திரித்துவம்
அதிகாரம் 2: பாகம் 1
விளக்கம்: அலன் டன்
இவ்விதழில் 1689 விசுவாச அறிக்கையின் இரண்டாம் அதிகாரம் திரித்துவத்தைப்பற்றி அளிக்கும் போதனைகளைப் பார்ப்போம்.
பத்துக்கட்டளைகளின் முதலிரண்டு கட்டளைகளையும் நாம் விசுவாசத்துடன் பின்பற்றுவதிலேயே வேத ஒழுக்கவியல் தங்கியிருக்கின்றது (யாத்தி. 20:3-6). வேதமும், வரலாறும் மனிதனின் மிகப்பெரும் பாவமாக அவனுடைய உருவ வழிபாட்டையே சுட்டிக்காட்டுகின்றன. பாவியாகிய மனிதனால் தனக்குள் காணப்படும் அடிப்படையான ஆராதிக்கும் உணர்வுகளை அடக்கிவைக்க முடியாது. அவன் அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். பவுல், பத்துக்கட்டளைகளின் இரண்டாம் கட்டளையின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, “தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாய் மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்” என்று கூறுகிறார் (ரோமர் 1:25). மனிதனால், படைத்தவரை அவருடைய படைப்பிலிருந்து பிரித்துவிட முடியாது. ஆனால், அவன் அதைப் பொய்யாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். தேவனின் சாயலில் தேவனால் படைக்கப்பட்ட சிருஷ்டியாகிய மனிதன், தேவனின் சாயலில் ஒரு கடவுளைத் தோற்றுவிக்கிறான். பிசாசின் பொய்களின் வழியில் சென்று உருவங்களை ஏற்படுத்தி அவற்றைக் கடவுளாகக் கருதுகிறான். அவன் போலியான விசுவாசத்துடனும், தன்னலமும், பெருமையும் கொண்டு, தேவனுக்கு எதிராக மேலும் மேலும் உருவங்களை ஏற்படுத்தி வழிபடுகின்றான். மனிதன் பாவத்தில் வீழ்ந்த நாட் தொடக்கம், இஸ்ரவேலரின் வரலாற்றிலும், உலகத்தின் எல்லா மக்களின் கலாச்சாரங்களிலும் மனிதனின் அடிப்படையான பாவமாக உருவ வழிபாடே காணப்படுகின்றது.
ஆகவேதான், உருவ வழிபாட்டிலிருந்து விடுபட்டு மெய்யான ஜீவனுள்ள தேவனை அறிந்து வழிபடுதல் உண்மையான மனந்திரும்புதலுக்கு அடையாளமாகக் காணப்படுகின்றது (1 தெச. 1:9, 10). வேதபூர்வமான கிறிஸ்தவம் மெய்யான, ஜீவனுள்ள தேவனையே தனது போதனைகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டிருக்கின்றது. ஆகவேதான், 1689 விசுவாச அறிக்கையை வரைந்தளித்துள்ள நமது பெரியோர்கள் இவ்விரண்டாம் அதிகாரத்தில் அத்தேவனைப்பற்றி விளக்கியுள்ளனர். இங்கே, தேவனைப்பற்றி அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் இனிவரப்போகும் நான்காம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள, தேவன் தன் சிருஷ்டிகள் அனைத்தின்மீதும் கொண்டுள்ள இறை ஆண்மைப்பற்றிய கோட்பாடுகளை நாம் அரவணைத்துக் கொள்ளத் துணைபுரிகின்றன.
