விசுவாசத்தின் மூலம் சுகமளிக்கிறேன் என்று தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு தனி மனிதன் மூலமும் (பெனிஹின், ஜோண் விம்பர், தினகரன் போன்றோர்) கர்த்தர் இன்று அற்புதங்கள் செய்வதில்லை, சுகமளிப்பதில்லை என்று நாம் சொல்வதைக் கெரிஸ்மெட்டிக் கூட்டம் தவறாகப் புரிந்து கொள்வது வழக்கம். இத்தனி மனிதர்களைப் பயன்படுத்திக் கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை என்றுதான் நாம் சொல்கிறோமே தவிர, கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை, சுகமளிப்பதில்லை என்று நாம் சொல்லவில்லை. தனது சித்தத்தை வார்த்தையின் மூலம் வெளிப்படுத்திய கர்த்தர் அவ்வார்த்தை எழுத்தில் முழுமையாகக் கொடுக்கப்படுமுன் அநேக அற்புதங்களைத் தனது தீர்க்கதரிசிகளின் மூலமும், அப்போஸ்தலர்களின் மூலமும் செய்தார் என்று (அற்புதங்களும், அடையாளங்களும்) ஏற்கனவே பார்த்தோம். இன்று கர்த்தரின் சித்தம் முழுமையாக எழுத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை உறுதிப்படுத்தும்படியான அற்புதங்களை கர்த்தர் செய்வதில்லை. வேதம் தனக்கே சாட்சியாக இருப்பதால் அதற்கு இன்று வேறு சாட்சி இன்று தேவையில்லை. ஆனால், சர்வவல்லவரான கர்த்தர் தொடர்ந்தும் வல்லமைகளை நிகழ்த்தக் கூடியவராக இருக்கின்றார். நமது சரீரத் தேவைகளை நிறைவேற்றக் கூடியவராக இருக்கின்றார். ஆகவே, கர்த்தர் தொடர்ந்து தனது மக்களின் வியாதிகளையும், துன்பங்களையும் போக்கக்கூடியவராக இருக்கின்றார்.
கர்த்தர் எவ்வாறு சுகமளிக்கிறார்?
கர்த்தர் எவ்வாறு இன்று தனது மக்களின் துன்பங்களைப் போக்குகின்றார் என்பது பற்றிப் பலருக்கும் விளக்கமில்லாமல் இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் தமது தேவைகளை கர்த்தருக்கு முன் கொண்டுவருவதற்காக கர்த்தர் அவர்களை ஜெபிக்கும்படியாகப் பணித்திருக்கிறார். மத்தேயு 6 இல் எவ்வாறு நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு போதிப்பதைப் பார்க்கிறோம். நமது ஜெபங்களின் ஒரு பகுதியாக நமது சரீரத் தேவைகளை நாம் கர்த்தருக்கு முன் கொண்டுவருதல் அவசியம் (மத்தேயு 6:10-13). மற்றவர்களின் சரீரத்தேவைகளுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பவுல் கூறுவதை வாசிக்கிறோம் (பிலி. 4:6). கர்த்தரோடு பேசுவதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி ஜெபம். ஆகவே, எந்த ஒரு தனி மனிதனிலும் நம்பிக்கை வைக்காமல் கர்த்தரோடு நாம் நேரடியாகப் பேசலாம், நமது தேவைகளை அவர் முன்வைக்கலாம்.
நாம் கேட்பதையெல்லாம் கர்த்தர் உடனடியாகத் தருகிறாரா?
