ஒரு புதிய நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் தமிழில் கிறிஸ்தவ இலக்கியங்கள் எந்தளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியமே. சில வருடங்களுக்கு முன் ஒரு இதழையே தமிழிலுள்ள கிறிஸ்தவ இலக்கியங்களை அடையாளம் காணவும், வாசகர்களிடம் அவற்றை வாசிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அர்ப்பணித்தோம். அதற்குப்பின் நெடுங்காலமாக அது பற்றி எழுதாததாலும், எவ்வளவு தூரத்திற்கு இந்த இடைக் காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று ஆராய்ந்தறியவும் மீண்டும் எழுத வேண்டியது அவசியமாகிறது. கிறிஸ்தவ இலக்கியங்கள் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் புத்துணர்வூட்டி சீர்திருத்தத்தை ஏற்படுத்தி வேத பூர்வமாண சபைகள் எழக் காரணமாக இருந்ததை பதினாறாம் நூற்றாண்டு சபை வரலாறு நமக்குத் தொடர்ந்தும் நினைவூட்டி வருகின்றது. மார்டின் லூதர், கல்வின் ஆகியோரது எழுத்துப்பணியும், அவர்களுடைய காலத்துக்குப் பின்பு தோன்றிய பியூரிட்டன் போதகர்களின் சிறப்பான எழுத்துப் பணியும் கிறிஸ்தவத்திற்குச் செய்துள்ள தொண்டிற்கு இணையாக இன்று எதையும் காண முடியாது. எனவே, கிறிஸ்தவ இலக்கியங்கள் வளர்ந்த காலப்பகுதிகளில் கிறிஸ்தவம் தலை நிமிர்ந்திருந்தது கண்கூடு. கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கிறிஸ்தவ இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததா? அல்லது கிறிஸ்தவ இலக்கியங்கள் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தனவா? என்ற கேள்வியும் நியாயமானதே. வரலாற்றைப் பார்த்தால் ஒன்றிருந்த இடத்தில் மற்றதும் இருந்தது என்ற முடிவுக்கே நம்மால் வரமுடிகின்றது. ஆகவே, ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது என்பதையும் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை.
தமிழர் மத்தியில் கிறிஸ்தவம்
கிறிஸ்தவத்தைப்பற்றிய தவறான சிந்தனைகள் தமிழர் மத்தியில் இருப்பதை இவ்விதழில் வந்துள்ள “தமிழில் கிறிஸ்தவ இதழ்கள்” என்ற ஆக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன். தவறாக ரோமன் கத்தோலிக்க மதத்தையும், யெகோவாவின் சாட்சிகளையும், அட்வெண்டிஸ்ட் சபையாரையும் கிறிஸ்தவர்களாக எண்ணிவருகிறார்கள் பலர். இவற்றிற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மேற்குறிப்பிட்ட சபைகள் கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தையும், அதன் போதனைகளையும் நிராகரிக்கின்றன. ஆகவே, வேதமும் அவற்றை அங்கீகரிப்பதில்லை. “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்பது சங்க காலப்பாடல் வரி. அதற்குப் பொருள் எல்லாம் நம் ஊர்; எல்லோரும் நம் உறவினர்கள் என்பது. அதே போல் எல்லாம் கிறிஸ்தவம்; எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்ற தவறான சமய சமரசப் போக்கே தமிழ்க் கிறிஸ்தவர்களிடம் உலவி வருகிறது. அதே வேளை, தமிழர்கள் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவ சபைகளும், ஊழியங்களும் பெரும்பாலும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களின் பாதிப்புக்குள்ளானவையாகவும், சபைத்தொடர்பற்ற, சுயாதீன நிறுவன (தனி) ஊழியங்களாகவுமே காணப்படுகின்றன. கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே இயக்கங்கள் மனிதனின் உணர்ச்சிக்குத் தூபமிட்டு அவனை சிந்திக்கவிடாமலும், வெறும் அனுபவத்தையும் அற்புதங்களையும் நாடும்படியும் செய்திருப்பதால் இவ்வியக்கங்களைச் சார்ந்தோர் வேதத்தை மூட்டைக்கட்டி வைத்துள்ளனர். இத்தோடு ஆடல், பாடல்களும், கூத்திக்களும் இன்று சபைகளை ஆள்கின்றன. சுயாதீன, நிறுவன ஊழியங்கள் சத்தியத்தில் ஆழமில்லாதவைகளாகவும், உப்புச்சப்பில்லாத விதத்தில் சுவிசேஷத்தை சொல்லி எப்படியாவது, எதைச்செய்தாவது கிறிஸ்துவுக்கு ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுவது மட்டுமே நமது கடமை என்ற முறையிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு மத்தியில் வேதத்திற்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு சில சகோதர அமைப்பு (Brethren) சபைகளும், பாப்திஸ்து சபைகளும், பிரஸ்பிடீரியன் சபைகளும் இயங்கத்தான் செய்கின்றன. ஆனால், இவை பெருங் கடலில் எதிர் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் சிறு தோணிகளாகவே உள்ளன. வேதத்தை அடிப்படையாகக் கொண்டு அமையாத இயக்கங்களும், சபைகளும் நிறைந்த ஒரு குழப்பமான சூழ்நிலையிலேயே இன்றைய கிறிஸ்தவம் இவ்வுலகில் ஏழு கோடித் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இத்தகைய கிறிஸ்தவ சூழல் இதில் தோன்றும் இலக்கியங்களை எப்படிப் பாதிக்காமல் இருக்க முடியும்?
