இல்லற வாழ்க்கையின் இரகசியம்

இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்‍தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்‍தொடர் அளிக்கிறது.

இல்லற வாழ்க்கையின் இரகசியம்

கர்த்தர் உருவாக்கிய குடும்பத்தைப் பற்றி நாம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் கிறிஸ்தவ குடும்பத்தைப்பற்றியும், கிறிஸ்தவ திருமணத்தில் இருக்க வேண்டிய வேதபூர்வமான அம்சங்களைப்பற்றியும் பார்த்தோம்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். இவ்விதழில் வேதம், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு அமையும் குடும்ப வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

குடும்பம் எதற்காக?

குடும்பத்தைத் தேவனே உருவாக்கினார் என்று கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் தேவன் அக்குடும்பத்தை ஏன் தோற்றுவித்தார்? ஆணையும், பெண்ணையும் உருவாக்கி உலகில் உலவ விடுவது மட்டும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. ஆணைப்படைத்த தேவன் அவன் தனக்கு ஒரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வமாயிருந்தார். ஆதி மனிதன் தனக்கென ஒரு துணையைத் தேவன் சிருஷ்டித்திருந்த அனைத்திலும் இருந்து தே‍டிக்கொள்ள முடியவில்லை (ஆதி. 3:20). “தனியாயிருப்பது மனுஷனுக்கு நல்லதல்ல, அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன் என்று தேவன் சொல்லிக்கொண்டார்” (3:18). அவனால் தனக்கு ஒரு சரியான துணையைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் தேவன் அவனுக்காக ஒரு துணையைத் தோற்றுவித்தார் என்று ஆதியாகமம் 3:18-22 வரையிலான வசனங்களில் வாசிக்கிறோம்.

இவ்வதிகாரத்தின் இவ்வசனங்கள் போதிக்கும் மூன்று முக்கியமான உண்மைகளை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

(1) முதலாவதாக, மனிதன் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சிருஷ்டிப்பில் தேவனுடைய எண்ணமாக இருந்தது (3:18). தனிமையில் இருப்பதற்காக மனிதனை தேவன் படைக்கவில்லை. அப்படி அவன் தனிமையில் இருப்பது தேவனைப் பொறுத்தவரையில் நல்லதல்ல. திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது சிலருக்கு வரமாக இருக்கலாம் என்பதை நாம் 1 கொரி. 7 இன் போதனையின் மூலம் புரிந்து கொள்கிறோம். புனிதமான தேவகாரியங்களுக்காக சிலருக்கு தேவன் அத்தகைய வரத்தை அளிக்கலாம். பவுல் இதற்கு ஒரு உதாரணம். பவுல் திருமணம் செய்யவில்லை என்று நாம் கூறமுடியாது. ஆனால், பவுலின் மிஷனரிப் பணிக் காலங்களில் பவுல் திருமண வாழ்வவில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். அவருடைய மனைவிக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை நமக்குத் தேவையில்லாதது. அவர் இறந்திருக்கலாம். அப்படி இறந்திருந்தால் பவுல் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் நமக்குத் தெரிகிறது. இதைப்பற்றிப் பேசும் பவுல், அத்தகைய வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தனக்கும் மற்றவர்களைப் போல உரிமை இருக்கிறது என்று கூறுகிறார். இருந்த போதும் மேலான நோக்கங்களுக்காக அத்தகைய வாழ்க்கையில் பவுல் ஈடுபடவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், 1 கொரி. 7 இல் பவுல் திருமணம் ஏன் அவசியம் என்பதற்கு இன்னுமொரு காரணத்தையும் தருகிறார். மனிதர்கள் தங்களுடைய பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தி திருமணவாழ்வில் புனிதமாகவும், முறையாகவும் பாலுறவில் ஈடுபட்டு இன்பம் காணவேண்டும் என்பதற்காகவும் திருமணம் அவசியமாக இருப்பதாக பவுல் கூறுகிறார் (7:1). திருமணவாழ்விற்கு வெளியில் ஒருவரும் பாலுறவில் ஈடுபட வேதம் அனுமதிக்கவில்லை. ஆணும், பெண்ணும் கட்டுப்பாட்டுடனும், அதேவேளை அனைத்து சுதந்திரத்துடனும் திருமணவாழ்வில் மட்டுமே பாலுறவில் ஈடுபடலாம் (மத்தேயு 19:4, 5). ஆகவே, தனிமை இத்தகைய புனிதநோக்கங்களுக்கு தடையாக இருப்பது மட்டுமன்றி, மனிதர்கள் பாவத்துடன் விளையாடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திவிடும். மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று இப்பகுதியில் தேவன் கூறியிருப்பதை நினைவுகூற வேண்டும்.

