இவ்விதழில் அற்புதங்கள், அடையாளங்கள் பற்றி வேதம் போதிக்கும் உண்மை என்ன? என்பதை ஆராய்ந்துள்ளோம். அதனுடன் தொடர்புடைய வேறு சில போதனைகளையும் (கர்த்தர் இன்று சுகமளிக்கிறாரா?, விசுவாச ஜெபம்) ஆராய்ந்துள்ளோம். இவை பற்றி சரியான வேதவிளக்கமில்லாமல் கிறிஸ்தவ உலகு தொடர்ந்தும் குழம்பிப் போயிருக்கின்றது. கண்மூடித்தனமான நம்பிக்கைகளோடும், குருட்டு விசுவாசத்தோடும் வாழ்வது கிறிஸ்தவரல்லாவர்களின் வாழ்க்கை முறை. அவர்களுக்கு எதை விசுவாசிக்கிறோம்? ஏன் விசுவாசிக்கிறோம் என்று தெரியவில்லை. தேவனின் வெளிப்படுத்தலையும், சித்தத்தையும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனால், நாமோ அத்தகைய வாழ்க்கையை வாழவில்லை. தேவன் தனது வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ள சித்தத்தை நாம் அறிந்திருக்கிறோம். குருட்டுத்தனமாக வாழ்வதற்காக கர்த்தர் நம்மை அழைக்கவில்லை. எங்கு போகிறோம் என்று புரியாமல் நாம் வாழவில்லை. ஆகவே, வேதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஜெபத்துடன் இவ்வாக்கங்களை ஆராய்ந்து ஆத்தும விடுதலை அடையுங்கள்.
போதகர் அலன் டன்னின் திரித்துவம் பற்றிய விளக்கங்கள் இவ்விதழுடன் நிறைவு பெறுகின்றன. திரித்துவக் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகள். அப்போதனைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கிறிஸ்தவ வாழ்வில் நாம் உயர்வடைவோம். தொடர்ந்து விசுவாச அறிக்கையின் ஏனைய பகுதிகளுக்கான விளக்கங்களை இனி வரும் இதழ்களில் தரவிருக்கிறோம்.
மார்டின் லூதரின் அன்பு மனைவி கெத்தரினின் (லூதர் கேட்டி என்று அழைப்பது வழக்கம்) படம் அட்டையை அலங்கரிக்கின்றது. குடும்பத்தில் விளக்காக இருக்க வேண்டிய மனைவியின் தன்மைகளை இவ்விதழில் ஆராய்வதால் கெத்தரினின் படம் இவ்விதழை அலங்கரிப்பது பொருத்தமே. வேதம் விபரிக்கும் குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணாக லூதரின் அன்பு மனைவி வாழ்ந்தாள் என்று வரலாறு போதிக்கின்றது. குடும்பப் பெண்களுக்கும், மணமுடிக்கவிருக்கும் மங்கையருக்கும் இவ்வாக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இன்னுமொரு இதழை எழுத்தில் வடித்து வெளியிட எம்மை வழிநடத்திய தேவனுக்கு எமது நன்றிகள். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இவ்விதழும் உங்கள் ஆத்மீக வாழ்க்கை வளம்பெறத் துணையாக இருக்க கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
– ஆசிரியர்.