அற்புதங்களும், அடையாளங்களும்!

இன்று கிறிஸ்தவ உலகெங்கும் சுகமளித்தல் கூட்டங்களுக்குக் குறைவில்லை. தங்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஜெபிப்பது மட்டுமன்றி சுகமளிப்புக் கூட்டங்கள் எங்கு நடக்கின்றன என்று தேடி அங்கெல்லாம் ஓடி அலைவதும் அநேகருடைய வழக்கமாக இருக்கின்றது. பெனிஹின்னிலிருந்து தமிழகத்து தினகரன் வரை அநேகர் தங்களை சுகமளிக்கும் மன்னர்களாக எண்ணி அதையே தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். படித்தவர்கள் முதல் பாமரர்வரை இவர்களது பிடியில் அகப்படாதவர்கள் மிகச் சிலர். பெனிஹின்னையும், தினகரனையும் கிறிஸ்துவுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும் சிந்திக்கத் தெரியாத பலவீனமுள்ள மக்கள் கூட்டத்தை இப்புதிய நூற்றாண்டிலும் பார்க்கிறோம். எது வளர்ந்தாலும், சீர்திருந்தினாலும் எம் சிந்தனை சீர்திருந்தாது என்ற வைராக்கியத்தோடு இவர்கள் வாழ்வதுபோல் தெரிகிறது. பெனிஹின்னின் வாய் திறந்தால் முத்து உதிரும் என்று மயங்கிக் கிடக்கும் ஒரு மாது எனக்கு அறிமுகமானவர். வேதம் புரியாமல் மனித மாயைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து அவர் வாழும் வாழ்க்கை பரிதாபம். ஆனால், அது அவருக்குப் புரிவதுமில்லை, தெரிவதுமில்லை. தினகரனின் வார்த்தையில் மயங்கித் தேவன் கூடத் தேவையில்லை என்ற, அவரது – இயேசு அழைக்கிறார் – பத்திரிகை மட்டுமே வேதம் என்று வாழ்ந்து பின்னால் அறிவு தெளிந்து அப்பத்திரிகைகளைக் குப்பையில் எறிந்த ஒரு பெரியவரைப்பற்றி மலேசிய நண்பர் ஒருவர் எனக்குக் கூறியிருக்கிறார். உங்கள் கால்கள் நீளமாக வளர வேண்டுமா? எங்கள் கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் ஜோண் விம்பர். கிறிஸ்தவர்கள் இத்தகைய அழைப்புகளை நம்பி அக்கூட்டங்களுக்குப் போவது அவசியமா?

இப்படியெல்லாம் நான் எழுதுவதால், என்ன இந்த மனிதருக்கு கர்த்தரின் வல்லமையில் நம்பிக்கை இல்லையோ என்று எண்ணிவிட வேண்டாம். கர்த்தரின் வல்லமைக்கும், சாதாரண மனித வல்லமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் வல்லமையுள்ளவர், சுகமளிக்கிறவர், அற்புதங்கள் செய்கிறவர் என்பதை புத்தியுள்ள எந்தக் கிறிஸ்தவனும் மறுக்க மாட்டான். கர்த்தருடைய வல்லமைக்கு எவரும் தடைபோட்டுவிட முடியாது. ஆனால், சரீர சுகத்திற்காகவும், ஆத்மீகத் தேவைகளுக்காகவும் கர்த்தரிடம் போவதை விட்டுவிட்டு சாதாரண மனிதனை நாடி ஓடி அவனே கதி என்று வாழும் புத்தியற்ற வாழ்க்கையைத்தான் நான் சரியில்லை என்று கூறவருகிறேன்.

வேதம் ஓரிடத்திலாவது மனிதன் மனிதனுக்கு சுமகளிக்க முடியும் என்றோ, அவனது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியுமென்றோ போதிப்பதை நாம் பார்க்க முடியாது. தனி மனிதன் ஒருவனுக்கு இத்தகைய அற்புதங்களைச் ‍செய்யும் வரங்கள் இன்று இருப்பதாக வேதம் எங்கும் போதிக்கவில்லை. உடனேயே சிலர் பவுல் அப்படிச் செய்யவில்லையா? பேதுரு குணமாக்கவில்லையா? என்று உணர்ச்சி வசப்பட்டுக் கேட்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இங்கேதான் முழு பிரச்சனையும் இருக்கிறது. முதலில் நாம் பவுல் யார்? பேதுரு யார்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பவுலும் பேதுருவும் ஏன் ‍அத்தகைய அற்புதங்க‍ளைத் தங்கள் காலத்தில் செய்ய நேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பவுலோடும், பேதுருவோடும் இக்காலத்து மனிதர்கள் தங்களை ஒப்பிட முடியுமா? என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு யாரும் சுகமளிக்கலாம் என்று கூறுவது பொருந்தாது.