பாரா 1 – கடவுள் ஒருவராகவும் ஜீவனுள்ள மெய்யான தேவனாகவும் இருக்கிறார். அவர் தன்னிருப்பானவராயும் (அவர் தன்னுடைய இயல்புக்குத் தேவையான எல்லா வல்லமையையும் தன்னிடத்தில் இருந்தே பெற்றுக்கொள்வதோடு, புறத்திலிருந்து எதுவுமே தேவையில்லாதவராகவும் இருக்கிறார்), தன்னிருப்பிலும் முழுநிறைவிலும் எல்லையற்றவராகவும் இருக்கிறார். அவரால் மட்டுமேயன்றி வேறொருவராலும் அவரது உள்ளியல்பைப் புரிந்து, அறிந்துகொள்ள முடியாது. அவர் தூய ஆவியானவரும், கண்ணிற்கு புலப்படாத உருவமற்றவரும், மாறுதலுக்குரிய மனித உணர்ச்சிகளும் (கோபம், வெறுப்பு, போராசை, பாலியல், அன்பு போன்ற மனிதனை ஆளும் உணர்ச்சிகள்) அற்றவர்; அவர் ஒருவரே என்றும் உள்ளவராக (ஏனையோர் அவரிடத்திலிருந்தே ஜீவனைப் பெற்றுக் கொள்கிறார்கள்), மனிதன் அடையமுடியாத ஒளியின் மத்தியில் வாழ்கிறார்; அவர் மாறாதவர்; அளவிட முடியாதவர்; என்றுமுள்ளவர்; புரிந்து கொள்ளமுடியாதவர் (மனிதனுடைய சிந்தனைகளுக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர்); எல்லாம் வல்லவர்; எல்லாவிதத்திலும் எல்லையற்றவர்; மிகப்பரிசுத்தர்; மிகுந்த ஞானமுள்ளவர்; பெருஞ்சுதந்திரம் உள்ளவர்; முழுமையானவர்; எல்லாக் காரியங்களையும் தனது மாறாத பெருநீதியுள்ள சித்தத்தின் திட்டப்படி, தன் சுயமகிமைக்காகவே செய்பவர்; அவர் பேரன்பும், பேரருளும், பெருங்கருணையும், சகிப்புத்தன்மையும், அளவற்ற நற்குணமும், உண்மையும் உள்ளவர்; அநீதியையும், ஒழுங்குமீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; ஊக்கத்தோடு தம்மை நாடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர்; அதேநேரத்தில், அவர் குற்றப்பழிகளையும், குற்றவாளிகளையும் எவ்விதத்திலும் விட்டுவைக்காது, எல்லாப் பாவங்களையும் வெறுத்தொதுக்கி, பெருநீதியோடும் பயங்கரத்தோடும் நியாயந்தீர்ப்பவர்.
ஆதி. 17:1; யாத்தி. 3:14; 34:6, 7; உபா. 4:15, 16; 6:4; 1 இராஜா. 8:27; நெகே. 9:32, 33; சங். 5:5, 6; 90:2; 115:3; நீதி. 16:4; ஏசா. 6:3; 46:10; 48:12; எரேமி. 10:10; 23:23, 24; நாகூம் 1:2, 3; யோவா. 4:24; ரோமர் 11: 36; 1 கொரி. 8:4, 6; 1 தீமோ. 1:17; எபிரே. 11:6.
இவ்விசுவாச அறிக்கையின் ஏனைய அதிகாரங்களைப் போலவே இவ்வதிகாரமும் முதலாவது பாராவில் இவ்வதிகாரத்தின் போதனையை சுருக்கமாக விளக்கிவிட்டு, ஏனைய பாராக்களில் அப்போதனையை மேலும் படிப்படியாக விளக்கமாகத் தருகின்றன. முதலாவது பாராவை நாம் மிக விளக்கமாகப் படிக்க வேண்டியது அவசியம். அதேவேளை, இப்பாராவில் தரப்பட்டுள்ள போதனையோடு எந்தவிதத்தில் இவ்வதிகாரத்தின் ஏனைய பாராக்கள் தொடர்புள்ளவையாக உள்ளன என்றும் நாம் படித்தல் அவசியம்.
