இன்று அநேக சபைகளில் பிரசங்கத்திற்கு மதிப்பில்லை என்பது வாசகர்கள் அறிந்த உண்மை. எதன் மூலம் கர்த்தர் தனது மக்களைத் தம்மிடம் அழைத்துக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறாரோ அந்தச் சாதனமான பிரசங்கத்தை விடுத்து வேறு காரியங்களில் நேரத்தைச் செலவிடும் பிரசங்கிகள் அநேகம். கெரிஸ்மெட்டிக் கூட்டம் இன்று பிரசங்கத்தை உதாசீனம் செய்து அற்புதங்களை நாடி ஓடி அழிந்து கொண்டிருக்கின்றது. பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன் போன்ற போலி ஆசாமிகள் மேடைகளில் நாடகமாடி மக்களைக் கவர்ந்து பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது மேடைகளில் வேதமோ, நற்செய்தியோ பிரசங்கிக்கப்படுவதேயில்லை. எதைச் செய்யாவிட்டாலும் இவர்கள் பணம் கேட்பதில் தவறுவதில்லை.
இத்தகைய சூழ்நிலையில் பிரசங்கத்தின் அவசியத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தாமலிருக்க முடியாது. பிரசங்கமில்லாத சபைகள் அழிவை நாடி ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய சபைகள் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடியாது. அத்தகைய சபைகளில் உள்ள மக்கள் கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொள்ள முடியாது. கர்த்தரின் பாதையில் நடக்கமுடியாது. கர்த்தரின் அதிகாரத்திற்கு சபைகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமானால் அங்கு பிரசங்கம் இருக்க வேண்டும். அதுவும் கடந்த இதழில் நாம் வலியுறுத்தியதுபோல் வியாக்கியானப் பிரசங்கம் இருக்க வேண்டும்.
வியாக்கியானப் பிரசங்கம் (Expository Preaching) செய்வது இலகுவான செயலென்று நாம் கூறவில்லை. வேறு எந்தப் பிரசங்க முறையையும்விட வியாக்கியானப் பிரசங்க முறைக்கு அதிக நேரமும், உழைப்பும் அவசியம். இத்தகைய பிரசங்க முறையே சபை மக்களுக்கு அதிக ஆவிக்குரிய உணவை அளிப்பதோடு பிரசங்கியையும் கட்டி வளர்க்கக் கூடியது. வேத அறிவில் பிரசங்கி வளர இப்பிரசங்க முறை துணை செய்யும், அதேநேரம் ஒவ்வொரு வாரமும் பிரசங்கத்திற்கான தலைப்பை நாடி அலைய வேண்டிய தலைவலியும் இருக்காது.
சபை வரலாற்றில் வியாக்கியானப்பிரசங்க முறை
பழைய ஏற்பாட்டில் மோசேயுடைய பிரசங்கங்களிலும் (உபா. 31-33), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்திலும் (மத்தேயு 5-7) வியாக்கியானப் பிரசங்கத்தின் அடையாளங்களைப் பார்க்கலாம். அப்போஸ்தலர்களுக்குப் பின் ஆதிக்கிறிஸ்தவம் வெகு சீக்கிரத்திலேயே கீழ்நிலையை அடையத் தொடங்கியது. இக்காலத்தில் வியாக்கியானப் பிரசங்கம் தொடராததே சபை வளர்ச்சி குன்றத் தொடங்கியதற்குக் காரணம். நல்ல பிரசங்கத்தைக் கொண்டமையாத சபை பலவீனமான சபையாகவே இருக்கும். இக்காலப்பகுதிகளில் வெகு சில நல்ல பிரசங்கிகளையே சபை காணக்கூடியதாக இருந்தது. இவர்களில் ஆகஸ்டீன், கிரிஸ்சொஸ்டொம், அம்பிரொஸ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆனால் இவர்கள் வேதப்பகுதிகளை அவை காணப்படும் பகுதிகளுக்கேற்ப சரியாக விளக்கினாலும், அவற்றைப் போதிக்கும்போது தாம் நினைத்த விதத்தில் பொருள் கொடுத்தனர். உதாரணத்திற்கு, நல்ல சமாரியன் உவமையில் விடுதிக்காரனுக்கு சமாரியன் இரண்டு காசுகள் கொடுத்ததைப் பார்க்கிறோம். அதை விளக்கும்போது அந்த இரண்டு காசுகளும் திருமுழுக்கையும், அப்பம் பிட்குதலையும் குறிப்பதாகப் பொருள் கொண்டனர். கிரிஸ்சொஸ்டொம், எதையும் உருவகப்படுத்தி விளக்கும் இம்முறையை எதிர்த்தார். இத்தகைய முறையைக் கையாண்டவர்கள் வேதத்தில் காணப்படும் வரலாற்று நிகழ்ச்சிகள், உவமைகள் ஆகியவற்றிற்கு தாம் நினைத்தவிதத்தில் பொருள் கொடுத்தனர். சில வேளைகளில் அவர்களது விளக்கத்தில் எந்தத் தவறும் இல்லாதிருந்தபோதும் அது அவர்கள் பிரசங்கிக்க எடுத்துக் கொண்ட வேதப்பகுதியோடு சம்பந்தமுடையதாக இருக்கவில்லை. இத்தகைய உருவகப்படுத்தும் முறை (Allegorical) வேதத்திற்கு முரணானது.
