நாடாளும் அரசியைத் தன் நாவன்மையால் நடுங்கவைத்து, ஸ்கொட்லாந்தில் சீர்திருத்த விளக்கை ஏற்றிவைத்த சிங்கம்.
ஜோண் நொக்ஸ்
ஸ்கொட்லாந்தின் மாபெரும் சீர்திருத்தவாதி ஜோண் நொக்ஸ் என்பது வரலாறு அறிந்த உண்மை. சீர்திருத்தவாதிகளில் எனது மனதைக் கவர்ந்த பெருமகன் நொக்ஸ். சீர்திருத்தப் போதனையும், வேதபூர்வமான ஆராதனையும் ஸ்கொட்லாந்து நாட்டுத் திருச்சபைகளை இன்றும் தொடர்ந்து அணி செய்கின்றன என்றால் அதற்குப் பெரும் காரணகர்த்தாவாக இருந்தவர் ஜோண் நொக்ஸ். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஹெடிங்டன் என்ற இடத்தில் பிறந்து, கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பயின்று, உறுதியான ஒரு சீர்திருத்தவாதியாக மாறியவர் நொக்ஸ். சீர்திருத்தத்திற்கு எதிராகப் பெரும் எதிர்ப்புகள் ஸ்கொட்லாந்தில் தோன்றியபோது நொக்ஸ் ஐரோப்பாவிற்குப் போய்விடத் தீர்மானித்தார். ஆனால், ஸ்கொட்லாந்து அரசுக்கு உதவ பிரான்ஸில் இருந்து வந்திறங்கிய படையிடம் அவர் பிடிபட்டு 19 ஆண்டுகள் சிறையில் வாட நேர்ந்தது. நொக்ஸையும் அவரோடு பிடிபட்டவர்களையும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்குத் திருப்பப் பெரு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், நொக்ஸ் இறுதிவரை எல்லா முயற்சிகளையும் எதிர்த்துப் போராடி தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
விடுதலைக்குப்பின் சீர்திருத்தம் வளர்ந்து கொண்டிருந்த இங்கிலாந்துக்குப் போய் வாழத் தீர்மானித்தார் நொக்ஸ். அங்கே ஆறாவது எட்வர்ட் அரசரின் செப்ளின்களில் ஒருவராகப் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அரசி மேரி ஆட்சிக்கு வந்தபோது மறுபடியும் அவர் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டதால் ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும் போய் வாழத் தீர்மானித்தார். கல்வின் போதகராகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஜெனீவாவில் அவர் நான்கு வருடங்களை மிக மகிழ்ச்சியுடன் கழித்தார். ஜெனீவாவில் அவர் கழித்த நாட்கள் ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தத்திற்கு அவரைத் தயார் செய்தன என்றுதான் கூற வேண்டும். ஜெனீவாவின் சீர்திருத்தத்தைப் பற்றிக் கூறும் நொக்ஸ், “மற்ற இடங்களிலும் சீர்திருத்தம் ஏற்பட்டுள்ள போதும் வேறு எந்த இடத்திலும் இல்லாதவகையில் ஜெனீவாவில் சீர்திருத்தம் ஆழமாகப் பதிந்து சபைகளையும், மக்கள் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது” என்றார்.
1599 ஆம் ஆண்டில் அவர் மறுபடியும் ஸ்கொட்லாந்திற்குத் திரும்பி வந்தார். அங்கே மக்கள் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டார். ஆறாவது ஜேம்ஸின் இறப்பிற்குப் பிறகு அவருடைய மகள் மேரி அரசுக்கு வந்திருந்தாள். மேரி குழந்தையாக இருந்ததால் தாயே ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டாள். தாயின் பெயரும் மேரியே. நாடு திரும்பிய நொக்ஸ் சிலை வணக்கத்திற்கும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் எதிராகக் கடுமையான போராட்டத்தை ஆரம்பித்து, வேதசத்தியங்களை அறிந்துகொள்ளும்படி மக்களை வற்புறுத்தினார். நொக்ஸ் பிரசங்கம் செய்வதில் வல்லவராக இருந்தார். ஆயிரக்கணக்கானவர்கள் அவரது பிரசங்கத்தைக் கேட்டு கர்த்தருடைய வார்த்தையைத் தழுவிக் கொண்டனர். மனந்திரும்பிய மக்களும், அவருடைய ஆதரவாளர்களும் ரோமன் கத்தோலிக்க முறையில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கினர். போலிப்போதனைகளை பரப்ப உதவும் எதையும் தகர்த்தெறிவது நல்லதே என்று நொக்ஸ் அதைத் தடைசெய்யவில்லை.
ஸ்கொட்லாந்தில் சபை அமைப்பு இங்கிலாந்தைவிட வேறுபட்டு பிரஸ்பிடீரியன் முறையில் அமைந்ததற்கு ஜோண் நொக்ஸ் காரணம். அதுமட்டுமல்லாமல், கல்வியிலும் பெரும் சீர்திருத்தங்கள் ஏற்பட நொக்ஸ் காரணமாக இருந்தார். திருச்சபை இருந்த ஒவ்வொரு பகுதியிலும் கல்விச்சாலைகளை அமைத்து, இளைஞர்களுக்கு இலத்தீன், கிறிஸ்தவம், இலக்கணம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், இவற்றைவிட ஸ்கொட்லாந்து முழுவதும் கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதையும், சீர்திருத்தக் கொள்கைகளை வளர்ப்பதிலுமே நொக்ஸ் அதிக நாட்டம் செலுத்தினார். தனது அதிரடிப் பிரசங்கத்தினால் அநேக எதிரிகளை நொக்ஸ் எதிர்நோக்க நேர்ந்தது. ரோமன் கத்தோலிக்க ஆராதனையைப் பற்றி நொக்ஸ், “பத்தாயிரம் எதிரிபோர் வீரர்கள் என் நாட்டில் வந்திறங்குவதை விட ஒரு ரோமன் கத்தோலிக்க ஆராதனை எனக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்துகின்றது” என்று கூறினார். ரோமன் கத்தோலிக்க ஆராதனை முறைகளை அவர் சாடி வந்தார். இதனால் அரசியை அடிக்கடி அவர் சந்திக்க நேர்ந்தது. அவரது வாதங்களைக்கேட்டு அரசியான மேரிக்கே நடுக்கமெடுத்திருக்கிறது.
ஜோண் நொக்ஸ் 1572 இல் இறைவனடி சேர்ந்தார். எடின்பரோவில் உள்ள அவரது கல்லறையில் பின் வரும் வாசகங்கள் காணப்படுகின்றன; “மனிதர்களுக்கு என்றுமே அஞ்சாத ஒரு மனிதன் இங்கே அயர்ந்திருக்கிறான்”. கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, வேதசத்தியங்களின் அடிப்படையில் சபைகள் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுதும் உழைத்தவர் ஜோண் நொக்ஸ். நொக்ஸைப் போன்ற அஞ்சா நெஞ்சமும், வேத அறிவும், பிரசங்கத்திறனும் கொண்ட சீர்திருத்தவாதிகள் இன்று நிச்சயம் நமக்குத் தேவை. நொக்ஸின் சரிதம் நம்மைச் சிந்தித்து செயல்படத் தூண்டட்டும்.