நமது பிரசங்கங்கள் ஆத்துமாக்களுக்கேற்றதாக இருக்க வேண்டும். ஸ்பர்ஜன் இது பற்றிக் கூறும்போது, அர்களுடைய கவனத்தை நாம் கவரவேண்டும், இல்லாவிட்டால் அவர்களுடன் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உயில் வாசிக்கப்படும்போது உறங்கப்போன ஒருவனைப் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. தன்னைப்பற்றிய ஆர்வம் ஒருவனுடைய கவனத்தை ஈர்க்கும்” என்கிறார். இன்றைய பிரசங்கங்களில் அநேகமானவை சுவாரஸ்யமற்றதாகவும், பிரசங்கி எதைச் சொல்லவருகிறார் என்று நம்மால் ஏற்கனவே ஊகிக்கக் கூடியவனவாகவுமே இருக்கின்றன. அவற்றை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்பிரசங்கங்கள் அவர்களுடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் தொடுவதாயில்லை.
நமது பிரசங்கங்களைக் கேட்க மறுக்கும் ஆத்துமாக்களுக்கு நாம் துணை செய்யமுடியாது. ஆகவே, அவர்கள் நமது பிரசங்கத்தைக் கேட்கும்படியாக நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்யப் பார்க்க வேண்டும். அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது நமது இலட்சியமாக இருக்க வேண்டும். அவர்களுடைய இருதயத்திற்குள் நுழைந்து அவர்களுடைய இடத்தில் இருந்து அவர்கள் எதை நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்து பிரசங்கிக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் ஆத்துமாக்கள் கேட்பதை நாம் அவர்களுக்குக் கொடுப்பதுதான் நமது கடமை என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. இதையே அநேக Seeker sensitive பிரசங்கிகள் செய்து வருகிறார்கள். நான் கூறவருவது இத்தகைய பிரசங்கத்தையல்ல. ஆத்துமாக்களின் தேவை இரட்சிப்பு. அதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். அதைப் போதிக்கும் பிரசங்கத்தை அவர்கள் கேட்கவும் மறுக்கலாம். ஆனால், அது மட்டுமே ஆத்துமாக்களின் நோயைத் தீர்க்கும் என்ற வைத்தியனின் வைராக்கியத்தோடு, இரட்சிப்புப்பற்றிய செய்தியே அவர்களுடைய நோய்க்குத் தேவையான மருந்து என்று, அதை அவர்கள் அருந்தும்படிச் செய்வதே ஆத்துமாக்களுக்கேற்ற பிரசங்கம். ஆத்துமாக்களின் தேவை என்ன என்பது நமக்குத் தெரியும். அவர்களுடைய நோய்க்கான காரணங்களும், அதன் அறிகுறிகளும் நமக்குத் தெரியும். ஆத்துமாக்களை விட அதைப்பற்றி அதிகம் அறிந்தவர்கள் நாமே. ஆகவே, நோயாளியின் நோயை முதலில் அவனுக்கு விளக்கி, அதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும், அவன் அருந்த வேண்டிய மருந்தையும் கொடுப்பவனே ஆத்துமாக்களின் கவனத்தை ஈர்த்து, பொருத்தமான பிரசங்கத்தை அளிக்கக்கூடிய பிரசங்கி.
(எட்வர்ட் டொனலி என்ற போதகரின் Peter – Eyewitness of His Majesty என்ற ஆங்கில நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இரு ஒரு Banner of Truth வெளியிடு)