“பிரசங்கத்தைக் கேட்கிறவர்களின் அழிவே பயங்கரமானால் பிரசங்கிக்கிறவர்களின் அழிவு அதைவிட பயங்கரமானதல்லவா?”
-ஸ்பர்ஜன்-
போதக ஊழியம்
மெய்யான தாழ்ச்சி – நிபுணனான இசை அறிஞன் ஒருவன் ஒரு வீணையை எடுத்து வாசிக்கும்போது சில தந்திகளில் இராகம் தவறுகிறதென்று கண்டால் உடனே நிறுத்தி விடுவான். அப்படியே பரிசுத்த ஆவியானவரும் சிலருடைய ஆத்துமாக்கள் வஞ்சகமும், திருக்கும், இரு மனமும் உள்ளவைகளாக இருக்கின்றனவென்று காணும்போது அவைகளில் கிரியை செய்கிறதில்லை. கிறிஸ்துவின் ஆவியானவர் வஞ்சகத்திற்கு துணை நிற்கமாட்டார். சில ஊழியக்காரர் சில உபதேசங்களைத் தாம் விசுவாசியாவிட்டாலும் சபையாரின் நிமித்தம் பிரசங்கிப்பதுண்டு. அப்படிச் செய்கிறவர்கள் மகா ஈனமான அடிமைகளைவிட இழிவானவர்கள். நாம் வஞ்சக பிரசங்கிகளாக இராதபடி தேவன் நம்மைக் காப்பாராக.
அகந்தை – தேவ ஆவிக்கு வெறுப்பான இன்னொரு காரியம் அகந்தை. ஒருவன் பெரியவனாகிறதற்கு வழி அவன் தன் சிறுமையை உணருதலே. தன் பார்வைக்குப் பெரியவனாயிருக்கிறவன் தேவனால் மதிக்கப்படமாட்டான். பூமியின் உயர்ந்த ஸ்தலங்களில் வாசம் பண்ண விரும்புகிறவன் மலையின் உச்சி மிகவும் குளிர்ச்சியும், அவாந்தரமுமானதென்று அறிய வேண்டும். கர்த்தர் தாழ்மையுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறார். அகந்தைக்காரரையோ தூரத்தில் இருந்து அறிகிறார்.
ஆவியின் அனுக்கிரகம் இல்லாத ஊழியம்
நாம் தேவனுடைய மெய்யான ஊழியக்காரராயிராமல் பிலேயாமைப்போலும், அவன் ஏறிப்போன கழுதையைப்போலும், தற்காலத்திற்கென்று மாத்திரம் உபயோகிக்கப்படும் எத்தனங்களாயிருப்போம். பிரசங்கவேலையை சிறிது காலம் அமைதியாய் நடத்தினாலும் நம்மில் ஆவியின் அநுக்கிரகம் இல்லையென்பது சபையாருக்கும் நமக்கும் தெரியாமலிருக்கலாம். அப்படியானால் நமது வேலை திடீரென்று முடிவடையக்கூடும் அல்லது நடுவயது கழிந்தபின் சடுதியில் வெட்டப்படுவோம். இடையிலே வெட்டுண்டு போகிற சில வாலிபப் பிரசங்கிகளின் விருத்தாந்தங்களை எழுதினால் அவர்கள் மதுபானத்தினால் உண்டான வைராக்கியமுள்ளவர்களாயும், அந்தரங்கத்தில் மகா அருவருப்பான அசுத்தமும் வெளிக்கு பரிசேய சுத்தமானவர்களாயும் இருந்தார்களென்று எழுதப்படும். வேறு சிலரைப்பற்றி: அவர்கள் வாயில் வேத சாஸ்திரிக்கு ஏற்ற உபதேசமும், உள்ளத்திலோ நாத்திகமுமாயிருந்தார்களென்றும், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டு வந்ததின் நிமித்தம் தேவ கோபம் அந்தச் சடுதியான மரணங்களை நேரிடப்பண்ணிற்று என்றும் வாசிப்போம் என்பதற்கு சந்தேகமில்லை. பயங்கரமான இப்பேர்பட்ட ஆக்கினை நம்மில் யாருக்காவது சம்பவியாதபடி எச்சரிக்கையாயிருப்போமாக.
