ட இருமுறைகளும் நல்ல பிரசங்க முறைகளாக இருந்தபோதும், இன்று நமது சூழ்நிலைக்கு உதவக் கூடியதும், அவசியமானதுமானது வியாக்கியானப் பிரசங்கமே (Expository Preaching). இப்பகுதியில் நாம் வியாக்கியானப் பிரசங்கத்தின் அவசியத்தையே விளக்க முனைகிறோம்,
வேதத்தின் ஒரு நூலையோ அல்லது அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ முழு வேதத்தின் அடிப்படையில் தெளிவாக விளக்கித் தொடர்ச்சியாகப் பிரசங்கிப்பதே வியாக்கியானப் பிரசங்கமாகும். இது ஒரு சுருக்கமான விளக்கமாகும். இத்தகைய பிரசங்கத்தினால் பல பயன்களுண்டு.
1. ஒரு பிரசங்கி வேதத்தின் ஒரு நூலையோ, அல்லது ஒரு நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ பல வாரங்களுக்குப் பிரசங்கிப்பது என்று தீர்மானித்தால் வரப்போகும் வாரங்களில் தாம் பிரசங்கிக்கவிருப்பது என்ன என்று அவருக்குத் தெரிந்திருக்கும். இதனால் அடுத்த வாரம் எதைப் பிரசங்கிக்கப்போகிறோம் என்று அவர் அலைய வேண்டிய அவசியமில்லை. பலர் ஒவ்வொரு வாரமும் பிரசங்கப் பொருளுக்காக அலைவது மட்டுமன்றி கேட்பவர்களையும் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் எங்கெங்கோ அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
2. வேதத்தில் ஒரு நூலையோ அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியையோ பல வாரங்களுக்குப் பிரசங்கிக்கும்போது சபையாருக்கு வேதத்தை முறையாகப் போதிக்க முடிகின்றது. கேட்கும் மக்களும் இதன்மூலம் தாம் எதைப் படிக்கிறோம், எங்கு போகிறோம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு அவர்கள் வேத அறிவில் வளர முடிகின்றது.
3. பிரசங்கி வியாக்கியானப் பிரசங்க முறையைப் பயன்படுத்தும்போது அவர் தேவையற்றதைச் சொல்லாமல் வேதப்பகுதியில் இருப்பதை மட்டும் விளக்கிப் போதிக்க முடியும். பலர் ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேதத்திற்குப் புறம்பாக எதையெதையோ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாக்கியானப் பிரசங்க முறையைப் பயன்படுத்தும் பிரசங்கி அவ்வேதப்பகுதியைத் தெளிவாகப் படிக்க வேண்டியது அவசியம். அப்பகுதியை தொடர்ச்சியாகப் பிரசங்கிக்கப் போவதால் பிரசங்கிப்பவருக்கு அப்பகுதி என்ன கூறுகின்றது என்பதில் நல்ல விளக்கம் இருக்க வேண்டும். இதனால் பிரசங்கியும் சோம்பேறியாக இல்லாமல் வேதத்தைப் படிக்க வேண்டிய அவசியமேற்படுகின்றது. இன்று வாராவாரம் பிரசங்கமென்ற பெயரில் எதையெதையோ உளறிக் கொட்டிக் கொண்டிருப்பவர்களையே பிரசங்க மேடைகளில் பார்க்கிறோம்.
4. வியாக்கியானப் பிரசங்கத்தைப் பயன்படுத்துவதால் போதகர்கள் சபையாருக்கு வேதத்தை அனுபவபூர்வமாகப் போதிக்க முடியும். ஒரு வேதப்பகுதியை தாம் நினைத்தவாறு பயன்படுத்தாமல் தகுந்த விளக்கமளித்துப் போதிப்பதால் சபையாரால் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் வேதத்திற்கு கட்டுப்பட முடிகின்றது. அவர்களால் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடிகின்றது.
(வளரும்)