ஆகவே, சாதாரணமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டுமென்பதே படைத்தவரின் நோக்கமாக இருந்தது. திருமணம் படைப்பின் திட்டங்களில் ஒன்று (Creation Ordinance). ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்க முயற்சிப்பது தேவனின் படைப்பின் நோக்கங்களுக்கு விரோதமானது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமண வயதும், தகுதியும் வந்தபின் தங்களுக்கான ஒரு துணையைத் தேடிக்கொண்டு திருமண வாழ்வில் ஈடுபட வேண்டியது அவசியம். ஆகவே, கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் வளரும்போதே திருமணத்தைப் பற்றிய புனிதமான, வேதபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வெண்ணங்களை அவர்களுக்குப் போதிப்பது பெற்றோர்களினதும், போதகர்களினதும் கடமை.

அதேவேளை, இவ்வுண்மையில் இருந்து இன்னுமொரு பாடத்தையும் படிக்கிறோம். திருமணமான கணவனும், மனைவியும் அநாவசியமாக தனிமையை நாடிப்போவதோ அல்லது தனிமையில் இருக்கும் முயற்சியில் ஈடுபடுவதோ தவறு. கணவனும், மனைவியும் இ‍ணைந்திருப்பதற்காகவே திருமணத்தைக் கர்த்தர் உருவாக்கினார். இருவராக இருந்தபோதும் ஓருயிராகவும், ஈருடலாகவும் திருமணத்தில் இணைந்தபின் அவர்கள் தனிமையை நாடுவது திருமண வாழ்விற்கு குழிபறிக்கும் முயற்சியாகவே ‍அமையும் (மத்தேயு 19:6). பவுல் இதைப்பற்றி 1 கொரி. 7:5 இல் விளக்கும்போது, ஆன்மீக காரணங்களுக்காக மட்டும் சில காலம் பிரிந்திருப்பதற்கு தம்பதிகளுக்கு அனுமதியளிக்கிறார். இதையும் அவர்கள் ஒருமனப்பட்டே செய்ய வேண்டும். இக்காலத்தை அவர்கள் தேவையற்றவிதத்தில் நீடிக்கவும் கூடாது. “ஜெபத்திற்கு வசதியாக இருக்கும்படி சிலகாலம் மாத்திரம் பிரிந்திருப்பதற்கு இருவரும் சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டொருவர் பிரிய வேண்டாம்” என்கிறார் பவுல். அத்தோடு, “இச்சையடக்கம் உங்களுக்கு இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடி மறுபடியும் கூடிவாழுங்கள்” என்றும் பவுல் அறிவுரையளிக்கிறார். இதற்குப் பொருளென்னவெனில், பாலுணர்வை முறையானவிதத்தில் கட்டுப்படுத்தி திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக வாழ வேண்டுமானால் தேவையற்றவிதத்தில் தனிமையை நாடுவதை தம்பதிகள் கைவிட வேண்டும் என்பது பொருள். தேவையற்றவிதத்தில் தனிமையில் நேரத்தை செலவிடும் கணவனும், மனைவியும் சாத்தானின் தூண்டுதலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று வேதம் எச்சரிக்கிறது.

மனைவியை ஊரில் விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குப் போய் உழைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய செயலைக்குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருமணம் செய்தபின் அத்திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக வாழாமல் உலகப்பிரகாரமான காரணங்களுக்காக மனைவியை விட்டுவிட்டு கணவனும், கணவனை விட்டுவிட்டு மனைவியும் பிரிந்து வாழ்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல். கணவன் மனைவியின் தேவைகளையும், மனைவி கணவனின் தேவைகளையும் திருமண வாழ்க்கையில் நிறைவேற்ற தனிமையும், பிரிவும் தடையாக அமையும். இன்று பலவருடங்களுக்கு மனைவியையும், குழந்தைகளையும்விட்டுப் பிரிந்து எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்யும் கிறிஸ்தவர்களைப் பார்க்கிறோம். இச்செயல் கிறிஸ்தவத்திற்கும், திருமண வாழ்க்கை‍க்கும் முரணானது.