ஜெபத்தில் நமது தேவைகளையெல்லாம் தன் முன் கொண்டுவர வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால் நாம் கேட்பதையெல்லாம் அவர் உடனடியாகத் தந்தவிடுகிறாரா? அப்படி நாம் கேட்பதை அவர் உடனடியாகத் தந்துவிட வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? இக்கேள்வியை நாம் வேதபூர்வமாக ஆராய வேண்டியது அவசியம். கிறிஸ்தவர்களில் பலரும் இன்று கர்த்தரை இந்துக் கோவில்களில் இருக்கும் சிலைபோல் எண்ணி வாழ்ந்து வருகிறார்கள். புறமதத்தவர்கள் கண் தெரியாமல், அறிவீனத்தில் தாம் கடவுளாக எண்ணி வழிபடும் சிலைகள் தாம் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று தரையில் விழுந்து புரளுவது வழக்கம். ரோமன் கத்தோலிக்க மதத்தவரும் அவ்விதமாக தமது உடலை வருத்திக் கடவுளிடம் காரியம் சாதித்துக்கொள்ள முயன்று வருகிறார்கள். உபவாசம் எடுத்தும், இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தும், கடவுளுக்கு காணிக்கை அளித்தும் வந்தால் அவர் தமது தேவைகளை நிறைவேற்றி வைப்பார் என்ற தப்பான எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களில் பலரும் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் புறமதத்தவருக்கும் எந்த வேறுபாடும் இல்லாமலிருக்கிறது.
ஆனால், நாம் கேட்பதையெல்லாம் கர்த்தர் தந்துவிடுகிறார் என்று வேதம் எங்குமே போதிக்கவில்லை. நாம் எதையும் அவரிடம் கேட்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால், நாம் கேட்பதையெல்லாம் அவர் உடனடியாகக் கொடுத்துவிட வேண்டுமென்ற அவசியமில்லை. இதற்குக் காரணமென்ன?
1. பாவம் உலகத்தில் இருக்கும்வரை எல்லா மனிதரும் துன்பங்களை அனுபவித்தே ஆகவேண்டும்.
வேதம் போதிக்கும் இவ்வுண்மையை கெரிஸ்மெட்டிக் கூட்டம் புரிந்து கொள்வதில்லை. நமது துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை தருவதைப் பெரு நோக்கமாகக்கொண்டு கிறிஸ்து இவ்வுலகிற்கு வரவில்லை. நமக்கு ஆத்மீக விடுதலை அளிப்பதைப் பெருநோக்கமாகக்கொண்டே அவர் இவ்வுலகிற்கு வந்தார். மனிதனுக்கு அவனுடைய பாவத்திலிருந்து விடுதலை அளிப்பதே அவருடைய முதன்மை நோக்கமாக இருந்தது. கிறிஸ்துவுக்குள் பாவவிடுதலை பெற்றுக்கொள்ளும் மனிதன் தன்னுடைய சரீரத் துன்பங்களனைத்திலும் இருந்து உடனடியாக விடுதலை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. பாவம் உலகில் தொடர்ந்திருக்கும் வரை எல்லா மனிதர்களும் ஏதாவதொருவகையில் தம் வாழ்க்கையில் ஏதோவொரு துன்பத்தை அனுபவித்தேயாக வேண்டும். முழு சிருஷ்டியும் பாவத்தினால் பிரசவ வேதனையை அனுபவித்துத் தனது விடுதலைக்காக காத்திருப்பதாக பவுல் கூறுகிறார் (ரோமர் 8:20, 21).
2. கிறிஸ்தவர்கள் சரீரத்துன்பங்கள் அனுபவிக்காமல் வாழ்வார்கள் என்று வேதம் போதிக்கவில்லை.
கிறிஸ்துவிடம் பாவ விடுதலை பெற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரத்துன்பங்களில் இருந்து முழுமையாக உடனடியாக விடுதலை பெறுவார்கள் என்றோ, அல்லது பின்பு அத்தகைய விடுதலையைப் பெற்றுக் கொள்வார்களென்றோ எதிர்பார்ப்பது தவறு. கெரிஸ்மெட்டிக் கூட்டம், ஏசாயா 53:5 இல் நாம் வாசிக்கும் வசனமான, அவருடைய தழும்புகளால் குணமாகின்றோம் என்பதைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம் சரீரத்துன்பங்களில் இருந்து விடுதலையுண்டு என்று தவறாகப் போதித்து வருகிறார்கள். இது வேதவசனங்களை எப்படிப் படித்துப் புரிந்துகொள்வது என்று தெரியாததால் வந்த வினை. இவ்வசனம் கிறிஸ்தவர்கள் சரீரத்துன்பங்கள் அனுபவிக்க மாட்டார்கள் என்றோ அல்லது ஒருபோதும் வாழ்க்கையில் நோய் நொடியினால் துன்பப்படமாட்டார்கள் என்றோ போதிக்கவில்லை. நாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆத்மீக, சரீர, மன விடுதலைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பது கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பதையே இது விளக்குகிறது. ஆனால், இதை வைத்துக்கொண்டு நாம் இனி வாழ்க்கையில் சரீரத்துன்பங்களை அடைய வழி இல்லை என்று போதிப்பது குருட்டுத்தனமான செயலாகும். இவ்வசனத்திற்கு புதிய ஏற்பாட்டில் விளக்கம் கொடுக்கும் பேதுரு, “நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” என்று கூறி கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் பாவநிவாரணத்தையே ஏசாயா விளக்குவதாகப் போதிக்கிறார்.
3. கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் சரீரத்துன்பங்களை சில வேளைகளில் கர்த்தர் அவர்களைத் திருத்துவதற்காகவும், அவர்கள் வாழ்வில் பின்னால் பெரும் ஆத்மீக நன்மைகளைக் கொண்டு வருவதற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்.
நோயே இருக்கக்கூடாது, சரீர துன்பமே ஏற்படக்கூடாது என்று நாம் அலைவோமானால் யோபுவின் வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும். யோபுவைப் பிடித்திருந்த துன்பங்கள் எல்லாம் கர்த்தர் அவனைத் தன் மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுப்பப்பட்டவை என்பதை வேதம் எடுத்துக் காட்டுகின்றது. அத்தோடு, யோபு தன் ஆத்மீக வாழ்க்கையில் அவற்றின் மூலம் மேலும் வளம் பெற முடிந்தது. யோபு எத்தனை பெரிய விசுவாசி என்பதை அவன் தன் துன்பங்களைத் தாங்கிக் கொண்டவிதம் நமக்குப் புரிய வைக்கிறது. இதை விட்டுவிட்டு யோபு தன் சரீர சுகத்திற்காக மட்டும் சுகமளிக்கும் கூட்டங்களை நாடி ஓடி இருந்தால் எப்படி இருந்திருக்கும். அப்படி அவன் செய்ததாக நாம் வாசிப்பதில்லை. யோபு தனது கஷ்டங்களை சகித்துக்கொண்டவிதம், சரீர துன்பங்களைப்பற்றி அவன் வேதபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்தான் என்பதை நமக்குப்புரிய வைக்கிறது. ரூத்தினுடைய புத்தகத்தில் நாம் கர்த்தரை விசுவாசித்த நகோதி தன் வாழ்க்கையில் அடைந்த துன்பங்களைப்பற்றி வாசிக்கிறோம். அவள் தன் கணவனையும், பிள்ளைகளையும் இழக்க நேர்ந்தது. இருந்தபோதும் அவளுடைய துன்பங்கள் உடனடியாக விலகவில்லை. கர்த்தர் அவற்றைப் பயன்படுத்தி நகோமியின் ஆத்மீ வாழ்க்கையில் அவள் பல உண்மைகளை அறிந்து கொள்ளவும், வளரவும் துணை செய்தார். நகோமி அற்புதங்கள் செய்யும் மனிதர்களை நாடி ஓடவில்லை. அவள் அடைந்த துன்பங்கள் அவளுடைய வாழ்க்கையில் கர்த்தரின் சித்தம் நிறைவேறப் பயன்படுத்தப்பட்டன. விசுவாசத்தில் உயர்ந்தவர்களும், நமது ஹீரோக்களுமான பழைய ஏற்பாட்டு மூதாதையர்களைப்பற்றி எழுதும் எபிரேயர் நிருபத்தை எழுதியவர், அவர்கள் “குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்திரங்களிலேயும், மலைகளிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்கள் எல்லோரும் விசுவாசத்திலே நற்சாட்சி பெற்றார்கள்” என்று கூறுவதைப் பார்க்கிறோம் (எபிரே. 11:38, 39). இவர்களில் எவரும் தமது துன்பங்களில் இருந்து விடுதலை நாடி அற்புதங்கள் செய்பவர்களை நாடி ஓடவில்லை. அப்படி ஓடி இருந்தால் அவர்கள் மெய்விசுவாசிகளாக இருந்திருக்க முடியாது. இத்துன்பங்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே ஏற்பட்டன என்ற நம்பிக்கையில் அவர்கள் ஜெபத்தில் தரித்திருந்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாடி நின்றதோடு, அத்துன்பங்களில் இருந்து அநேக பாடங்களையும் தங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்டார்கள். இத்தகையவர்களே விசுவாசத்தில் ஹீரோக்களாக இருக்க முடியும்.