இவ்வதிகாரத்தின் முதல் பாரா கடவுளைப்பற்றிய பொதுவான விளக்கத்தை அளிக்கிறது. இதன் இரண்டாம் பாரா, தன்னுடைய சிருஷ்டிகளுடன் கடவுள் கொண்டுள்ள உறவை விளக்குகிறது. மூன்றாம் பாரா, கடவுள் பிதா, குமாரன், ஆவியாக இருக்கிறார் என்று போதிக்கின்றது.
1. கடவுளின் குணாதிசயங்கள் (பாரா 1)
“கடவுள் ஒருவராகவும் ஜீவனுள்ள மெய்யான தேவனாகவும் இருக்கிறார்”.
அ. கடவுள் ஒருவரே
வேதம் கடவுள் ஒருவரே என்று போதிக்கும்போது, பல கடவுள்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது (உபா. 6:4; ஏசா. 46:9; 1 தீமோ. 2:5). பல தெய்வ வழிபாடு பிசாசின் கண்டுபிடிப்பு. “ஆதியிலே தேவன்”, என்றே வேதம் ஆரம்பிக்கிறது. திரித்துவப் போதனையை வேதத்தில் மட்டுமே காண்கிறோம். இதனை வேறு எந்த சமயத்திலும் பார்க்க முடியாது. ஆகவே, பல தெய்வ வழிபாடும், திரித்துவப் போதனையோடு இந்து மதமும் மூர்த்திகளை இணைத்துப் போதிக்கும் முறையும் வேதத்திற்கு எதிரானது. இந்து மதம் என்றுமே ஒரே தெய்வ வழிபாட்டைக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு வாதிடுபவர்கள் சுயநல நோக்கில் செயல்படுகிறார்களே தவிர கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஜீவனுள்ளவர்: ஒரே தேவனாகிய கடவுள் ஜீவனுள்ளவர் என்று வேதம் போதிக்கின்றது. வேதம் உருவ வழிபாட்டைப்பற்றிப் பேசும்போது அவ்வுருவங்கள் உயிரற்றவை என்று தெரிவிக்கின்றது (சங். 115). இதற்கு மாறாக நமது தேவன் ஜீவனுள்ளவராக இருக்கிறார். நமது ஆழமான விருப்பங்களையும், ஆவியின் தேவைகளையும் வெறும் சிலைகளால் தீர்க்க முடியாது. பவுலும், பர்னபாவும் உருவங்களை வழிபட்ட மக்களைச் சந்தித்தபோது ஜீவனுள்ள தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியத்தோடு எடுத்துச்சொல்ல முயன்றனர் (அப்போஸ். 14:15).
உண்மையுள்ளவர்: உருவ வழிபாட்டிற்கெல்லாம் காரணமாக இன்னுமொரு உயிருள்ள ஜீவனாக பிசாசு காணப்படுகின்றான். அவனை இவ்வுலகத்தின் தேவன் என்று வேதம் அழைக்கிறது (2 கொரி. 4:4). பிசாசானவன் இவ்வுலகத்து மனிதர்களுடைய கண்களைக் குருடாக்கி கர்த்தரை அறிந்து கொள்ள முடியாமல் வைத்திருக்கிறான். பிசாசு தனக்குக்கீழ் பணிபுரியும் பல ஊழியர்களைக் கொண்டிருக்கிறான். சாத்தானால் பேசமுடியும். அவன் பேசுகிறபோது பொய்யைத்தவிர வேறெதையும் பேசுவதில்லை. ஆகவேதான், வேதம் அவனைப் பொய்களின் தகப்பன் என்று அழைக்கின்றது (யோவான் 8:44). ஆனால், தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். அவரைத்தவிர வேறு மெய்யான. ஜீவனுள்ள தேவன் இல்லை (1 கொரி. 8:4-6; ஏசாயா 45:21, 22).
ஆ. கடவுளின் சுதந்திரம்.
“அவர் தன்னிருப்பானவராயும் (அவர் தன்னுடைய இயல்புக்குத் தேவையான எல்லா வல்லமையையும் தன்னிடத்தில் இருந்தே பெற்றுக்கொள்வதோடு, புறத்திலிருந்து எதுவுமே தேவையில்லாதவராகவும் இருக்கிறார்). தன்னிருப்பிலும் முழுநிறைவிலும் எல்லையற்றவராகவும் இருக்கிறார்.”
இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது விசுவாச அறிக்கை வரலாற்றில் தோன்றிய இறையியல் விளக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொள்கின்றது. ஆதி சபை வரலாற்றை நாம் படித்துப் பார்க்கின்றபோது திரித்துவப் போதனைகள் பற்றியும், கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை பற்றியும் பல போலிப் போதனைகள் எழுந்திருந்ததை நாம் கவனிக்கிறோம். இத்தகைய போலிப் போதனைகளை எதிர்த்து, சரியான வேதபூர்வமான வார்த்தைகளைப் பயன்படுத்தி முறையான இறையியல் போதனைகளை திருச்சபை எழுத்தில் வடிக்க நேர்ந்தது.
விசுவாச அறிக்கையின் இவ்வசனம், எல்லையற்ற நம் தேவனின் தனித்துவமான தன்மையைப்பற்றி விளக்குகிறது. “தன்னிருப்பானவர்” என்ற பதம் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது. அவர் தனக்குள் பூரணமானவராகவும், தனது ஜீவனுக்காக எந்தவொரு உயிரினத்திலும் தங்கியிராதவராகவும் இருக்கிறார். “பிதா தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல், குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்” (யோவான் 5:26). கடவுள், தமது ஜீவனுக்காக தமக்கு வெளியில் எந்தவொரு பொருளிலும், உயிரினத்திலும் தங்கியிருக்கவில்லை. அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம் (அப்போஸ். 17:28). நமது ஜீவனுக்காக நாம் கடவுளில் தங்கியிருக்கிறோம். கடவுள் இல்லாமல் நாம் இருக்க முடியாது. ஆனால், கடவுள் தமது சிருஷ்டிகளில் இருந்து சுதந்திரமாக இயங்குகிறார். கடவுள் இருக்கிறவராய் இருக்கிறார். அவர் எல்லையற்றவராய், எந்தவித பாதிப்பும் அற்றவராய் இருக்கிறார். அவர் முழுப்பூரணமுள்ளவராய் இருக்கிறார். அவரிடம் உண்மையற்றதென்றொன்றில்லை.
மோசேக்கு கடவுள் தனது பெயரை அறிவித்தபோது (யாத். 3:14) நான் “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று கூறினார். பழைய ஏற்பாட்டு மக்கள் கடவுள் மேல் வைத்திருந்த மரியாதையின் காரணமாகவும், தேவ பயத்தின் காரணமாகவும் இப்பெயரை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இப்பெயருக்கான விளக்கம் கடவுளிலேயே தங்கியிருக்கிறது. அவரைப்பற்றி அவரால் மட்டுமே விளக்க முடியும். அவரது குணாதிசயங்களே அவரைப்பற்றி நமக்குப் போதிக்கின்றன. அவர் இருக்கிறார். அவர் ஆணையிடுகிறார். அவர் செயலாற்றுகிறார். தனது செயல்கள் அனைத்தையும் செய்து முடிக்கக்கூடிய தன்னிறைவுடையவராக கடவுள் இருக்கிறார். அவர் எவரிடத்திலிருந்தும் எந்தவித ஆலோசனையையும் பெறுவதில்லை அவர் எவரிலும் தங்கியிருக்கவில்லை. தனது பரிசுத்த சித்தத்தை தனது மகிமைக்காக சுதந்தரமாக அவர் நிறைவேற்றுகிறார். “சகலமும் அவராலும், அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது. அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமேன்” (ரோமர் 11:36).
பவுல், அத்தேனே பட்டணத்தில் உருவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்களைச் சந்தித்தபோது, “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால் கைகளால் கட்டப்பட்ட கோவிலில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. எல்லோருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல், மனிதர் கைகளினால் பணிவிடை கொள்கிறதுமில்லை” என்று அறிவித்தார். (அப்போ: 17:24, 25).
