வில்லியம் பார்க்ளேயின் நூல்களை எங்கும் காணலாம். நூல் நிலையங்கள். பாவிக்கப்பட்ட புத்தகக் கடைகள், மூன்றாம் உலக நாடுகளில் வாழும் போதகர்களின் படிப்பறைகள், ஸ்கொட்லாந்தின் போதகர்கள் அனைவரதும் இல்லங்கள் என்று பார்க்ளேயின் நூல்கள் நுழையாத இடங்களே இல்லை. பார்க்ளே எழுபது நூல்களை எழுதியுள்ளார். அவரது பதினேழு வால்யூம்கள் அடங்கிய புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகள் நான்கு மில்லியன் பிரதிகள்வரை விற்பனையாயின. ஆப்பிரிக்க, ஆசிய நாட்டுப் போதகர்களை அவை அடைய வேண்டுமென்பதற்காக பார்க்ளே தனது புத்தகங்களுக்குப் பணமே வாங்கவில்லை. அருமையான உதாரணங்களையும், சுருக்கமான பத்திகளையுடைய சிறு அத்தியாயங்களையும் கொண்டதாக அவரது எழுத்துக்கள் அமைந்தன. அவரது நூல்கள் வியக்கத்தக்க வரலாற்று விபரங்களைக் கொண்டவை. தான் ஒரு குழப்பமற்ற ‘சாதாரண மனிதன்’ என்ற உருவத்தை மற்றவர்கள் மனதில் பதிய வைப்பதை பார்க்ளே நோக்கமாகக் கொண்டிருந்தார். இது அவரது நூல்கள் பலவற்றின் தலைப்பாகவும் அமைந்தது. ஒரு சாதாரண மனிதனின் ஜெபநூல், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை என்பன இவற்றில் சில. ஞாயிறு பாடசாலைகளுக்கும், ‘போய்ஸ் பிரிகேடுகளுக்கும்’ பாடங்களை அவர் எழுதியிருந்தார். பிரித்தானிய வார இதழ், எக்ஸ்பொசிட்டரி டைம்ஸ் ஆகிய இதழ்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
‘இதுவே எனது வாழ்க்கையின் இலட்சியம்’
ஸ்கொட்லாந்தின் வட பகுதியில் உள்ள ‘விக்’ என்ற இடத்தில் 1907 ஆம் ஆண்டு பார்க்ளே பிறந்தார். ஸ்கொட்லாந்து மக்களின் தாய் மொழியான ‘கேய்லிக்’ என்ற மொழியைப் பேசிய, கடவுள் பக்தியுடைய வங்கித் தலைமை அதிகாரியான தனது தந்தையின் ஒரே மகனாக பார்க்ளே இருந்தார். ஒரு ஞாயிறு தினத்தில் சிறுவனான பார்க்ளே தனது தந்தையின் பிரசங்கத்தைக் கேட்டபின் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, உணர்வுகளால் உந்தப்பட்டு இதையே தன் வாழ்க்கையிலும் செய்ய வேண்டுமென்ற பெருந்தீர்மானத்தை எடுத்தான்.
1933 முதல் பதினான்கு வருடங்கள் ரென்பிரியு பிரஸ்பிடீரியன் சபைப் போதகராக இருந்த பார்க்ளே, 1947 முதல் 1974 வரை ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் முதலில் விரிவுரையாளராகவும் பின்பு பேராசிரியராகவும் கடமையாற்றினார். வானொலியிலும், டெலிவிசனிலும் பார்க்ளே தொடர்ச்சியாக செய்திகள் அளித்தார். பிரித்தானியாவின் வடபகுதியில் வாழ்ந்த சர்வதேச அங்கீகாரம் பெற்ற, பிரசித்திபெற்ற மனிதராக பார்க்ளே திகழ்ந்தார். 1978 இல் அவர் மரணமடைந்தார் பார்க்ளேயின் நூல்கள் இன்றும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
‘கிறிஸ்தவ உலகின் மிக பயங்கரமான மனிதன்’
வில்லியம் பார்க்ளே எதை விசுவாசித்தார்? அவர் வரலாற்றுச் சம்பவமான ஆதாம், ஏவாளின் தோற்றம், ஆதாமின் பாவம், வீழ்ச்சி ஆகியவற்றை மட்டுமல்லாது கடவுள் இஸ்ரவேலருக்கு முன் செங்கடலைப் பிரித்து செய்த அற்புதம், யோனாவின் வரலாற்று நிகழ்ச்சி ஆகியவற்றையும் நம்ப முடியாதவை என்று நிராகரித்தார். பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களையும் மோசே எழுதினார் என்பதையும் நம்ப மறுத்தார். கிறிஸ்து இயேசுவின் அற்புதங்களின் தெய்வீகத் தன்மையையும் அவர் மறுதலித்தார். கிறிஸ்தவத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் அவர் நம்ப மறுத்து அவற்றிற்கு மறுவிளக்கமளித்தார். அதேவேளை சுவிசேஷத்தைப் போதிக்கும் ஊழியக்காரர்களைத் தயார் செய்யும் பெரும் பொறுப்பையும் சுமந்து, தனது மனக்குழப்பங்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் வெளிப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்து வந்தார். இங்கிலாந்தில் இந்நூற்றாண்டின் மிகப் பெரும் பிரசங்கியாகவிருந்த டாக்டர் மார்டின் லாயிட் ஜோன்ஸ், பார்க்ளேயைப் பற்றிக் கூறும்போது “கிறிஸ்தவ உலகின் மிக ஆபத்தான மனிதன்”1 என்று குறிப்பிட்டுள்ளார். பீட்டர் பார்ன்ஸ் என்பவர். “புல்ட்மான் (Bultman) ஆயிரக்கணக்கானவர்களை அழித்திருந்தால், பார்க்ளே பத்தாயிரக்கணக்கானவர்களை அழித்தார்” என்று குறிப்பிட்டார்.