இதற்கெல்லாம் சரியான விடை வேண்டுமானால் கர்த்தருடைய வேதத்தை நாடி வருவதைத் தவிர வேறு வழியில்லை. கர்த்தருடைய வேதம் மட்டுமே இதற்கெல்லாம் சரியான பதிலை அளிக்கிறது. இன்று அநேகர் கர்த்தருடைய வேதத்தை ஒரு மாயவித்தை செய்யும் மந்திரக்கோலாகக் கருதிப் பயன்படுத்துகிறார்கள். அதில் எழுதியிருப்பதெல்லாம் எக்காலத்திலும் நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நம்புகிறார்கள். அவர்களுக்கு வேதத்தை எப்படிப் படிப்பது?, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதிலெல்லாம் அக்கறை இல்லை. பேதுரு தண்ணீரில் நடந்தான், அதனால் நாமும் இன்று தண்ணீரில் நடக்க முடியும், பவுலைப் பாம்பு கடிக்கவில்லை ஆகவே, நம்மையும் பாம்பு கடிக்கக்கூடாது என்ற விதத்தில் வேதத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறவர்களுக்கு வேதம் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இவ்வித‍ழை வாசிக்கும் கிறிஸ்தவ அன்பர்கள் வேதத்திற்கும், வேதத்தின் அடிப்படையில் அமைந்த கிறிஸ்தவத்திற்கும் மட்டுமே மதிப்புக் கொடுப்பவர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே நாம் பார்த்த கேள்விகளுக்கு வேதத்திலிருந்து மட்டுமே நான் விடை கொடுக்கப் போகிறேன்.

பழைய ஏற்பாட்டின் அற்புதங்கள்

வேதத்திலே யோசேப்புவையே அற்புத வரங்கள் பெற்றிருந்த முதல் மனிதனாக நாம் பார்க்கிறோம். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி. கனவுகளின் அர்த்தத்தை வெளிப்படுத்தி வரலாற்றில் நடக்கபோகும் நிகழ்ச்சிகளை அவனால் முன்கூட்‍டியே அறிவிக்க முடிந்தது. கர்த்தர் தன் சித்தத்தை அவன் மூலம் தன் மக்களுக்கு வெளிப்படுத்தினார். இத்தகைய தீர்க்கதரிசனப் பணியின் காரணமாகவே அவனுக்கு அற்புத வரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கர்த்தரின் செய்தியை வெளிப்படுத்துவதற்காகவே யோசேப்புவுக்கு அத்தகைய வரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதற்கடுத்தபடியாக பழைய ஏற்பாட்டில் அற்புதங்களைச் செய்து காட்டிய முதல் மனிதனாக நாம் மோசேயைப் பார்க்கிறோம். மோசேயே இத்தகைய அற்புதங்களைச் செய்த மனிதர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறார். அதனால்தான் வேதம், “கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும், அற்புதங்களையும், . . . சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால் . . . மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளக்கும்” (உபா. 34:10-12) என்று கூறுகின்றது. கர்த்தர் ஏன் மோசேயை இத்தகைய அற்புதங்கள் செய்யும்படியாக அனுப்பினார்? என்ற கேள்விக்கு யாத்தி. 4:1-5 பதில் தருகின்றது. எகிப்தியனொருவனைக் கொன்றதன் காரணமாக மோசே தனது மக்களின் நம்பிக்கையை இழந்திருந்தான். அவர்களை வழி நடத்தத் தனக்குத் தகுதி இல்லை என்று எண்ணினான். இஸ்ரவேலர்கள் தன்னைத் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக நம்பி ஏற்றுக்கொள்ள மாட்டர்கள் என்று கர்த்தரிடம் முறையிட்டான். நான் இஸ்ரவேலரின் புத்திரர்களிடத்தில் போய், “உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்வேன்” என்று கேட்டான். (யாத்தி. 3:13). “அவர்கள் என்னை நம்பார்கள் என் வாக்குக்குச் செவி கொடார்கள் கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். (யாத்தி. 4:1).