இக்காலத்தை அடுத்து சீர்திருத்தவாத காலம் தோன்றும் முன்னர் சில சிறந்த பிரசங்கிகளை உலகம் கண்டது. இவர்கள் வியாக்கியானப் பிரசங்கத்திற்கு மறுபடியும் உயிர் கொடுத்தனர். இவர்களில் ஜோன் விக்கிளிப், ஜோன் ஹஸ், செவனரோலா ஆகியோர் சிறப்பானவர்கள்.
ஆதிசபையிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலம் வரை
சீர்திருத்தவாத காலமே மறுபடியும் பிரசங்கத்திற்கு உயிரளித்து ஆத்துமாக்களுக்கு உணவளித்தது. இக்காலத்தில் வேதத்தின் அதிகாரமும் போதுமான தன்மையும் மறுபடியும் அங்கீகரிக்கப்பட்டு ரோமன் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டதால் பிரசங்கத்திற்கு மிக உயர்ந்த இடமளிக்கப்பட்டது. மார்டின் லூதர் பன்னிரெண்டு வருட காலம் வேதத்தின் பல பாகங்களில் வியாக்கியானப் பிரசங்கமளித்துள்ளார். அவர் முழுநேர இறையியல் கல்லூரிப் பேராசிரியராக கடமை புரிந்தபோதும் திறமைவாய்ந்த பிரசங்கியாக இருந்தார்.
சீர்திருத்தவாத காலத்தில் மிகத் திறமைவாய்ந்த வியாக்கியானப் பிரசங்கியாக இருந்தவர் ஜோன் கல்வின். சீர்திருத்தவாதியாகவும், போதகராகவும், எழுத்தாளராகவும் இருந்த கல்வினின் அனைத்து ஊழியங்களுக்கும் ஆன்மீக வல்லமையளித்தது வேதவியாக்கியானப் பிரசங்கமே. ஜெனீவாவில் ஆயிரக்கணக்கான பிரசங்கங்களை கல்வின் அளித்துள்ளார். வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து அதை மட்டுமே விசுவாசத்துடன் பிரசங்கித்து வந்தார் கல்வின். இன்று நாம் வாசிக்கும்படியாக வெளிவந்துள்ள கல்வினின் அநேக நூல்களே இதற்குச் சாட்சியாக உள்ளன.
பதினேழாம் நூற்றாண்டு பரிசுத்தவான்கள் காலத்தில்
சீர்திருத்தவாத காலத்தை அடுத்த பதினேழாம் நூற்றாண்டில் பரிசுத்தவான்கள் சபைச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்தபோது வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியமளித்து அதன் மூலமாக எல்லாச் சீர்திருத்தத்தையும் நாடினர். இவர்களுடைய காலப்பகுதியில் கர்த்தர் அநேக பிரசங்கிகளை எழுப்பினார். தோமஸ் மேன்டனின் பிரசங்கங்கள் 22 நூல்களாக வெளிவந்துள்ளன. இவர் குறுகியதும், நீண்டதுமான தொடரான பிரசங்கங்களைச் செய்துள்ளார். தொமஸ் குட்வின், சிப்ஸ், பிளேவல், தொமஸ் புரூக்ஸ், ஜோன் ஓவன் ஆகியோருடைய பிரசங்கங்கள் இன்றைய பிரசங்கிகளுக்கு ஊழியத்தில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரக்கூடியவை. துரதிருஷ்டவசமாக இந்நூல்கள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தழைத்தோங்கி பெரும் எழுப்புதல்களைச் சந்தித்ததற்கு சபைகளில் பிரசங்கத்திற்கு அதி உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று கூறினால் மிகையாகாது.