இவர்கள் பார்க்ளேயின் எழுத்துக்களின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறினார்கள். பார்க்ளே எதை விசுவாசித்தார் என்று கீழ் வருவன விளக்குகின்றன:
1. கடவுளின் தன்மை – கடவுள் சர்வ அதிகாரத்தையும் கொண்டு இறைமையுடன் அனைத்தையும் ஆண்டு தனது சித்தத்தின்படி எல்லாவற்றையும் செய்பவரல்ல. “கடவுளுக்கு எனது துணை தேவை”2 வருத்த துன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டுமென்பது கடவுளின் சித்தமல்ல. அவ்வாறு எண்ணுவது கடவுள் நிந்தனை என்று பார்க்ளே நம்பினார்.
2. கிறிஸ்துவின் தன்மை- “கிறிஸ்துவில் நான் கடவுளைக் காண்கிறேன்”3 என்று குறிப்பிட்ட பார்க்ளே, “கிறிஸ்து கடவுளல்ல”4 என்றும் போதித்தார். பார்க்ளே கிறிஸ்துவை, கடவுளால் தனது மகனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சாதாரண நல்ல மனிதனாகவே கருதினார்5.
3. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு – இதைப் பற்றி விளக்கும் பார்க்ளே, நாம் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை வரலாற்று உண்மையாக எண்ணக் கூடாது. “கடவுள் கிறிஸ்துவிடம் கொண்டிருந்த விசேஷமான உறவை விளக்கும் ஒரு உவமையாக, அவ்வுறவின் ஒரு பகுதியை விளக்கும் அடையாளப் படமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்”6 என்று குறிப்பிட்டார்.
4. சிலுவை – சிறுவனாகவிருந்த போது பார்க்ளே, கிறிஸ்து, கடவுளின் கோபத்தைத் தன்மீது சுமந்து, தன்னை விசுவாசிக்கும் அனைவருக்குமான பாவநிவாரணியாக சிலுவையில் மரித்ததை விசுவாசித்தார். ஆனால் பின்பு இதையும் பார்க்ளே நிராகரித்தார். “கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் கடவுள் எத்தகையவர் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். கடவுளைப்பற்றிய மனிதனின் எண்ணங்களை மாற்றுவதற்காக கிறிஸ்து வந்தார் என்று அது போதிக்கவில்லை”7 என்று பார்க்ளே குறிப்பிட்டார்.
5. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் – இதையும் பார்க்ளே விட்டு வைக்கவில்லை. கிறிஸ்துவின் கல்லறையைப் பற்றிக் குறிப்பிடும் போது, “கிறிஸ்துவின் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் அவரை உடைமையாக்கும் விதத்தில் ஏதோவொன்று இங்கு நிகழ்ந்திருக்கின்றது.”8 என்று மட்டுமே பார்க்ளேயால் குறிப்பிட முடிந்தது.
6. பரிசுத்த ஆவியின் தெய்வீகம் – திரித்துவத்தை மறுதலிக்கும் கடவுளை அறியாதவர்களுடைய போதனைகளைப் பிரதிபலித்தே பரிசுத்த ஆவியைப்பற்றிய பார்க்ளேயின் விளக்கம் அமைந்திருந்தது.
7. கீழ்ப்படியாதவர்களின் இறுதி முடிவு – மனிதரனைவரும் நிச்சயமாக பரலோகம் செல்வார்கள் என்ற ‘யூனிவர்சலிசக்’ கோட்பாட்டில் பார்க்ளே உறுதியாகவிருந்தார்.9 பார்க்ளே தான் ஒரு யுனிவர்சலிஸ்ட் என்று வலியுறுத்திக் கூறினார்.