இஸ்ரவேலர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் மோசேக்குத் தரிசனமானதை நம்புவதற்கு அடையாளமாகவே (யாத்தி. 4:5) கர்த்தர் மோசேக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமையை அளித்தார் என்பதை இவ்வேதப்பகுதி தெளிவாக விளக்குகிறது. மோசே, தேவனுடைய செய்தியோடு தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதை அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அற்புதங்கள் செய்யும் வரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே, மோசே செய்த அற்புதங்கள் அவர் வெளிப்படுத்திய செய்தி தேவனுடைய செய்தி என்பதற்கு சாட்சியாக இருந்தன. பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் அத்தகைய அற்புதங்களுக்கும் இவ்விதி பொருந்தும். அவை கர்த்தருடைய செய்திக்கு சாட்சியமளிப்பவையாகவே இருந்தன. ஆகவே கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே அவருடைய செய்தியோடு வந்ததுமட்டுமன்றி, அற்புதங்களும் செய்தவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய வரங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தன.

தீர்க்கதரிசியாகிய எலியா, கர்மேல் பர்வதத்தில் தனது பலிகளை அக்கினியால் எரிக்க வேண்டும் என்று கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டதற்குக் காரணம், தான் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான். அதனால்தான், “தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்று, இந்த ஜனங்கள் அறியும்படிக்கு நீர் என்னைக் கேட்டருளும்” என்றார். (1 இரா. 18:36). அன்று அங்கு நடந்த அற்புதம் எலியா கர்த்தரின் தீர்க்கதரிசி என்பதை மக்களுக்கு நிரூபிக்கும் சாட்சியமாக இருந்தது. எலியாவுக்கு தான் பெயர் அடைய வேண்டும், மக்களால் பாராட்டப்பட வேண்டும் என்ற சுயநல நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற கர்த்தரின் செய்தியை அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே எலியாவுக்கு இருந்தது.

நாம் இதுவரை பார்த்த உண்மைகளை உறுதிப்படுத்தும் ஒரு வேதப் பகுதியாக சங்கீதம் 74:9 அமைகின்றது. இச்சங்கீதத்தில், கர்த்தருடைய மக்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கர்த்தரிடம் முறையிடும் சங்கீதக்காரன், “எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை. இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை” என்று கர்த்தரிடம் கூறுகிறான். பழைய ஏற்பாட்டு சங்கீதத்தைப் படிக்கும்போது அதன் சிறப்பம்சங்களை நாம் கவனத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் மேலே பார்த்த வசனத்தில் மூன்று வாக்கியங்களைப் பார்க்கிறோம். இம்மூன்று வாக்கியங்களும் ஒரே பொருளை வெவ்வேறுவிதமாக உணர்த்துகின்றன. அதேவேளை, ஒவ்வொன்றும் உணர்த்தப்படும் பொருளுக்கு மேலும் விளக்கம் கொடுக்கின்றன. இன்னொருவிதமாகக் கூறினால், கர்த்தருடைய மக்கள் மத்தியில் அடையாளங்கள் இல்லாமலிருப்பதும், அவர்கள் மத்தியில் தீர்க்கதரிசிகள் இல்லாமலிருப்பதும் ஒரே காரியத்தைப் புலப்படுத்தும் இரு வாக்கியங்கள். இவை இரண்டும் அவ்வசனத்தின் மூன்றாவது கேள்வியான, “எதுவரைக்கும் கர்த்தர் எம்மத்தியில் இல்லாதிருப்பார்” என்பதற்கு அதிகாரபூர்வமாக, ஆணித்தரமான பதிலை அளிக்கின்றன. சங்கீதத்தின் இவ்வசனம் நமக்குப் புலப்படுத்தும் உண்மை என்னவென்றால், தீர்க்கதரிசிகள் மட்டுமே அற்புதங்கள் செய்யக்கூடியவர்கள் என்பதுதான். எங்கே ‍அற்புதங்கள் காணப்படுகின்றதோ அங்கே தேவனால் அருளப்பட்ட வார்த்தையை நாம் கேட்கக்கூடியதாக இருக்கும். எங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி இல்லையோ அங்கே அடையாளங்களோ, அற்புதங்களோ இருக்காது. ஆகவே, கர்த்தருடைய வெளிப்படுத்தலுக்கும், அற்புதங்களுக்கும் பெருந்தொடர்பிருந்தது என்பதை நாம் புரிந்து ‍கொள்ள வேண்டும்.