இ. கடவுளின் புரிந்துகொள்ள முடியாத தன்மை.
“அவரால் மட்டுமேயன்றி வேறொருவராலும் அவரது உள்ளியல்பைப் புரிந்து, அறிந்துகொள்ள முடியாது.”
தன்னைப்பற்றி கடவுளுக்கு மட்டுமே பூரணமாகத் தெரியும். தனது தெய்வீகத்தை அவர் மட்டுமே பூரணமாக புரிந்து கொண்டிருக்கிறார். சிருஷ்டியாகிய மனிதனால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. அவனால் கடவுளைக் கண்டுபிடிக்க முடியாது. கடவுளைப்பற்றிய ஒரு கோட்பாட்டை வகுத்து, அவரைப்பற்றி விஞ்ஞானரீதியிலான எந்தவொரு ஆய்வையும் அவனால் நடத்த முடியாது. உண்மையில், அவன் இயற்கையாகவே அவர் இருப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டான். (ரோமன் 1:28). அவர் தம்மைப்பற்றி நமக்கு வெளிப்படுத்தினால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும். “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உமது திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.” (மத்தேயு 11:25-27).
தேவன், தம்மை நமக்கு வெளிப்படுத்தல் மூலம் அறியத் தந்திருந்தபோதும், நம்மால் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அதாவது, தேவனைப்பற்றிய அனைத்து அறிவையும் நாம் கொண்டிருக்கவில்லை. அவரைப்பற்றி நமக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை என்று நம்மால் கூறமுடியாது. வேதத்தில் தேவனைப்பற்றி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளிப்படுத்தல் உண்மையானதும் நம்பத்தகுந்ததுமாகும். அதேவேளை, கடவுளைப்பற்றி ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் வெளிப்படுத்தல் நமக்குப் போதிக்கின்றது என்று கூறிவிட முடியாது. தன்னப்பற்றிக் கடவுள் வெளிப்படுத்தியபோது, நாம் அறிந்துகொள்ள அவசியமானவற்றை மட்டுமே அவர் வெளிப்படுத்தினார். மோசேக்கு அவர் தன்னை வெளிப்படுத்தியபோது, தனது கரங்களால் தன்னை மறைத்து, தனது முகத்தை மோசே பார்க்கமுடியாமல் செய்தார். (யாத்தி. 33:18-34:8). இறுதியில் தேவன் தன்னைக் கிறிஸ்துவுக்குள்ளாக முழுமையாக வெளிப்படுத்தினார். (மத்தேயு 13:10-17). நாம் கிறிஸ்துவைப் பார்க்கும்போது கடவுளைப் பார்க்கிறோம். ஆனால், கடவுளின் தெய்வீகம், மனிதரூபத்தில் வந்த சேவகனில் மறைந்து காணப்பட்டது (கொலோ. 1:19; 2:9; பிலி. 2:5-11). நம்மத்தியில் காணப்படும் தேவனின் இராஜ்யமும்கூட ஒருவிதத்தில் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விதத்திலேயே காணப்படுகின்றது. ஏனெனில், தேவ இராஜ்யத்தை நாம் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அது முழுமையாக நிறைவேறும் நாள் இன்னும் வரவில்லை. நாம் இப்போது, கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்ட மீட்பின் அடிப்படையில், அவரது அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷ வித்து இவ்வுலகில் விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதையே பார்க்கிறோம். ஆனால் அதை நாம் நமது கண்களால் காண்பதில்லை. நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் விசுவாசத்தின் மூலமாக அதை நம்புகிறோம். கடவுளை நாம் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியாதபோதும், விசுவாசத்தின் மூலமாக விசுவாசவாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். விசுவாசம் இல்லாமல் கடவுளை ஒருவரும் ஆராதிக்க முடியாது. அவரிடம் வருபவர்கள் அவர் இருக்கிறார் என்று நம்பி, விசுவாசத்துடன் அவரை நாடவேண்டியது அவசியம். தன்னை அவ்வாறு நாடி வருபவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார் (எபிரே. 2:4; 11:6; 2 கொரி. 5:7). நாம் கிறிஸ்துவுக்குள் இறந்து, உயிர்த்தெழுந்து புதிய சரீரத்தைப்பெற்று புதிய உலகத்தில் பாவமற்று பூரணமாக இருக்கும் காலத்திலும்கூட அளவற்ற, பூரணமான கடவுளைப்பற்றிய அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ளப்போவதில்லை. அவரை நாம் எந்த விதமான பாவக்கலப்புமின்றி தெரிந்து கொள்வோம். இவ்விதத்திலேயே அவரை நாம் பூரணமாகத் தெரிந்து கொள்வோமேயன்றி இதைவிட விரிவாக அல்ல. (சங்கீதம் 145:3; ரோமர் 11:33).
