இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்தொடர் அளிக்கிறது.
குடும்ப விளக்கு
குடும்பத்திற்குத் தலைவன் கணவன் என்று கடந்த இதழில் பார்த்தோம். கணவன் குடும்பத் தலைவன் என்றால், மனைவியைக் குடும்ப விளக்கு என்று கூறுவது நியாயமே. மனைவி குடும்பத்தில் விளக்கைப்போல ஒளியேற்றி வைக்க வருபவள். ஒரு நல்ல கிறிஸ்தவ மனைவி விளக்கைப்போல குடும்பத்திற்கு ஒளி கொடுப்பவள் மட்டுமல்ல, சுயநலமற்ற தனது வாழ்க்கையின் மூலம் திரியாக எரிந்து அதில் இன்பம் காண்பவள். நமது சமுதாயத்தின் புலவர்கள் பெண்களைப்பற்றி பெரிதாகப் பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள் என்றால் அதற்குப் பெண்களின் குணம்தான் காரணம். ஆனால், பெண்ணுக்கு எழுத்தின் மூலம் மதிப்புக் கொடுக்கும் அளவிற்கு நடைமுறையில் நம் மக்கள் மதிப்புக் கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெண்ணுக்கு இருந்த நிலை தொடர்ந்தும் நிலவுகிறது என்று கூறுவது பெரிதுபடுத்துவதாகாது. ஒவ்வொரு ஆணும் பெண்களைப்பற்றித் தன் மனத்தில் கொண்டுள்ள எண்ணத்தில் இன்றும் அதிக மாற்றமடையவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள அளவிற்கு தமிழ் மக்களின் எண்ணங்களில் இந்த விஷயத்தில் துரித மாற்றங்கள் ஏற்படவில்லை. இவ்விதழில், வேதம் குடும்பத்தில் கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றிப் போதிக்கும் முக்கியமான வேதப் பகுதிகளாக எபேசி. 5:22-23; கொலோ. 3:18-21; 1 பேதுரு 3:1-7; தீத்து 2:3-5; 1 தீமோத். 5:9-16 ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.
ஆதியில் ஆணையும், பெண்ணையும் படைத்த தேவன் அவர்கள் தம்மை மகிமைப்படுத்தும் விதமாக ஆணைத் தலைவனாகவும், பெண் அவனுக்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்கும்படியாகப் படைத்தார் என்று ஆதியாகமத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் வாசிக்கிறோம். ஆனால் அவர்கள் பாவத்தில் வீழ்ந்தபின் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து தொடர்ந்து பணிபுரிய முடியாமல் ஆண், பெண்ணை அடக்கியொடுக்கி வைப்பதைப் பணியாகவும், பெண் கணவனுக்குக் கட்டுப்படாமல் நடப்பதைத் தன் நிலையாகவும் கொண்டு இன்றும் வாழ்ந்து வருவதை வேதம் சுட்டிக் காட்டுகின்றது. இந்த நிலையில் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் கணவனும், மனைவியும் தங்களுக்கு ஆரம்பத்தில் தேவன் கொடுத்த கட்டளையின்படி வாழ வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து தரும் இரட்சிப்பு கணவன், மனைவி இருவரையும் வேதபூர்வமாக சிந்தித்து வாழ வேண்டிய பெரும் பொறுப்பிற்கு உட்படுத்துகிறது. அதன்படி கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் பார்த்தோம். இனி மனைவியினுடைய நிலையைப் பார்ப்போம்.
கணவனின் ஆத்மீகத் தோழி!
வேறு எவரும் அளிக்க முடியாத தோழமை உறவை மனைவி கணவனுக்கு அளிக்க வேண்டியவளாக இருக்கிறாள். கர்த்தருக்கும் நமக்கும் இருக்கும் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் உறவை மனைவி கணவனுக்கு அளிக்க வேண்டும். திருமணத்தின் மூலம் இதையே கர்த்தர் குடும்ப வாழ்வில் எதிர்பார்க்கிறார். இதுவரை தனது நண்பர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அடைந்திராத ஓர் ஐக்கியத்தை கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் அளிக்க வேண்டும். அவர்கள்கூடி வாழும் காலம் முழுவதும் இது அவர்களிடத்தில் காணப்பட வேண்டும். இத்தகைய உறவிற்காகவே ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாவம் இவ்வாறு வாழ்வதைப் பாதித்திருக்கிறது. கிறிஸ்தவக் கணவனும், கிறிஸ்தவ மனைவியும் கர்த்தரின் குழந்தைகளாக இருப்பதால் பாவத்திற்கு இடம் கொடுக்காமல் இத்தகைய உறவு குடும்பத்தில் நிலைத்திருக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வுறவிற்குப் பாதகமாக வரும் எதற்கும் அவர்கள் இடமளிக்கக்கூடாது.