மேசியாவும், அற்புதங்களும்

பழைய ஏற்பாட்டு அற்புதங்கள் எந்த நோக்கத்திற்காகத் தரப்பட்டனவோ அதே நோக்கத்தையே புதிய ஏற்பாட்டு அற்புதங்களும் நிறைவேற்றுகின்றன. இவ்வுண்மையை ஆணித்தரமாக வெளிப்படுத்தும் அநேக ஆதாரங்கள் காணப்படுகின்றன. இங்கே நாம் பழைய, புதிய ஏற்பாடுகள் இரண்டிற்கும் இடையில் உள்ள ஒற்றுமையையும் நினைவில் கொள்வது அவசியம். உபாகமம் 18:15 இல், “உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு இராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள் இருக்கிற ஒருவனையே உன்மேல் இராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்” என்ற தீர்க்கதரிசனம் போதிக்கும் பெரும் தீர்க்கதரிசி தானே என்பதை நிரூபிக்கும் வகையில் அநேக அற்புதங்களை இயேசு இவ்வுலகில் செய்தார். இயேசு மட்டுமே மோசேயைப் போல அற்புதங்கள் செய்தவராக இருந்தார். அத்தோடு அவர் மோசே செய்த அற்புதங்க‍ளையும்விடப் பெரும் அற்புதங்களைத் தன் வாழ்நாளில் செய்தார். இயேசு செய்த அநேக அற்புதங்களின் மூலம் மக்கள் பெரும் நன்மைகளை அடைந்தபோதும், அவ்வற்புதங்கள் மக்களுக்கு சரீர சுகத்தையும், நன்மைகளையும் அளிக்க வேண்டுமென்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இயேசுவின் தெய்வீகச் செய்தியின் அதிகாரத்தை மக்களுக்குத் தெரிவிப்பதையே அவ்வற்புதங்கள் பிரதானமான நோக்கமாகக் கொண்டிருந்தன. இதை நாம் மறந்துவிடக்கூடாது.

யோவான் தனது சுவிசேஷத்தை இயேசுவின் அற்புதங்களின் பட்டியலாகவே கருதுகிறார். யோவான் 20:30, 31 இல், “இந்தப்புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும், இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்” என்று கூறும் யோவான், அவ்வற்புதங்களை ஏன் இயேசு செய்தார் என்று விளக்கும்போது, “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றது” என்று கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது, இயேசுவே கிறிஸ்து என்றும், இதுவரை உலகம் கண்டுள்ள தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் மேலான தீர்க்கதரிசி என்றும் உணர்ந்து அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றைத் தான் பட்டியலிட்டுத் தந்திருப்பதாக யோவான் தெரிவிக்கிறார்.

நிக்கொதேமு உள்ளத்தில் பல கேள்விகளோடு இயேசுவைத்தேடி வந்தபோது, “ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்பதை அறிந்திருக்கிறோம்” (யோவான் 3:2) என்று இயேசுவைப் பார்த்துக் கூறினான். இத்தகைய ஒரு முடிவுக்கு நிக்கொதேமுவால் எப்படி வர முடிந்தது? உள்ளத்தை உறுத்தும் தனது கேள்விகளுக்கு அதிகாரத்துடன் ஒரு தீர்க்கதரிசி போல் இயேசுவால் பதிளளிக்க முடியும் என்ற நம்பிக்கை வேத பண்டிதனான நிக்‍கொதேமுவுக்கு எப்படி ஏற்பட்டது? யோவான் 3:2 இதற்கான பதிலைத் தெளிவாக அளிக்கின்றது. நிக்கொதேமு, இயேசுவைப் பார்த்து, “ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்” என்றான். இயேசு அற்புதங்கள் செய்பவராக இருந்தால் அவரால் தனது ஆத்மீகக் கேள்விகளுக்கு நிச்சயமாக அதிகாரபூர்வமாக பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கை நிக்கொதேமுவுக்கு இருந்தது. ஆகவே, இதிலிருந்து வேத சத்தியங்களை வெளிப்படுத்தியவர்கள் மட்டுமே அற்புதங்கள் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நிக்கொதேமுவின் வார்த்தைகளில் இருந்தது புரிந்து கொள்கிறோம்.

இதே உண்மையைப் போதிக்கும் இன்னுமொரு வேதப் பகுதியைப் பார்ப்போம். இயேசு ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக உணவளித்ததைப் பார்த்த மக்கள் எத்தகைய முடிவுக்கு வந்தார்கள்? “மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்” என்று யோவான் 6:14 கூறுகின்றது. இயேசு செய்த அற்புதங்களின் அடிப்படையிலேயே அவர்கள் அம் முடிவுக்கு வந்தார்கள். ஆகவே, ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே அற்புதங்கள் செய்யமுடியும் என்பதைத் தெளிவாக இப்பகுதி போதிக்கிறது.