சில பரிசுத்தவான்கள் சில வசனங்களை மட்டும் பயன்படுத்தி கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவங்கள் முழுவதையும் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்களாயிருந்தனர். உதாரணமாக வில்லியம் கர்னல் எபேசியர் 6:10-18 வசனங்களை மட்டும் பயன்படுத்தி செய்த பிரசங்கங்கள் 1176 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களையும், அவற்றை எதிர்நோக்குவதற்கான வழிமுறைகளையும் அற்புதமாக வடித்துத் தந்துள்ளார் கர்னல். கிறிஸ்தவ வாழ்க்கையில் சபை மக்களுக்கு உதவப் போதகர்களுக்குப் பயன்படக்கூடிய மிக அருமையான நூலிது. இந்நூலில் பரிசுத்தவான்களின் வியாக்கியானப் பிரசங்க முறையைப் பார்க்கலாம்.
பதினேழாம் நூற்றாண்டிற்குப்பின் இன்றுவரை
இக்காலப்பகுதியில் மிகப் பிரபலமான பிரசங்கிகள் கூட வேதப்புத்தகங்கங்களைத் தொடர்ச்சியாக முறையாகப் போதிக்கும் வியக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நமது நூற்றாண்டில் வியாக்கியானப் பிரசங்கத்திற்கு உயிர் கொடுத்தவர் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ். தனது முப்பது வருட கால போதக ஊழியத்தில் வியாக்கியானப் பிரசங்கத்தின் மூலம் மறுபடியும் பிரசங்க ஊழியத்தை மட்டுமல்லாது சீர்திருத்தத்தையும் ஆரம்பித்து வைத்தார் லொயிட் ஜோன்ஸ். இவரது ஊக்குவிப்பாலேயே பெனர் ஆப் டுருத் நிறுவனம் (The Banner of Truth) ஆரம்பிக்கப்பட்டு சீர்திருத்தவாதிகள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் நூல்கள் மறுபடியும் வெளிவரத் தொடங்கின. மார்டின் லொயிட் ஜோன்ஸ், பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பதின்மூன்று வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் வேதபாடம் எடுத்துள்ளார். இதற்கு இவர் வியாக்கியான பிரசங்க முறையையே கையாண்டார். இவை இன்று ரோமர் பத்தாம் அதிகாரம் வரை நூல்களாக வெளிவந்துள்ளன.
1960 களில் சீர்திருத்தவாதப் பரவலினால் அநேக போதகர்கள் வியாக்கியானப் பிரசங்கமுறையைக் கையாளத்தொடங்கினர். இதற்கு பெனர் ஓப் டுருத் நிறுவனத்தின் மூலம் வெளிவரத்தொடங்கிய அநேக பரிசுத்தவான்களின் நூல்களும், டாக்டர் லொயிட் ஜோன்ஸின் பிரசங்க ஊழியத்தின் செல்வாக்கும் காரணமாயிருந்தன. இதே காலப்பகுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடாந்தரம் நடைபெற்ற சீர்திருத்தவாத போதகர்கள் மகாநாடுகளாலும், அதில் பங்கு பெற்ற பல நாடுகளைச் சேர்ந்த போதகர்களாலும் சீர்திருத்தக் கருத்துக்கள் எங்கும் பரவி வேதபூர்வமான பிரசங்கம் செய்வதில் பலர் மத்தியிலும் ஆர்வம் வளரத் தொடங்கியது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இதன் தாக்கம் பெருமளவில் உணரப்படாவிட்டாலும் தமிழ் நாடு, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் சீர்திருத்தவாதத்தில் ஆர்வம் கொண்ட ஒரு சில சபைகள் தோன்றி வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கின.
வியாக்கியானப் பிரசங்கத்திற்கு அத்தியாவசியமான சாதனங்கள்
வியாக்கியானப் பிரசங்கம் செய்வதில் இன்று போதகர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆத்துமாக்கள் வேத அறிவில் வளர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டுமானால் இதைத்தவிர வேறு வழியில்லை. சபை மேடைகளில் கோமாளிக்கூத்து நடத்திக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் இது இலகுவான செயலாக இருக்காமல் போனாலும் இதன் மூலம் மட்டுமே கர்த்தரின் சபை ஆவிக்குரிய உணவைப்பெற்று வளர முடியும்.
வியாக்கியானப் பிரசங்கம் செய்வதற்கு என்ன தேவை?
1. முதலாவதாக கடுமையாக உழைக்கக்கூடிய போதகர்கள் தேவை. சோம்பேறித்தனமுடையவர்கள் இவ்வூழியத்தில் ஈடுபட முடியாது. ஏனெனில் வேதத்தில் அதிக நேரத்தை செலவிட்டு ஆராயவும், படிக்கவும் வேண்டும். ஆகவே தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து வேதத்தைப் படிப்பதிலும், ஜெபிப்பதிலும், பிரசங்கம் தயாரிப்பதிலும் போதகர்கள் ஈடுபட வேண்டும் (அப்போஸ். 6:4).