இத்தகைய Companionship க்கு இடைஞ்சலாக வரக்கூடிய எதையும் அவர்கள் உதறித் தள்ள வேண்டும். அடுப்பறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே மனைவி என்று வாழும் கணவன்களும், மனைவிகளும் இன்று இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். திருமணத்தின் மூலம் இத்தகைய உறவு குடும்பத்தில் நிலவுகிறதா என்று வேதபூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். வயது வந்துவிட்டது என்பதற்காகவும், பெற்றோர்களுக்காகவும், சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவும் திருமணம் என்ற நிலை மாறி, மனைவி கணவனுக்கு வேறு யாரும் அளிக்க முடியாத ஒன்றை குடும்ப வாழ்வின் மூலம் அளிக்கும் ஓர் ஐக்கிய வாழ்விற்காக உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்ற உண்மையை உணர வேண்டும். கிறிஸ்தவ மனைவிமார்களே, இத்தகைய ஆத்மீக உறவை நீங்கள் உங்கள் கணவனுக்கு அளிக்கிறீர்களா? அத்தகைய உறவை உங்கள் கணவனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் கணவன் மட்டுமே உங்களுடைய Soul-mate ஆக இருக்கத் தேவையான அனைத்தையும் செய்து அவ்வுறவைப் பாதுகாத்து வருகிறீர்களா?
கணவனுக்கு தகுந்த துணைவி (Help-meat).
ஆதாமுக்குத் துணையாக இருக்கவே ஏவாளைத் தேவன் படைத்தார். ஆகவே, மனைவி கணவனுக்கு அவனுடைய அனைத்துக் காரியங்களிலும் துணையாக இருக்க வேண்டும். வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவது மட்டுமன்றி கணவனுடைய ஏனைய காரியங்கள் அனைத்திலும் அக்கறை காட்டிக் கணவனுக்குத் துணைபுரிய வேண்டும்.
கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு பக்கத்து வீட்டாரோடு அரட்டையடிப்பதும், வீட்டு வேலைகளைச் செய்யாமல் டீ. விக்கு முன்னால் உட்கார்ந்திருப்பதும் நல்ல மனைவி செய்யும் செயல்களல்ல. கணவன் வீட்டுக்கு வெளியில் உழைத்துக் குடும்பத்தை நடத்தும் பொறுப்பைக் கொண்டவனாக இருப்பது போல் மனைவி வீட்டில் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் பொறுப்போடு செய்ய வேண்டும். கணவன் மனம் மகிழும் விதத்திலும், பாராட்டும் விதத்திலும் இக்காரியங்களைச் செய்ய வேண்டும். கிறிஸ்தவ மனைவி சோம்பேறியாக இருக்கமாட்டாள். கணவனை மற்றவர்கள் பாராட்டும்விதத்தில் குடும்ப வேலைகளை அக்கறையுடன் செய்பவளாக இருப்பாள்.
நீதிமொழிகள் 31 இல் நாம் வாசிக்கும் பெண்ணைப்போல் வாழ்பவளே நல்ல மனைவி. அவ்வேதப் பகுதி ஒரு நல்ல மனைவி எப்படி இருப்பாள் என்று தெளிவாகப் போதிக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியற்ற அந்தக்காலத்திலும்கூட குடும்பத்திற்காக அந்தப்பெண் பெருங்காரியங்களைச் செய்தாள். அவள் செய்த காரியங்கள் எதுவும் கணவனின் தலைமையையோ, மதிப்பையோ குறைப்பதாக இருக்கவில்லை. சோம்பலுடன், அரட்டை அடிப்பதில் மட்டும் காலத்தை செலுத்தும் பெண்ணாக அவள் இருக்கவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்தி கணவனுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அனைத்தையும் செய்து, வீட்டுக்கு வருபவர்களை மனங்கோணாமல் உபசரித்தும் எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி தன் கணவனை மாற்றார் பாராட்டும் விதத்தில் நடந்து கொண்டாள். இந்நீதிமொழியை மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது என்னடா? இவள் மட்டும் மாடுபோல் உழைக்க, கணவன் வெறுமனே மரத்தடியில் இருந்து வேடிக்கை பார்த்தானோ? என்று எண்ணத் தோன்றும். ஆனால், இவ்வேதப்பகுதி அந்த மனைவி நேரத்தைப் பயன்படுத்திக் கர்த்தரையும் தன் கணவனையும் பிரியப்படுத்தும் விதத்தில் எவ்வாறு நடந்து கொண்டாள் என்று மட்டுமே போதிக்கின்றது. தன் குடும்பவளத்திற்காக அவள் செய்யத்துணியாத காரியங்கள் இல்லை. அவளுடைய செய்கைகள் அனைத்தும் கணவனுக்குப் பெருமையையே தேடித்தந்தன.