4. நமது சரீரத்தின்பங்களிலிருந்து கர்த்தர் தனது சித்தப்படியே நமக்கு விடுதலை அளிக்கிறார்.
நோய் நொடிகளை நாம் இவ்வுலக வாழ்வில் சந்திக்க நேர்வது இயற்கை என்றும், அந்நிலைமைகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் தேவைகளைக் கர்த்தருக்கு முன் ஜெபத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் பார்த்தோம். அவ்வாறு நாம் ஜெபிக்கும்போது கர்த்தர் நமது தேவைகளை உடனடியாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஜெபம் கேட்கும் கர்த்தர் நமது தேவைகளை தனது சித்தத்தின்படி தனது சொந்த மகிமைக்காக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றே கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்க வேண்டும். கர்த்தரின் சித்தம் நம்மில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு இருக்குமானால் சுயநலத்தோடு நாம் ஜெபிக்கக் கூடாது. சர்வவல்லவரான கர்த்தர் நமக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்திருக்கிறார். நமது துன்பங்கள் என்ன காரணத்திற்காக ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் அறிந்தவராக இருக்கின்றார். ஆகவே, கர்த்தரின் சித்தப்படி நமது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடக்காவிட்டால் கர்த்தரின் சித்தப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்.
சில வேளைகளில் நமது நோய்கள் தீராமலேயே போகலாம். அதனால் கர்த்தரால் நம் நோயைத்தீர்க்க முடியவில்லை என்றோ, அல்லது நமது ஜெபத்தில் பலவீனம் இருப்பதாகவோ எண்ணிவிடக்கூடாது. ஒரு நல்ல நோக்கத்திற்காகவே நமது துன்பங்களை கர்த்தர் அனுமதித்திருக்கிறார் என்றும் அந்நோக்கத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காகவே அதனை அவர் தீர்க்கவில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. நமக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் துன்பங்களும் இவ்வாழ்வில் உடனடியாக ஓடிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்த்து வாழ்வது விசுவாச வாழ்க்கை இல்லை. கர்த்தரின் இறை ஆண்மையையும், அவரின் செயல்களையும் வேதத்தில் இருந்து சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களே ஒரு மந்திரவாதியைப் போல கர்த்தர் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்த்து வீண் போகிறார்கள். பவுலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முள்ளைக் கர்த்தர் எடுத்துவிடவில்லை. பவுல் மூன்று முறை ஜெபித்தும் கர்த்தர் அதனை அதற்றவில்லை. “என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாக அது இருக்கின்றது” என்று அம்முள்ளைப்பற்றி பவுல் கூறுகிறார் (2 கொரி. 12:7). கர்த்தரும், என் கிருபையால் அதனை உன்னால் சகித்துக்கொள்ள முடியும் என்று பவுலுக்கு உணர்த்தினார். மேலும் பவுல், நாம் இவ்வுலகில் படும்பாடுகளை வர்ணிக்கும்போது அவற்றை “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம்” என்று கூறகிறார். அதாவது, அவ்வுபத்திரவங்களை நாம் இவ்வுலகில் மட்டுமே அனுபவிப்போம், பரலோகத்தில் அவற்றிற்கு இடமில்லை என்பதே இதற்குப் பொருள். அதுமட்டுமல்லாமல் அவை “நம்மில் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகின்றன” என்றும் கூறுகிறார் (2 கொரி. 12:17). இவ்வாறே நாமும் நமது துன்பங்களின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.