போதகனது சொந்த பக்தி
போதகனுக்கு மெய்யான பக்தியிருப்பதன்றி அவனுக்குப் பலமான பக்தியும் வேண்டும். தேவ பக்தியாகிய அவன் ஜீவ நாடி பலமாயும் ஒழுங்காயும் அடித்தல் வேண்டும். போதகர்மார் மிகத்திறனுள்ள குணசீலராக இருத்தல் வேண்டும். அவர்களுடைய முழு உள்ளமும் தூய அறிவுடையதாயிருக்க வேண்டும். அநேகர், சாதாரண அங்கத்தினராக இருக்கத் தகுதியுள்ளவர்கள் எனினும் திருச்சபை உத்தியோகத்தை வகிக்கக் கூடியவர்களல்லவே; அவர்கள் ஜீவியம் அதற்கேற்றதல்ல. ஜோன் ஏன்ஜல் ஜேம்ஸ் என்னும் போதகர் சொன்னதாவது: “நீதியின் பிரசங்கி ஒருவன் பாவிகளின் வழியில் நடந்த பிறகு, தன் பகிரங்க பாவத்தைப் போலவே தான் பகிரங்கமாய் மனந்திரும்பும் வரைக்கும் ஆலயத்தில் அவன் மறுபடியும் தனது வாயைத் திறக்கலாகாது” என்பதே. அநேகமாய், ஒருவனிடத்தில் துணிகரமான பாவம் காணப்பட்டால் பிற்பாடு அவன் எப்படி மனம் வருந்தினாலும் சரி போதகனாக இருக்க வேண்டிய குணலட்சணங்கள் அவனிடத்தில் உண்டானதேயில்லை என்பது வெளிப்படை.
போதகனுடைய போதனையும் சாதனையும் ஒன்றுக்கொன்று ஒத்திருக்க வேண்டும். நாம் பலிபீடத்தண்டை தேவனுடைய ஆசாரியராகவும், ஆசாரிப்புக்கூடாரத்து வாசலுக்கு வெளியே பேலியாளின் மக்களாயுமிருக்கக் கூடாது. இருமுகத்தாரை ஒருவரும் நம்புகிறதில்லை. சொல் வேறு செயல் வேறுபட்டாரைப் பின்பற்றுதலாகாது. வார்த்தைகளைவிட கிரியைகளே அதிக ஓசையுடையன என்பது போல், நெறிகெட்ட வாழ்க்கையின் சத்தம் மகா சாதூர்யப்பிரசங்கத்தின் சத்தத்தை மீறிக்கேட்கும். தேவ ஊழியர்களின் சிலர் தங்கள் சம்பளத்திற்குத் தக்கபடி பிரசங்கம் செய்கிறார்கள். ஊழியத்திற்கான முயற்சி சம்பளத்தைவிட அதிகமாகவிருந்தால் அவர்கள் சும்மாவிருக்கிறார்கள். பணமில்லாவிட்டால் அவர்கள் ஜெபிப்பதில்லை; சம்பளமில்லாவிட்டால் அவர்கள் சேவகமுமில்லை.
பகிரங்க ஜெபம்
ஆலயம் ஆராதனை ஜெபம் பத்து நிமிடத்திற்கு அதிகப்படலாகாது என்று அனுபவமுள்ள பிரசங்கி ஒருவர் சொல்லியிருக்கிறார். சுருக்கமான ஜெபம் என்று குறை சொல்லுவோர் ஆயிரம் பேரில் ஒருவர்தான்; போதகர் நீண்ட ஜெபம் செய்கிறார் என்று குறைகூறுகிறவர்களோ ஏராளமாயிருப்பார்கள். ஜார்ஜ் விட்பீல்ட் என்பவர் ஒரு பிரசங்கியைப்பற்றி, “அவர் தமது ஜெபத்தினால் என்னை அதிகமாய் எழுப்பிவிட்டு ஜெபசிந்தனையுள்ளவனாக்கினார்; அத்தோடு முடித்திருப்பாரானால் நன்றாயிருந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யாமல் பின்னும் அதிக நேரம் ஜெபம்பண்ணி என் உற்சாகத்தைத் தணித்துவிட்டார்” என்று சொன்னாராம். ஆராதனையில் இருபத்தி ஐந்து நிமிடம் ஜெபித்துவிட்டு, கர்த்தரிடம் தங்கள் ஜெபத்தின் குறைவுகளை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு ஜெபத்தை முடிக்கின்ற போதகர்மார் இருக்கின்றார்களே, இப்போதகர்களின் தவறுகளினால் வருந்துகிற சபையாருக்கு ஐயோ! பரிதாபம்!
தேவாராதனை வேதவாசிப்பு
ஆராதனையில் வேத வாசிப்பு அநாவசியமானதென்றும், பிரசங்கத்தை சரியானபடி ஆயத்தம் செய்யாமல் நேரத்தைப் போக்குவதற்கு பிரசங்கியார் செய்கிற தந்திரமென்றும் சிலர் நினைக்கலாம். ஸ்கொட்லாந்தில் பிரபலமான ஒரு போதகர் ஆராதனையில் வேதாகமம் வாசிப்பதை முக்கியமானதாக நடத்தி வந்தார். சபையாரில் சிலர் அதை விரும்பாமல் ஆட்சேபித்தார்கள். அப்பொழுது போதகர் வேதபுத்தகத்தின் முதல் பக்கத்தில் “இராஜாவின் விசேஷித்த கட்டளையினால் சபைகளில் வாசிக்கும்படி நியமிக்கப்பட்டது” என்று அச்சிடப்பட்டிருப்பதை அவர்களுக்குக் காண்பித்து அவர்கள் வாயை அடைத்தார். நமக்கோ இயேசு இராஜாவே முன்மாதிரி. “அவர் ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து வாசிக்க எழுந்து நின்றார்” என்று சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறபடியால் ஜீவனுள்ள தேவனுடைய வசனங்களை ஆராதனையில் ஒரு பாகமாக பகிரங்கமாய் வாசிப்பது முக்கியமானது.