கணவனுடைய காரியங்களில் அக்கறை எடுத்து அவனுக்குத் தேவையான நேரங்களில் நல்ல ஆலோசனை சொல்பவளாகவும் மனைவி இருக்க வேண்டும். கிறிஸ்தவ மனைவி கணவன் மீது ஆதிக்கம் செலுத்த முயலாமல் தகுந்த நேரத்தில் பொருத்தமான ஆலோசனைகளையும் தருபவளாக இருக்க வேண்டும். மனைவியின் நல்ல ஆலோசனைகளைத் தட்டி உதறும் கணவன் நல்ல கணவனாக இருக்க முடியாது.
கணவனுக்கு அடங்கி நடப்பவள்.
பவுல் எபேசியர் 5 இல் மனைவி தன் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் (கீழ்ப்படியுங்கள்) என்று சொல்கிறார். இதையே பேதுருவும் போதிக்கிறார் (1 பேதுரு 3:1). அதாவது, குடும்பத்தில் கணவனின் தலைமையை ஏற்று அவனுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்பது இதற்குப் பொருள். கணவனுடைய தலைமைத்துவத்தை பாவகரமானதொரு ஆதிக்கமாக மனைவி நினைத்துவிடக்கூடாது. கர்த்தர் கணவனிடம் எதிர்பார்ப்பது அன்போடு கூடிய நல்ல தலைமையையே என்றுணர்ந்து அத்தகைய அன்புத் தலைமைக்கு மனைவி கட்டுப்பட வேண்டும். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காத மனைவி நல்ல கிறிஸ்தவ மனைவியாக இருக்க முடியாது. கிறிஸ்து தன் சபைமேல் அன்பு செலுத்தி ஆள்வது போல் கணவன் தன் குடும்பத்தை ஆள வேண்டிய கடமையைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஆளுகைக்கு மனைவி தன்னை ஒப்புக்கொடுத்து குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன பெண்ணியல்பு சார்புக் கொள்கைகள் இப்போதனையை எதிர்க்கின்றன. கணவனுக்கு சமமாக எல்லாக் காரியங்களையும் மனைவி செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால், கிறிஸ்தவ குடும்பங்களில் இத்தகைய போட்டி மனப்பான்மைக்கோ, போராட்டத்திற்கோ இடமில்லை. மனைவி கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது வேதபோதனை. கர்த்தரே அத்தகைய தலைமையைக் குடும்பத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்றுணர்ந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும். கணவனின் தலைமைத்துவத்திற்கு எந்தவித ஊறும் ஏற்படாத விதத்திலேயே மனைவி கணவனுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும். “இந்தப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பெண்களும் நடந்து கொண்டார்கள்” என்று பேதுரு போதிக்கிறார். சாராளும், தன் கணவனை “ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்” என்றும் பேதுரு சொல்கிறார். பவுல் 1 கொரி. 14 ஆம் அதிகாரத்தில் பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்றும், அவர்கள் எந்தக் காரியத்தையும் தங்களுடைய புருஷர்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிப்பதற்கும் கர்த்தர் கணவனுக்குக் கொடுத்திருக்கும் தலைமைப் பொறுப்பே காரணம். ஆண்களும், பெண்களும் கூடிவரும் சபைக்கூட்டங்களில் பெண்கள் எழும்பிப் பேசுவதும், கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதும் வேதத்திற்கு முரணான காரியம். இது கர்த்தர் கணவனுக்குத் தந்திருக்கும் தலைமைப் பதவியை உதாசீனம் செய்யும் காரியமாகும். மனைவி தன் கணவனைத் தவிர வேறு மனிதர்களிடத்தில் தனிமையில் ஆத்மீகக் காரியங்களில் ஆலோசனை பெறப் போகக்கூடாது. சபைப்போதகர்களிடம் கணவனோடு போய் ஆலோசனை பெறுவதே முறையானது.