ஈ. கடவுளின் ஆவிக்குரிய தன்மை
“அவர் தூய ஆவியானவரும், கண்ணிற்கு புலப்படாத உருவமற்றவரும், மாறுதலுக்குரிய மனித உணர்ச்சிகளும் (கோபம், வெறுப்பு, போராசை, பாலியல், அன்பு போன்ற மனிதனை ஆளும் உணர்ச்சிகள்) அற்றவர்; அவர் ஒருவரே என்றும் உள்ளவராக (ஏனையோர் அவரிடத்திலிருந்தே ஜீவனைப் பெற்றுக் கொள்கிறார்கள்), மனிதன் அடையமுடியாத ஒளியின் மத்தியில் வாழ்கிறார்;”
இவ்வசனங்கள், கடவுளை அவர் சிருஷ்டித்துள்ளவற்றிலிருந்து மேலும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. கடவுள் ஆவியானவர் என்றும் அவரை ஆராதிப்பவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றும் இயேசு போதித்தார் (யோவான் 4:24). தாம் படைத்துள்ள அநித்தியமான இவ்வுலகத்துப் பொருட்களிலிருந்து கடவுள் வேறுபட்டு நிற்கிறார் என்பதையே அவரது ஆவிக்குரிய தன்மை போதிக்கின்றது. ஆகவே, “நித்தியமாகவும், அழிவில்லாமலும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனாய் இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமேன்” (1 தீமோ, 1:17). ஏனைய பொருட்களை விஞ்ஞானரீதியில் ஆராய்ந்து நாம் கண்டுபிடிக்க முயற்சிப்பதுபோல் கடவுளை ஆராய்ந்து கண்டுகொள்ள முடியாது. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை. பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவான் 1:18). ஆவியான இக்கடவுள் மட்டுமே தன்னை நாம் தெரிந்து கொள்ளக்கூடியவிதத்தில் வெளிப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். இதையே அவர் தனது குமாரனாகிய கிறிஸ்துவின் மூலமாக செய்துள்ளார். அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். (கொலோ. 1:15). கடவுள் ஒருவரே தம்மைப்போல ஒரு தற்சுரூபத்தை உருவாக்கக்கூடியவர். இதை அவர் தனது சிருஷ்டியின் மூலமாக, மனிதனை தனது ரூபத்தில் தோற்றுவித்ததன் மூலமாக செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பியதின் மூலமும், தனது மக்களின் பரிசுத்தமாக்குதலின் மூலமாகவும் தனது ரூபத்தைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், கடவுள் ஆவியாகவும், அதரிசனமானவராகவும் இருப்பதால், மனிதர்கள் அவரைப்போன்ற உருவங்களைத் தோற்றுவிப்பதைக் கடவுள் தடை செய்துள்ளார். இரண்டாம் தடவையாக பத்துக்கட்டளைகளைக் கொடுப்பதற்குமுன், மோசே இரண்டாம் கட்டளையின் அடிப்படையில் இஸ்ரவேலர்களை எச்சரித்தார். கடவுளைப் பார்த்த ஒருவரும் இல்லாததால் கடவுளைப் போன்ற தோற்றத்தில் உருவங்களை ஏற்படுத்துவது தவறு என்று எச்சரித்தார் (உபாகமம் 4:15-18).