அப்போஸ்தலப் பணியும், அற்புதங்களும்

புதிய ஏற்பாட்டில் இயேசுவைத்தவிர அற்புதங்கள் செய்த வேறு மனிதர்களும், தாம் தேவ செய்தியோடு வந்த அதிகாரபூர்வமான தீர்க்தரிசிகள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் தீர்க்கதரிசிகள் என்பதை நிரூபித்தன. 1 கொரி. 12:12 இல் பவுல், அற்புதங்களை அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் என்று கூறுகிறார். அத்தோடு, “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” என்று கூறித் தனது அப்போஸ்தலப் பணியையும் நியாயப்படுத்துகிறார். ஆகவே, அற்புதங்கள் செய்யும் வல்லமை அப்போஸ்தலப் பணிக்கான ஒரு அடையாளம் என்று பவுல் விளக்குவதைப் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளைப்போல, புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களே கர்த்தரின் அதிகாரபூர்வமான செய்தியை அறிவிப்பவர்களாகவும், வேதத்தை எழுதியவர்களாகவும் இருந்தார்கள்.

புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் அப்போஸ்தலர்களுக்கான சில இலக்கணங்கள் இருந்தன. அதாவது ஒருவர் அப்போஸ்தலராக இருப்பதானால் இவ்வடையாளங்க‍ள் அவசியம். இவ்வடையாளங்களைக் கொண்டிராதவர்கள் அப்போஸ்தலர்களாக இருக்க முடியாது. இவ்விலக்கணங்களை நாம் விதிக்கவில்லை. அவற்றைக் கர்த்தரே ஏற்படுத்தியிருப்பதோடு வேதத்தில் விளக்கமாக நாம் அறிந்து கொள்ளும்படியாகத் தந்திருக்கிறார். இவ்விலக்கணங்கள் யாவை?

1. அப்போஸ்தலர்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய பேச்சை ஒருவரும் உதாசீனம் செய்ய முடியாது. அவர்களுடைய போதனையைக் கிறிஸ்து தரும் போதனையாக அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அவர்களுடைய போதனைப்படி சபை நடவடிக்கைகள் அமைய வேண்டும். இத்தகைய அதிகாரத்தை இன்று ஒருவரும் கொண்டிருக்கவில்லை. (1 கொரி. 13:37-38; 2 தெச. 3:18). இத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதும் அவ்வதிகாரத்தை அப்போஸ்தலர்கள் மிகவும் கவனத்துடனேயே நடைமுறைப்படுத்தினார்கள்.

2. அப்போஸ்தலர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு விளக்கமளிக்கக் கூடியவர்களாகவும், அவருடைய வார்த்தையை அறிவிக்கிறவர்களாகவும் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு வேதப்பகுதிகளுக்கு அப்போஸ்தலர்கள் தந்த விளக்கங்களை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இவ்விளக்கங்கள் அதிகாரபூர்வமானவை. இவற்றைக் கர்த்தரே அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இத்தகைய விளக்கங்களை அளிக்கக் கூடியவர்களாக அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்தனர். அத்தோடு கர்த்தர் தனது சித்தத்தையும், செய்திகளையும் அப்போஸ்தலர்கள் மூலமே வெளிப்படுத்தினார். அவை வேறு எவர் மூலமும் வெளிப்படுத்தப்படவில்லை.

3. இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற நாள் தொடக்கம், அவர் உயிரே எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை அவரோடு இருந்த ஒருவரே அப்போஸ்தலராக நியமிக்கப்பட வேண்டும் என்று வேதம் சொல்கிறது. யூதாஸின் இடத்தில் அவன் இறந்தபின் நியமிக்கப்பட்டவர் இந்த இலக்கணத்தைக் கொண்டவராகவே இருந்தார் (அப்போஸ். 1:22).

4. அத்தோடு, அப்போஸ்தலன் கிறிஸ்து உயர எடுத்துக்கொள்ளப்பட்டதை நேரில் தன் கண்களால் பார்த்த ஒருவராகவும் இருக்க வேண்டும் (அப்போஸ். 1:22).

5. அப்போஸ்தலர்கள் கர்த்தரால் நேரடியாக அப்பணிக்கு அழைக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அப்போஸ். 1:21-24 வரையிலான வசனங்கள் இவ்வுண்மையைத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. பேதுரு தனது ஜெபத்தில் கர்த்தர் அத்தகைய மனிதனைக் காட்டும்படியாக மன்றாடுவதைப் பார்க்கிறோம். ஆகவே, பேதுருவிற்கு இந்த விஷயத்தில் தன் மனவிருப்பப்படி எதையும் செய்யும் அதிகாரம் இருக்கவில்லை. அன்று மேலறையில் இருந்தவர்கள் சீட்டுப் போட்டுப் பார்த்தபோது கர்த்தர் தான் விரும்பினவன் தெரிவு செய்யப்படும்படியாக சீட்டின் மூலம் அவர்களுக்கு வழி காட்டினார்.