அதுமட்டுமல்லாமல், மனைவியோடும் பிள்ளைகளோடும் நேரத்தை செலவிடாமல் தேவையற்ற விதத்தில் தனிமையில் வேறு பெண்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு சாத்தானின் தூண்டுதலுக்குப் பலியான ஊழியக்காரர்களைப் பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆகவேதான் ஊழியக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஊழியம், ஊழியம் என்று ஊருக்கு ஊழியம் செய்துவிட்டு உங்களுக்காக தேவன் கொடுத்த மனைவியின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அவ்வவூழியத்தால் எந்தப் பயனும் இல்லை. ஊழியக்காரர்கள் முக்கியமாக தங்கள் ஊழியம் குடும்ப‍த்தைப் பாதித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளார்கள். அத்தோடு கணவன்மார் வீட்டில் டெலிவிஷன் முன்னால் காலத்தை செலவிடுவதும், வீட்டிற்கு நேரத்திற்குப் போகாமல் ஆபிஸில் காலத்தைக் கழிப்பதும் குடும்ப வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்.

(2) இரண்டாவதாக இப்பகுதி, திருமணம் ஓர் ஆணையும், பெண்ணையும் ஓருயிராகவும், ஓருடலாகவும் இணைக்கிறது என்ற உண்மையைப் போதிக்கிறது. ஏற்கனவே, மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்ற கர்த்தரின் வார்த்தைகளைக் கவனித்தோம். இப்போது திருமணம் ஆணும், பெண்ணுமாகிய இருவரை எந்தளவுக்கு இணைக்கிறது என்பதை நாம் புரி‍ந்துகொள்ள வேண்டும். ஆதி. 3:24 இல் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு (விலகி) தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்று கூறுவதைப் பார்க்கிறோம். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “விட்டு”, “இசைந்து” ஆகிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வார்த்தைகள் ஒருவன் தன் மனைவியோடு முறையான குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு தனது பெற்றோரை விட்டுப்பிரிந்து முதலில் தனிக்குடித்தனம் நடத்த வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டுகின்றன. திருமணமானவன் தன் மனைவியோடு இசைந்து வாழ தனது பெற்றோரைவிட்டுப் பிரிந்து தனிமையாக ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். வேதம் போதிக்கும் இவ்வுண்மையை அநேகர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தி தமது தேவைகளையும், கடமைகளையும் வேதபூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு பிறர் தலையீடின்றி ஒரு குடும்பம் வாழ வேண்டியதவசியம். மனித உறவுகளில் பலவற்றை நாம் பார்க்கிறோம். பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் இருக்கும் உறவு, நண்பர்களுக்கிடையில் இருக்கும் உறவு ஆகிய உறவுகளையெல்லாம்விட ‍மேலான, விசேடமான உறவு கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் உள்ள உறவு. வேத, திருமணம் ஒரு ஆணையும், பெண்ணையும் ஒரே மாம்சமாக இணைக்கிறது (ஆதி. 3:24-25) என்று வேதம் போதிக்கிறது. இத்தகைய இணைப்பிற்கு எதுவும் தடையாக இருந்துவிடக்கூடாது.

ஓர் ஆணையும், பெண்ணையும் இணைத்து திருமணம் ஏற்படுத்தும் இத்தகைய இணைப்பை பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலியோ அல்லது கைவிரலில் மாட்டப்படும் மோதிரமோ ஏற்படுத்துவதில்லை. அவை இவ்விணைப்பிற்கான வெறும் அடையாளங்கள் மட்டுமே. இவ்விணைப்பைக் கணவன், மனைவி இருவரது உள்ளத்திலும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பே ஏற்படுத்துகின்றது. அத்தகைய அன்பை அவர்கள் இருவரும் ஒருவர் மேல் மற்றவர் தடையில்லாது காட்டி, வளர்த்து வளரவேண்டுமென்பதற்காகத்தான், அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை விட்டுப்பிரிந்து வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கிறது (ஆதி. 3:24; மத். 19:5). கணவன், மனைவி உறவுக்கு இடையில் வேறு எந்த உறவும் புகுந்து குழப்பிவிடக்கூடாது என்பதை வேதம் இதன் மூலம் வலியுறுத்துகிறது. பெற்றோர்கள் இதுவரை கொண்டிருந்த அதிகாரத்தை இனி இக்குடும்பத்தின் மேல் காட்டக்கூடாது. திருமணத்தின் மூலம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், கணவன் மனைவியாக இணைந்து ஒரு குடும்பத்தை அமைப்பவர்கள். ஒரு புதிய உறவில் தம்பதிகளாக அன்போடு இணைந்து வாழ வேண்டியிருப்பதையும் இது உணர்த்துகிறது. ஆகவே, பெற்றோர்கள் மேல் இருக்கும் அன்பிற்கெல்லாம் மேலான அன்பை ஒரு கணவன், மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் காட்ட வேண்டியதையும் இவ்வசனம் உணர்த்துகிறது. இதற்காக அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மீது இனி அன்பு வைக்கக் கூடாதென்றோ அவர்களை நிராகரிக்க வேண்டுமென்றோ கூறவரவில்லை. ஆனால், கணவன், மனைவி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கைக்கு குறுக்கே எவரும் வந்துவிடக்கூடாது.