ஒரு கிறிஸ்தவ மனைவி கிறிஸ்தவனல்லாத கணவனுடன் வாழும் நிலை ஏற்படும்போது அவள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இதைப்பற்றி பேதுரு தனது முதலாம் நிருபத்தில் மூன்றாவது அதிகாரத்தில் விளக்குகிறார் (3:1, 2). இத்தகைய சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ மனைவி தன்னுடைய நல்ல நடத்தையால் கணவன் தன்மீது நம்பிக்கை வைக்கும்படியாக நடந்து கொள்ள வேண்டும். பயபக்தியுள்ள கற்புடைய நடத்தை கொண்ட மனைவியைப் பார்த்து கணவன் திருந்தக்கூடிய வாய்ப்பிருப்பதைப் பேதுரு எடுத்துக் காட்டுகிறார். ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் மனைவி தனக்கு எல்லாம் தெரியும் என்று கணவனுக்கு போதிக்க முற்படுவதோ, அல்லது மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதோ சரியல்ல. தன்னுடைய நல்ல நடத்தையால் கணவனை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே வேதம் போதிக்கின்றது. தேவனுடைய பார்வையில் விலைமதிப்புள்ளது பெண்ணின் நல்ல குணமே என்று பேதுரு கூறுகிறார் (1 பேதுரு 3:4).
நல்ல தாயாக இருப்பவள்.
மனைவி நல்ல தாயாக இருப்பது அவசியம். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோடு அப்பிள்ளைகளுக்கு நல்ல தாயாக இருப்பது அவசியம். கணவன் வேலைக்குப் போனபின் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவிடுவது மனைவியே. ஆகவே, பிள்ளைகளைக் கண்டித்து சரியான வழியில் வளர்க்கும் பெரும் பொறுப்பை மனைவி தேவ பக்தியோடு செய்வதவசியம். கணவனும் மனைவியும் இதில் இணைந்து ஈடுபடுதல் அவசியம். இப்பொறுப்பு மனைவியுடையது என்று கணவன் பாராமுகமாக இருக்கக்கூடாது. கணவன் இக்காரியத்தில் மனைவிக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். முக்கியமான ஒழுங்கு நடவடிக்கைகளில் கணவன் இதில் முன்னின்று வழி காட்ட வேண்டும். கணவன் வீட்டில் இல்லாத வேளைகளில் மனைவி இப்பொறுப்பை நல்லபடியாக ஏற்று நடத்த வேண்டும். பிள்ளைகளை, நீங்கள் எப்படியாவது போங்கள் என்று விரட்டிவிட்டு அடுப்பறை வேலை, துணி துவைத்தல் என்று வீட்டு வேலைகளில் மட்டும் கவனமாக இருந்துவிடும் தாய் கர்த்தருக்கு முன் பெருந்தவறு செய்கிறாள். பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் நன்றாகப் படிக்கிறார்களா என்று வீட்டுக்கு வந்தபின் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்கள் பாடங்களில் அக்கறை எடுத்து அவர்களுக்குத் துணை செய்ய வேண்டும். அவர்கள் ஒழுக்கத்துடன் வளர்வதற்கான அனைத்துக் காரியங்களிலும் ஈடுபட வேண்டும். அவர்களுடைய நண்பர்கள் யார்? அவர்களுடைய பொழுது போக்கு என்ன? என்பதிலெல்லாம் அக்கறை காட்ட வேண்டும். பிள்ளைகள் நல்ல பேச்சு பேசுகிறார்களா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் மற்ற பிள்ளைகளிடம் இருந்து கற்று வரும் தவறான நடத்தையையும், பேச்சையும் திருத்தி நல்ல வழியில் செல்ல பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். எத்தனையோ வீட்டு வேலைகள் இருக்கும்போது பிள்ளைகளுக்கு எப்படி இவ்வளவு நேரத்தைக் கொடுப்பது என்று கேட்கும் பெண்கள் நல்ல தாய்களாக இருக்க முடியாது. சூசானா வெஸ்லிக்கு பத்தொன்பது பிள்ளைகள் இருந்தன. அவர் ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரத்தை தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருடனும் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் அதிக வேலையாட்கள் இருந்திருக்கக்கூடும். இருந்தாலும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட அவர் தவறவில்லை.