விசுவாச அறிக்கை, கடவுளுக்கு சரீரமோ, மனித உணர்ச்சிகளோ, அங்கங்களோ இல்லை என்று போதிப்பதன் மூலம், மனிதரூபத்தில் கடவுளர்களைத் தோற்றுவிக்கும் புறமதச்செயல்களைக் கண்டிக்கிறது. கிரேக்கர்களும், ரோமர்களும் வழிபட்ட கடவுளர்கள் தங்களுடைய உணர்ச்சிகளுக்குப் பேர் போனவர்கள். இந்து மதத்திலும்கூட இத்தகைய கடவுளர்கள் இருப்பதை நாம் அறிவோம். காளியின் கொடூரமும், சிவனின் நெற்றிக்கண் கோபமும் நாமறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இப்புறமதக்கடவுளர்கள் மனிதனைப் போன்ற பாவ எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கொண்டவர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். சிவனுக்கும், கிருஷ்ணனுக்கும் மற்றவர்களின் மனைவியரின் மேல் உள்ள மோகத்தை புராணங்கள் தெரிவிக்கின்றன. முருகனுக்கு ஒரு மனைவி போதாது. இவையெல்லாம் மெய்யான தேவனோடு சம்பந்தமில்லாத பாவஉணர்வுகள். இருந்த போதும் வேதத்தில் கடவுளின் கண்களைப் பற்றியும். செவிகளைப்பற்றியும், கேட்கும் தன்மையைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். இதை விளக்கும் சார்ள்ஸ் ஹொட்ஜ் (Charles Hodge), “மனிதனுடைய பலவீனத்தின் காரணமாகவும், மனித உணர்வுகள் மனிதனின் அங்கங்களினூடாக வெளிப்படுவதன் காரணமாகவும், அடையாள மொழியினூடாக வேதம் மனிதன் புரிந்து கொள்ளும் விதத்தில் கடவுளின் செயல்களை மனித உறுப்புகளின் மூலமாக வெளிப்படுவதாகத் தெரிவிக்கின்றன” என்கிறார். அதாவது, வேதம் மனிதனுக்குப் புரியக்கூடியவிதத்தில் மனித மொழியைப் பயன்படுத்தி, கடவுளின் ஆவிக்குரிய செயல்களை விளக்குகிறது. இதை ஆங்கிலத்தில் “anthropomophisms” என்று அழைப்பர். கடவுளின் செயல்களை மனித குணாதிசயங்களின் மூலமாக விளக்குதல் என்பது இதற்குப் பொருள். ஆகவேதான் கடவுள் நமது ஜெபங்களைத் தனது “காதுகளால்” கேட்பதாகவும், நமது செயல்களைத் தனது “கண்களால்” பார்ப்பதாகவும், ஆராய்வதாகவும், தமது “முகத்தை” நாம் பார்க்க முடியாதபடி மறைத்துக் கொண்டதாகவும், வரலாற்றில் தனது “கரங்களின்” வல்லமையால் அவர் செயல்படுவதாகவும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இவை ஆவிரூபமான, அங்கங்களற்ற கடவுளின் செயல்களை மனித மொழியில் விளக்குவதாகும்.
“அவர் ஒருவரே என்றும் உள்ளவராக (ஏனையோர் அவரிடத்திலிருந்தே ஜீவனைப் பெற்றுக் கொள்கிறார்கள்), மனிதன் அடையமுடியாத ஒளியின் மத்தியில் வாழ்கிறார்” எனும் வாசகங்கள் 1 தீமோ. 6:15, 16 ஆகிய வேத வசனங்களை எதிரொலித்து கடவுளுக்கே எல்லா மகிமையையும் செலுத்துகின்றன.
(வளரும்)