வேத வாசிப்பைப்பற்றி அறிய வேண்டிய சில முக்கிய குறிப்புகளுண்டு. அவை என்னவெனில் ஆராதனையில் வாசிக்க வேண்டிய பாகம் பகிரங்க வாசிப்புக்கு ஏற்றதா என்று பார்க்க வேண்டும். வாசிக்க வேண்டிய வேதபாகம் ஜனங்களின் நிலைமைக்கும் பிரசங்கிக்கப்படப்போகிற விஷயத்திற்கும் ஏற்றதாயிருக்க வேண்டும். எந்தப் பாகத்தையும் கைக்கெட்டினபடி வாசிக்காமல் உபதேசம், கடிந்து கொள்ளுதல், சீர்திருத்தல், படிப்பித்தல் ஆகிய பல நோக்கங்களும் நிறைவேற்றத்தக்கதாக வேதாகமத்தின் பல பகுதிகளிலுமிருந்து தெரிந்தெடுத்து வாசிக்க வேண்டும். அப்படிச் செய்யும்பொழுது கிறிஸ்து மார்க்க சத்தியம் பூரண வடிவாய் சபையாருக்கு முன் வைக்கப்படுகிறது.
ஆராதனையில் வாசிக்கப்படும் பகுதிகள் எவ்வளவு நீளமாய் இருக்க வேண்டும் என்பதை சமயத்திற்கேற்றவாறு தீர்மானித்துக் கொள்ளலாம். தற்காலத்திலுள்ள வேதாகமத்தின் அதிகாரப்பிரிவுகள் மிகவும் உபயோகமாயிருந்தாலும், அவைகள் சில இடங்களில் அதிகமாய் பிரிக்கப்பட்டிருக்கிறபடியால். அப்பிரிவுகளை நாம் கைக்கொள்ளாமல் வாசிப்பு அதிகமாய் சுருங்கிப் போகாதபடி ஓர் அதிகாரத்தின் பாகத்தை விட்டும், வேறோர் அதிகாரத்தின் பாகத்தைக் கூட்டியும் வாசிக்கலாம்.
வேதத்தை வாசிக்கும்போது வாசிக்கிறதன் பொருள் கேட்போர் மனதில் படத்தக்கதாக அதை முதலில் தனியே வாசித்து அதன் கருத்தை உணர்ந்தறிய வேண்டும். அதிக முயற்சி எடுத்தாலொழிய இவ்வாறு வாசிக்க முடியாது. ஆகையால் பொருள்பட வாசிப்பது இலேசானதென்றோ, வேதத்தின் எந்தப் பாகத்தையும் திறந்தவுடனே சரியானபடி வாசித்துவிடலாம் என்றோ நினைக்கக்கூடாது. ஆயத்தமில்லாமல் சிலர் பிரசங்கிக்கக்கூடும், என்றாலும் வாசிக்க ஒருவராலும் முடியாது; ஏனெனில் புத்தகத்தைப் பார்த்து வார்த்தைகளைத் திருத்தமாய் சொல்வது எழுத்துக் கூட்டலேயல்லாமல் வாசிப்பதல்ல. தகுதியான ஆயத்தத்துடன் நமது சத்தத்தின் மூலமாய் தேவன் தமது வார்த்தைகளினால் காண்பிக்கக் கருதிய பொருளை வெளிப்படுத்துவதே சரியான வாசிப்பு.
பிரசங்கியின் நடத்தை
போதகன் தன் சம்பள விஷயத்தைப் பற்றி குருடனைப் போலவும், செவிடனைப் போலவும் இருக்க வேண்டும். பொறுப்புள்ள உதவிக்காரர்கள் இல்லாத வேளையிலும், வேறு தருணங்களிலும் போதகன் முன்னின்று பொருள் சேகரிப்பதில் அக்கறைப்பட வேண்டிவரும். ஆனால், பொருள் சேகரிப்பில் போதகன் தலையிடுதல் திவ்வியப் பணிவிடைக்குத் தடைதான். வேறு வழியில்லாவிட்டால் இதனை சகிக்க வேண்டியதுதான். உதவிக்காரர்கள் உண்மையின்மையினால் அல்லது நிர்விசாரத்தினால் குழப்பமேற்படுமானால் நடப்பது நடக்கட்டும் என்று போதகன் அசட்டையாய் இருக்கக்கூடாது. ஆனால், அவர்கள் காரியங்களை சரிவர நடத்திக் கொண்டு போகும்போது அவர்களது கடமைக்குள் தலையிட்டுக் கொள்வது நல்லதல்ல.
(சார்ள்ஸ் ஸ்பர்ஜன் எழுதி தமிழில் வெளிவந்துள்ள ஸ்பர்ஜன் அறிவுரைகள் நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிந்தனைத்துளிகள்.)