இன்று பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் மற்றவர்களின் தலையீடுதான். பெற்றோர் மட்டுமல்லாமல், உறவினர்களும்கூட தலையிடும் நிலை காணப்படுகின்றது. பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் நாம் அன்பும் மதிப்பும் கொண்டிருக்க வேண்டியதவசியம் என்றாலும் நமது குடும்பத்தில் அவர்கள் தலையிடுவதை தேவன் அனுமதிக்கவில்லை. இவ்விஷயத்தில் கிறிஸ்தர்கள், கலாச்சார பாரம்பரியங்களை உதறித்தள்ளிவிட்டு வேதத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். சில வேளைகளில் பொருளாதார நிலைமை தனியாக வாழ்வதற்கு இடம் கொடுக்காமல் போகலாம். ஆனால், திருமணம் செய்துகொள்ளப்போகும் கிறிஸ்தவர்கள் இவற்றை ஆரம்பத்திலேயே சிந்தித்துப் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். குடிசையில் வாழ்ந்தாலும் தனிமையாக வாழ்வதே குடும்பத்தின் எதிர் காலத்திற்கு நல்லது. இது கணவன், மனைவியின் நல்லுறவிற்கு மட்டுமல்லாமல், பிள்ளைகளை வேதபூர்வமாக வளர்ப்பதற்கும் அவசியமானது.

இது பெற்றோர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை. தங்களுடைய பிள்ளைகள்மேல் உள்ள பாசத்தால் பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும் அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுக்காக தீர்மானம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய அதிகாரம் பிள்ளைகளின் திருமணத்தோடு முடிந்துவிட்டதென்பதை உணர வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர் தொடர்பான சில பொறுப்புகள் தொடர்ந்திருந்த போதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களுடைய வாழ்க்கைக்குரிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இதேபோல் திருமணமானவர்கள் தொடர்ந்தும் தங்கள் பெற்றோர்களில் தங்கியிருந்து தங்கள் திருமண வாழ்க்கையை குலைத்துக் கொள்ளக் கூடாது.

இவ்விரண்டாவது உண்மை போதிக்கும் இன்னு‍மொரு பாடத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது புருஷன் தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்ற ஆதியாகம வார்த்தைகள் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருக்க வேண்டிய தூய்மையான பாலுறவுத் தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது. இதைக் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஒரு ஆணையும், பெண்ணையும் திருமணத்தில் பிணைத்துவைப்பது பாலுறவே. பாலுறவே திருமணமாகிவிடாது. ஆனால், திருமணம் மட்டுமே ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் அமைய வேண்டிய பாலுறவுக்கு அனுமதியளிக்கிறது. ஆகவே, கணவனும், மனைவியும் இவ்வுறவு தொடர்ந்திருக்கவும், இவ்வுறவில் ஒருவருக்கொருவர் எந்தவிதத்திலும் தடையாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். நம்நாட்டு மக்களிடத்தில் கலாச்சாரத்தின் காரணமாக பாலுறவை, ஏதோ பேசக்கூடாததொன்றாகக் கருதும் வழக்கம் உண்டு. இதைக் கிறிஸ்தவர்களிடத்திலும் காணலாம். இத்தகைய எண்ணங்களால் கணவனும், மனைவியும் அதைக் குறித்த வேதபூர்வமான அறிவில்லாமல் ஒருவரையொருவர் திருப்தி செய்யாமல் போய்விடலாம். ஆனால், வேதம் திருமணத்தில் மட்டுமே பாலுறவுக்கு இடமுண்டு என்று மட்டும் கூறாமல், திருமணத்தில் சகல சுதந்திரத்துடனும், கணவனும், மனைவியும் அதில் இன்பம் காண வேண்டும் என்றும் போதிக்கின்றது. இதில் தவறிழைக்கும் கணவனும், மனைவியும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது (1 கொரி. 7:1-4). கணவனுடைய சரீரம் கணவனுக்கு சொந்தமில்லை. அதேபோல் மனைவியின் சரீரம் மனைவிக்கு சொந்தமில்லை என்று கூறுவதன் மூலம் பவுல், கணவனும், மனைவியும் எவ்வாறு ஒருவரையொருவர் அனுசரித்து இசைந்து நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார். அதாவது, மனைவியின் தேவைகளை அறிந்து கணவனும், கணவனின் தேவைகளை அறிந்து மனைவியும் நடந்து கொள்ள வேண்டும். இன்று அநேக கிறிஸ்தவர்களும் இவ்வுறவு பற்றிய வேதபூர்வமான அறிவில்லாமலிருக்கிறது. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களும் அநேகம்.