2. போதகர்கள் வேதத்தைப் படிக்கத் தேவையான சாதனங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். சொல்லகராதி, வேதநூல்களை விளக்கும் நல்ல விரிவுரை நூல்கள், முடிந்தால் மூல மொழிகளில் அறிவு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். அத்தோடு பழைய, புதிய ஏற்பாட்டு அறிமுக நூல்கள், அதாவது அவற்றின் வரலாற்றை எடுத்துக் கூறும் நூல்களை வாசிப்பதும் அவசியம். இவை வேத நூல்களின் வரலாற்றுப் பின்னணியை எடுத்து விளக்கும். இவற்றோடு வேதத்தை விளங்கிக் கொள்வதில் நாம் பயன்படுத்த வேண்டிய விதிமுறைகளிலும் நல்ல அறிவு தேவை. அவ்விதிமுறைகள் வேதத்தை நாம் தவறான விதத்தில் விளங்கிக் கொள்வதிலும், வியாக்கியானம் செய்வதிலும் இருந்து நம்மைக் காக்கும். இச்சாதனங்களை முறையாகப் பயன்படுத்தி வேதத்தை விளங்கிக் கொள்வதில் நாம் நல்ல தேர்ச்சி அடைவது முக்கியம். ஏனோதானோவென்று வேதப்பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்க முயல்வதை இது தடை செய்யும். கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் தவறானவிதத்தில் விளக்கம் கொடுக்க முயல்வது ஆபத்தான காரியம்.
3. நல்ல போதகர்களின் பிரசங்கங்களைப் போதகர்கள் வாசிக்க வேண்டும். ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரின் பிரசங்க நூல்களைப் பெற்று வாசிக்க வேண்டும். இன்று நூல்கள் மட்டுமல்லாது ஒலி நாடாக்களிலும் இவ்வாறாகப் பிரசங்கங்கள் வெளிவருகின்றன. முக்கியமாக அமெரிக்காவில் திரித்துவ பாப்திஸ்து சபைப் போதகரான அல்பர்ட் என். மார்டினுடைய பிரசங்கங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன. பாஸ்டர் மார்டின் கர்த்தரால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த சீர்திருத்த போதகரும், பிரசங்கியும் ஆவார். இவரது பிரசங்கங்களைக் கேட்பது இளம் பிரசங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
வியாக்கியானப் பிரசங்கத்தை எங்கு? எப்படி ஆரம்பிப்பது?
இளம் போதகர்கள் ஆரம்பத்தில் உபாகமம், யோபு போன்ற நூல்களில் பிரசங்கம் செய்ய ஆரம்பிக்காமல் யோனா, ரூத் போன்ற சிறு நூல்களைத் தொடர்ச்சியாக வாரா வாரம் பிரசங்கிக்க முயல வேண்டும். யாக்கோபு, முதலாம் யோவான் போன்றவற்றில் ஆரம்பிப்பதும் நல்லது. இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் இன்னுமொரு உதாரணம். இதைத் தொடர்ந்து வாராவாரம் பிரசங்கிப்பது நல்ல பலன் தரும். முடிந்தால் லொயிட் ஜோன்ஸ் இதில் பிரசங்கித்த இரண்டுபாக நூல்களையும் வாங்கிப் படித்துப்பயன் பெறலாம். இவற்றில் பிரசங்கம் செய்து தேர்ச்சி பெற்ற பின்னர் ஏனைய நூல்களில் முக்கியமான பகுதிகளில் பிரசங்கம் செய்ய முயற்சிக்கலாம்.
வியாக்கியானப் பிரசங்கம் செய்யும்போது கேட்போர் ஆர்வத்துடன் கேட்கும் விதத்தில் ஒவ்வொரு பிரசங்கமும் அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, கேட்போர் எங்கு ஆரம்பித்தோம் என்று மறந்துவிடாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். எனவே, வியாக்கியானப் பிரசங்கங்களை நாம் மிகவும் நீண்டதாக பலவருடங்களுக்கு இழுத்தடிக்காமல் இருப்பது நல்லது. இவ்வாறு யோபுவை நாற்பது வருடங்களுக்குப் பிரசங்கம் செய்த ஒரு போதகர் தனது ஆத்துமாக்களை சபையிலிருந்து இழக்க நேரிட்டது. இந்நிலைமை நமக்கு வரக்கூடாது.