6. அற்புதங்களும், அடையாளங்களும் – அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை வாசிக்கும்போது பலர் தவறாக ஏதோ அக்காலத்தில் வாழ்ந்த எல்லாக் கிறிஸ்தவர்களுமே அற்புதங்களும், அடையாளங்களும் செய்தார்கள் என்று எண்ணிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்போஸ்தலர்களே அக்காலத்தில் அத்தகைய அற்புதங்களைச் செய்தவர்களாக இருந்தார்கள். அப்போஸ். 2:43; 5:12; 15:12; ரோமர் 15:17-19; 2 கொரி. 12:12; ‍எபி‍ரே. 2:3, 4 ஆகிய வேதப்பகுதிகளைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் இவ்வுண்மை புலப்படும். இவ்வேதப்பகுதிகள் அப்போஸ்தலர்களே அத்தகைய அற்புதங்களைச் செய்தார்கள் என்று போதிக்கின்றது. அப்போஸ்தலர்கள் மூன்று காரியங்களைச் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை வேதம் போதிக்கின்றது. முதலாவதாக, அவர்கள் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் நோய்களைக் குணப்படுத்தியபோது அவை அரைகுறை செயல்களாக இருக்கவில்லை. அத்தோடு, இறந்தவர்களுக்கு அவர்களால் உயிரளிக்கவும் முடிந்தது. இரண்டாவதாக, அப்போஸ்தலர்கள் அற்புதங்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். மூன்றாவதாக, அப்போஸ்தலர்கள் கரம் வைத்து ‍ஜெபித்து மற்றவர்களுக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமையை அளிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நாம் இதுவரை பார்த்த இலக்கணங்களைக் கொண்டவர்கள் மட்டுமே அப்போஸ்தலர்களாகத் தெரிவு செய்யப்பட்டதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். ஆனால், பவுல் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்ததையும் பார்க்கிறோம். பவுலைக் கிறிஸ்துவே நேரடியாக சந்தித்துப் ‍பேசி அந்நியர்களுக்கான அப்போஸ்தலனாகவும் தெரிவு செய்தார். இவர்களைத் தவிர வேறு அப்போஸ்தலர்களை வேதத்தில் நாம் பார்க்க முடியாது.

அப்போஸ்தலர்களைத் தவிர வேறுபலரும் புதிய ஏற்பாட்டில் அற்புதங்களைச் செய்தவர்களாக வாசிக்கிறோம். ஸ்தேவானும், பிலிப்பும் அத்தகைய அற்புதங்களைச் செய்யக் கூடியவர்களாயிருந்தார். இவர்கள் இருவருக்கும் அப்போஸ்தலர்கள் கரம் வைத்து ஜெபித்து இவ்வல்லமையைத் தந்தார்கள். ஆனால், இவ்விதமாக அற்புதங்கள் செய்யும் வல்லமையை பெற்றுக் கொண்ட இவர்களால் வேறு எவருக்கும் அவ்வல்லமையைக் கரம் வைத்து ஜெபித்துக் கொடுக்க முடியவில்லை.

கொரிந்து சபையில் இருந்தவர்களால் அந்நிய பாஷையில் பேசவும், அற்புதங்கள் செய்யவும் முடிந்தது என்று வாசிக்கிறோம். அவர்களால் அவற்றை எப்படிச் செய்ய முடிந்தது என்பதற்குப் பவுலே 2 கொரி. 12:12 இல் விளக்கமளிக்கிறார். “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் . . . அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும் உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டது” என்று பவுல் கூறுகிறார். அதாவது, கொரிந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்த அப்போஸ்தலர்கள் கரம் வைத்து ஜெபித்ததனாலேயே அச்சபையில் உள்ளவர்களுக்கு அவ்வல்லமை கிடைத்தது. ஆகவே, அந்நிய பாஷை பேசுதலும், அற்புதங்கள் செய்யும் வல்லமையும் அப்போஸ்தலர்களாலேயே மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே அந்நியபாஷை பேசும் வரம் நேரடியாக கர்த்தரிடம் இருந்து மக்களுக்கு வந்துள்ளது என்பதை வேதம் விளக்குகிறது. அவ்விரண்டு சந்தர்ப்பங்களும் தனித்தனியாக வேதத்தில் விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. முதலாவதாக, பெந்தகொஸ்தே நாளில் அவ்வற்புதம் நிகழ்ந்தது. அடுத்ததாக கொர்நேலியுவின் வீட்டில் அவ்வற்புதம் நிகழ்ந்தது. இவ்விரு சந்தர்ப்பங்களையும் தவிர ஏனைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப்போஸ்தலர்களின் மூலமாக மட்டுமே மற்றவர்களுக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமை தரப்பட்டுள்ளதை வேதம் விளக்கிக் காட்டுகிறது.