பார்க்ளே பேசிய இடங்களில் அவரது கருத்துக்களை எவராவது எதிர்த்துப் பேசியிருந்தால் ஒருவரும் ஆதரித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அநேகர் பார்க்ளேயை பிரபல்யமான, நகைச்சுவை ததும்பப் பேசும் வல்ல பேச்சாளராகக் கருதினர். அதுமட்டுமல்லாது அவரது கருத்துக்கள் சரியானவை என்றும் வேதம் பல தவறுகள் அடங்கிய ஒரு நூல் என்றும் கருதினர். இருந்தபோதும் பார்க்ளேயின் போலிப் போதனைகள் கிறிஸ்துவின் பெயருக்கு ஏற்படுத்திய களங்கத்தை குறித்து மெய்க்கிறிஸ்தவர்கள் வருந்தினர். இதை பார்க்ளேயால் என்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. “ஒரு மனிதனின் நம்பிக்கைகளை நான் என்றுமே சாடமாட்டேன். ஆனால் நான் அவனுக்குக் காட்டும் அனுதாபத்தை அவன் எனக்குக் காட்ட மறுத்தால் அதைத் தவறாகக் கருதுவேன்.”10 என்று பார்க்ளே கூறினார்.
ஒருமுறை கிறிஸ்தவ உலகிற்கும், சுவிசேஷ ஊழியத்திற்கும் தான் செய்த சேவையைப் பாராட்டி அளிக்கப்படவிருந்த விருதைப் பெற்றுக்கொள்ளச் சென்ற பார்க்ளே ‘போலிப்போதகன்’, ‘சுவிசேஷத்தின் எதிரி’ என்ற அடையாள அட்டைகளைத் தாங்கித் தன்னை வரவேற்ற ஒரு கூட்டத்தாரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களுடைய நோக்கத்தைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிய பார்க்ளே அவர்களுக்குக் கைகொடுத்தால் சமாதானப்படுவார்கள் என்று கருதி கூட்டத்தை அணுகினார். தனது கரங்களை நீட்டி, ‘மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் நாமனைவரும் கர்த்தரின் பக்கமே’ என்று கூறிய பார்க்ளேயின் கரங்களை ஒருவருமே குலுக்கவில்லை. அடையாள அட்டைகளைத் தாங்கி எதிர்ப்பைக் காட்டுவது தவறோ இல்லையோ, பார்க்ளேயின் முரண்பட்ட கருத்துக்கள் மெய்யான கிறிஸ்தவ ஐக்கியத்திற்குத் தடையாக இருந்தன.
பார்க்ளேயின் மரணத்திற்குப் பின்பு அவரைப் போலப் பிரபல்யமடைந்தவர்கள் ஒருவருமேயில்லை. அவரைப் போல எழுத முனைந்து பழைய ஏற்பாட்டிற்கு விளக்கவுரை எழுதிய எத்தனையோ பேர் பெயர் அடையவில்லை. இருந்தாலும் வேதத்தில் பரிச்சயமில்லாதவர்களைப் பாதிக்கும் போலிப்போதனைகளின் வல்லமையை எவரும் சாதாரணமானதாகத் தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. வல்லமையற்ற போலிச் சமயத்தை வார்த்தை ஜாலங்களோடு, மற்றவர்களைக் கவரக்கூடிய விதத்தில் போதித்தால் கோடிக்கணக்கானவர்கள் அதன் கவர்ச்சிக்கு உட்படுவது மட்டுமன்றி அதனால் பாதிக்கப்படுவார்கள். பார்க்ளே இதற்கு ஒரு சரியான உதாரணம்.
(இக்கட்டுரையின் ஆசிரியரான, ஜெப்ரி தொமஸ், வேல்ஸில் ஒரு திருச்சபைப் போதகராகப் பணியாற்றுகிறார். இக்கட்டுரை முதலில் ‘இவெஞ்சலிக்கள் டைம்ஸ்ஸில்’ வெளிவந்தது.)
Foot notes:
1. William Barclay: the authorized biography. P 651, Rawlins.
2. Testament of Faith. pp, 112, 115.
3. ibid. p.49
4. ibid. p.49
5. The authorized biography, pp. 376-383.
6. Rawlins, p.547.
7. Testament of Faith, p.52
8. ibid. p. 108.
9. ibid. p.58, 59.
10. ibid. p. 30.
வில்லியம் பார்க்ளே மொத்தமாக கிறிஸ்தவ அடிப்படை விசுவாசத்தையே சந்தேகிக்கும்படி செய்கிறார் இவர் நிச்சயம் பவுல் கூறின மந்தையை தப்பவிடாத ஓநாய் கூட்டத்தைச் சேர்ந்தவரே! சந்தேகமே இல்லை.
LikeLike
அருமையாக இருக்கின்றது இக்கட்டுரை. இக்கால எழுத்தாளர்கள் தொடர்பாகவும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றேன். தொடர்ச்சியான இத்தகைய ஆய்வுகள் இன்றைய கிறிஸ்தவத்திற்கு மிக அவசியமானது. தமிழ் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் குறித்தும் கவனம் செலுத்துங்கள்.
தற்போது எழுத்துக்களை தடையில்லாது டைப் செய்ய முடிகின்றது. மாற்றத்திற்கு மிக்க நன்றி்.
LikeLike