தமிழில் கிறிஸ்தவ இலக்கியங்கள்
தமிழில் காணப்படும் தரமான கிறிஸ்தவ இலக்கியங்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். புற்றீசல்போல் ஆயிரக் கணக்கில் தமிழகத்தில் இருந்தும், அதற்குப் புறத்தில் ஸ்ரீ லங்கா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து சிறிய அளவிலும் கிறிஸ்தவ நூல்கள் வெளியிடப்பட்ட போதும் அவற்றில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளாகவே இருக்கின்றன. அவை எந்தவித வேத ஆதாரமுமில்லாத போதனைகளைத் தாங்கி வருபவையாக உள்ளன. இவற்றிற்கு தமிழ் நாட்டு சாம் ஜெபத்துரையின் நூல்களை உதாரணத்திற்குக் கூறலாம். எழுதுவதெல்லாம் இலக்கியமாகிவிடாது என்பதற்கு இவரது நூல்கள் நல்ல எடுத்துக்காட்டு. இன்று வெளிவரும் பல நூல்களில் ஆழமான சத்தியத்தையோ, ஆய்வுத்திறனையோ, அழகுபடச்சொல்லும் எழுத்து நடையையோ காண முடியவில்லை. இவற்றில் பெரும்பாலானவை ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தைத் தேடித்தருபவை. இதற்குக் காரணம் நம்மத்தியில் இருக்கும் கிறிஸ்தவ சூழ்நிலையே என்பதை மறுக்க முடியாது.
கிறிஸ்தவ இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வரைகோள்கள் உள்ளன. (1) கிறிஸ்தவ இலக்கியங்கள் வேதத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அதன் போதனைகளை மட்டுமே எடுத்துக் கூறுபவையாகவும், கிறிஸ்தவர்களால் மட்டுமே எழுதப்பட்டவையாகவும் இருக்க வேண்டும், (கிறிஸ்தவரல்லாத கவிஞர் கண்ணதாசனின் “இயேசு காவியம்” கிறிஸ்தவ இலக்கியமல்ல). (2) கிறிஸ்தவ இலக்கியங்கள் வேதத்தின் எந்தப் போதனையை எடுத்து வியக்கினாலும் எந்த அம்சங்களையும் தன்னில் கொண்டிருக்கக்கூடாது. (3) கிறிஸ்தவ இலக்கியங்கள் கிறிஸ்தவர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கு உதவுவனவாகவும், அவர்கள் பரிசுத்த வாழ்க்கையில் வளரத் துணை புரிபவனவாகவும் இருக்க வேண்டும். (4) கிறிஸ்தவ இலக்கியங்கள் ஆய்வுத் திறனையும், எழுத்து நடையையும், இலக்கணச் சுத்தத்தையும் கொண்டமைந்தவையாக இருக்க வேண்டும். இந்நான்கு அம்சங்களையும் கொண்டமையாதவற்றைக் கிறிஸ்தவ இலக்கியங்களாகக் கருத முடியாது. தமிழிலுள்ள ஏனைய இலக்கியங்களுக்கு இந்த விதிமுறைகள் அவசியமில்லாவிட்டாலும், ஓரிலக்கியம் கிறிஸ்தவ இலக்கியமாக அமைய இவ்விதிமுறைகள் அவசியம் தேவை என்பதை வேதம் சுட்டிக் காட்டுகின்றது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது என்னைப் பொறுத்தவரையில், நான் தேடிப்பார்த்தும், என் கைக்குக் கிடைத்தவற்றை வாசித்தும் பார்த்ததில் குறிப்பிடத்தக்க சில கிறிஸ்தவ உரைநடை இலக்கியங்கள் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் அநேகமானவை மொழி பெயர்ப்பு இலக்கியங்களாக உள்ளன. இவை மூலத்தின் சாரத்தை மட்டுமே தன்னில் கொண்டுள்ளது ஒரு குறைபாடு. எழுத்து நடையிலும் இவை வளம் பெற வேண்டிய