ஆனால் இவ்வற்புதங்களையும் அடையாளங்களையும் அப்போஸ்தலர்கள் செய்ததற்கு என்ன காரணம்? அவர்கள் கர்த்தரின் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்ததாலேயே அவர்களுக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமை கர்த்தரால் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு, அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை எழுதியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மட்டுமே கிறிஸ்துவின் போதனைகளை அறிந்தவர்களாகவும் இருந்தார்கள்.

வெளிப்படுத்தலும் அற்புதங்களும்

நாம் இதுவரை பார்த்தவற்றிலிருந்து அற்புதங்களும், அடையாளங்களும் ஒரு குறிப்பிட்ட பிரதான நோக்கத்திற்காக கர்த்தரால் கொடுக்கப்பட்டிருந்ததாக பழைய, புதிய ஏற்பாடுகளின் போதனைகளில் இருந்து அறிந்து கொள்கிறோம். கர்த்தரின் சித்தத்தையும், செய்தியையும் மக்களுக்கு வெளிப்படுத்திய தீர்க்கதரிசிகளாக பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் இருந்ததாலேயே அவர்களால் அற்புதங்களைச் செய்ய முடிந்தது. ஆகவே, தேவ ‍செய்திக்கும் அற்புதங்கள், அடையாளங்களுக்கும் பெருந்தொடர்பிருந்ததாக வேதம் போதிக்கின்றது. தேவ செய்தியை கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு என்று அறிந்து உணர்ந்து மக்கள் அவற்றை விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே அற்புதங்கள் தீர்க்கதரிசிகளாலும், அப்போஸ்தலர்களாலும் நடத்தப்பட்டுள்ளன.

ஆகவே, இவ்வுண்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு முக்கிய கேள்விகளுக்கு நாம் பதிலளித்தாக வேண்டும்.

1. கர்த்தரின் சித்தம் இன்று தொடர்ந்தும் தனி மனிதர்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றதா?

2. அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்பவர்களாக இன்று தம்மை இனங்காட்டிக்கொள்ளும் மனிதர்களை நாம் கர்த்தரின் தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

முதலாவது கேள்விக்கு நாம் அளிக்கும் பதி‍லிலேயே இரண்டாவது கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கின்றது. கர்த்தர் தமது சித்தத்தை எப்படி வெளிப்படுத்தினார் என்று எபிரேயர் 1:1-3 வரையிலான வசனங்கள் விளக்குகின்றன. ஆதி முதல் பல்வேறு விதங்களில் தனது சித்தத்தை வெளிப்படுத்தி வந்த கர்த்தர் இறுதியில் அவற்றை கிறிஸ்துவில் முழுமையாக வெளிப்படுத்தினார். இதற்குப் பொருள் என்னவென்றால் கர்த்தர் தொடர்ந்தும் தனது சித்தத்தை வெவ்வேறுவிதங்களில் வெளிப்படுத்த மாட்டார் என்பதுதான். அவரது சித்தம் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவுக்குள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே கர்த்தரின் இறுதி வெளிப்படுத்தல். கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் அவரது சித்தத்தையும் போதனைகளையும் பெற்றிருந்த அப்போஸ்தலர்கள் அவற்றை புதிய ஏற்பாடாக எழுதி உலகத்திற்குத் தந்துள்ளார்கள். ஆகவே, கர்த்தரின் சித்தமனைத்தும் இன்று பழைய, புதிய ஏற்பாடுகளிலேயே அடங்கியிருக்கினறன. அவற்றைப் படித்தே கிறிஸ்தவர்கள் தமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்‍கொள்ள வேண்டும். அவற்றின் போத‍னைகளின்படியே கிறிஸ்தவர்கள் நடக்க வேண்டும். அவற்றைக் கைக்கொள்ளுவதன் மூலமே அவர்கள் கிறிஸ்துவின்மேல் அன்பு செலுத்துகிறார்கள். கர்த்தரின் சித்தம் இன்று வேறுவிதங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை. பழைய, புதிய ஏற்பாடுகள் எழுத்தில் முழுமையாக கொடுக்கப்படாத காலங்களில் நேரடியாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமும் கர்த்தர் பேசினார். வேதம் எழுத்தில் வடிக்கப்பட்டபின் கர்த்தர் வேதத்தின் மூலமே நம்மோடு பேசி வழி நடத்துகிறார். இதுவே வேதத்தின் மூலம் கர்த்தர் நமக்குக் காட்டும் வழி. ஆகவே, கர்த்தர் இன்று தனி மனிதர்களின் மூலம் பேசி தனது சித்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. தீர்க்கதரிசிகளும் இன்று அவசியமில்லை. ஏனெனில் வேதமே தீர்க்கதரிசிகளின் பணியை இன்று தொடர்ந்து செய்கிறது.