(3) இவ்வாதியாகம வேதப்பகுதி போதிக்கும் மூன்றாவது உண்மை, திருமணம் நிரந்தரமானது என்பதுதான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (ஆதி. 2:24, 25) என்று ஆதியாகமத்தில் வாசிக்கிறோம். திருமண வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், அதில் பிரிவுக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது அதில் பிரிவேற்படுவதையோ அல்லது விவாகரத்தையோ தமது சிந்தையில் கொண்டிருக்கவில்லை. கணவனும், மனைவியும் கூடி மகிழ்ச்சியோடு வாழ்வதையே அவர் விரும்புகிறார். ஆகவே, திருமணமானவர்கள் வாழ்க்கையை குழப்பிக் கொள்ளாமல், அமைதியான நீரோட்டத்தைப்போல் தொடர்ந்தோடி கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்படி வாழவேண்டும். விவாகரத்தையோ, பிரிந்து வாழ்வதையோ அவர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்கக்கூடாது.

ஒரே கூரைக்குக்கீழ், திருமணபந்தத்தை ஏற்படுத்திக் கொண்டும் வீட்டில் பிரிந்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். இது உண்மையான திருமண வாழ்க்கையல்ல. ஒரு முறை தன் மனைவியோடு பிரச்சனை என்று கூறி என்னை அணுகி ஆலோசனை கேட்க வந்த ஒருவர், தான் தன் மனைவியோடு ஒரே ‍அறையில் முப்பது வருடங்களாக உறங்கியதில்லை என்று கூறினார். இதற்குக் காரணம், மனைவிக்கு அவர் குறட்டை விடுவது பி‍டிக்கவில்லை. ஆனால், இக்குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துப்போகும் பக்குவம் இல்லை. அத்தோடு அவர்கள் சுயநலநோக்கால் பிரச்சனை ஏற்படுவதற்கான செயல்களையே செய்து வந்தார்கள். ஒரே மாம்சமாக இருக்க வேண்டியவர்கள் ஒரே அறையில் உறங்குவதையும் நிறுத்திக் கொண்டார்கள். இது தேவன் போதிக்கும் திருமணபந்தமில்லை. ஆகவே, வெறுமனே தாலிகட்டி நடக்கும் திருமணத்தையெல்லாம் திருமண வாழ்க்கை என்று கூறிவிடமுடியாது, திருமணத்திற்கான இலக்கணங்களைக் கொண்டமைந்த குடும்ப வாழ்க்கையே வேதபூர்வமான வாழ்க்கை. ஒருவீட்டில் குடியிருந்தால் மட்டும் போதாது. ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் கணவனும், மனைவியும் வாழ வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு கணவனும், மனைவியும் பிரிந்துபோக வேண்டிய நிலை ஏற்படுவதற்கும், அல்லது கணவனோ, மனைவியோ தவறான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாம் மேலே இதுவரை பார்த்த காரியங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இல்லாமல் இருப்பதே காரணம். எனவே தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்கள், திருமணத்திற்கு முன் திருமணத்தைப்பற்றிய வேதபூர்வமான எண்ணங்களை தங்களுடைய சிந்தையில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் தனக்குப் பி‍டித்தவரா? தனக்குத் தகுதியானவர்தானா? ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து வளர்ந்து வருகின்றவரா? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு திருமணவாழ்க்கைக்குத் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது, இது ஆயிரங்காலத்திற்கும் நின்று நிலைக்க வேண்டிய ஒரு உறவு. அத்தகைய உறவை கடைக்குப்போய் பணம் கொடுத்து வாங்கி அனுபவிக்கக்கூடிய ஒரு பொருளைப்போல எண்ணிவிடக்கூடாது. இல்லற வாழ்வின் இரகசியத்தை அறிந்து இல்லறம் நல்லறமாக நடக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

(வளரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s