1. தனிப்பட்ட ஜெபத்தை என்றுமே தவறவிடக்கூடாது; ஜெபிக்கும்போது கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதையும் நமது ஜெபத்தைக் கேட்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது (எபிரேயர் 11:6).
2. எப்போதுமே தனிப்பட்ட வேத வாசிப்பை தவறவிட்டுவிடக்கூடாது; அவ்வாறு வேதத்தை வாசிக்கும்போது கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதையும், அவர் பேச்சை நம்பி அதன்படி நடக்க வேண்டும் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. இவ்விரு செயல்களையும் தவறவிட்டுவிடுவதாலேயே எல்லா பின்தங்குதல்களும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்பட்டுவிடுகின்றன (யோவான் 5:39).
3. ஒவ்வொரு நாளும் இயேசுவுக்காக எதையும் செய்யாமல் விட்டுவிடக்கூடாது. ஒவ்வொரு இரவும் இயேசு உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே நேரம் நீங்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறீர்கள் என்றும் உங்களையே கேட்டுப்பாருங்கள் (மத்தேயு 5:13-16).
4. ஒரு காரியம் சரியானதா? தவறானதா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் அறைக்குப் போய் தனிமையில் முழங்காலிட்டு கர்த்தரிடம் ஜெபத்தில் கேளுங்கள். (கொலோசேயர் 3:17) உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால் அக்காரியம் தவறானது (ரோமர் 14:23).
5. ஏனைய கிறிஸ்தவர்களை உதாரணமாகக் கொண்டு கிறிஸ்தவத்தை நாம் எடை போடக்கூடாது. அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் அதனால் நானும் செய்வேன் என்று வாதிடக்கூடாது (2 கொரி. 10:12). என் நிலைமையில் கிறிஸ்து என்ன செய்வார் என்று கேட்டு, அவ்வழியில் நடப்பதற்கு பெரு முயற்சி எடுக்க வேண்டும் (யோவான் 10:27).
6. உங்களுடைய மனதில்படுவது கர்த்தருடைய வார்த்தைக்கு முரணானதாக இருந்தால் அதை நம்பாதீர்கள். கர்த்தருடைய வார்த்தை உண்மையாக இருந்தால் என் மனதில்படுவது சரியானதாக இருக்க முடியுமா? என்று கேளுங்கள். அவை இரண்டுமே உண்மையாக இல்லாதிருப்பதுபோல் தெரிந்தால் உங்கள் இருதயம் பொய்யானது என்று அறிந்து கர்த்தரை நம்புங்கள் (ரோமர் 3:4; 1 யோவான் 5:10, 11).
– பிரவுன்வோ நோர்த் –