இரண்டாவதாக, தன்னால் தெரிவு செய்யப்பட்டு, தனது கருவியாக இருந்து, தனது சித்தத்தை வெளிப்படுத்திய தேவமனிதர்களான தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்களுக்கே அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யும் வரத்தைக் கர்த்தர் கொடுத்திருந்தார். அவ்வற்புதங்களும், அடையாளங்களும் அம்மனிதர்கள் தேவ செய்தியுடன் வந்துள்ளார்கள் என்பதற்கு சாட்சியமளித்தன. அம்மனிதர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு அவ்வல்லமையைக் கொடுக்க மு‍டிந்தது. அவ்வல்லமையைப் பெற்றுக் கொண்டவர்களால் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை. ஆகவே, ஆதி சபையிலுள்ளவர்களெல்லாம் அற்புதங்கள், அடையாளங்களைச் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள் என்று எண்ணுவது தவறு. அத்தோடு, அவ்வரங்கள் தீர்க்கதரிசனத்தோடு தொடர்புடையவையாக இருந்தபடியால் தீர்க்கதரிசனம் முழுமையாக கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்ட பின்னர் அவற்றிற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. தேவனுடைய சித்தம் இன்று முழுமையாக எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடியால் வேறு தீர்க்கதரிசனம் அவசியமில்லை. அத்தோடு, தேவ செய்தியை நிரூபிக்கும்படியான அற்புதங்களும் அவசியமில்லை. அற்புதங்களோ, அடையாளங்களோ மனிதனுடைய சரீரத்தேவைகளைத் தீர்ப்பதைப் பெரு நோக்காகக் ‍கொண்டு நிகழ்த்தப்படவில்லை என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆகவே, இன்று தீர்க்கதரிசிகளும், அற்புதங்கள் செய்பவர்களும் எப்படி இருக்க முடியும்? இவர்கள் பேசுவதும், செய்வதும் உண்மையானால் வேதம் ‍பொய்யாய்விடும். பெனிஹின்னும், ஜோன் விம்பரும், தினகரனும் செய்வதும், சொல்வதும் உண்மையானால் வேதத்தில் கர்த்தர் தனது சித்தத்தை முழுமையாகக் கொடுக்கவில்லை என்றுதான் பொருள். ஆனால், கர்த்தரின் சித்தம் முழுமையாகக் கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்டுவிட்டதாக வேதம் போதிக்கிறது. ஆகவே, இன்று தனி மனிதர்கள் மூலமாக கர்த்தர் தனது சித்தத்தை வெளிப்படுத்துவதுமில்லை, அற்புதங்கள் அடையாளங்கள் செய்வதுமில்லை. கிறிஸ்தவர்கள் வேதத்திற்கு மதிப்புக் கொடுப்பவர்களாக இருந்தால் இம்மனிதர்களை நம்புவதை விட்டுவிட்டு, அதிசயங்களைத் தேடி அலைவதை விட்டுவிட்டு வேதத்தை ஆழமாகப் படித்து கர்த்தரின் சித்தத்தை அறிந்து அதன்படி வாழப் பழக வேண்டும். வரலாற்றுக் கிறிஸ்தவத்தைப் பார்த்தால் தனிமனிதனால் அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டு கர்த்தர் அவற்றின் மூலம் பேசினார் என்பதை நாம் வாசிக்க முடியாது. லூதரோ, கல்வினோ, ஓவனோ, பனியனோ, ஸ்பர்ஜனோ இத்தகைய காரியங்களை அறிந்திருக்கவில்லை. அவர்கள் காலத்தில் இல்லாத சிறப்பான கிறிஸ்தவமா நம்காலத்தில் இருக்கின்றது? அவர்கள் அறிந்திராத வேத சத்தியங்களையா பெனிஹின்னும், தினகரனும் அவர்களைப்போன்ற மற்றவர்களும் அறிந்திருக்கிறார்கள்?

இதற்காக கர்த்தர் நமது நோய்களைக் குணப்படுத்தமாட்டார் என்று நான் சொல்லவரவில்லை. நமது தேவைகளுக்காக நாம் கர்த்தரிடம் நேரடியாக ஜெபிக்கலாம். சபை மூப்பர்களிடம் சொல்லி அவர்கள் ஜெபிக்கும்படியாக அழைக்கலாம். இதற்கு மேல் வேறு எந்த தனி மனிதனிடமும் போக வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் நேரடியாகவே ஜெபம் கேட்கிறவராக இருக்கிறார். அவர் இன்று எந்தவொரு தனி மனிதன் மூலமாகவும் அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s