வீட்டில் டெலிவிசன் இருந்தால் அதில் பிள்ளைகள் அதிகம் நாட்டம் காட்டிவிடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் டெலிவிஷனே கதி என்றிருந்தால் பிள்ளைகள் அதுவே தெய்வம் என்று போகாமல் வேறு என்ன செய்வார்கள். இன்று போதகர்களும், அவர்களுடைய மனைவிமார்களும் இக்காரியத்தில் அதிக கவனமாக இருப்பதோடு சபை மக்களுக்கு முன் மாதிரியாகவும் இருக்க வேண்டும். டெலிவிசனால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் அதிகரித்து வரும்போது கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றாடம் குடும்ப ஜெபத்தைக் கணவன் நடத்தும் போது அதில் அதிக அக்கறைகாட்டி கணவனுக்கு துணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் படுக்கப்போகுமுன் தனித்தனியாக ஜெபித்து அவர்களை படுக்கைக்கு அனுப்புவதும் அவசியம். தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டுமானால் அதற்காகப் பெற்றோர்கள் இப்போதே உழைப்பது அவசியம். பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி. 22:6) என்ற நீதிமொழிகளின் போதனையை நாம் மறக்கக்கூடாது.
மனைவி கணவனின் மகிமையாக இருக்கிறாள்.
இவ்வுண்மையை குறிப்பாக 1 கொரி. 11:7ம், உள்ளடக்கமாக எபேசியர் 5:22-33ம் போதிக்கின்றன. ஆதாமுக்குத் துணையாக இருக்க ஏவாளைப் படைத்த கர்த்தர், அவள் ஆதாமின் மகிமையாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். கணவனின் சரீரத் தேவைகளையும், பிள்ளைகளின் தேவைகளையும் மட்டும் நிறைவேற்றும் மனித இயந்திரமாக இருக்கும்படியாக பெண்ணைக் கர்த்தர் படைக்கவில்லை. நீதிமொழிகள் 31 இல் நாம் வாசிக்கும் பெண்ணைப் போல வாழ்ந்து அவள் தன் கணவனின் மகிமையாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் சித்தம். கிறிஸ்தவ மனைவியால் மட்டுமே இவ்வாறு வாழமுடியும். ஆகவே, கிறிஸ்தவ கணவன்மார் தங்களுடைய மனைவி இப்படி வாழ்வதற்கான எல்லா உதவிகளையும் அவர்களுக்கு செய்து தர வேண்டும். மனைவியரும் தங்களுடைய ஆத்மீக வாழ்வில் அக்கறை எடுத்து வேதத்தை முறையாகப் படித்து விசுவாச வாழ்க்கை நடத்த வேண்டும். சபைக் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். வேதப்பாடங்களிலும் கலந்து கொண்டு வேத அறிவில் வளர்ந்து கர்த்தருடைய சித்தத்தைத் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும்.
கடைசியாக போதகர்களுக்கும், போதகர்களின் மனைவிகளுக்கும் ஒரு வார்த்தை. இன்று அநேக போதகர்களின் குடும்ப வாழ்க்கை வேதபூர்வமாக அமையவில்லை. சபைக்குப் போதிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நாம் நமது குடும்ப வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது. சொல்லைவிட செயல் அதிக பலன் தரும் என்று கூறுவார்கள். நமது வாழ்க்கை நன்றாக இருந்தால் நமது மக்கள் நமது போதனைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆகவே, போதகர்களின் மனைவிமார் தங்கள் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கணவனுக்கு அதிக மரியாதை செலுத்துவதோடு, சபை மக்களுடன் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சபையின் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் கீழ்ப்படிவுடன் நடந்து கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் கீழ்ப்படியாவிட்டால் சபை மக்களுக்கு பிள்ளை வளர்ப்பைப் பற்றி எப்படிப் போதிக்க முடியும்?
போதகர்கள் விருந்துபசாரத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியிருப்பதால், போதகர்களின் மனைவிமார் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் வீட்டிற்கு வருபவர்களை மனங்கோணாமல் உபசரிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதற்காக எல்லோருக்கும் சாப்பாடு போட வேண்டுமென்று நான் கூறவரவில்லை. தம்மை நாடி வருபவர்களை அன்போடு உபசரித்து வரவேற்கும் வீடாக போதகர்களின் வீடு இருக்க வேண்டும். சபை மக்களுக்கு அது எப்போதும் திறந்திருக்க வேண்டும். இக்கடமையில் குடும்பப் பெண்ணுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இதில் சிறக்காத போதகரின் மனைவி அப்போதகனின் ஊழியத்திற்கு ஆபத்தைத்தான் தேடித்தருவார்.