நிலையில் உள்ளன. இருந்தபோதும் தற்போதுள்ள சூழ்நிலையில் இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம். இவற்றில் அநேகமானவற்றை சென்னையில் இருக்கும் தமிழ் பாப்திஸ்து வெளியீடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் ஜோண் கல்வின், ஜோண் ஓவன், பிளேவல், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், வின்ஸ்லோ போன்ற சீர்திருத்தவாத பியூரிட்டன்களின் நூல்களின் மொழி பெயர்ப்பாக உள்ளன. அத்தோடு ஏ. டபிள்யூ. பிங்க்கின் நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிங்க்கின் எழுத்துக்களின் அருமை அதை வாசித்தவர்களுக்குப் புரியும். தற்காலப் போதகர்கள் எழுதிய பழைய, புதிய ஏற்பாட்டின் நல்ல சில வேத விளக்கவுரைகளையும் இவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதைத்தவிர சென்னை சுவிசேஷ ஊழிய நூல் நிலையமும் சில நல்ல நூல்களை வெளியிட்டுள்ளது. உதாரணத்திற்கு ஜோண் பனியனின் மோட்ச பயணத்தைக் கூறலாம். இவையனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் இவற்றின் தொகை ஐம்பதைத் தாண்டாது.
இன்று உலகில் உள்ள ஏழுகோடித் தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சியுறாமல் இருப்பதற்கு நம்சூழலில் காணப்படும் பலவீனமான, வேத அடித்தளமற்ற கிறிஸ்தவ ஊழியங்களும் சபைகளுமே காரணம் என்று ஏற்கனவே பார்த்தோம். வெறும் ஆர்வமும், எதையாவது எழுதிப் பெயர் வாங்க வேண்டும் என்ற உந்துதலும் வேதத்தில் தகுந்த ஞானமற்றவர்களை கிறிஸ்தவ எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடை கடையாக கிறிஸ்தவ இலக்கியம் என்ற பெயரில் குப்பைகளைத்தான் எங்கும் பார்க்க முடிகின்றது. இந்நிலை மாறவேண்டுமானால் முதலில் வேதபூர்வமான கிறிஸ்தவத்திற்கு நம்மத்தியில் அடித்தளமிடப்பட வேண்டும். வேத அடிப்படையில் சபைகள் எழவேண்டும். ஆவியின் வல்லமையும், வேத சத்தியங்களும் நிறைந்த கிறிஸ்தவ பிரசங்கங்கள் ஊர்தோறும் பிரசங்கிக்கப்பட வேண்டும். வேதத்தில் ஊறித் திளைத்து, போலிகளை இனங்கண்டு கொள்ளக் கூடிய கிறிஸ்தவ ஆத்துமாக்கள் உருவாக வேண்டும். இவையெல்லாம் ஏற்படுமானால் அத்தகைய சூழல் நல்ல இலக்கியங்கள் வளரக்கூடிய ஒரு நிலைமையை நிச்சயம் உருவாக்கும். பதினாறாம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க சபையின் கட்டுக்குள் இருந்து வேதத்தைப் படிக்க வழியில்லாமலும், அதேநேரம் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இதயத்தில் தாங்கி நின்ற மக்கள், லூதரைக் கர்த்தர் பயன்படுத்தி வேதத்தையும், பலவேத அருளுரைகளையும் வெளியிட்டபோது, தமக்குத் தடையாக இருந்த வேலிகளைச் சுக்குநூறாக்கி அந்நூல்களை வாங்கிப் படித்து கிறிஸ்துவில் வளர்ந்தார்கள். இதே வகையில் நம்மக்களுக்கு வேதத்தைப்படிக்க வேண்டும், அதை மட்டுமே நம்ப வேண்டும் என்ற ஆர்வம் எழும்வரை நல்ல கிறிஸ்தவ இலக்கியங்கள் நம்சூழலில் உருவாவது சுலபமில்லை.